Published:Updated:

ஜேம்ஸ் நீஷம்... அடிக்க ஆரம்பிச்சா கெய்ல், ரஸல்லாம் அந்தப் பக்கம் நிக்கணும்! #CWC19 #PlayerBio

ராம் கார்த்திகேயன் கி ர

வேகப்பந்துவீச்சு, ஸ்பின் என எதுவாக இருந்தாலும் சிக்ஸர் அடித்து பந்தை க்ளியர் செய்யும் ஆற்றல் உடையவர். அதுவும் டெத் ஓவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். நல்ல மூடில் இருந்தால் ரஸல், கெய்ல் ஆகியோரையே மிஞ்சும் அளவுக்கு அதிரடி காட்டக்கூடியவர்.

ஜேம்ஸ் நீஷம்
ஜேம்ஸ் நீஷம்

பிளேயிங் லெவனில் ஆடக்கூடிய ஆல் ரவுண்டர்களையே, ஒன்றுக்கு மூன்றாக வைத்திருக்கிறது பிளேக் கேப்ஸ். ஆனால், மூவருமே முழுமையான ஆல்ரவுண்டர்கள் இல்லை என்பதுதான் சோகம். காலின் டி கிராந்தோம், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சேன்ட்னர் ஆகியோரால் கிறிஸ் கெயிர்ன்ஸ், ஸ்காட் ஸ்டைரிஸ் போல் இரண்டு ஏரியாவிலும் பர்ஃபார்ம் செய்ய முடியாது. ஆனால், அவர்களுள் ஜேம்ஸ் நீஷம் மேட்ச் வின்னராக ஜொலிக்கக்கூடியவர்.

பெயர் : ஜேம்ஸ் நீஷம்

பிறந்த தேதி : 17.9.1990

ஊர் : ஆக்லாந்து

ரோல் : பேட்டிங் ஆல்ரவுண்டர்

பேட்டிங் ஸ்டைல் : இடது கை பேட்ஸ்மேன்

பெளலிங் ஸ்டைல் : வலது கை வேகப்பந்துவீச்சு

சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம் : 21-12-2012

செல்லப்பெயர் : ஜிம்மி

ஜேம்ஸ் நீஷம்
ஜேம்ஸ் நீஷம்

பிளேயிங் ஸ்டைல்

ஜேம்ஸ் நீஷம் நியூசிலாந்து அணியின் நம்பிக்கைமிக்க ஆல்ரவுண்டர். அந்த அணியின் ஃபினிஷர் மற்றும் ஆல்ரவுண்டர் என இரண்டு தேவைகளையும் டிக் செய்கிறார், இவர். பேட்டிங்கைப் பொறுத்தவரை, வேகப்பந்துவீச்சு, ஸ்பின் என எதுவாக இருந்தாலும் சிக்ஸர் அடித்து பந்தை க்ளியர் செய்யும் ஆற்றல் உடையவர். அதுவும் டெத் ஓவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். நல்ல மூடில் இருந்தால் ரஸல், கெய்ல் ஆகியோரையே மிஞ்சும் அளவுக்கு அதிரடி காட்டக்கூடியவர். டாப் கியரில் பறப்பார். ஒரே ஓவரில் 34 ரன்கள் அடித்துள்ளார்.

பெளலிங்கிலும் 140 கி.மீ வேகத்தில் வீசும் இவர், மிடில் ஓவர்களில் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறார். சில சமயங்களில் ரன்களை அதிகம் கொடுத்தாலும் விக்கெட்டுகளும் எடுத்துவிடுவார். பந்தை நன்றாக ஸ்விங் செய்யும் ஆற்றல் இல்லையென்றாலும், பேட்ஸ்மேன்கள் அடிக்கச் சிரமப்படும் இடத்தில் பிட்ச் செய்து தக்க சமயத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவார். பார்ட்னர்ஷிப்களை உடைப்பதில் கைதேர்ந்தவர். 32.8 என்ற நல்ல பௌலிங் ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கிறார். நிச்சயமாக ஓரிரு போட்டிகளில் தனியாளாக மெர்சல் காட்டுவார் நீஷம்!

ஜேம்ஸ் நீஷம்
ஜேம்ஸ் நீஷம்
“எப்போது நான் ரன் அடிப்பதிலும், விக்கெட் எடுப்பதிலும் அதிகம் கவனம் செலுத்தாமல் அந்த கேமை ரசித்து ஆட ஆரம்பித்தேனோ, அப்போதுதான் எனக்கு பாசிட்டிவான ரிசல்ட் கிடைத்தது.”
ஜேம்ஸ் நீஷம்

கிரிக்கெட் பயணம்

ஜேம்ஸ் நீஷம், 2010-ல் ஆக்லாந்து அணியில் தன்னுடைய முதல்தர கிரிக்கெட் பயணத்தை தொடர்ந்தார். அடுத்த வருடமே ஒடாகோ அணிக்கு மாறினார். அந்த சீசன் இவருக்கு விசிட்டிங் கார்டாக அமைந்தது. 7 போட்டிகளில் நான்கு முறை 40-க்கு மேல் ரன்களை அடித்தவர் (100 மேல் ஸ்ட்ரைக் ரேட்டில்), பெளலிங்கிலும் பல விக்கெட்டுகளை சாய்த்து தன்னை ஒரு தேர்ந்த ஆல்ரவுண்டராக உலகுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டார்.

அதன் விளைவாக, அதே ஆண்டில் `ப்ளாக் கேப்ஸ்’ அணிக்காக டி20 அணியில் விளையாட அழைக்கப்பட்டார். ஆரம்பம் முதலே அணிக்கு பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் நல்ல பங்களிப்பைக் கொடுத்த இவர் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒருநாள், டெஸ்ட் என எல்லா ஃபார்மட்களிலும் கால் பதித்தார். முதல் டெஸ்டிலே இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்து அமர்க்களப்படுத்தினார். இப்படி எல்லாம் சிறப்பாகச் சென்றுகொண்டிருந்த நேரத்தில் திடீரென ஃபார்ம் அவுட்டானார். கூடவே காயங்களும் அவர் வளர்ச்சியைத் தடுத்தது.

ஜேம்ஸ் நீஷம்
ஜேம்ஸ் நீஷம்

2015 உலகக் கோப்பை அணியில் அவர் எடுக்கப்படவில்லை, 2017 சாம்பியன்ஸ் டிராபிக்கு பின் நியூசிலாந்து அணியிலும் சேர்க்கப்படவில்லை, அவரின் ஒப்பந்தமும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அந்தச் சமயத்தில் அவருக்கு இருந்தது இரண்டே ஆப்ஷன்கள். ஒன்று கிரிக்கெட்டை கைவிடுவது, இல்லையேல் இன்னும் அதிகமாகப் பயிற்சி செய்து மீண்டு வருவது. அவர் தேர்ந்தெடுத்தது இரண்டாவது! மீண்டும் முதல் தரப் போட்டியில் அமர்க்களப்படுத்தி, நியூசிலாந்து அணியில் ஓராண்டுக்குப் பிறகு இடம்பெற்றார். சமீபத்தில் இலங்கைக்கு எதிரான தொடரில் இவர் காட்டிய அதிரடி, 2019 உலகக் கோப்பையில் இவருக்கும் ஓர் இடத்தைப் பெற்றுத்தந்துள்ளது..

ஜேம்ஸ் நீஷம்
ஜேம்ஸ் நீஷம்
  • இலங்கைக்கு எதிரான போட்டி…..18 மாதங்கள் கழித்து நியூசிலாந்து அணிக்காகக் களமிறங்கினார் ஜேம்ஸ் நீஷம். ஆனால், இடைவெளிக்குப் பின்பு ஆடப்பட்ட இன்னிங்ஸ் போலவே இல்லை. 48-வது ஓவரை பெரெரா வீச, அந்த ஓவரில் தொடர்ந்து ஐந்து சிக்ஸர்கள் பறக்கவிட்டார். அந்தப் போட்டியில் 13 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து மாஸ் கம்பேக் கொடுத்தார். பேட்டிங்கில் மட்டும் ஜொலிக்காமல், பெளலிங்கிலும் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி ஆல்ரவுண்டராகப் பிரகாசித்தார். அந்த ஒரு மேட்ச் மூலமாகவே தன்னுடைய உலகக் கோப்பை இடத்தை புக் செய்துவிட்டார்.

  • 2014-ல் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட். அவருக்கு அதுதான் முதல் டெஸ்ட். 8-வது வீரராகக் களமிறங்கி 137 ரன்கள் விளாசினார். அப்போதும்கூட தன் அதிரடி ஆட்டத்தை அவர் கைவிடவில்லை. 154 பந்துகளில், 20 பௌண்டரிகளுடன் அந்த ரன்களை எடுத்தார். ஸ்டிரைக் ரேட் 88.96! அதிரடியாக விளையாடினாலும், தன்னால் ஆட்டத்தைக் கட்டமைக்கவும் முடியும் என்பதை நிரூபித்தார் நீஷம். அறிமுகப் போட்டியில் எட்டாவதாக வந்த வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் அதுதான்!

நீஷம் ஸ்பெஷல்!

அறிமுகப் போட்டியில் 8-வது டவுனில் வந்து அதிக ரன் அடித்த வீரர் இவர்தான்.

இவர் ட்விட்டரில் மிகவும் ஆக்டிவ். இவரின் கீச்சுகளுக்கே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அவ்வப்போது காமெடியாகவும், சர்காஸ்டிக்காகவும் ட்வீட் செய்து ரசிகர்களைக் குஷியாக்குவார்.

ஃபேவரிட் ஷாட்- புல் ஷாட்

ராம் கார்த்திகேயன் கி ர