Published:Updated:

`உங்களுக்குப் பணம்தான் முக்கியமா? வருத்தமாக இருக்கிறது!'- டிவில்லியர்ஸை சாடும் அக்தர்

ராம் பிரசாத்

"நீங்கள் பணம் சம்பாதிப்பதில் எனக்கு எந்தப்பிரச்னையும் இல்லை. உங்களுக்கு பணம் தேவையாக இருக்கலாம். இருந்தாலும் நீங்கள் தேசத்தை கருத்தில் கொள்ளவேண்டும்."

டிவில்லியர்ஸ்
டிவில்லியர்ஸ்

உலகக்கோப்பை தொடரை தென்னாப்பிரிக்கா அணி 3 தோல்விகளுடன் தொடங்கியுள்ளது. அதன் மோசமான உலகக்கோப்பை வரலாறு இன்றும் தொடர்கிறது. தொடர்ச்சியாக அடைந்த தோல்விகளால் தென்னாப்பிரிக்கா வீரர்கள் துவண்டுப் போயுள்ளனர். தொடக்க ஆட்டக்காரர் ஹசிம் ஆம்லா, பந்துவீச்சாளர்கள் ஸ்டெயின், லுங்கி ங்கிடி ஆகியோர் ஒரு சில ஆட்டங்களில் காயத்தால் விளையாடாமல் போனது அணிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் மிஸ்டர்.360 டிகிரி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் டிவில்லியர்ஸ் தனது ஓய்வு முடிவு குறித்து பரிசீலிக்க வேண்டும். உலகக்கோப்பை தொடரில் விளையாட அணி நிர்வாகம் அவரிடம் கேட்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கோரிக்கை வைத்தனர்.

டிவில்லியர்ஸ்
டிவில்லியர்ஸ்

இந்த நிலையில் தான் உலகக்கோப்பை தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்பு அணி நிர்வாகத்தை அவர் தொடர்புக்கொண்டதாக ஒரு தகவல் வெளியானது. உலகக்கோப்பை தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்து கேப்டன் டுப்ளிஸிஸ் மற்றும் அணி நிர்வாகத்தினரை தொடர்புகொண்டுள்ளார். தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் விதிகளின் படி உள்ளூர் தொடர்களிலோ அல்லது தேசிய அணிக்காகவோ சில மாதங்களாவது விளையாடி இருக்க வேண்டும். ஆனால் டிவில்லியர்ஸ் 2018-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். இதனைக் காரணம் காட்டி அவரது விருப்பத்திற்கு கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

டிவில்லியர்ஸின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அக்தர், “உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாட டிவில்லியர்ஸ் அனுமதி கோரியுள்ளார். உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா தோல்வி முகத்தில் இருக்கும்போது அவர் இப்படிக் கூறியுள்ளது தலைப்புச் செய்தி ஆகியிருக்கிறது. ஆனால் மக்கள் முதலில் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். உலகக்கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்று முன்னரே முடிவெடுத்து இருந்தால் டிவில்லியர்ஸ் ஐபிஎல் (IPL), பிஎஸ்எல் (PSL) விளையாட முடியாத நிலை வந்திருக்கலாம். ஐபிஎல், பிஎஸ்எல் தொடர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் அந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். கடந்த வருடத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது வந்து உலகக்கோப்பை தொடர்களில் விளையாடுகிறேன் என்கிறார்.

அக்தர்
அக்தர்

அப்படியானால் இந்த விவகாரங்கள் எல்லாம் பணத்தை வைத்துதான் முடிவு செய்யப்படுகின்றன. பணம் மற்றும் பொருளாதாரத்தை மனதில் வைத்துகொண்டுதான் அந்த முடிவை அவர் எடுத்துள்ளார். இங்குதான் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. கடந்த வருடம் டிவில்லியர்ஸ் ஓய்வு முடிவை அறிவிக்கும் போது தென்னாப்பிரிக்கா அணி பரிதாபமான நிலையில் இருந்தது. அந்தத் தருணத்தில் அந்த அணிக்கு அவர் தேவையாக இருந்தார். பணம் இன்று வரும் நாளை போகும் அதற்காக நீங்கள் உலகக்கோப்பை நிராகரித்து விடுவீர்களா? ஒரு நாள் உலகக்கோப்பை தொடர் மற்றும் டி-20 உலகக்கோப்பை தொடரை இழந்துள்ளீர்கள்.

நீங்கள் பணம் சம்பாதிப்பதில் எனக்கு எந்தப்பிரச்னையும் இல்லை. உங்களுக்கு பணம் தேவையாக இருக்கலாம் இருந்தாலும் நீங்கள் தேசத்தை கருத்தில் கொள்ளவேண்டும். கடைசி நேரத்தில் வந்து அணியில் இணைந்துக்கொள்கிறேன் எனக்கூறுவது எந்த வகையில் ஏற்கத்தக்கது? என்னைப் பொறுத்தவரையில் அணி நிர்வாகத்தினர் எடுத்த முடிவு சரியானதுதான்.

ஐபிஎல் போட்டியில் டிவில்லியர்ஸ்
ஐபிஎல் போட்டியில் டிவில்லியர்ஸ்

நீங்கள் உங்கள் தேசத்தைப் பற்றி கவலைக்கொள்ளவில்லை. தென்னாப்பிரிக்கா அணி தற்போது மோசமான நிலையில் இருக்கிறது என்றால் அது உங்களால்தான். மிடில் ஆர்டரை நீங்கள் வலுப்படுத்துனீர்கள். ஆனால் தற்போது மிடில் ஆர்டர் அவ்வளவு வலுவானதாக இல்லை. நீங்கள் தேசத்தை விட்டுவிட்டு பணத்தை தேர்ந்தெடுத்தது வருத்தமாக இருக்கிறது” என முடித்துக்கொண்டார்.