உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்காதது தொடர்பாக முன்பே தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார் அம்பதி ராயுடு. இருப்பினும் தனக்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்கும் என அமைதியாக காத்திருந்தார். இந்த நிலையில்தான் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் இடது கையில் ஏற்பட்ட காயத்தில் விலகினார். அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார். இதன் பின்னர் விஜய் சங்கருக்கு வலைப் பயிற்சியின் போது காலில் ஏற்பட்ட காயம் தொந்தரவு தர அவரும் இந்தத் தொடரிலிருந்து விலகினார்.

உலகக் கோப்பை தொடரில் நம்பர் 4 இடத்தில் அம்பதி ராயுடுவா விஜய் சங்கரா எனப் பேசும்போது அவர் ஆல்ரவுண்டர் என்ற காரணத்தில் டிக் செய்யப்பட்டார். விஜய் சங்கர் விலகலால் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் எனக் காத்திருந்தார். ஆனால் பிசிசிஐ மயங்க் அகர்வாலை தேர்வு செய்தது. மயங்க் அகர்வால் சர்வதேச ஒருநாள் தொடரில் இதுவரை விளையாடியதில்லை. உலகக் கோப்பை தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால் அதுதான் அவரது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியாக அமையும். பிசிசிஐ-யின் இந்த நிலைப்பாட்டால் விரக்தியடைந்த அம்பதி ராயுடு அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று திடீரென அறிவித்தார்.
அம்பதி ராயுடுவின் இந்த முடிவிற்கு பிசிசிஐ தேர்வுதான் காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சாடியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள கம்பீர். "தேர்வுக்குழுவில் உள்ள 5 உறுப்பினர்களும் தங்கள் வாழ்நாளில் அடித்த ரன்கள் மொத்தத்தையும் சேர்த்தாலே அம்பாதி ராயுடு தன் கிரிக்கெட் வாழ்வில் அடித்த ரன்களை ஈடுசெய்ய முடியாது. அம்பதி ராயுடுவின் ஓய்வு அறிவிப்பு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. காயமடைந்த வீரர்களுக்கு பதிலாக ரிஷப் பண்ட், மயங்க் அகர்வாலை தேர்வுக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். அம்பதி ராயுடுவின் நிலையில் யார் இருந்தாலும் அது மோசமாகத்தான் இருந்திருக்கும்.

அவரது முடிவுக்கு எம்.எஸ்.கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழுவினர்தான் காரணம். அவர்களுக்குச் சரியான முடிவை எடுக்கத் தெரியவில்லை.கவுதம் கம்பீர்
ஒரு விளையாட்டு வீரராக ஐபிஎல் தொடரிலும் இந்திய அணியிலும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். 3 சதங்கள், 50 அரைசதங்களை அடித்துள்ளார். இவ்வளவு சீக்கிரம் அவர் ஓய்வு முடிவை அறிவிக்க தேர்வுக்குழுதான் காரணம். ராயுடுவின் ஓய்வு இந்தியக் கிரிக்கெட்டின் மோசமான நிகழ்வு!" எனக் கூறியுள்ளார்.