Published:Updated:

தோல்வியடையாத இந்தியாவை மிரட்டும் ஒரு வீக்னெஸ்! #WIvIND

#WIvIND
#WIvIND

இந்திய அணியின் டாப் ஆர்டர், பெளலிங் போன்றவற்றில் பிரச்னை இல்லை. கடந்த ஆட்டத்தில் விமர்சனங்களை சந்தித்த தோனியும் குட்புக்கில் இணைந்துவிட்டார். கண்கள் அனைத்தும் இப்போது விஜய் ஷங்கர், கேதார் ஜாதவ் மீதே! #WIvIND

பெரிய அணிகளோடு எல்லாம் ஈஸியாக ஜெயித்துவிட்டு, ஆப்கானிஸ்தானோடு மயிரிழையில் தப்பித்த அதிர்ச்சியிலிருந்து ரசிகர்கள் மீண்டெழவே இரண்டு நாட்களானது. அதைவிட பெரிய அதிர்ச்சி, அந்த ஆட்டத்தில் இந்தியாவின் மிடில் ஆர்டர் சடசடவென சரிந்தவிதம். 'கப்பு நமக்குத்தான்' என கெத்தாக காலரை தூக்கிவிட்ட கைகள் எல்லாம் அந்த ஆட்டத்திற்குப் பின் தலையில் கைவைத்துக்கொண்டன. 'It was just a bad day. அவ்வளவுதான். மத்தபடி நாங்க எப்பவுமே ஸ்ட்ராங்தான்' என இந்திய அணி மீண்டும் ஒரு வார்னிங் ஸ்டேட்மென்ட் விடும் என நேற்றைய ஆட்டத்தின்போது நிறைய எதிர்பார்த்தார்கள் ரசிகர்கள். மறுபுறம் எப்படியும் அரையிறுதி கிடையாது என முடிவாகிவிட்ட நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தன்னால் முடிந்த அளவிற்கு பிற அணிகளின் வாய்ப்புகளை கெடுக்கப் போராடும் என்பதும் நியூட்ரல் ரசிகர்களின் கணிப்பாக இருந்தது. இரண்டுமே புஸ்ஸாகிப்போனதுதான் சோகம்.

#WIvIND
#WIvIND

நினைத்ததுபோலவே இந்திய அணியில் மாற்றங்களில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் நர்ஸும் லூயிஸும் பெஞ்ச்சில் உட்கார சுனில் அம்ப்ரீஸும் ஃபேபியன் ஆலனும் உள்ளே வந்தார்கள். டாஸ் ஜெயித்த கோலி பேட்டிங் தேர்வு செய்தார். ஓப்பனிங் களமிறங்கிய ராகுல், ரோகித் ஜோடியின் பாடி லாங்குவேஜே செம பாசிட்டிவாக இருந்தது. போலவே 6-வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து ஸ்டேடியத்தை பரபரபாக்கியது இந்த இணை. ஆனாலும், அந்த ஓவரின் கடைசி பந்தில் கீமர் ரோச் வீசிய பந்து ரோகித்தை உரசிச் செல்ல கேட்ச் ரிவ்யூ கேட்டது வெஸ்ட் இண்டீஸ். மூன்றாவது அம்பயர் பாவம் வீட்டில் சண்டைபோட்டு அப்செட்டில் இருந்தாரோ என்னவோ பேடில் உரசிச் சென்ற பந்துக்கு அவுட் கொடுத்துவிட்டார். ஃபீல்ட் அம்பயரே இதைக் கேட்டு அதிர்ச்சியானார் என்றால் ரோகித்தை கேட்கவா வேண்டும்?

அப்செட்டான இந்திய டக் அவுட்டையும் ரசிகர்களையும் மெதுவாக மீட்டெடுத்தது ராகுல் - கோலி இணை. டாப் ஆர்டர் ஸ்ட்ராங், பேஸ்மென்ட் வீக் என நம் வீக்னெஸ்ஸை கடந்த ஆட்டத்தில் மற்ற அணிகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதில் ராகுலுக்கு பெரிய பங்குண்டு. சீக்கிரமே அவுட்டானதால் அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் பிரஷருக்குள்ளானார்கள். எனவே இந்தமுறை அந்தத் தவறை செய்யாமல் நிதானமாக ஆடினார் ராகுல். இவர்களை ரொம்பவே சோதித்தார் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர். அதுவும் கோலிக்கு அவர் வீசிய மெய்டன் ஓவரெல்லாம் டாப் க்ளாஸ். கடைசியில் அவர் கையாலேயே அவுட்டானார் ராகுல். அரைசதம் ஜஸ்ட் மிஸ்! ஸ்கோர் 98/2, 21 ஓவர்கள் முடிவில்.

#WIvIND
#WIvIND

நான்காமிடத்தில் விஜய் ஷங்கரை களமிறக்குவதில் ஏற்கெனவே ஏகப்பட்ட விமர்சனங்கள். இப்போது பார்ட்னர்ஷிப் பில்ட் பண்ணவேண்டிய பிரஷரும் சேர்ந்துகொள்ள நிறையவே தடுமாற்றம் தெரிந்தது அவரிடம். பாவம் 14 ரன்களில் கீமர் ரோச் பந்தில் அவுட்டானார் ஷங்கர். பழைய ஃபார்மெட் என்றால் 'சரி, பரவாயில்லப்பா' என இன்னும் இரண்டு மூன்று ஆட்டங்களுக்கு டீம் மேனேஜ்மென்ட் அவருக்கு வாய்ப்புகள் கொடுக்கலாம். ஆனால், ரீப்ளேஸ் ஆப்ஷன்கள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் டைம் எடுத்து செட்டிலாகும் விஜய் ஷங்கர் ஸ்டைல் பேட்ஸ்மேன்கள் தாக்குப்பிடிப்பது சிரமம்தான்.

இதே நிலைமைதான் அடுத்து களமிறங்கிய ஜாதவுக்கும். கடந்த ஆட்டம் தவிர்த்து இந்த ஆண்டு ஜாதவ்வின் ரெக்கார்ட் ரொம்பவே மோசம். இந்த ஆட்டத்திலும் அந்த சோகம் தொடர்ந்தது. ஏழே ரன்களுக்கு அவுட்! 140/4 ஸ்கோர். இன்னும் 21 ஓவர்கள் மிச்சமிருந்தது. தோனி இந்த ஆட்டத்தில் நின்றால்தான் உண்டு என்ற நிலை. ஆரம்பத்தில் அந்தப் பதற்றம் தோனியின் பேட்டிங் ஸ்டைலிலும் தெரிந்தது. எப்படியாவது பந்தை தட்டிவிடவேண்டும் என ரொம்பவே போராடினார். போதாக்குறைக்கு கீப்பர் ஹோப் ஒரு சூப்பர் சொதப்பலில் ஸ்டம்பிங்கை வேறு மிஸ் செய்தார். மறுபக்கம் தன் வழக்கமான ஸ்டைலில் ஸ்கோரை ஏற்றி குறைந்த இன்னிங்ஸ்களில் 20 ஆயிரம் ரன்கள் எடுத்த சாதனைக்கு சொந்தக்காரரானார் கோலி.

#WIvIND
#WIvIND

5-வது விக்கெட்டுக்கு 40 ரன்களை மட்டுமே எடுத்தது இந்த ஜோடி. ஒரு புல் ஷாட்டை கவனக்குறைவாக இழுத்து ஈஸி கேட்ச் கொடுத்து வெளியேறினார் கோலி. இதுவும் ஹோல்டரின் கைவண்ணம்தான். அதன்பின் கைகோர்த்தார்கள் சீனியர் ஹெலிகாப்டரும் ஜூனியர் ஹெலிகாப்டரும். ஒருபக்கம் சிங்கிள்ஸ், டூஸ் என தோனி கேப்பில் ரன்கள் கோர்க்க, மறுபக்கம் பாண்ட்யா பவுண்டரிகளை விளாச, கடைசி 10 ஓவர்களில் ஆட்டத்திற்குள் ஆக்டிவாக வந்தது இந்திய அணி. விறுவிறுவென ரன்கள் சேர்த்த பாண்ட்யா ஒரு பேட் டைமிங் ஷாட் அடித்து 46 ரன்களில் வெளியேறினார். 6-வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்து மேட்ச்சை மாற்றியது இந்த பார்ட்னர்ஷிப்தான். கடைசி ஓவரில் தன் வழக்கமான ஆர்ம் பவரை தோனி காட்ட பந்து அடுத்தடுத்து பறந்தது. அரைசதம் அடித்து ஸ்கோரையும் 268-க்கு உயர்த்தி இந்திய இன்னிங்ஸுக்கு சுபம் போட்டார் தோனி!

உலகக் கோப்பைக்குப் பின் வரும் இந்திய அணித் தொடரில் ஆடி ஓய்வு பெறவேண்டும் என்பது கெயிலின் விருப்பம். அதற்கு முன்னோட்டமாக இந்த ஆட்டத்தை அவர் பயன்படுத்திக்கொள்வார் என எதிர்பார்த்தார்கள் அவரின் ரசிகர்கள். ஆனால் முதுகுப் பிரச்னையால் தடுமாறும் அவரை யார்க்கர்கள் போட்டே சோதித்தார்கள் ஷமியும் பும்ராவும். அடித்தே ஆகவேண்டிய பிரஷரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் கெயில். உபயம் - ஷமி. வெஸ்ட் இண்டீஸின் ஹோப்பான ஹோப்பும் ஷமியின் அடுத்த ஓவரில் காலியானார். இப்போது பொறுப்பு முழுவதும் அம்ப்ரீஸ் - பூரன் என இரு இளைஞர்கள் கையில். இருவருமே பொறுப்புணர்ந்து சூப்பராக ஆடினார்கள்.

#WIvIND
#WIvIND

தள்ளாடிக்கொண்டிருந்த ரன்ரேட்டை இழுத்துப்பிடித்து 71 ரன்கள் வரை கொண்டுவந்தார்கள். அதன்பின் அம்ப்ரீஸுக்கு நக்கலாக விடைகொடுத்தார் பாண்ட்யா. அப்புறம் நிகழ்ந்தது டிபிக்கல் வெஸ்ட் இண்டீஸ் ஸ்டைல் கொலாப்ஸ். 'விக்கெட் வாங்கலியோ விக்கெட்டு' என கூவிக் கூவி விக்கெட்டை பறிகொடுத்தார்கள் பேட்ஸ்மேன்கள். கோலிக்கும் வேலை ஈஸியாகிப்போனது. 'சரி இந்தா நீ போட்டு விக்கெட்டு வாங்கிக்க.. இந்தா அடுத்து நீ போடு' என கூலாக பெளலர்களை ரொட்டேட் செய்தார்.

உச்சகட்டமாக ப்ராத்வொயிட், ஆலன் இருவரையும் ஒரே ஓவரில் பெவிலியன் அனுப்பினார் பும்ரா. அதுவும் ப்ராத்வொயிட்டை அவுட்டாக்க தோனி நடத்திய புலிப்பாய்ச்சல்... செம எனர்ஜி! தனியாக நின்றுகொண்டிருந்த ஹெட்மெயரும் 'அட போங்கய்யா' என வெறுத்துப்போய் வெளியேற, டெயில் எண்டர்களின் குட்டிக் கேமியோவோடு இனிதே நிறைவடைந்தது வெஸ்ட் இண்டீஸின் இன்னிங்ஸ். 143 ரன்களுக்கு ஆல் அவுட்! கடந்த ஆட்டத்தில் நான்கு விக்கெட்கள் எடுத்த ஷமி இந்த ஆட்டத்திலும் நான்கு விக்கெட்கள் எடுத்து அணியில் தன் இடத்தை உறுதி செய்தார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு இந்த ஆட்டத்திலிருந்து எடுத்துப்போக என எதுவுமில்லை. அவர்கள் அப்படித்தான்! ஜாலியாக ஆடுவார்கள். வெறித்தனமாக ஜெயிப்பார்கள். சூப்பராக சொதப்புவார்கள். இந்திய அணிக்கோ அரையிறுதி வாய்ப்பை சிமென்ட் பூசி உறுதி செய்ய இன்னும் ஒரு வெற்றி தேவை. அடுத்த ஆட்டம் லோக்கல் நாயகன் இங்கிலாந்தோடு. அரையிறுதி வாய்ப்பை நிச்சயமாக்க இரு அணிகளுக்குமே அந்த ஆட்டம் மிக முக்கியம்.

இந்திய அணியின் டாப் ஆர்டர், பெளலிங்கில் பிரச்னை இல்லை. கடந்த ஆட்டத்தில் விமர்சனங்களை சந்தித்த தோனியும் குட்புக்கில் இணைந்துவிட்டார். கண்கள் அனைத்தும் இப்போது விஜய் ஷங்கர், கேதார் ஜாதவ் மீதே! பழைய கேம்ப்ளான் ஸ்டைலில் இவர்களுக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்கப்படுமா இல்லை அதிரடியாக பன்ட் உள்ளிட்டவர்கள் உள்ளே வருவார்களா போன்ற கேள்விகளுக்கு பதில் கோலியிடமும் ரவி சாஸ்திரியிடமும் மட்டுமே உள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை நமக்கும் தெரிந்துவிடும்.

அடுத்த கட்டுரைக்கு