Published:Updated:

`இந்தியாவின் வெற்றி எங்களுக்கு உதவியாக இருக்கும்!' - அக்தர் போடும் கணக்கு

அக்தர்
அக்தர்

பாகிஸ்தானின் எழுச்சியும் இங்கிலாந்தின் வீழ்ச்சியும்தான் இந்தத் தொடரில் தற்போது விறுவிறுப்பை கூட்டியுள்ளது.

உலகக் கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பை அடைந்துள்ளது. பாகிஸ்தான், இலங்கை அணிகளின் எழுச்சி இந்த உலகக் கோப்பையை உயிர்ப்பித்துள்ளது. கிடைத்த அணிகளை எல்லாம் அடித்து நொறுக்கிய இங்கிலாந்துக்கு இலங்கை அணி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. நியூசிலாந்து அணிக்கு பாகிஸ்தான் அதிர்ச்சி கொடுத்தது. இதன் மூலம் அரையிறுதிக்கு எந்த அணி முன்னேறும் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இங்கிலாந்து அணி தொடர்ச்சியாகப் பெற்ற இரண்டு தோல்விகள் அந்த அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான்
பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி இந்தத் தொடரை மோசமாக ஆரம்பித்தாலும் தற்போது நல்ல கம்பேக்கை கொடுத்துள்ளது. பாகிஸ்தானின் எழுச்சியும் இங்கிலாந்தின் வீழ்ச்சியும்தான் இந்தத் தொடரில் தற்போது விறுவிறுப்பைக் கூட்டியுள்ளது. வங்கதேசம் தன் பங்குக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் உலகக் கோப்பை குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர், "இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக போட்டியில் வெற்றி பெற்றால் போதும். இந்தத் தொடரிலிருந்து இங்கிலாந்து வெளியேறிவிடும். பாகிஸ்தான் எஞ்சியிருக்கும் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 11 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு வந்துவிடும். அரையிறுதியில் நாங்கள் இந்தியாவை வீழ்த்தி விடுவோம். ஒருவேளை இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்திடம் தோற்றாலும் பாகிஸ்தான் அரையிறுதிக்கு வந்துவிடும்.

பாகிஸ்தான்
பாகிஸ்தான்

பாபர் அசாம் நியூசிலாந்துக்கு எதிராக அற்புதமாக விளையாடினார். ஆட்டத்தை மெதுவாக ஆரம்பித்து வெற்றிகரமாக முடித்துவைத்தார். அற்புதமான சதத்தை விளாசினார். வங்கதேசத்திற்கு எதிரான போட்டி ஒரு பெரிய போட்டியாக இருக்கும்!" என்று அக்தர் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு