Published:Updated:

மூன்று தோல்வி ஒரு வெற்றி இந்தியா - தென்னாப்ரிக்கா #WorldCupMemories

இதுவரை நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் எதிர்கொண்ட நான்கு போட்டிகளில் இந்தியா ஒன்றிலும் தென்னாபிரிக்கா மூன்றிலும் வென்றுள்ளது. அந்தப் போட்டிகளின் சின்ன ரீவைண்ட். #WorldCupMemories

#SAvIND
#SAvIND

உலகக் கோப்பை கிரிக்கெட். கடந்த 30ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் உலகின் பெரும்பாலானோரைக் கட்டிப் போட்டு வைத்துள்ளது. கிட்டத்தட்ட எல்லா அணிகளும் ஒரு போட்டியிலேனும் பங்கேற்று தனது தடத்தைப் பதித்துள்ளது. ஒரே ஒரு அணியைத் தவிர ஆம் இந்திய அணி தான் அது. "லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம் "என்ற வசனத்திற்கேற்ப இன்று தன் முதல் போட்டியை எதிர்கொள்கிறது.

#WorldCupMemories
#WorldCupMemories

எதிரணியில் தென்னாபிரிக்கா சோக்கர்ஸ் என்ற அவப்பெயர் இந்தத் தொடரிலும் ஏற்படாமல் இருக்க போராடிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் தொடர் தோல்விகளால் துவண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கு இந்தப் போட்டியில் வெற்றி அத்தனை முக்கியமானது. இதுவரை நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் எதிர்கொண்ட நான்கு போட்டிகளில் இந்தியா ஒன்றிலும் தென்னாபிரிக்கா மூன்றிலும் வென்றுள்ளது. அந்தப் போட்டிகளின் சின்ன ரீவைண்ட்.

1992ம் ஆண்டு உலகக் கோப்பை லீக் சுற்று

கலர்ஃபுல்லான ஜெர்சி, வெள்ளைப் பந்து என ஏகப்பட்ட புதுமைகளுடன் தொடங்கிய 1992 உலகக் கோப்பையில் தான் இந்தியாவும் தென்னாபிரிக்காவும் முதலில் மோதின. தென்னாபிரிக்காவிற்கு இதுதான் முதல் உலகக் கோப்பை. தன் முதல் உலகக் கோப்பையிலேயே யாரும் எதிர்பாராத வண்ணம் டாப் கியரில் வேகமெடுத்தது தென்னாபிரிக்கா. மோதிய பெரும்பாலான போட்டிகளிலும் வென்று அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசமாக கொண்டு இருந்தது. இந்தப் போட்டியில் தோற்றாலும் பாதகமில்லை என்ற நிலையில் தான் போட்டியை தென்னாபிரிக்கா எதிர் கொண்டது. ஆனால், இந்தியாவோ வெறும் இரண்டு போட்டிகளில் மட்டும் தான் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை இழந்திருந்தது. எனினும், கடைசி லீக் போட்டியையாவது வெற்றியோடு முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் ஆட வந்தது. மழையால் 30 ஓவர்களாக குறைக்கப்பட்ட ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆட வந்தது இந்திய அணி.

அசாருதீன்
அசாருதீன்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீகாந்த் ஐந்து பந்துகளில் டக் அவுட் ஆக இந்தியாவிற்கான வெற்றி வாய்ப்பு அப்பொழுதே குறையத் தொடங்கியது. பெரிய இன்னிங்க்ஸ் ஆடி ரன் குவிப்பதில் பேட்ஸ்மேன்கள் யாரும் முனைப்பு காட்டவில்லை. ஒரு பக்கம் விக்கெட்டுகள் சீராக விழுந்தாலும் களத்தில் ஒற்றை ஆளாக போராடினார் அசாருதீன். கேப்டன் என்ற பொறுப்புடன் ஆடிய அசாருதீன் மட்டும் 77 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். அவருக்கு கபில்தேவ்வும் மஞ்சரேக்கரும் ஓரளவு ஒத்துழைத்தனர். பவுண்டரிகளைக் காட்டிலும் ஓடி ஓடி ரன் சேர்த்தார். அவரின் அந்த விக்கெட் அந்த நேரத்தில் மிகவும் முக்கியமாக கருதப்பட்டது, இருப்பினும் அவர் அதற்கு வழிவிடவில்லை. இதனால், விக்கெட் வீழ்த்துவதைக் காட்டிலும் ரன்களை கட்டுபடுத்துவதில் அதீத கவனம் செலுத்திய தென்னாபிரிக்க வீரர்கள் அதில் வெற்றியும் கண்டனர். முடிவில் இந்திய அணி 180 ரன்கள் குவித்தது. 181 என்ற‌ இலக்குடன் ஆடிய தென்னாபிரிக்காவிற்கு ஆரம்பம் அசத்தலாக இருந்தது. வேரியேஷன்ஸ் ஏதும் காட்டாமல் ஒரே லென்த்தில் போட்ட இந்திய பவுலர்கள் பவுண்டரிகளுக்கான வாய்ப்பை தென்னாபிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு வாரி வழங்கினர். முதல் விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்த நிலையில் ஹட்சன் அவுட்டானார். அதன்பின் பல ஓவர்கள் கழித்து இந்தியாவின் பவுலிங் க்ளிக் ஆன சமயம் வெற்றிக்கு வெறும் 18 ரன்களே தேவைப்பட்டது. 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றியை தனதாக்கிக் கொண்டது தென்னாபிரிக்கா. கிரிக்கெட்டில் கரை கண்ட அணியை ஒரு புதிய கத்துக் குட்டி அணி சுருட்டியது இந்தியர்களால் அவ்வளவு எளிதில் மறக்க இயலாது.

1999ம் ஆண்டு உலகக் கோப்பை லீக் சுற்று

கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து 1999 உலகக் கோப்பையில் இந்தியாவும் தென்னாபிரிக்காவும் மோதின. 1992 தென்னாபிரிக்காவுடன் மோதி தோற்ற இந்திய அணியைக் காட்டிலும் இந்த அணி வேற லெவலில் இருந்தது. இருந்தாலும் இரு அணிகளும் சமபலத்தில் தான் இருந்தன. உலகக் கோப்பையின் இரண்டாவது ஆட்டமே இந்த இரு அணிகளுக்கு இடையே தான் என்பதால் இன்னும் சுவாரஸ்யம் ஆனது. அசலான பேட்டிங் பிட்ச்சைக் கொண்ட பிர்மின்ஹாம் மைதானத்தில் போட்டி ஆரம்பமானது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார் இந்திய கேப்டன் அசாருதீன். இம்முறை இந்திய அணி சொதப்பவில்லை. கிரிக்கெட் தாதா கங்குலியும், டிராவிட்டும் அடித்து ஆடத் தொடங்கினர்‌. "நான் பவுண்டரிஸ்" என கங்குலியும், "அப்போ நான் சிங்கிள்ஸ், டபுளஸ்" என டிராவிட்டும் பேட்டிங்க் கோட்டாவை பங்கிட்டு பிரித்து மேய்ந்தனர். இரண்டாவது விக்கெட்டிற்கு 130 ரன்கள் குவித்து அணியின் ரன் ரேட்டை சீராக வைத்திருந்தனர்.

1999 உலகக் கோப்பை
1999 உலகக் கோப்பை

இருப்பினும் கடைசி ஓவர்களில் தென்னாபிரிக்காவின் கை ஓங்க முடிவில் 253 ரன்கள் தான் எடுத்தது இந்திய அணி. கங்குலி அதிகபட்சமாக 97 ரன்கள் எடுத்தார். ஸ்ரீநாத், கும்ப்ளே, அகர்ஹர் என இந்திய அணி அட்டாக்கிங் பவுலிங் லைன் அப்பை கொண்டிருந்தது. நினைத்தது போலவே தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ்டன் மற்றும் கிப்ஸ் அடுத்தடுத்து ஆட்டமிழக்க குஷியாகினர் இந்திய வீரர்கள். ஆனால், அவர்களுக்கு அவுட் ஆஃப் ஸிலபஸ் ஆக வந்து வெளுத்து எடுத்தார் காலிஸ். முதல் பத்து ஓவர்களில் 3.07 என்றிருந்த ரன்‌ரேட் காலிஸ் வந்ததும் படிப்படியாக முன்னேறியது. ஏழு பவுலர்களை மாற்றி மாற்றி பந்துவீச செய்தும் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. 96 ரன்கள் குவித்தார் காலிஸ். 47 ஓவர்களிலேயே மேட்ச்சை முடித்து இந்திய அணியை ஆட்டம் காண வைத்தார் காலிஸ். இந்த இரு அணிகளும் குரூப் 6 சுற்றுக்குள் நுழைந்தாலும் இந்த தோல்வியின் மூலம் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடம் பெற்றது இந்தியா. தோல்வி ஏதும் பெறாமல் முதலாவதாக வந்தது

2011 உலகக்கோப்பை லீக் சுற்று

இந்திய அணிக்கு துர்அதிர்ஷடமாக சொல்லப்படும் விஷயங்களில் முக்கியமான ஒன்று. சச்சின் நூறு அடித்தால் இந்தியா தோற்றுவிடும் என்பதுதான்‌. அதுதான் 2011 உலகக் கோப்பையிலும் நடந்தேறியது. அசத்தல் ஃபார்மில் இருந்த இந்திய அணி தனது ஐந்தாவது லீக் போட்டியில் தென்னாபிரிக்காவை எதிர்கொண்டது. பன்னிரெண்டு வருடங்களுக்குப் பிறகு உலகக் கோப்பையில் தென்னாபிரிக்காவை எதிர்கொண்டது இந்தியா. முதலில் ஆடிய இந்திய அணிக்கு அசத்தலான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் சச்சினும், சேவாக்கும். இதுவரை பெற்ற உலகக்கோப்பை தோல்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக பந்தை நாலாப்பக்கமும் சிதறடித்தனர்.

2011 உலகக்கோப்பை
2011 உலகக்கோப்பை

முதல் விக்கெட்டிற்கு 142 ரன்கள் சேர்த்தனர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நொறுக்க இந்திய அணியின் ரன்ரேட் வேகமெடுத்தது. முதல் பத்து ஓவர்களில் 87 ரன்கள். 50 ஓவர்கள் முடிவில் 296 ரன்கள் குவித்தது. சச்சின் 112, சேவாக் 73, கம்பீர் 69 என முதல் இன்னிங்சை முற்றிலும் தன் பக்கம் இழுத்தது இந்தியா. 297 ரன்கள் என்ற கடின இலக்கை கூலாக சேஸ் செய்யத் தொடங்கினர் தென்னாபிரிக்க பேட்ஸ்மேன்கள். ஆம்லா, காலிஸ், டிவில்லியர்ஸ் ஆகிய மூவர் கூட்டணி இந்திய பவுலர்களை மிரட்டினர். 34வது ஓவருக்குப் பின் ஹர்பஜன் மற்றும் ஜாகீர்கானின் பந்துவீச்சு ஒரளவுக்கு எடுபட்டது. கடைசி நான்கு ஓவர்களில் 36 ரன்கள் தேவை. களத்தில் டூபெளஸ்ஸியும், பீட்டர்சன்னும் இருந்ததால் தென்னாபிரிக்கா நம்பிக்கையுடன் இருந்தது. கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட பவுண்டரி, சிக்சர், பவுண்டரி என முதல் மூன்று பந்துகளிலேயே மேட்ச்சை முடித்தார் பீட்டர்சன். முன்பு கூறியது போலவே சச்சின் நூறு அடித்தது இந்தியாவிற்கு மீண்டும் துர்அதிர்ஷ்டமாகவே அமைந்தது. மேலும் இந்தத் தோல்வியின் மூலம் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது இந்தியா. மீண்டும் முதலிடத்தை தனதாக்கியது தென்னாபிரிக்கா.

2015 உலகக் கோப்பை லீக் சுற்று

2015 உலகக் கோப்பை , ஒரு போட்டியில் கூட தோல்வி இல்லை இந்திய அணிக்கு. கடந்த உலகக் கோப்பையின் லீக் சுற்று சற்று கரடுமுரடாய் இருந்தாலும், இந்த முறை ஒரு தடைக் கூட இல்லாமல் அசத்தியது இந்தியா. பாகிஸ்தானுடன் ஏற்கெனவே ஒரு போட்டியில் தோற்ற தென்னாபிரிக்கா புள்ளிப்பட்டியலில் இரண்டாமிடத்தில் இருந்தது. இந்தப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தும் பட்சத்தில் ரன்ரேட் அடிப்படையில் முதலிடத்தைப் பெறலாம் என்ற கனவுடன் இந்தியாவை எதிர்கொண்டது. வழக்கம் போலவே இந்தப் போட்டியிலும் முதலில் பேட் செய்தது இந்திய அணி. முதல் ஓவரிலேயே ரோகித் அவுட்டாக தென்னாபிரிக்காவிற்கு அத்தனை உற்சாகம். அதற்கு முட்டுக்கட்டை போடுவது போல் ஆடினார் தவான். இவருக்கு கோலியும் நல்ல ஒத்துழைப்பு கொடுக்க இன்னிங்க்சை அசத்தலாக கட்டமைத்தனர். இரண்டாவது விக்கெட்டிற்கு 127 சேர்த்த போது 46 ரன்களில் கோலி அவுட்டானார். இருப்பினும் தவான் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். டீப் மிட் விக்கெட் ஏரியாவில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளோடு சதம் விளாசினார். அவருக்குப் பின் வந்த ரகானேவும் 79 ரன்கள் எடுக்க இந்தியாவின் ஸ்கோர் 307 ரன்களாக உயர்ந்தது.

2015 உலகக் கோப்பை
2015 உலகக் கோப்பை

இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலும் சேஸ் செய்து வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா இப்போட்டியையும் எளிதாக நினைக்க ஆஸ்திரேலியாவின் பிட்ச் அதற்கு இடமளிக்கவில்லை. தொடக்கம் முதலே இந்திய பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தினர். பந்து நல்ல ஸ்விங் ஆவதைத் தெரிந்து முதல் 15 ஓவர்கள் வேகப்பந்து வீச்சாளர்களையே பயன்படுத்தினார் கேப்டன் தோனி. ஷமியின் இன்ஸ்விங் பந்துகள் பேட்ஸ்மேன்களை நிலை குலைய வைத்தது. பின்னர் தன் சுழல் ஆயுதத்தை கையில் எடுத்த அஷ்வின் தென்னாபிரிக்காவின் விக்கெட்டுகளை சீட்டுக்கட்டுகளைப்போல் சரித்தார். மேலும், இந்தியாவின் பீல்டிங்கும் சிறப்பாக இருக்க இதுவரை வாங்கிய தோல்விகளுக்கெல்லாம் சொல்லி வைத்தாற்போல் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. மேலும், தன் நீண்ட நாள் கனவான புள்ளிப்பட்டியலின் முதலிடத்தையும் பெற்றது.

கடந்த முறை பெற்ற வெற்றியின் உற்சாகத்தோடு களமிறங்கும் இந்திய அணிக்கு தென்னாபிரிக்கா கடும் சவாலைக் கொடுக்கும். இருப்பினும், மீண்டும் தோற்று பழைய வரலாற்றிற்குள் செல்லுமா? இல்லை வெற்றி பெற்று இந்த உலகக் கோப்பையில் புது வரலாற்றை படைக்குமா? என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.