Published:Updated:

ஆமிர் + வஹாப் vs கோலி + ரோஹித்... இதோ உலகக் கோப்பையின் மிகமுக்கிய மோதல்! #INDvPAK

பாகிஸ்தான் பௌலர்களுக்கும், இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் எதிரான மோதலாகவே இந்தப் போட்டி அமையும்.

#INDvPAK
#INDvPAK

உலகக் கோப்பை அட்டவணை வெளியிட்டப்பட்ட அன்று, பலரும் தங்கள் காலண்டரில் குறித்து வைத்த நாள் இதுவாகத்தான் இருக்கும். ஃபைனலின் டிக்கெட்டுகளுக்கு முன்பாக தீர்ந்து போனது இந்தப் போட்டியின் டிக்கெட்டுகள்தான். இந்தியா - பாகிஸ்தான், கிரிக்கெட் உலகின் மிகமுக்கிய போட்டி இதோ உலக அரங்கில் அரங்கேறப்போகிறது. இந்திய பேட்ஸ்மேன்களுக்கும், பாகிஸ்தான் பௌலர்களுக்கும் நடக்கப்போகும் மிகமுக்கிய மோதலில் மழையின் இருப்பும் இருக்கும் என்பதுதான் மிகப்பெரிய சோகம்!

மான்செஸ்டர் நகரில் கடந்த சில நாள்களாகவே தொடர்ந்து மழை பெய்துகொண்டிருக்கிறது. இன்றும் மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதனால், போட்டி தடைபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நியூசிலாந்து போட்டியைப் போல் முழுவதுமாகக் கைவிடப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை போட்டி நடந்தாலும், டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சைத்தான் தேர்ந்தெடுக்கும்.

#INDvPAK
#INDvPAK

இன்று போட்டி நடக்கும் ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக இல்லை. அதனால், கண்டிப்பாக பேட்டிங்குக்குச் சாதகமாகவே இந்த ஆடுகளம் இருக்கும். இருந்தாலும், பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்கவேண்டிய சவால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இருக்கிறது. குறிப்பாக முகமது ஆமிர். 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல்போல் அவர் ஒரு நல்ல ஸ்பெல் வீசினாலே, இந்திய அணிக்கு சிக்கலாக அமைந்துவிடும். அதுமட்டுமல்லாமல், ஃபார்ம் இல்லாமல் தவித்து வந்தவர், இந்த உலகக் கோப்பையில் 3 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி மிரட்டிக்கொண்டிருக்கிறார்.

இடது கை பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் திணறுவது அனைவரும் அறிந்ததுதான். இன்று அதை பாகிஸ்தான் எந்த அளவுக்குப் பயன்படுத்தப்போகிறது என்பதும், இந்திய பேட்ஸ்மேன்கள் அதை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதும்தான் இந்தப் போட்டியின் முடிவை நிர்ணயிக்கும். ஆமிர் மட்டுமல்லாது, வஹாப் ரியாஸும் சில நல்ல ஸ்பெல்கள் வீசிக்கொண்டிருக்கிறார். அதனால், முதல் 10 ஓவர்களில் விக்கெட்டுகள் ஏதும் விழாமல் இந்திய அணி பார்த்துக்கொள்ளவேண்டும்.

#INDvPAK
#INDvPAK

பிளேயிங் லெவன்

தவான் இடத்தில் ராகுல் ஆடுவது உறுதி செய்யப்பட்ட நிலையில், நான்காவது வீரராகக் கலமிறங்கப்போவது யார் என்ற கேள்வி இன்னும் எழத்தான் செய்கிறது. அணித் தேர்வின்போது, 'விஜய் சங்கர்தான் நான்காவது இடத்துக்கான பேட்ஸ்மேன்' என்றார் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்.

ஆனால், நியூசிலாந்து போட்டிக்கு முன்பாக தினேஷ் கார்த்திக்தான் அதிக நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அதனால் அவர் களமிறங்கத்தான் வாய்ப்பு அதிகம் என்று அந்த பிராக்டீச் செஷனைக் கவனித்த முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டூல் கூறியிருந்தார். அதனால், இருவரில் யார் ஆடப்போகிறார்கள் என்பது இன்னும் சந்தேகமாகவே இருக்கிறது.

#INDvPAK
#INDvPAK

பாகிஸ்தான் அணி, பல மாற்றங்களைச் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஷோயப் மாலிக், ஆசிஃப் அலி இருவருமே பேட்டிங்கில் சொதப்புகிறார்கள். ஆசிஃப் அலி ஃபீல்டிங்கிலும் மொத்தமாக காலை வாறிக்கொண்டிருக்கிறார். அதனால் இவர்களின் இடம் பறிக்கப்படலாம். ஒருவேளை, மாலிக் இந்திய அணியிடம் கொண்டிருக்கும் நல்ல ரெக்கார்டுகளைப் பற்றி யோசித்தால் அவர் தப்பிக்கலாம். அவர்கள் இருவருமே பிளேயிங் லெவனில் இல்லாதபட்சத்தில் ஹாரிஸ் சோஹைல், சதாப் கான் இருவரையும் களமிறக்கலாம். அப்படி இல்லையென்றாலும் சதாப் கான் இன்று ஆடுவதுதான் அவர்களுக்கு நல்லது.

ஒருவேளை இமாத் வசீமை களமிறக்கினால், சதாபுக்குப் பதில் ஒரு பௌலரை நீக்கவேண்டியிருக்கும். அது சஹீன் அஃப்ரிடியாக இருக்கலாம். ஆனால், ஒரு தாக்கமும் ஏற்படுத்தாத ஹசன் அலியை, வலது கை பௌலர் என்பதற்காகவே வைத்திருப்பதும் நல்லதல்ல. அவருக்குப் பதில் முகமது ஹஸ்னைனைக் களமிறக்கி புதிதாக ஏதாவது முயற்சி செய்யவும் வாய்ப்புண்டு. இன்று பாகிஸ்தான் என்ன காபினேஷனில் களமிறங்கும் என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.

Virat Kohli
Virat Kohli

இந்தியா (உத்தேச அணி) : ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, விஜய் சங்கர் / தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார். குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், ஜஸ்ப்ரீத் பும்ரா.

பாகிஸ்தான் (உத்தேச அணி) : ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் ஆசம், முகமது ஹஃபீஸ், சர்ஃபராஸ் அஹமது, ஷோயப் மாலிக் / ஹாரிஸ் சோஹைல், ஆசிஃப் அலி / இமாத் வசீம், முகமது ஆமிர், வஹாப் ரியாஸ், ஷதாப் கான் / சஹீன் அஃப்ரிடி, ஹசன் அலி / முகமது ஹஸ்னைன்

Rohit Sharma
Rohit Sharma

இதுவரை

இந்தியா

vs தென்னாப்பிரிக்கா - 6 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வெற்றி

vs ஆஸ்திரேலியா - 36 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி

vs நியூசிலாந்து - மழையால் ஆட்டம் ரத்து

பாகிஸ்தான்

vs வெஸ்ட் இண்டீஸ் - 7 விக்கெட்டுகள் வித்யாசத்தில் தோல்வி

vs இங்கிலாந்து - 14 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி

vs இலங்கை - மழையால் ஆட்டம் ரத்து

vs ஆஸ்திரேலியா - 41 ரன்கள் வித்யாசத்தில் தோல்வி