Published:Updated:

பிளாக் கேப்ஸ் vs மென் இன் புளூ.. வெற்றி யாருக்கு? #INDvNZ

பும்ரா
பும்ரா

இந்திய அணிக்கு இருக்கும் மிகப்பெரிய சவால், போல்ட் வீசப்போகும் முதல் ஸ்பெல்லைச் சமாளிப்பது.

இதுவரை இந்த உலகக் கோப்பையில் தோல்வியைச் சந்தித்திடாத இந்தியாவும், நியூசிலாந்தும் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன. இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற அணிகளுக்கு எதிராக வெற்றியைப் பதிவு செய்துள்ள பிளாக் கேப்சுக்கு இன்றுதான் மிகப்பெரிய சவால் ஆரம்பிக்கிறது. அதேசமயம் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, அதிக நம்பிக்கையோடு களமிறங்குகிறது மென் இன் புளூ. நாட்டிங்ஹம் மைதானத்தில், தங்களின் வெற்றிப் பயணத்தைத் தொடங்கப்போகும் அணி எது?

இந்திய அணிக்கு இருக்கும் மிகப்பெரிய சவால், போல்ட் வீசப்போகும் முதல் ஸ்பெல்லைச் சமாளிப்பது. பயிற்சிப் போட்டியில் மொத்த டாப் ஆர்டரையும், தன் ஸ்விங்கால் ஆட்டம் காணச் செய்தார் போல்ட். அவரை ரோஹித், ராகுல் இருவரும் நிதானமாக எதிர்கொள்வது அவசியம். ரோஹித் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆடியதைப் போலவே ஆடினால் நல்லது. ராகுல், தவானின் இடத்தை நிரப்பவேண்டும். மிடில் ஓவர்களில் லாகி ஃபெர்குசனின் ஸ்பெல்லை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதும் முக்கியம். விக்கெட் எடுப்பதோடு மட்டுமல்லாமல், அதிக டாட் பால்கள் வீசி ரன்ரேட்டைக் குறைப்பதிலும் அவர் வல்லவர். முதல் பவர்பிளேவுக்குப் பிறகு அவரை அட்டாக்கிங் மனநிலையோடு எதிர்கொள்வது அவசியம்.

#INDvNZ
#INDvNZ

நியூசிலாந்து அணி மிகுந்த எச்சரிக்கையோடு இந்தப் போட்டியை அணுகவேண்டும். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில், சுழலுக்கு நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் மிகவும் திணறினார்கள். குல்தீப், சஹால் கூட்டணியிடம் விக்கெட் இழக்காமல் ஆடவேண்டியது அவசியம். அதேபோல், இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலுமே இரண்டாவதாகத்தான் பேட்டிங் செய்திருக்கிறார்கள். இன்று முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில், அவர்களின் பேட்டிங் ஆர்டருக்கு அது கூடுதல் சவாலாக இருக்கும்.

இன்று போட்டி நடக்கும் நாட்டிங்ஹம் நகரில் 80 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். அதனால், இன்றைய போட்டி முழுவதுமாகத் தடைபடவும் வாய்ப்பிருக்கிறது.

இதுவரை

நியூசிலாந்து

vs இலங்கை - 10 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி

vs வங்கதேசம் - 2 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி

vs ஆப்கானிஸ்தான் - 7 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி

#INDvNZ
#INDvNZ
இந்தியா

vs தென்ன்னாப்பிரிக்கா - 6 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி

vs ஆஸ்திரேலியா - 36 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி

நேருக்கு நேர்

இதுவரை ஒருநாள் அரங்கில், இந்தியாவும் நியூசிலாந்தும் 106 முறை நேருக்கு நேர் மோதியிருக்கின்றன. இதில் 55 - 45 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. ஐந்து போட்டிகளுக்கு முடிவு தெரியவில்லை. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது. கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில் 7 வெற்றிகளைப் பெற்று ஆதிக்கம் செலுத்திவருகிறது இந்தியா. உலகக் கோப்பைகளில் இந்த இரு அணிகளும் இதுவரை 7 போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றுள் மூன்றில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக 2003 உலகக் கோப்பையில் சந்தித்த இரு அணிகளும், அடுத்த 3 உலகக் கோப்பைகளிலும் மோதவேயில்லை.

#INDvNZ
#INDvNZ

பிளேயிங் லெவன்

இந்திய அணியைப் பொறுத்தவரை தவான் இல்லாதது மிகப்பெரிய இழப்பு. அந்த இடத்தில் கே.எல்.ராகுல் விளையாடுவது உறுதி என்ற நிலையில், ராகுல் ஆடிய நான்காவது இடத்தில் யாரைக் களமிறக்குகிறார்கள் என்பது முக்கியம். தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் இருவரில் ஒருவர், தங்களின் முதல் உலகக் கோப்பைப் போட்டியில் இன்று விளையாடப்போகிறார்கள். அது யார் என்பதுதான் இந்திய அணியில் இருக்கும் கேள்வி. மற்றபடு வேறு எந்த மாற்றமும் இருக்காது.

நியூசிலாந்து அணி, மூன்று போட்டியிலும் நன்றாகவே ஆடியிருக்கிறது. அதனால் மாற்றம் செய்யத் தேவையில்லைதான். ஆனால், ஃபிட்னஸ் பிரச்னையிலிருந்து இரு முன்னணி வீரர்கள் மீண்டு வந்திருப்பது மாற்றங்களுக்கு வழிவகுக்கலாம். ஹென்றி நிகோல்ஸ், டிம் சௌத்தி ஆகியோர் இன்றைய போட்டியில் இடம் பெறலாம். நிகோல்ஸ் ஆடும்பட்சத்தில் முன்றோவை வெளியில் எடுப்பது பெரிய விஷயமில்லை. ஆனால், சௌத்தி ஆடுவதாக இருந்தால், விக்கெட்டுகள் வீழ்த்திக்கொண்டிருக்கும் நேட் ஹென்றியை நீக்கவேண்டியிருக்கும். நியூசிலாந்து இந்த விஷயத்தில் நல்ல முடிவை எடுப்பது அவசியம்.

#INDvNZ
#INDvNZ

இந்தியா (உத்தேச அணி) : ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, தினேஷ் கார்த்திக் / விஜய் சங்கர், எம்.எஸ்.தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, யுஸ்வேந்திர சஹால்.

நியூசிலாந்து (உத்தேச அணி) : மார்டின் குப்தில், காலின் முன்றோ / ஹென்றி நிகோல்ஸ், கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிராந்தோம், மிட்செல் சேன்ட்னர், டிம் சௌத்தி / மேட் ஹென்றி, டிரென்ட் போல்ட், லாகி ஃபெர்குசன்.

அடுத்த கட்டுரைக்கு