Published:Updated:

இரண்டு ஆண்டுகள் செய்த தவற்றை இனியும் இந்தியா தொடரவேண்டாம்..!

பிரஸ் மீட்டில் இருக்கும் ஜாலி மூடை, டிரஸ்ஸிங் ரூமிலும் பாசிட்டிவாக மாற்ற வேண்டும். அப்போதுதான் 2023-ம் ஆண்டு, வான்கடேவிலோ, ஈடன் கார்டனிலோ இந்திய கேப்டனால் கோப்பையை முத்தமிடமுடியும். 

India vs New Zealand
India vs New Zealand

இந்திய அணியின் அரையிறுதி தோல்விக்குக் காரணம் என்ன? இந்த விவாதம் இன்னும் ஓய்ந்த பாடில்லை. சிலர், `மிடில் ஆர்டரின் சொதப்பல்' என்று பொதுவாகச் சொல்ல, இன்னும் சிலர் `ரிசப் பன்ட் ஆடிய பொறுப்பற்ற இன்னிங்ஸ்' என்று நேரடியாகவே கைகாட்டுகிறார்கள். விராட் கோலியின் நாக் அவுட் சொதப்பல்களும் பலரால் சாடப்படுகிறது.

`45 நிமிட மோசமான கிரிக்கெட்... உலகக் கோப்பை கனவு க்ளோஸ்!' - கோலி சொல்லும் லாஜிக்! #INDvNZ

தோனியை முன்னமே களமிறக்காததையும் சுட்டிக்காட்டுகிறார்கள் சிலர். தங்களின் முழு உழைப்பையும் கொட்டி ஏமாற்றுத்துடன் திரும்பும் அவர்களை குற்றவாளிக்கூண்டில் ஏற்றவேண்டாம். தனியொரு வீரர் யாரையும் கைகாட்டாமல், இந்தியா என்ற அணி எங்கு தடுமாறியது என்பதை, அடுத்து சரிசெய்யவேண்டியது என்ன என்பதை அலசுவோம்.

கடைசியாக ஒரே ஒருநாள் போட்டியில், ரோஹித் ஷர்மா, விராட் கோலி இருவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறியது - 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல். அதுபோல் இன்னொரு போட்டி நடக்கும் என்பது பலரும் எச்சரித்தது. ஆனால், எல்லோரும் பயந்ததுபோல் அதுவும் ஒரு நாக் அவுட் போட்டியிலேயே நடந்திருக்கிறது என்பதுதான் சோகம். ஆனால், இந்தியா அதற்குத் தயாராக இருந்திருக்க வேண்டும். இந்த இரண்டு ஆண்டுகளில், இந்தச் சிக்கலைச் சரிசெய்திருக்க வேண்டும். இந்தியா செய்த முதல் தவறு - அதைச் சரிசெய்யாதது.

Dinesh Karthik
Dinesh Karthik

அம்பாதி ராயுடு, மனீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், ஷ்ரேயாஸ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, விஜய் சங்கர், கே.எல்.ராகுல் என எத்தனை வீரர்களை மிடில் ஆர்டரில் இறக்கிவிட்டு பரிசோதனை செய்திருக்கிறது இந்தியா! ஆனால், அதில் ஒருவரைக்கூட அணிக்குள் ஃபிட் செய்ய முடியவில்லை என்பதுதான் மிகப்பெரிய பிரச்னை. எல்லோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது என்கிறார்கள். ஆனால், எப்படி வாய்ப்பு வழங்கப்பட்டது என்பதை யோசிக்க வேண்டும். ஒரு போட்டியில் நான்காவதாக இறங்கும் மனீஷ், அடுத்த போட்டியில் ஆறாவது வீரராக வருகிறார். டாப் ஆர்டர் நன்றாக ஆடும் போட்டிகளில் ஆறாவது ஆடும் டி.கே, நெருக்கடியான சேஸிங்கின்போது ஐந்தாவதாக இறக்கப்படுகிறார். யாருக்கும், எந்த பொசிஷனிலும் இந்திய அணி நிரந்தர வாய்ப்பு தரவில்லை.

Vikatan

ரோஹித், தவான், கோலி போன்றவர்கள் நிரந்தரமாக இரு பொசிஷனில் ஆடுவதைப்போல், கடந்த ஆண்டுகளில் எந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும் நிரந்தரமாக இரு இடத்தில் ஆடவில்லை. தோனி உட்பட! கடந்த 4 ஆண்டுகளில், தோனியின் பேட்டிங் பொசிஷனே மாறிக்கொண்டேதான் இருந்திருக்கிறது. 2015 ஜூலை 12-ம் தேதிக்குப் பிறகு, 10 போட்டிகளில் நான்காவது வீரராகக் களமிறங்கியிருக்கிறார். 39 போட்டிகளில், ஐந்தாவது பேட்ஸ்மேனாக ஆடியிருக்கிறார். ஆறாவது மற்றும் ஏழாவது பொசிஷன்களில் முறையே 29 மற்றும் 7 போட்டிகளில் ஆடியிருக்கிறார். இப்படித்தான் ஒவ்வொருவரையும் பேட்டிங் ஆர்டரில் போட்டு உருட்டிக்கொண்டே இருந்திருக்கிறது அணி நிர்வாகம்.

Virat Kohli
Virat Kohli

``எந்த பொசிஷன்ல இறங்குனாலும் நல்லா ஆடணும். அதுதான ஒரு சர்வதேச பேட்ஸ்மேன்கிட்ட எதிர்பார்க்கிறது" என்று வாதம் செய்யலாம். ஆனால், அது வாதத்துக்கு நன்றாக இருக்கும். மூன்றாவது வீரராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட பின் கோலி நான்காவதாக இறங்கிய 4 போட்டிகளில் (கடந்த 4 ஆண்டுகளில்), ஒன்றில்கூட 20 ரன்களைத் தாண்டவில்லை. மற்ற பொசிஷன்களில், கிட்டத்தட்ட சுமார் 50 சராசரி கொண்டிருக்கும் தோனி, ஏழாவது பொசிஷனில் (கடந்த 4 ஆண்டுகளில்) வைத்திருக்கும் சராசரி 32 தான்! ஆக, பொசிஷன் மாறும்போது, ஒரு பேட்ஸ்மேன் தன்னுடைய வழக்கமான ஆட்டத்தை மாற்றவேண்டியிருக்கும். அங்கு அவர்களால் தங்களின் முழுத் திறனையும் காட்டமுடியாமல் போகும். இது தோனி, கோலி போன்ற உலகத்தர பேட்ஸ்மேன்களுக்கே பொருந்தும். அப்படியிருக்கையில் ரஹானே, கார்த்திக் போன்றவர்கள் எம்மாத்திரம்?!

உலகக் கோப்பைக்கு முன்புவரை இந்தத் தவற்றைச் செய்ததைக்கூட விட்டுவிடலாம். உலகக் கோப்பையிலும் அதையே தொடர்ந்திருக்கிறது இந்திய அணி. ஒவ்வொரு அணியிலும், ஒவ்வொரு வீரருக்கும் ஒரு designated slot, ஒரு designated role என்று ஒரு இருக்கும். அணியில் ஹர்திக், தோனி இருவரின் யாருக்கு ஃபினிஷர் ரோல் கொடுக்கப்பட்டது தெரியவில்லை. ஜாதவின் ரோல் புரியவில்லை. யாருக்கு என்ன இடம் என்பதும் தெளிவில்லை. 4,5,7 பொசிஷன்களில் போட்டிக்குப் போட்டி மாறி மாறி களம் கண்டனர் நம் பேட்ஸ்மேன்கள். முதல் 4 இன்னிங்ஸில் ஐந்தாவது பேட்ஸ்மேனாகக் களம் கண்ட தோனி, அடுத்த 4 போட்டிகளில் ஆறாவது வீரராக வந்தார். அரையிறுதியில் ஆறு, ஏழானது. 4,5,6,7 என எல்லா ஏரியாவிலும் களமிறக்கப்பட்டார் ஹர்திக்!

India and New Zealand batting order in World Cup
India and New Zealand batting order in World Cup

மேலே இருக்கும் படத்தில், இந்த அரையிறுதி வரை, நியூசிலாந்து, இந்தியா அணிகளின் பேட்டிங் ஆர்டர் எப்படியிருந்தது என்பது புரியும். ராஸ் டெய்லர் களமிறங்கிய 7 போட்டிகளிலும் நான்காவது வீரராகவே ஆடினார். லாதம் - 5, நீஷம் - 6, காலின் டி கிராந்தோம் - 7 என அரையிறுதிக்கு முன் ஒரு போட்டியில்கூட அந்த அணியின் பேட்டிங் ஆர்டர் மாற்றப்படவில்லை. ஆனால், இந்திய அணிக்கு அப்படியில்லை. ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு பேட்டிங் ஆர்டர். சூழ்நிலைக்குத் தகுந்ததுபோல் பேட்டிங் ஆர்டர் மாற்றப்பட்டது என்கிறார்கள். ஆப்கானிஸ்தானுக்கு எதிராகத் தடுமாறும்போது, ஐந்தாவது வீரராக கேதர் ஜாதவ் களமிறங்கினார். அரைசதம் அடித்தார். ஆனால், அடுத்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராகத் தடுமாறியபோது, தோனி ஐந்தாவது களமிறங்குகிறார். ஒரு போட்டியில் அவருடைய இடம் மாறும். அவர் ஆடவேண்டிய அணுகுமுறையும் மாறும். இப்படி இருந்தால் எப்படி?

ஆஸ்திரேலியா, வங்கதேச அணிகளுக்கு எதிராக பாண்டியாவை ப்ரமோட் செய்தது சரி. ஆனால், இலங்கைக்கு எதிராக ஏன்? வெற்றிக்கு 12 ரன்கள் மட்டுமே தேவை எனும்போது, தினேஷ் கார்த்திக் கொஞ்ச நேரம் ஆட வாய்ப்பு வழங்கியிருக்கலாம். வங்கதேசத்துக்கு எதிராக அதிரடியாக ஆட வேண்டும் என்ற தேவை இருந்தது. நியூசிலாந்துக்கு எதிராக நிலைத்து நின்று ஆடவேண்டிய நெருக்கடி இருந்தது. இடையில் எந்த நெருக்கடியும் இல்லாத இலங்கை போட்டியில், எளிதான சூழலில், இந்தியா களமிறக்கியது, நல்ல ஃபார்மில் இருக்கும் பாண்டியாவை. இதுதான் இந்தியா செய்துகொண்டிருக்கும் மிகப்பெரிய தவறு.

நிரந்தர இடம் இல்லாத வீரர்களுக்கு, நெருக்கடியற்ற சூழலில் சிலபல வாய்ப்புகள் கொடுத்தால்தான், அவர்கள் நன்றாக அணியோடு செட் ஆவார்கள். ஒவ்வொருமுறை அவர்கள் களமிறங்கும்போதும், இப்படி கண்டிஷன்கள் இருந்தால், அதுபோன்ற வீரர்களுக்கு நெருக்கடி ஏற்படுவது சகஜம்தான்.

Rohit Sharma
Rohit Sharma

அதிலும் குறிப்பாக தினேஷ் கார்த்திக் எவ்வளவு நெருக்கடியை உணர்ந்தார் என்பது, ஃபீல்டிங்கின்போது தெளிவாகத் தெரிந்தது. அவர் வீசிய பல த்ரோக்கள், கீப்பருக்கோ பௌலருக்கோ சரியாகச் செல்லவேயில்லை. ஜேம்ஸ் நீஷம் கேட்சைப் பிடித்துவிட்டு, அவர் கொண்டாடிய விதம், அதுவரை அவருக்குள் இருந்த பதற்றத்தை, அது எப்படி வெளியேறுகிறது என்பதை உணர்த்தியது. இது தினேஷ் கார்த்திக்கின் பிரச்னை இல்லை. இந்தியா சறுக்கிய மிகமுக்கிய இடம் இது. பிரஸ் மீட்டிலிருந்து எல்லா இடத்திலும் ஜாலியாக இருந்த இந்திய வீரர்கள், முக்கியமான நேரத்தில் தங்களின் நெருக்கடியைச் சமாளிக்கக் கற்கவில்லை.

கீழே இருக்கும் இரண்டு படங்களையும் பாருங்கள். இரண்டுமே அரையிறுதிப் போட்டியின் படங்கள். மூன்று விக்கெட்டுகள் இழந்த நிலையில், ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளின் டிரஸ்ஸிங் ரூம்கள் எப்படி இருந்தன என்பதை இது சொல்லிவிடும். ஆர்ச்சரின் பௌன்சரில் சிக்கிய, அலெக்ஸ் கேரியின் ஹெல்மட்டை வைத்து கூலாக பேசிக்கொண்டிருப்பார்கள் ஆஸி வீரர்கள். ஆலோசகர் பான்டிங், அவுட்டான வார்னர், போட்டியில் ஆடாத கவாஜா, அடுத்து களமிறங்கும் கம்மின்ஸ் என அனைத்து தரப்புமே ஒரே மனநிலையில் இருக்கும்.

Australian dressing room
Australian dressing room
Indian dressing room
Indian dressing room

ஆனால், இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூம், கடைசிவரை இறுக்கமாகவே இருந்தது. ஒருவர் கூட மற்றொருவரிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. பயிற்சியாளரின் இறுக்கம், அவுட்டான ரோஹித்தின் இறுக்கம், அடுத்து களமிறங்கப்போகும் ஜடேஜாவுக்கும் பரவிக்கொண்டேதான் இருந்தது. 3 விக்கெட்டுகள் போனவுடனேயே 'எல்லாம் முடிந்துவிட்டது' மோடுக்குச் சென்றுவிட்டது இந்திய அணி.

இந்திய பேட்டிங் ஆர்டர் ஏழாவது வீரருடன் முடிந்துவிடுகிறது. அணியின் டெய்ல் நீளமாக இருக்கிறது. ஆனால், அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. அந்த மிடில் ஆர்டர் மீது நம்பிக்கை வைத்தால் போதும். ஆனால், யாருக்கும் அப்படி இருப்பதுபோல் தெரியவில்லை. `நான் அவுட்டாகிவிட்டால் அவ்வளவுதான்' என்ற மனநிலையிலேயே எல்லோரும் ஆடுகின்றனர்
சௌரவ் கங்குலி
Team India
Team India

இதுதான் இந்தியாவை வாட்டிய மிகப்பெரிய பிரச்னை! டாப் ஆர்டர் ஆட்டமிழந்தால், இந்தியா அவ்வளவுதான் என்ற எண்ணம் ரசிகர்களுக்கு இருந்தால் பரவாயில்லை. ஆனால், அது இந்திய வீரர்களுக்கே இருந்ததுதான் பிரச்னை. மிடில் ஆர்டர் மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். அந்த வீரர்களின் நெருக்கடியைக் குறைத்திருக்க வேண்டும். டிரஸ்ஸிங் ரூமில் அப்படியொரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், இந்தியா அப்படிச் செய்யவில்லையே!

உண்மையில், ஒவ்வொரு வீரரும் அவர்கள் சொன்னதுபோல் தங்களின் 100 சதவிகித உழைப்பைக் கொடுத்துள்ளனர். ஆனால், இந்தியா 100 சதவிகிதம் முழுமையான அணியாக இல்லை என்பதுதான் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய, சரிசெய்யவேண்டிய விஷயம். இரண்டு ஆண்டுகளாகச் சரிசெய்யாத மிடில் ஆர்டர் பிரச்னையை முதலில் தீர்க்க வேண்டும். ஷ்ரேயாஸ் ஐயர், ரிசப் பன்ட் போன்ற இளைஞர்களுக்குக் கொஞ்சம் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்து அவர்களை மெருகேற்ற வேண்டும்.

லார்ட்ஸில் இங்கிலாந்து Vs நியூசிலாந்து! #AUSvENG

பார்ட் டைம் பந்துவீசக்கூடிய நித்தீஷ் ராணா போன்ற சில பேட்ஸ்மேன்களைக் கண்டுபிடிப்பதும் அவசியம். அதேபோல், பிரஸ்மீட்டில் இருக்கும் ஜாலி மூடை, டிரஸ்ஸிங் ரூமிலும் பாசிடிவாக மாற்ற வேண்டும். அப்போதுதான் 2023-ம் ஆண்டு, வான்கடேவிலோ, ஈடன் கார்டனிலோ இந்திய கேப்டனால் கோப்பையை முத்தமிடமுடியும்.