Published:Updated:

சீனியர்களுக்கு ஓய்வா, முதலிடத்துக்குப் போட்டியா... இந்தியாவின் பிளான் என்ன?! #SLvIND

கார்த்திகா ராஜேந்திரன்

உலகக் கோப்பை தொடர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் லசித் மலிங்காவுக்கு இது கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம்

#SLvIND
#SLvIND

வெற்றி, தோல்விகளுக்கு இடையேஅதிர்ச்சி, ஆச்சர்யம், ஏமாற்றம் என இந்த உலகக் கோப்பை லீக் சுற்று, பல வியப்பான விஷயங்களை அளித்திருக்கிறது. ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து என நான்கு அணிகள் ஏற்கெனவே அரை இறுதிக்கு முன்னேறிவிட்டன. லீக் சுற்றின் கடைசி நாளான இன்றைய போட்டி முடிவுகள், முதல் இடத்தைப் பிடிக்கப்போகும் அணி எது என்பதை தீர்மானிக்கும். ஹெடிங்லி மைதானத்தில் இந்தியா - இலங்கை அணிகளும், மான்செஸ்டரில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளும் இன்று மோதுகின்றன

லசித் மலிங்கா
லசித் மலிங்கா

சீனியர் வீரர்கள் கிறிஸ் கெயில், இம்ரான் தாஹிர், ஷோயிப் மாலிக் என ஒவ்வொருவராக `இதுதான் என் கடைசி உலகக் கோப்பை’ என அறிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், உலகக் கோப்பை தொடர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் லசித் மலிங்காவும் இணைகிறார்.

உலகக் கோப்பைகளில் லசித் மலிங்கா

28 போட்டிகள் - 55 விக்கெட்டுகள்

ஒவ்வொருமுறை இலங்கை அணி சரிவைச் சந்திக்கும்போதும், மலிங்காவின் பந்துவீச்சு அணியைக் கரை சேர்க்கும். இந்த உலகக் கோப்பையில் லீக் சுற்றின் ஆரம்பத்தில் சொதப்பி வந்த இலங்கை அணி, இங்கிலாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கான ரேஸில் மீண்டும் இணைந்தது. அந்தப் போட்டியில் லசித் மலிங்கா 4 இங்கிலாந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை எடுத்தார்.

லீட்ஸ் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகம்தான் என்றாலும், மலிங்காவின் வேகத்துக்கும் விக்கெட்டுகள் சரியாமல் பார்த்துக்கொள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் மெனக்கிட வேண்டும்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில், அவிஷ்கா ஃபெர்ணான்டோ சதம், குசல் பெரேரா அரை சதம், திருமண்ணே 45 ரன்கள் எடுக்க, இலங்கை 338 ரன்களை ஈட்டியது. பெரும்பாலும், இலங்கை பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்காது.

அரை இறுதியை உறுதி செய்துவிட்ட இந்திய அணி, கடைசி லீக் போட்டியில் சில மாற்றங்களுடன் களமிறங்கலாம். கடைசி 10 நாள்களில் ஏற்கெனவே மூன்று லீக் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணிக்கு, இது நான்காவது போட்டி.

ஓய்வின்றி விளையாடி வரும் இந்திய அணியில் சில வீரர்களுக்கு இன்று ஓய்வளிக்கப்படலாம். இந்திய அணியின் வெற்றிக்கான துருப்புச்சீட்டு ஜஸ்ப்ரித் பும்ரா. இந்தப் போட்டியில் அவருக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா அணியில் இடம் பெறலாம்.

ரோஹித் ஷர்மா - ராகுல் ஓப்பனிங், விராட் ஒன் டவுன், நான்காவது இடத்தில் ரிஷப் பன்ட் என டாப் ஆர்டரில் பெரிய மாற்றங்கள் இருக்காது. ஜடேஜாவும் இணைந்தால் ஹர்திக், தோனி, கார்த்திக் இருக்கும் மிடில் ஆர்டர் பலமாகும். சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச் என்பதால் சாஹல், குல்தீப், ஜடேஜாவின் பந்துவீச்சு விக்கெட்டுகளை எடுக்க வேண்டும்.

நேருக்கு நேர்:

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இரு அணிகளும் மோதியுள்ள 158 போட்டிகளில், 90 வெற்றிகளுடன் இந்தியாவின் கை ஓங்கியுள்ளது. 56 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டி சமமாகவும், 11 போட்டிகள் வெற்றி தோல்வியின்றியும் முடிந்துள்ளன.

உலகக் கோப்பையைப் பொறுத்தவரை, இரு அணிகளும் மோதியுள்ள 8 போட்டிகளில், இலங்கை 4 போட்டிகளிலும், இந்தியா 3 போட்டிகளிலும், ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றியும் முடிந்துள்ளன.

ப்ளேயிங் லெவன்

இந்தியா (உத்தேசம்)

விராட் கோலி (கேப்டன்), கே.எல் ராகுல், ரோஹித் ஷர்மா, ரிஷப் பன்ட், ஹர்திக் பாண்டியா, எம்.எஸ் தோனி, தினேஷ் கார்த்திக்/ கேதர் ஜாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா/ஜடேஜா, புவனேஷ்வர் குமார் / முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ்

இலங்கை (உத்தேசம்)

திமுத் கருணரத்னே (கேப்டன்), குசல் பெராரா, அவிஷ்கா ஃபெர்ணான்டோ, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், லஹிரு திருமண்ணே, தனஞ்செயா டி சில்வா, இசுரு உடானே, ஜெஃப்ரி வான்டர்சே, கசுன் ரஜிதா, லசித் மலிங்கா

இதுவரை

இந்தியா

vs தென்னாப்பிரிக்கா - 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

vs ஆஸ்திரேலியா - 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs நியூசிலாந்து - மழையால் போட்டி ரத்து

vs பாகிஸ்தான் - 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs ஆப்கானிஸ்தான் - 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs வெஸ்ட் இண்டீஸ் - 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs இங்கிலாந்து - 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

vs வங்கதேசம் - 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இலங்கை

vs நியூசிலாந்து - 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

vs ஆப்கானிஸ்தான் - 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs பாகிஸ்தான் - மழையால் போட்டி ரத்து

vs வங்கதேசம் - மழையால் போட்டி ரத்து

vs ஆஸ்திரேலியா - 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

vs இங்கிலாந்து - 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs தென்னாப்பிரிக்கா - 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

vs வெஸ்ட் இண்டீஸ் - 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி