Published:Updated:

`தோனி உடனடியாக இதைச் செய்ய வேண்டும்!' - ஐ.சி.சி. அறிவுறுத்தல்

ராம் பிரசாத்

'தோனியின் க்ளவுஸில் இருக்கும் முத்திரையைக் கவனித்தீர்களா?' என சமூகவலைதளங்களை அவரது ரசிகர்கள் ஆக்கிரமித்தனர். சரி, அதில் என்ன பிரச்னை?

தோனி
தோனி ( BCCI )

சென்னை சேப்பாக்கமா இருந்தா என்ன... லண்டன் மைதானமா இருந்தா என்ன எங்க போனாலும் தோனிக்கான மாஸ் எப்பவுமே மாறாது. தோனிக்காக ஒரு கூட்டம் அங்கு காத்திருக்கும். எந்த கிரிக்கெட் வீரருக்கும் கிடைக்காத ஒரு ரசிகர்கள் பட்டாளம் தோனிக்கு இருக்கிறது.

பயிற்சியில் தோனி
பயிற்சியில் தோனி
BCCI

கோலி தலைமையிலான இந்தியக் கிரிக்கெட் அணி உலகக்கோப்பையைச் சிறப்பாக தொடங்கியுள்ளது. பும்ராவின் அட்டகாசமான பந்துவீச்சு, ஹிட் மேன் ரோஹித் சர்மாவின் நிதானமான சதம் இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தது. இந்தக் கணக்குப்படி பார்த்தால் பும்ரா, ரோஹித் இவர்களின் பெயர்கள்தான் ட்விட்டரில் ட்ரெண்டாகி இருக்க வேண்டும். ஆனால், சம்பந்தமே இல்லாமல் தோனி டிரெண்டானார். தோனி கைகளில் அணிந்திருந்த பச்சை நிற கீப்பிங் க்ளவுஸ் வைரலானது. 'தோனியின் க்ளவுஸில் இருக்கும் முத்திரையைக் கவனித்தீர்களா?' என சமூகவலைதளங்களை அவரது ரசிகர்கள் ஆக்கிரமித்தனர்.

மகேந்திர சிங் தோனிக்கு இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருப்பது நாம் அறிந்ததே. நேரம் கிடைக்கும்போது ராணுவ வீரர்களுடன் உரையாடுவதையும் அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். `தோனி விளையாடும் வீடியோ கேம்ஸ்கூட ஆர்மி சம்பந்தமானதாகத் தான் இருக்கும்' என விராட் கோலியே கூறியுள்ளார். சரி விஷயத்துக்கு வருவோம், தோனி அணிந்திருந்த கீப்பிங் க்ளவுஸில் இந்திய ராணுவத்தின் பாரா கமாண்டோ முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. இதைத்தான் அவரின் ரசிகர்கள் ட்வீட் செய்தனர். யார் கண் பட்டதோ என்னவோ அந்த க்ளவுஸ் தொடர்பாக தற்போது ஐசிசி, பிசிசிஐக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் க்ளவுஸில் இருக்கும் முத்திரையை எடுக்கும்படி அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளது.

தோனி அப்பீல்
தோனி அப்பீல்
BCCI

ஐசிசியின் விதிகளின்படி, சர்வதேசப் போட்டிகளில் அரசியல், மத அல்லது இனவாதம் குறித்த குறியீடுகளை வெளிப்படுத்தக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அந்த முத்திரையை எடுக்கும்படி பிசிசிஐ-யிடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கோரிக்கை வைத்துள்ளது. புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின்போது ஐசிசியின் அனுமதியோடு இந்தியக் கிரிக்கெட் அணி ஆர்மி தொப்பி அணிந்து விளையாடியது இங்கே குறிப்பிடத்தக்கது.

ராம் பிரசாத்