Published:Updated:

அன்று ஸ்மித்தை எச்சரித்தார்… இன்று மெச்சுகிறார்… வாவ் கோலி! #SpiritOfCricket

Virat Kohli
Virat Kohli ( AP )

``ஒருவேளை நான் அந்த இடத்தில் இருந்து, தவறை ஒப்புக்கொண்டு, மன்னிப்பு கேட்டு, மீண்டும் விளையாட வந்தபோது, என்னை இப்படி அவமதித்தால், நான் அதை ஏற்க மாட்டேன். ரசிகர்களின் செயலுக்காக வருந்துகிறேன்.’’

2017-ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தின்போது, இந்திய வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் வீசிய பந்தில் எல்பிடபுள்யு முறையில் ஆட்டமிழந்தார், அப்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். களத்தில் இருந்த அம்பயர் அவுட் கொடுத்து விட்டார். ஆனால், ஸ்மித் உடனடியாக களத்தில் இருந்தும் வெளியேறவில்லை; டிஆர்எஸ் கேட்கவும் இல்லை. டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து ஏதாவது சிக்னல் வருமா எனக் காத்திருந்தார். இதைக் கவனித்த இந்திய கேப்டன் விராட் கோலி, உடனடியாக அம்பயரிடம் முறையிட்டார். அதற்குள் அம்பயரும் ஸ்மித்திடம் பேசி, அவரை பெவிலியன் அனுப்பி வைத்தார்.

`என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் (brain fade) இருந்து விட்டேன்’ என பிரஸ் மீட்டில் சமாளித்தார் ஸ்டீவ் ஸ்மித். `அப்படியெல்லாம் இல்லை. இரண்டு முறை பார்த்துவிட்டேன். அவர்கள் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து வரும் உத்தரவுக்காக காத்திருந்தார்கள். இதைப்பற்றி நாங்கள் மேட்ச் ரெஃப்ரியிடம் முறையிடுவோம்’ என்று சொன்ன கோலி, அடுத்து சொன்னதுதான் உச்சம்.

This is a line you don’t cross. I will never do that.
கோலி

சிட்னி டெஸ்ட்டில் நடந்த ‘Monkeygate’ பிரச்னைக்கு பிறகு, இந்த brain fade பிரச்னை பரபரப்பாக பேசப்பட்டது. நெடுநாள் கழித்துத் தான் செய்தது தவறு என ஸ்மித் ஒரு பேட்டியில் ஒப்புக்கொண்டார். அன்று ஸ்மித்தை எச்சரித்த கோலி, இன்று ஸ்மித்துக்காக வக்காலத்து வாங்குகிறார்.

DRS சர்ச்சை
DRS சர்ச்சை

கடந்த ஆண்டு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்ட் போட்டியின்போது, பந்தை சேதப்படுத்தியதற்காக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் வார்னர் இருவருக்கும், கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஓராண்டு தடை விதித்தது. ஐ.சி.சி நடவடிக்கை எடுப்பதற்கு முன் முந்திக்கொண்டது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. ஏனெனில், ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட்டர்களுக்கு அவ்வளவு மரியாதை. அந்த ஆண்டு சிறந்த ஆஸ்திரேலியருக்கான விருதை கிரிக்கெட்டரான ஸ்மித் வாங்கியிருந்தார். அதனால்தான், `நாங்களே தண்டிக்கிறோம்’ என அப்படியொரு நடவடிக்கை எடுத்திருந்தது, ஆஸி கிரிக்கெட் போர்டு.

`கேப்டன் பொறுப்பை பிடுங்கிவிட்டோம். எச்சரித்து மட்டும் அனுப்பலாம். உலகக் கோப்பை நெருங்கும் நேரத்தில் இப்படியொரு தடை விதித்தால் அவர்கள் கிரிக்கெட் வாழ்வு பாதிக்கப்படும். அது ஆஸ்திரேலிய அணியையும் பாதிக்கும்’ என வார்னர், ஸ்மித்துக்கு ஆதரவாகவும் குரல் எழுந்தது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா கிணுங்கவில்லை. ஓராண்டு தடை முடிந்தது. ஸ்மித், வார்னர் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பினர். இதோ உலகக் கோப்பையிலும் பங்கெடுத்துவிட்டனர்.

அவர்கள் செய்தது மோசடிதான். அதற்கான தண்டனையை அனுபவித்துவிட்டனர். ஆனாலும், ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் அடியெடுத்து வைத்த நாள் முதல், ஸ்மித், வார்னர் எங்கு சென்றாலும், அவர்களை நோக்கி கூச்சலிட்டனர் (boo) இங்கிலாந்து ரசிகர்கள்.

How good is this from #ViratKohli
How good is this from #ViratKohli

இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியின்போது, ஸ்மித் பேட்டிங் செய்ய வரும்போது எழுந்து நின்று boo செய்தனர் இங்கிலாந்து ரசிகர்கள். அவர்களோடு இந்திய ரசிகர்களும் சேர்ந்து கொண்டதுதான் சோகம்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் லீக் போட்டி செளதாம்படனில் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான இந்திய ரசிகர்கள் ப்ளூ ஜெர்ஸி அணிந்து இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்தனர். அதிலும், Vauxhall End ஸ்டேண்ட் முழுவதும் நீல மயம்.

ஸ்மித் சமீபத்தில் மணிக்கட்டு காயத்துக்கு ஆபரேஷன் செய்திருந்ததால், முழு வீச்சில் த்ரோ செய்ய முடியாது என்பதற்காக, முந்தைய போட்டிகளில் ஃபீல்டிங்கின்போது டீப்பில் நிற்பதில்லை. இப்போது முழுமையாக தேறிவிட்டதால், நேற்று எல்லைக் கோட்டுக்கு அருகே நின்றிருந்தார். ஆனால், Vauxhall End-ல் இருந்த ரசிகர்கள் அவரைப் பார்த்து மோசடிக்காரர்’ என தொடர்ந்து கூச்சலிட்டிக்கொண்டிருந்தனர். முதல் போட்டியிலேயே ஸ்மித்துக்கு இது பழகிவிட்டது.

`இன்னமும் இங்கிலாந்து ரசிகர்கள் உங்கள் மீது வன்மமாக இருக்கிறார்களே?’ என்று கேட்டபோது, `Water off a duck's back’ என பதிலளித்தார் ஸ்மித்.

ஆனால், இந்திய ரசிர்களும் இப்படிச் செய்வார்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. கோலியும்தான்.

பாகிஸ்தானின் வெற்றியையும் கைதட்டி அங்கீகரித்து Knowledgeable crowd என பெயரெடுத்தவர்கள் இந்திய ரசிகர்கள். அவர்கள் எதிரிணியின் மிகச்சிறந்த வீரரை அவமதித்ததை கோலி விரும்பவில்லை. அதனால்தான், விக்கெட் விழுந்த இடைவெளியில், கூட்டத்தினரை நோக்கி, `எங்களுக்கு ஆதரவு கொடுங்கள். அவரை அவமதிக்காதீர்கள்’ என சமிக்ஞை செய்தார். இதைப் பார்த்து கோலியின் தோளில் தட்டிக்கொடுத்தார் ஸ்மித். ரைவல்ரியைத் தாண்டி அங்கொரு ஸ்போர்ட்ஸ்மென்ஷிப் துளிர்விட்டது. அதோடு நிற்காமல், இந்திய ரசிகர்களின் செயலுக்கு பிரஸ் மீட்டிலும் கண்டனம் தெரிவித்தார் கோலி.

``இந்திய ரசிகர்கள் தவறான முன்னுதாரணமாகத் திகழ்ந்துவிடக்கூடாது. என்னைப் பொறுத்தவரை கூச்சலிடுமளவு அவர் குற்றம் செய்யவில்லை. கிரிக்கெட் விளையாடுகிறார்; வெறுமனே அங்கே நின்றிருக்கிறார். அவ்வளவுதான். ஒருவேளை நான் அந்த இடத்தில் இருந்து, தவறை ஒப்புக்கொண்டு, மன்னிப்பு கேட்டு, மீண்டும் விளையாட வந்தபோது, என்னை இப்படி அவமதித்தால், நான் அதை ஏற்க மாட்டேன். அதனால்தான், `ரசிகர்களுக்காக வருந்துகிறேன்’ என்று ஸ்மித்திடம் சொன்னேன்!’’
கோலி

முதிர்ச்சியவற்றவர் என்று விமர்சிக்கப்பட்டவரின் இந்தப் பக்குவம் வியப்பளித்தது. Brain fade பிரச்னைக்குப் பின் `ஆஸ்திரேலியர்களுடன் நட்பு பாராட்ட மாட்டேன்’ என்று சொன்னவரும் இதே கோலிதான்…

``நடந்தது நடந்துவிட்டது. அவர் திரும்பி வந்துவிட்டார். அவர் தன் அணிக்காக கடினமாக போராடுகிறார். ஐ.பி.எல் தொடரிலும் பார்த்தேன்… அவரை இந்த நிலையில் பார்க்க விரும்பவில்லை. கடந்த காலத்தில் எங்களுக்குள் பிரச்னைகள் இருந்தன. களத்தில் விவாதம் செய்திருக்கிறோம். ஆனால், ஒவ்வொரு முறையும் அவர் களத்தில் நுழையும்போது இப்படிச் செய்வது நல்லதல்ல’’ என்று சொல்லும் விராட்டை, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் பாராட்டுகிறது.

கோலி சொன்னதைப் போல, தன் தவறு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை எந்தளவு பாதித்திருக்கிறது என்பதை ஸ்மித் நன்கு உணர்ந்திருக்கிறார். அதனால்தான், பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்துகிறார். சென்னை – ராஜஸ்தான் மோதிய ஐ.பி.எல் போட்டியின்போது நோ பால் சர்ச்சையை அடுத்து, தோனி களத்துக்குள் புகுந்து அம்பயருடன் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார்.

ஐபிஎல் நோ பால் சர்ச்சை!
ஐபிஎல் நோ பால் சர்ச்சை!

அப்போது `எனக்கென்ன’ என்பதுபோல் நின்று கொண்டிருந்தார் ஸ்மித். அது ஆஸ்திரேலியர்களின் இயல்பு அல்ல. இப்போது இங்கிலாந்து ரசிகர்களின் கேலி, கிண்டலையும் சர்வ சாதாரணமாக கடந்து போகிறார். இதுவும் அவரின் இயல்பு அல்ல.

ஸ்மித்தின் செயலை நியாயப்படுத்துவதைக் கடந்து, கோலியின் செயலைப் பாராட்ட வேண்டியதும் அவசியம். ஸ்மித்துக்கு ஆதரவாக நின்றது மட்டுமல்ல, நேற்றைய போட்டியை உன்னிப்பாக கவனித்தால், கோலி இன்னொரு விஷயமும் செய்திருப்பார். கம்மின்ஸ் ஓவரில் பாண்டியா அடித்த பந்தை லாங் ஆனில் இருந்து ஓடி வந்து 2 ரன்களை அட்டகாசமாக தடுப்பார் உஸ்மான் கவாஜா. 2 ரன்கள் ஓடி முடிந்ததும், கோலி பேட்டில் கை தட்டி கவாஜாவின் ஃபீல்டிங் திறமையை உற்சாகப்படுத்தியிருப்பார்.

கோலியின் ஸ்போர்ட்ஸ்மென்ஷிப்பைப் பற்றி இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் வார்த்தைகளில் சொன்னால்...

கோலியைப் பாராட்டும் மைக்கேல் வாகன்!
கோலியைப் பாராட்டும் மைக்கேல் வாகன்!
அடுத்த கட்டுரைக்கு