Published:Updated:

‘பஹூத் பாதியா’ சச்சின் ஜி - வைரலான சுந்தர் பிச்சை ட்வீட்

ராம் பிரசாத்

சுந்தர் பிச்சையின் இந்த ட்வீட் எக்கச்சக்க லைக்ஸ் மற்றும் ரீ ட்வீட்களை அள்ளியது.

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த சில நாள்களுக்கு முன்பு ட்விட்டரில் பதிவிட்ட புகைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சையுடன் அமர்ந்து இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியைக் கண்டுகளித்த சச்சின் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். சுந்தர் பிச்சையுடன் இருக்கும் இரண்டு புகைப்படங்களைப் பதிவிட்ட சச்சின், “ என்ன அழகான புகைப்படம் இது? “ எனப் பதிவிட்டார். இது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை

இந்தப் பதிவுக்கு சுந்தர் அளித்த பதில் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது. சுந்தர் தனது பதிவில் ``மஹி பாய் சொல்வதுபோல் ‘பஹூத் பாதியா’ உங்களுடன் போட்டியைக் கண்டுகளித்தது மிக்க மகிழ்ச்சி சிறந்த நினைவுகளை எடுத்துவந்துள்ளேன் எனப் பதிவிட்டார். இந்த ட்வீட் வைரலானது எக்கச்சக்க லைக்ஸ் மற்றும் ரீ ட்வீட்களை அள்ளியுள்ளது.

தோனி, கிரிக்கெட் போட்டிகளின்போது வீரர்களை ஊக்குவிப்பதற்காக பஹூத் பாதியா (மிகவும் சிறப்பு) என்ற சொல்லைப் பயன்படுத்துவார். கிரிக்கெட் போட்டியைக் கவனித்தால் மட்டுமே ஸ்டெம்ப் மைக்குக்குப் பின்னால் இருந்து தோனி கூறும் இந்த வார்த்தையைக் கேட்க முடியும். இதைச் சுந்தர் மேற்கோள் காட்டி பேசியது ரசிகர்களை உற்சாகமூட்டியுள்ளது. மேலும், அவர் தோனி எனக் குறிப்பிடாமல் மஹி பாய் எனக் கூறியது கிரிக்கெட் மீது சுந்தருக்கு இருக்கும் காதலை வெளிப்படுத்துவதாக ட்விட்டரில் பலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.

கிரிக்கெட் சுந்தருக்குப் பிடித்தமான விளையாட்டு. சிறுவயதாக இருக்கும்போது கிரிக்கெட் வீரராக ஆசைப்பட்டதாகவும் கவாஸ்கரும் சச்சின் டெண்டுல்கரும் தனது கிரிக்கெட் முன்னோடி எனச் சில பேட்டிகளில் கூறியுள்ளார். இந்த உலகக் கோப்பையில் இறுதிப்போட்டிக்கு எந்த அணி முன்னேறும் எனக் கூறியதற்கு இந்தியா, இங்கிலாந்து என அவர் பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.