Published:Updated:

`அது கிரிக்கெட்டா பேஸ்பாலா?' `உலகக்கோப்பை யாருக்கு?' - சுந்தர் பிச்சை சுவாரஸ்யம்!

மலையரசு

முதல் போட்டியில் நான் பின்பக்கமாக திருப்பி ஷாட் அடித்தேன். கிரிக்கெட்டில் இது ஒரு நல்ல ஷாட் தான். என் ஷாட்டை நினைத்து முதலில் பெருமைப்பட்டேன். ஆனால்.....

சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் எந்த அணிகள் பைனலுக்கு வரும் என்பது குறித்த தனது கணிப்பை தெரிவித்துள்ளார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை... தீவிர கிரிக்கெட் ரசிகர். பல மேடைகளில் இதை அவர் சொல்லியுள்ளார். சுனில் கவாஸ்கர் மற்றும் சச்சினின் தீவிர ரசிகரான பிச்சை நேற்று வாஷிங்டனில் நடந்த அமெரிக்க - இந்திய பிசினஸ் மீட்டில் பங்கேற்றார். அப்போது அவரிடம் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டன.

சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை

உலகக்கோப்பை ஃபைனலுக்கு எந்த அணிகள் வரும் என்ற கேள்விக்கு, "உலகக்கோப்பை அற்புதமான தொடர். இந்தியா இங்கிலாந்து அணிகள் ஃபைனலில் மோதும். இதில் இந்தியா சிறப்பாக செயல்படும் என நினைக்கிறேன். அதேநேரம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளும் வலுவாக உள்ளன" என தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்த நிகழ்வின் போது பேஸ்பால் மற்றும் கிரிக்கெட் விளையாட்டில் தனது அனுபவங்களையும் பிச்சை பகிர்ந்துகொண்டார். அதில், "அமெரிக்காவுக்கு நான் வந்தபோது, நான் பேஸ்பால் விளையாட முயன்றேன். பேஸ்பால் சற்று சவாலானதுதான் என்று சொல்ல வேண்டும். எனது முதல் போட்டியில் நான் பின்பக்கமாக திருப்பி ஷாட் அடித்தேன். கிரிக்கெட்டில் இது ஒரு நல்ல ஷாட்தான். என் ஷாட்டை நினைத்து முதலில் பெருமைப்பட்டேன்.

இந்திய அணி
இந்திய அணி

ஆனால் பார்வையாளர்கள் அதைப் பாராட்டவில்லை. பேஸ்பாலில் அப்படி ஒரு ஷாட் அடிக்க கூடாது என்பது பின்புதான் தெரிந்தது. கிரிக்கெட்டில் ரன் எடுக்க வேண்டுமென்றால் பேட்டையும் உடன் கொண்டு செல்வோம். பேஸ்பாலிலும் அதேபோல் பேட்டை கொண்டுசென்றுவிட்டேன். இதுபோன்ற சில தவறுகளை செய்துள்ளேன். பின்பு அதை உணர்ந்து சரியாக செயல்பட்டுள்ளேன்" என சுவாரஸ்யமாக பேசினார்.