Published:Updated:

எங்கெங்கு காணினும் காட்ரெல்… பேய் பிடித்தாடிய பிராத்வெய்ட்… இறுதியில் கிரிக்கெட் வென்றது!

துவண்டுபோன ப்ராத்வெய்ட்

30 பந்துகளுக்கு 47 ரன்கள் எடுத்தால் வெற்றி, கையில் இருப்பது ஒரேயொரு விக்கெட். ப்ராத்வெயிட்டுக்கு பேய் பிடித்தது! இந்தமுறையும் ஹென்றிதான் சிக்கினார்.

எங்கெங்கு காணினும் காட்ரெல்… பேய் பிடித்தாடிய பிராத்வெய்ட்… இறுதியில் கிரிக்கெட் வென்றது!

30 பந்துகளுக்கு 47 ரன்கள் எடுத்தால் வெற்றி, கையில் இருப்பது ஒரேயொரு விக்கெட். ப்ராத்வெயிட்டுக்கு பேய் பிடித்தது! இந்தமுறையும் ஹென்றிதான் சிக்கினார்.

Published:Updated:
துவண்டுபோன ப்ராத்வெய்ட்

களத்தில் அலட்டிக்கவே செய்யாத நியூசிலாந்து அணியும் அலப்பறையைக் கூட்டும் மேற்கிந்திய தீவுகள் அணியும் எல்லோருக்கும் ஃபேவரைட்! நேற்றைய போட்டியில் இந்த இரண்டு அணிகளும்தான் பலபரீட்சை நடத்தின. "நியூசிலாந்தோ, வெஸ்ட் இன்டீஸோ... யார் ஜெயிச்சாலும், கடைசியில ஜெயிக்கப்போறதுதான், கிரிக்கெட்தான்" என ஜாலியாய் கிரிக்கெட் பார்க்க அமர்ந்தது கிரிக்கெட் உலகம்.

எங்கெங்கு காணினும் காட்ரெல்… பேய் பிடித்தாடிய பிராத்வெய்ட்… இறுதியில் கிரிக்கெட் வென்றது!

டாஸ் வென்ற ஜேஸன் ஹோல்டர், நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். டேரன் பிராவோ, ஆண்ட்ரே ரஸல் மற்றும் ஷானன் கேப்ரியலுக்குப் பதிலாக, ஆஸ்லே நர்ஸ், கார்லஸ் ப்ராத்வெயிட் மற்றும் கிமார் ரோச் ஆகியோர் ஆடும் லெவன்ஸில் சேர்க்கபட்டனர். தோல்வியே கண்டிராமல் வெற்றிநடை போட்டுவரும் நியூசிலாந்து, லெவன்ஸில் எந்தவித மாற்றமுமின்றி களமிறங்கியது. கப்டில் மற்றும் மன்ரோ நியூசிலாந்து இன்னிங்ஸை ஓபன் செய்ய, முதல் ஓவரை வீச வந்தார் காட்ரெல்.

பவுலிங்கில் மிரட்டிய காட்ரெல்
பவுலிங்கில் மிரட்டிய காட்ரெல்

ஆட்டத்தின் முதல் பந்தே `யார்க்கர்' என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். காட்ரெல் வீசிய யார்க்கர், கப்டிலின் பேட்டைத்தாண்டி பேடில் விழ, அப்பீலுக்கு சென்றது மேற்கிந்திய அணி. நடுவரோ `நாட் அவுட்' எனத் தலையை ஆட்ட, ரிவ்யூவுக்கு சென்றார் ஜேஸன் ஹோல்டர். ரிவ்யூவில் `அவுட்' என தெளிவானது. `கோல்டன் டக்'கோடு வெளியேறினார் கப்டில்.

ஒரு கோல்டன் டக் வாங்கினால் இன்னொரு கோல்டன் டக் இலவசம்

அதே ஓவரின் ஐந்தாவது பந்தில், இன்னுமொரு இன்ஸ்விங் யார்க்கரை வீசினார் காட்ரெல். மன்ரோவின் டிஃபென்ஸைத் தாண்டி, ஸ்டெம்பைத் தெறிக்கவிட்டது. "ஒரு கோல்டன் டக் வாங்கினால் இன்னொரு கோல்டன் டக் இலவசம்" என மன்ரோவையும் பெவிலியனுக்கு அனுப்பினார் காட்ரெல். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே, நியூசியின் இரண்டு ஓபனர்களும் காலி! "என்னடா நடக்குது இங்கே" என மேற்கிந்திய தீவுகள் அணியின் ரசிகர்கள் உறைந்து போனார்கள்.

வார்ம் அப் மேட்ச்களிலேயே, கேன் வில்லியம்சன் - ராஸ் டெய்லர் ஜோடி பட்டையைக் கிளப்பியது. அந்த மேஜிக் மீண்டும் நிகழுமா, தவழ்ந்துகொண்டிருக்கும் நியூசிலாந்து கொஞ்சமாவது தலை நிமிருமா என்ற ஆர்வம் தொற்றிக்கொண்டது. வில்லியம்சனும் டெய்லரும் மிகப்பொறுமையாக மேற்கிந்திய தீவுகள் அணியின் பவுலிங்கை எதிர்க்கொண்டனர். அவசரமே இல்லாமல் அமைதியாய், பார்டனர்ஷிப்பை கட்டியெழுப்பத் தொடங்கினர்.

டெய்லர் மற்றும் வில்லியம்சன்
டெய்லர் மற்றும் வில்லியம்சன்

முதல் பத்து ஓவர்களின் மூன்று ஒவர்கள் மெய்டன் ஓவர்கள். 10வது ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்பிறகு 30 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது நியூசி. அடுத்த பத்து ஓவர்களில் சீரான இடைவெளிகளில் அங்குமிங்குமாக பவுண்டரிகளை விரட்டினர். 20 ஓவரின் முடிவில் அதே 2 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் என்ற நிலைக்கு வந்தது நியூசிலாந்து. கேன் வில்லியம்சன் 61 பந்துகள் பிடித்து 38 ரன்னிலும் ராஸ் டெய்லர் 58 பந்தில் 40 ரன்களும் எடுத்து செமத்தியாய் செட் ஆனார்கள்.

24வது ஒவரின் 5வது பந்தில் அரைசதத்தைக் கடந்தார் கேப்டன் கேன். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டி டெய்லரும் அரைசதத்தை பூர்த்தி செய்தார். காட்ரெல் கொடுத்த சிறப்பான ஆரம்பத்தை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் தடுமாறியது மேற்கிந்திய தீவுகள் அணி. கீமர் ரோச், ப்ராத்வெயிட், ஹோல்டர், நர்ஸ் என எல்லோரும் வந்து பந்து வீசிப்பார்த்தார்கள். ஆனால், வில்லியம்சன்- டெய்லர் பார்ட்னர்ஷிப்பை யாராலும் அசைத்துப் பார்க்கமுடியவில்லை. 30 ஓவரின் முடிவில் 144 ரன்கள் என கிவிகள் பெருமூச்சு விட்டனர்.

எங்கெங்கு காணினும் காட்ரெல்… பேய் பிடித்தாடிய பிராத்வெய்ட்… இறுதியில் கிரிக்கெட் வென்றது!

இந்த பார்ட்னர்ஷிப்பை உடைக்க, `கரீபியன் காலா' கெயிலை பவுலிங் அட்டாக்கில் கொண்டு வந்தார் ஜேஸன் ஹோல்டர். இந்த முயற்சிக்கு பலனும் கிட்டியது. கெயில் தான் வீசிய இரண்டாவது ஒவரில், டெய்லரின் விக்கெட்டைக் கழட்டினார். கெயில் வீசிய பந்தை இறங்கிவந்து லாங் ஆஃப் திசையில் டெய்லர் அடிக்க முயல, அது மிட் ஆஃபில் நின்றுக்கொண்டிருந்த ஹோல்டரின் கைகளுக்கு கேட்சானது. பார்டனர்ஷிப் மூலம் பெருமூச்சு விட்ட நியூசிக்கு மறுபடியும் நெருக்கடிக் கொடுத்து மூச்சடைக்க வைத்தது இந்த விக்கெட்.

ஆனால், இன்னொரு புறம் `கேப்டன் நாக்' ஆடிக்கொண்டிருந்த கேன், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பெரும் தலைவலியாகிப் போனார். நிதானமாக ஆரம்பித்த அவரது பேட்டிங், மெல்ல வேகமெடுத்து அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தியது. 38வது ஓவரில், பவுண்டரி ஒன்று தட்டிவிட்டு சதத்தை நிறைவு செய்தார் கேன். இந்த உலகக்கோப்பையில் அடுத்தடுத்து இரண்டு சதங்கள் அடித்து அட்டகாசமான ஃபார்மில் இருக்கிறார் இந்த அமுல் பேபி. 40வது ஓவரின் முடிவில், 199/3 என மீண்டு வந்திருந்தது நியூசிலாந்து அணி. இதன்பிறகு, பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. 42வது ஒவரில் லேதமின் விக்கெட்டைக் கழட்டி, ராணுவ மரியாதையோடு அவரை பெவிலியனுக்கு அனுப்பிவைத்தார் காட்ரெல்.

`கேப்டன் நாக்' ஆடிக்கொண்டிருந்த கேன், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பெரும் தலைவலியாகிப் போனார்.
சதம் விளாசிய கேன் வில்லியம்சன்
சதம் விளாசிய கேன் வில்லியம்சன்

இன்னொரு புறம், கிடைத்த கேப்பில் எல்லாம் பவுண்டரிகளை விரட்டிக்கொண்டிருந்தார் வில்லியம்சன். 47வது ஓவரில் அவரும் அவுட், அவுட்டாக்கியது அதே காட்ரெல். 49வது ஒவரில் கிராண்ட்ஹோமை, பந்து வீசிய காட்ரெலே ரன் அவுட் செய்து `டாடா' காட்டினார். இன்னிங்ஸின் இறுதி ஓவரில் ஒரு சிக்ஸரை விளாசிய சான்ட்னரை அடுத்த பந்திலேயே பார்சல் பண்ணினார் ப்ராத்வெய்ட், கேட்ச் பிடித்தது நம்ம காட்ரெல். அடுத்து பந்திலேயே, நீசமின் விக்கெட்டையும் கழட்டினார் ப்ராத்வெய்ட். இந்தமுறை கேட்ச் பிடித்ததும் காட்ரெல். எங்கு காணினும் காட்ரெல்!

50 ஓவரின் முடிவில், 291/8 என இன்னிங்ஸை நிறைவு செய்தது நியூசிலாந்து. அதிகபட்சமாக கேன் வில்லியம்சனுக்கு 148 ரன்களும், காட்ரெலுக்கு 4 விக்கெட்களும் கிடைத்தன.

292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கியது மேற்கிந்திய தீவுகள் அணி. கெயில் மற்றும் ஹோப் இன்னிங்ஸை ஓபன் செய்ய, போல்ட் முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரே மெய்டன்! ஹென்றி வீசிய இரண்டாவது ஓவரில் வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே கிடைத்தது. போல்ட் வீசிய மூன்றாவது ஓவரில், போல்டானார் ஹோப். "வேலியில் போன ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்ட" கதையாக ஆவுட் சைடு ஆஃபில் விலகிப்போனப் பந்தை அடிக்கப்போய், அது உட்புறமாக எட்ஜாகி ஸ்டெம்பை பதம் பார்த்தது.

விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் போல்ட்
விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் போல்ட்

22 பந்துகளில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த கெயில், ஹென்றி வீசிய ஆறாவது ஓவரில் ஒரு சிக்ஸரையும் ஒரு பவுண்டரியையும் விளாசினார். போல்ட் வீசிய ஆட்டத்தின் 7வது ஓவரில் பூரன் அவுட். போல்ட் வீசிய தாறுமாறான பவுன்ஸர் பந்தைத் தாவிகுதித்து புல் ஆடப்போய், அது டாப் எட்ஜாகி கீப்பரின் கைகளுக்குள் தஞ்சம் புகுந்தது. விக்கெட்கள் சரிவதைப் பார்த்து வெறியானார் கெயில்!

மீண்டும் கெயிலிடம் மாட்டினார் ஹென்றி. 8வது ஓவரின் முதல்பந்தில் ஒரு பவுண்டரி. போல்ட்டுக்கு வந்த கஷ்டமான கேட்ச் அது, கைநழுவி எல்லையைக் கடந்தது. அடுத்தப் பந்து லாங் ஆன் திசையில் சிக்ஸருக்கு பறந்தது. மூன்றாவது பந்தில் மீண்டும் ஒரு பவுண்டரி. கெயிலின் அலைவரிசைக்கு ஹெட்மயரும் ஒத்துப்போக, அவரும் தன் பங்குக்கு ஒரு காட்டு காட்டினார். நீஸம் வீசிய 11வது ஓவரில் மூன்று பவுண்டரிகள். அந்த ஓவரின் முடிவில், 71/2 என்ற நிலையில் மதில்மேல் பூனையாக அமர்ந்திருந்தது மேற்கிந்திய தீவுகள் அணி.

கெயிலின் அலைவரிசைக்கு ஹெட்மயரும் ஒத்துப்போக, அவரும் தன் பங்குக்கு ஒரு காட்டுக் காட்டினார்.

நியூசிக்கு வில்லியம்சன்- டெய்லரின் பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைந்ததுபோலவே, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கெயில்-ஹெட்மயர் பார்டனர்ஷிப் சிறப்பாக அமையத் தொடங்கியது. இருவரும் ஆறும் நான்குமாக விளாசியதில் 20 ஓவரின் முடிவில் 130 ரன்கள் எடுத்து, சரியான பாதையில் பயணித்துக்கொண்டிருந்தது மே.தீவுகள் அணி. கெயில் 70 பந்துகளில் 76 ரன்களும் ஹெட்மயர் 40 பந்துகளில் 47 ரன்களோடு களத்தில் இருந்தனர்.

ஃபெர்குசன் வீசிய ஆட்டத்தின் 23வது ஓவர், மேட்சின் திருப்புமுனை. ஓவரின் முதல் பந்திலேயே ஹெட்மயரை க்ளீன் போல்டாக்கி அனுப்பியவர், அடுத்த பந்திலேயே ஹோல்டரையும் அவுட்டாக்கி துணைக்கு அனுப்பிவைத்தார். அடுத்த ஓவரில், கெயிலும் அவுட்! மூன்று கேட்ச்கள் மிஸ்ஸாகி ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்று ஆடிக்கொண்டிருந்த கெயில், தான் கொடுத்த முதல் கேட்சை மிஸ் செய்த போல்டிடமே கேட்சாகி நடையைக் கட்டினார். மே.தீவுகள் ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் நம்பிக்கை இழந்தனர்.

எங்கெங்கு காணினும் காட்ரெல்… பேய் பிடித்தாடிய பிராத்வெய்ட்… இறுதியில் கிரிக்கெட் வென்றது!

27வது ஓவரில் நர்ஸ் மற்றும் லீவிஸ் இருவரின் விக்கெட்டையும் கழட்டி, மேற்கொண்டு அதிர்ச்சிக்கொடுத்தார் போல்ட். "இது அவ்வளவுதான் முடிஞ்சுப்போச்சு" என பலரும் மனம் நொந்துப்போனார்கள். ப்ராத்வெயிட்டின் அருமைத் தெரிந்திருந்த சிலர் மட்டும் "என்ன பண்றாங்கன்னு பார்த்துட்டு போலாம்ணா" என துளியளவு நம்பிக்கையோடு டிவியின் முன் அமர்ந்திருந்தார்கள்.

40வது ஓவரின் முடிவில் 222/8 என்ற நிலையில் பரிதாபமாய் நின்றுகொண்டிருந்தது மே.தீவுகள் அணி. அடித்துவிடக் கூடிய இலக்குதான். ஆனால், விக்கெட்கள் இல்லையே! `பார்படாஸ் பிக் மேன்' ப்ராத்வெயிட் மட்டும் தனி ஒருவனாய் போராடிக்கொண்டிருந்தார். 41வது ஓவரில் தனது அரைசதத்தையும் நிறைவு செய்தார். இனி 54 பந்துகளுக்கு 64 ரன்கள் எடுக்க வேண்டுமென்கிற நிலை. 45வது ஓவரில் 9வது விக்கெட்டும் போனது. 30 பந்துகளுக்கு 47 ரன்கள் எடுத்தால் வெற்றி, கையில் இருப்பது ஒரேயொரு விக்கெட். ப்ராத்வெயிட்டுக்கு பேய் பிடித்தது!

இந்தமுறையும் ஹென்றிதான் சிக்கினார். அவர் வீசிய 48வது ஓவரில், மூன்று சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி என மொத்தம் 25 ரன்களை அள்ளினார் ப்ராத்வெய்ட். ஒரே ஓவரில், 12 பந்துகளுக்கு 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என மேட்சையே தலைகீழாய் புரட்டிப்போட்டார் ப்ராத்வெயிட்.

ப்ராத்வெய்ட்டை தட்டிக்கொடுக்கும் கேன் வில்லியம்சன்
ப்ராத்வெய்ட்டை தட்டிக்கொடுக்கும் கேன் வில்லியம்சன்

நியூசிலாந்து அணி கிறுகிறுத்துப்போனது. ஆட்டத்தின் மிக முக்கியமான 49 ஓவரை வீசவந்தார் நீஸம், ஓவரின் 4வது பந்தில் டபுள்ஸை தட்டிவிட்டு தனது சதத்ததை நிறைவு செய்தார் ப்ராத்வெயிட். இந்த உலகக்கோப்பையின் அற்புதமான சதங்களில் ஒன்று! ஓவரின் கடைசிப்பந்து ஆறு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ப்ராத்வெய்ட் சிக்ஸருக்கு கொடியேற்ற பார்க்க, அது பவுண்டரிக்கு மிக அருகில் போல்டின் கைகளில் கேடச் ஆனது.

ப்ராத்வெய்ட்டின் அட்டகாசமான இன்னிங்ஸ், நூழிலையில் அதன் அதிபலனை அடையத் தவறியது. களத்தில் துவண்டுபோய் சிரம் கவிழ்ந்திருந்த ப்ராத்வெயிட்டை, தட்டிக்கொடுத்து எழுப்பினார் எதிரணியின் கேப்டன் கேன் வில்லியம்சன். முதலில் சொன்னது போலத்தான், இறுதியில் கிரிக்கெட்தான் ஜெயித்தது! நியூசி அணியின் வெற்றிக்கு காரணமாய் இருந்த கேன் வில்லியம்சன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கபட்டார்.