Published:Updated:

1979 ஃபைனல், லாராவின் கடைசிப் போட்டி..! #ENGvWI #WorldCupMemories

மாரியப்பன் பொ

வெஸ்ட் இண்டீஸ் இன்றைய போட்டியில் வெல்லும் பட்சத்தில் இங்கிலாந்தின் 40 ஆண்டுக்கால வரலாறு உடைக்கப்படும்.

லாரா
லாரா
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள், இதுவரை 6 முறை உலகக் கோப்பையில் மோதியுள்ளன.
உலகக் கோப்பை நினைவுகள்

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ்.. இன்று உலகக் கோப்பையில் மோதப்போகும் இந்த அணிகள், இதுவரை 6 முறை உலகக் கோப்பையில் மோதியுள்ளன. சில போட்டிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்துள்ளன. சில போட்டிகள், மாபெரும் சகாப்தத்தின் முடிவுரையாக அமைந்துள்ளன. ஒருசில போட்டிகள் கொஞ்சம் கூடத் தாக்கம் ஏற்படாமல் இருந்திருக்கின்றன.

இன்றைய போட்டி எந்த கேட்டகரியில் அமையப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் முன், பழைய போட்டிகளின் சின்ன ரீவைண்ட்...

1979 உலகக் கோப்பை இறுதி ஆட்டம்.

நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் தன் இரண்டாவது உலகக் கோப்பையையும் வெல்ல அத்தொடரில் முனைப்புடன் ஆடியது. ஆடிய எல்லா போட்டிகளிலும் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது. இங்கிலாந்தோ சொந்த மண்ணில் நடக்கும் போட்டியில் இம்முறையாவது கோப்பை வெல்ல வேண்டும் என்ற நிர்பந்தத்துடன் ஆடியது. இந்த இரு அணிகளும் இறுதிப் போட்டியில் சந்தித்துக் கொண்டன. விக்கெட்டுகள் ஒரு பக்கம் வீழ்ந்தாலும், தன் வழக்கமான பாணியில் இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார் சர் விவியன் ரிச்சர்ட்ஸ். சதமும் அடித்தார். இது ஒரு பக்கம் இங்கிலாந்து வீரர்களுக்கு கிலியை ஏற்படுத்தியது.

1979 World Cup
1979 World Cup

ஆட்டத்தின் கடைசி ஓவரில் பீல்டர்களையெல்லாம் எல்லைக் கோட்டில் நிற்க வைத்தார் இங்கிலாந்து கேப்டன் மைக் பிரயர்லி‌. ரிச்சர்ட்சின் ஷாட்டை தடுத்து விடலாம் என்று எண்ணியவர்களுக்கு ஆஃப் ஸ்டம்பக்கு வெளியே வந்த ஃபுல் டாஸ் பந்தை ஸ்கோயர் லெக் திசையில் சிக்ஸராக்கி ஏமாற்றமளித்தார் ரிச்சர்ட்ஸ். அந்த ஷாட், பல வருடங்களுக்கு 'ஷாட் ஆஃப் தி வேர்ல்டு கப்' என்று பேசப்பட்டது. ரிச்சர்ட்சின் 138 ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் 286 ரன்களைக் குவிக்க பெரும் உதவியாயிருந்தது.

இங்கிலாந்தின் இன்னிங்ஸும் அசத்தலாகத்தான் தொடங்கியது. முதல் விக்கெட்டிற்கு 129 ரன்கள் எடுத்த பிரியர்லி, ஜெஃப் பாய்கட் ஜோடியை பிரித்த இடத்தில் ஆரம்பமானது வெஸ்ட் இண்டீஸின் வெற்றி. 2 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் என்ற நிலையில் இருந்த இங்கிலாந்து அணியினரை ஜோயல் கார்னர் சுருட்டி வீசினார். முக்கியமாக வெறும் 11 ரன்கள் இடைவெளியில் 8 விக்கெட் வீழ்ந்து 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து. கோப்பையை நினைத்தது போல் மீண்டும் தன் வசப்படுத்திக் கொண்டது வெஸ்ட் இண்டீஸ்.

1987 உலகக் கோப்பை

இந்தத் தொடரில் இரண்டு முறை இவ்விரு அணிகளும் மோதின. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸின் 243 ரன்களை துரத்திய இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. மூன்று முறை ஃபைனலிஸ்ட், இரு முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸிற்கு இது சற்று சறுக்கலைத் தந்தது. இத்தனைக்கும், அந்தத் தொடரில் அவர்கள் ஆடிய முதல் போட்டி அதுதான்! அடுத்தடுத்து வந்த நான்கு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் இரண்டு வெற்றிகளைத்தான் பெற்றது. இங்கிலாந்துடன்‌ மோதவிருக்கும் இரண்டாவது போட்டியில் நிச்சயம் வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற வாழ்வா சாவா நிலையில் ஆடியது வெஸ்ட் இண்டீஸ்.

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 269 ரன்கள் குவிக்க, கொஞ்சம் கடின இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸிற்கு இங்கிலாந்து பௌலர்கள் கொஞ்சம்கூடக் கருணை காட்டாமல் பந்து வீசினர். ரிச்சர்ட்சன் மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் மட்டும் 50 ரன்களை கடந்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் 2, 4, 8, 3 என்ற ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க 235 ரன்களில் ஆல் அவுட்டானது வெஸ்ட் இண்டீஸ். அதுவரை கிரிக்கெட்டில் தனக்கென தனி கோட்டை கட்டியிருந்த வெஸ்ட் இண்டீஸின் சாம்ராஜ்யம் அந்த கணத்தில் இருந்து விழத் தொடங்கியது.

1992 World Cup
1992 World Cup

1992 உலகக் கோப்பை

1987 தொடரில் லீக் போட்டியிலேயே வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் செயல்பாடும் அணுகுமுறையும் இம்முறை திருப்தியற்றதாகவே இருந்தது. பேட்ஸ்மேன்களுக்குள் க்ரீஸில் புரிதல் இல்லை, இக்கட்டான நேரங்களில் சிறப்பான பவுலரை பந்துவீச வைக்கத் தவறியது என‌‌ ஏகப்பட்ட குறைகள். லீக் போட்டியில் இங்கிலாந்துடன் மோதியது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸிற்கு இரண்டாவது பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. லுயிஸ் பந்தில் டக் அவுட்டானார் லாரா. பின்னர் ஆடிய அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்ட 157 ரன்களில் ஆல் அவுட். பின்னர் ஆடிய இங்கிலாந்து 35 ஓவர்களில் மேட்சை முடித்து அசத்தியது.

2007 உலகக் கோப்பை

சொந்த மண்ணில் நடந்த தொடர் என்பதைத் தாண்டி, லாராவின் கடைசி தொடர் என்பதுதான் அந்தத் தொடரைப் பற்றிய அனைவரின் நினைவு. சூப்பர் 8 சுற்றில் வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வென்ற வெஸ்ட் இண்டீஸ் தன் கடைசிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. அந்தத் தலைமுறை கரீபிய கிரிக்கெட் ரசிகர்களின் மகத்தான நாயகனின் கடைசிப் போட்டி.

Brian Lara
Brian Lara

தங்கள் அணியை இத்தனை நாள் தோளில் தூக்கி சுமந்த தலைவனை வெற்றியுடன் விடைபெற வைக்க வேண்டும் என்ற முனைப்பில் ஆடினர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். 50 ஓவர்கள் முடிவில் 300 ரன்கள் குவித்தனர். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் நிதனமாக ஆடினர். கடைசி 10 ஓவர்களில் வெறும் 42 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் விழ நெருக்கடி உருவானது. கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் ஒரு பந்து மீதமிருக்கும் நிலையில் 301 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து போராடி வெற்றி பெற்றது.

ஆனால், அந்த வெற்றி இங்கிலாந்து வீரர்களால் கொண்டாடப்படவில்லை. மாறாக அது உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனுக்கு வழியனுப்பி வைக்கும் நிகழ்வாக அமைந்தது. ஸ்டேடியத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியினர் உட்பட அனைவரும் எழுந்து நின்று கைதட்டி லாராவை அனுப்பி வைத்தனர். மேட்ச் முடிந்த பின் பெவிலியனுக்குத் திரும்பும் போது அனைவரையும் பார்த்து கையசைத்து நன்றியுடன் கிரவுண்டை திரும்பி பார்த்தபடியே சென்றார் அந்த ஜாம்பவான். தோல்வி என்பதையும் தாண்டி வெஸ்ட் இண்டீஸ் அணியினருக்கு மனதிற்கு நெருக்கமான நிகழ்வாக அமைந்தது அது.

2011 World Cup
2011 World Cup

2011 உலகக் கோப்பை

லீக் போட்டி. இரு அணிகளும் அதுவரை ஆடிய போட்டிகளில் போராடி வென்று காலிறுதிக்கு தகுதிப் பெறும் நிலையில் இருந்தன. இந்த போட்டியில் வென்றால் புள்ளிப்பட்டியலில் மூன்றாமிடம் பிடிக்க முடியும் என்ற முனைப்பில் ஆடியது இங்கிலாந்து. இரு அணிகளும் சமபலத்தில்தான் இருந்தன. ஆரம்பத்தில், இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 270க்கு மேல் ரன் எகிறும் என்ற நினைத்த போது ரஸலும், பிஷூவும் விக்கெட் வேட்டை நடத்தினர். இருவரையும் மாறி மாறி பந்துவீச வைத்து மிடில் மற்றும் லோயர் ஆர்டரை குலைத்தார் கேப்டன் சமி. விளைவு 243 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்.

எளிதாக வெல்லலாம் என்று எண்ணி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு யாக்கர்களாக வீசி அவர்களின் நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஜேம்ஸ் ட்ரெட்வெல். 225 ரன்களில் ஆல் அவுட்டாகி 18 ரன்களில் தோற்றது வெஸ்ட் இண்டீஸ்.

1979 உலகக் கோப்பைக்குப் பின் இங்கிலாந்துடன் ஒரு‌ போட்டியில் கூட வெல்லாத வெஸ்ட் இண்டீஸ் இன்றைய போட்டியில் வெல்லும் பட்சத்தில் இங்கிலாந்தின் 40 ஆண்டுக்கால வரலாறு உடைக்கப்படும்.