Published:Updated:

ஆர்ச்சர் Vs கெய்ல்... இங்கிலாந்து பேட்டிங் Vs வெஸ்ட் இண்டீஸ் பெளலிங்.. வெல்வது யார்?! #ENGvWI

Jofra Archer celebrates bowling out Bangladesh's Soumya Sarkar.
Jofra Archer celebrates bowling out Bangladesh's Soumya Sarkar.

'ஆர்ச்சரை இழந்தது வெஸ்ட் இண்டீஸுக்கு இழப்பு’ என வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் டேரன் கங்கா குறிப்பிட்டுள்ளார். அநேகமாக, ஆர்ச்சர்தான் இன்று விண்டீஸுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்.

உலகக் கோப்பையில் இன்று இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுவதை `ஹெவிவெயிட்’ மோதல் என வர்ணிக்கிறார்கள் கிரிக்கெட் நிபுணர்கள். இங்கிலாந்து அணியில் எந்த அணிக்கு எதிராகவும் 350–க்கும் மேல் ரன்கள் குவிக்கும் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஷார்ட் பால் டெக்னிக்கை அறிமுகப்படுத்தி, பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைக்கும் வேகப்பந்துவீச்சாளர்களைப் பெற்றிருக்கிறது வெஸ்ட் இண்டீஸ். அதனால்தான் இந்த மோதலை அப்படி பில்டப் கொடுக்கிறார்கள்.

England Vs West Indies Match Preview
England Vs West Indies Match Preview

கரீபிய அணியைப் போல மிரட்டும் ஃபாஸ்ட் பெளலர்கள் இல்லையென்றாலும், இங்கிலாந்திலும் ஒரு மிரட்டல் பெளலர் இருக்கிறார். அவரும் கரீபிய மண்ணைச் சேர்ந்தவர் என்பது முரண். 19 வயதுக்குட்பட்ட போட்டிகள் வரை தவறாமல் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற்றுவந்த ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு அதன்பிறகு, அணியில் இடம்கிடைக்காததால் இங்கிலாந்து வந்தார். அவரைச் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது இங்கிலாந்து. அதற்கு நன்றிக்கடனாக இந்த உலகக் கோப்பையில் எதிரணியின் பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கிறார். அநேகமாக, அவர்தான் இன்று வெண்டீஸுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார். குறிப்பாக, யுனிவெர்சல் பாஸ் கிறிஸ் கெயலுக்கு...

ஆர்ச்சரை இழந்தது வெஸ்ட் இண்டீஸுக்கு இழப்பு
டேரன் கங்கா
West Inidies team.
West Inidies team.

பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தபின் சர்வ வல்லமையுடன் மீண்டு வந்தது இங்கிலாந்து. வங்கதேசத்துக்கு எதிராக 153 ரன்கள் விளாசி, இந்த உலகக் கோப்பையில் அதிக ரன் குவித்த ஜேசன் ராய், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடியிருக்கிறார் என்பதால், இன்றும் அவரது ஃபார்ம் தொடர வேண்டும் என்பது இங்கிலாந்து ரசிகர்களின் பிரார்த்தனையாக இருக்கும். தசைப்பிடிப்பில் இருந்து மீண்டு பட்லர் பயிற்சிக்குத் திரும்பியிருப்பதும், அவரும் ஃபார்மில் இருப்பதும் இங்கிலாந்தின் பிளஸ். ஜோ ரூட், பேர்ஸ்டோ, கேப்டன் இயான் மோர்கன் இங்கிலாந்தின் பேட்டிங்குக்கு பலம் சேர்ப்பர். பென் ஸ்டோக்ஸ் ஆல் ரவுண்டராக கலக்குகிறார். கடந்த போட்டியில் பங்கேற்காத மொயீன் அலி மீண்டும் அணிக்குத் திரும்பியிருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகம் இருப்பதால், ஆஃப் ஸ்பின்னர் மொயீன் அலி முக்கிய துருப்புச்சீட்டாக இருப்பார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி பெரிதும் நம்பும் ஆண்ட்ரே ரஸல் சமீபகாலமாகவே, முழங்கால் வலியால் அவதிப்படுகிறார். கடந்த போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. இன்றும் அவர் களமிறங்குவது நிச்சயமில்லை. ஆனால், அவர் இல்லாமல் இங்கிலாந்தை சமாளிப்பதும் சிரமம். ஒருவேளை அவர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தாலும், டி–20 மோடில் இருந்து ஒன்டே மோடுக்கு திரும்பி, பொறுப்புடன் நின்று போட்டியை முடிக்க வேண்டியது அவசியம்.

முந்தைய ரெக்கார்டு
முந்தைய ரெக்கார்டு

இதுவரை நான்கு போட்டிகள் மழையால் கைவிடப்பட்டுள்ள நிலையில், செளதாம்படனிலும் இன்று பிற்பகல் மழைவர வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக இங்கு நடந்த பாகிஸ்தான் – இங்கிலாந்து போட்டியில் மொத்தம் 734 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. ஆனால், சமீபத்தில் அடிக்கடி மழை பெய்து வருவதால் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்க முடியாது, பிட்ச் வேகப்பந்துக்கு சாதகமாக இருக்கும் என்றும், டாஸ் வெல்லும் அணி ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளும் இதுவரை மோதிய 111 போட்டிகளில் 51–44 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. உலகக் கோப்பையிலும் இங்கிலாந்தின் ஆதிக்கம் (5–1) தொடர்கிறது.

பிளேயிங் லெவன்!

இரு அணிகளும் இதுவரை..!
இரு அணிகளும் இதுவரை..!

இங்கிலாந்து (உத்தேசம்): ஜேசன் ராய், பேர்ஸ்டோ, ஜோ ரூட், மோர்கன், பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், பிளங்கெட், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத்.

வெஸ்ட் இண்டீஸ் (உத்தேசம்): கிறிஸ் கெய்ல், ஈவின் லீவிஸ், ஷாய் ஹோப், நிகோலஸ் பூரன், ஷிம்ரன் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், ரஸல், பிராத்வெய்ட், ஆஷ்லே நர்ஸ், ஷெல்டன் காட்ரெல், ஒஷேன் தாமஸ்.

அடுத்த கட்டுரைக்கு