Published:Updated:

இங்கிலாந்து பேட்டிங் vs தென்னாப்பிரிக்கா பௌலிங் : முதல் வெற்றி யாருக்கு?

இங்கிலாந்து பேட்டிங் vs தென்னாப்பிரிக்கா பௌலிங் : முதல் வெற்றி யாருக்கு?
இங்கிலாந்து பேட்டிங் vs தென்னாப்பிரிக்கா பௌலிங் : முதல் வெற்றி யாருக்கு?

நேரத்தில் ரபாடா, எங்கிடி என மிரட்டல் வேகமும் பராசக்தி எக்ஸ்பிரஸின் மாயச்சுழலும்தான் தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய பலம்.

போட்டி எண் : 1

தொடங்கும் நேரம் : பிற்பகல் 3 மணி

மைதானம் : தி ஓவல், லண்டன்

2019 ஐ.சி.சி உலகக் கோப்பையின் முதல் போட்டியே காரசாரமாக இருக்கப்போகிறது. போட்டியை நடத்தும், இந்தத் தொடரின் ஃபேவரிட்ஸுமான இங்கிலாந்தும், எவர்கிரீன் சோக்கர்ஸ் தென்னாப்பிரிக்காவும் ஓவல் மைதானத்தில் மல்லுக்கட்டப்போகின்றன. முன்பு நடந்த பயிற்சிப் போட்டிகளில், ஓவல் மைதானம் வேகப்பந்துவீச்சுக்குத் தொடக்கத்தில் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தது. ஸ்விங்குக்கும் வேகத்துக்கும் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கும் இந்த ஆடுகளத்தில், கண்டிப்பாக எந்த அணியும் முதலில் பந்துவீசவே விரும்பும். அதனால், இந்தப் போட்டியில் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும்.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை, பேட்டிங்கில் படுபலமாக இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்த, பான்டிங்கின் அசைக்க முடியா பேட்டிங் ஆர்டரைப் போல் இருக்கிறது இங்கிலாந்து பேட்டிங் ஆர்டர். அதே நேரத்தில் ரபாடா, எங்கிடி என மிரட்டல் வேகமும் பராசக்தி எக்ஸ்பிரஸின் மாயச்சுழலும்தான் தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய பலம்.

இயான் மோர்கன்
இயான் மோர்கன்

ஆக, இந்தப் போட்டி நிச்சயம் இங்கிலாந்தின் பேட்டிங்குக்கும் தென்னாப்பிரிக்காவின் பௌலிங்குக்கும் எதிரானதாகவே இருக்கும். யார் டாப்பில் வருகிறார்களோ, அவர்களின் அணியே இந்தப் போட்டியில் வெல்லும். அதேசமயம், வோக்ஸின் முதல் ஸ்பெல்லை சமாளிப்பது தென்னாப்பிரிக்காவுக்கும், டி காக்கின் தொடக்க கட்ட அதிரடியைச் சமாளிப்பது இங்கிலாந்துக்கும் காத்திருக்கும் சவால்கள்.

நேருக்கு நேர் :

இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்த அணிகள் 59 முறை மோதியுள்ளன. அதில் இங்கிலாந்து 26 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா 29 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. உலகக் கோப்பையில் மோதிய 6 போட்டிகளில், இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா
இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா

1992 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இந்த அணிகள் மோதியபோது மழை குறுக்கிட்டு, 1 பந்துக்கு 22 ரன்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தென்னாப்பிரிக்கா வெளியேறியது அனைவருக்கும் நினைவிருக்கலாம்!

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?

இங்கிலாந்தைப் பொறுத்தவரை முதல் போட்டியில் கேப்டன் மோர்கன் விளையாடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக, பயிற்சிப் போட்டியில் பங்கேற்காத அவர், 'முதல் போட்டிக்கு முன் முழுமையாகத் தயாராகிவிடுவேன். நிச்சயம் களமிறங்குவேன்' என்று சொல்லியிருந்தார். சொல்லியதுபோலவே ஃபிட்டாகிவிட்டார் என்று தெரிகிறது. அவருக்குப் பிளேயிங் லெவன் தேர்வு செய்வதில் பெரிய சிக்கல் இருக்காது.

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா
இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா

ராய், பேர்ஸ்டோ ஓப்பனிங் பார்ட்னர்ஷிப். அதைத் தொடர்ந்து ஜோ ரூட், பட்லர், ஸ்டோக்ஸ், மொயீன் அலி என மிடில் ஆர்டர் நீளும். சுழலுக்கு அடில் ரஷீத். வேகப்பந்துவீச்சாளர்களில் வோக்ஸ் முதல் சாய்ஸ். ஆர்ச்சர் விளையாடுவதற்கு வாய்ப்பு அதிகம். மற்றவர்களில் ஒருவர் யாரென்பதுதான் மோர்கன் எடுக்கவேண்டிய முக்கிய முடிவு. மார்க் வுட் வேகம் அல்லது லியாம் பிளங்கட் அனுபவம் இரண்டில் ஒன்றை அவர் தேர்வு செய்யவேண்டியிருக்கும்.

தென்னாப்பிரிக்காவுக்கு முதல் போட்டிக்கு முன்பே சோதனை தொடங்கிவிட்டது. காயம் காரணமாக முதல் போட்டியில் ஸ்டெய்ன் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த இடத்தில் விளையாட மோரிஸ் அல்லது பிரிடோரியஸ் இருவரில் ஒருவரை டுப்ளெஸ்ஸி தேர்வு செய்யவேண்டியிருக்கும். மற்றபடி ரபாடா, எங்கிடி, தாஹிர் கொண்ட பலமான பௌலிங் அட்டாக் களமிறங்கும்.

பேட்டிங்கைப் பொறுத்தவரை, கடந்த சில மாதங்களாக ஃபார்ம் இல்லாமல் சொதப்பிவந்த அம்லா, சரியான நேரத்தில் ஃபார்முக்குத் திரும்பியுள்ளார். தொடர்ந்து இரண்டு அரைசதங்கள் அடித்திருக்கிறார். அதனால் குவின்டன் டி காக், அம்லா தொடக்க ஜோடியோடுதான் அந்த அணி களமிறங்கும் எனத் தெரிகிறது. அம்லா ஓப்பனிங்கில் இறங்குவதால், ஓப்பனர்களான வான் டெர் டூசன், மார்க்ரம் ஆகியோரில் ஒருவரை மிடில் ஆர்டரில் இறக்கவேண்டிய சூழ்நிலை வரும். பெரும்பாலும் மார்க்ரம் வெளியில் அமரவே வாய்ப்பு அதிகம்.

டுப்ளெஸ்ஸி
டுப்ளெஸ்ஸி

கீ பிளேயர்கள்

இங்கிலாந்து : ஜானி பேர்ஸ்டோ, கிறிஸ் வோக்ஸ்

தென்னாப்பிரிக்கா : ஃபாஃப் டுப்ளெஸ்ஸி, ககிசோ ரபாடா

வெற்றி வாய்ப்பு : தென்னாப்பிரிக்காவின் லோயர் மிடில் ஆர்டர் பலவீனமாக இருப்பதாலும், ஸ்டெய்ன் இல்லாததாலும், இங்கிலாந்தின் கை ஓங்க வாய்ப்பு அதிகம்!

அடுத்த கட்டுரைக்கு