Published:Updated:

இரு அணிகளின் எழுச்சிக்கு விதைபோட்ட அந்த ஒரு போட்டி... இங்கிலாந்து vs வங்கதேசம் #WORLDCUPMEMORIES

#ENGvBAN
#ENGvBAN

இரண்டு அணிகளுக்கும் கட்டாய வெற்றி தேவையாக இருந்தாலும், இங்கிலாந்து அணிக்கு கெளரவப் பிரச்னையும் கூடுதலாக அதில் அடக்கம்.

விளையாட்டில் ஒரு பலமான அணி, கத்துக்குட்டியாக கருதப்படும் அணியிடம் தோல்வியடைந்தால், அதை ஆங்கிலத்தில் அப்செட் (UPSET) என்று கூறுவார்கள். உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரில் கத்துக்குட்டி அணியிடம் தோல்வியடைந்து வெளியேறினால் எப்படி இருக்கும் என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்றாகத் தெரியும். அத்தகைய நிகழ்வு நடக்கும்போது அந்தத் தோல்வியுற்ற அணி அந்த நிகழ்வை அவ்வளவு எளிதாக கடக்க முடியாது.

`காயப்படாமல் கற்க முடியுமா… நாங்க ரெடி!’ – இங்கிலாந்து கேப்டன் மார்கன் #ENGvBAN

அந்த பலமான அணி மீண்டும் இழந்த பெருமைய மீட்டெடுக்க என்னவெல்லாம் செய்யும்? அதே சமயம் அந்த பலமான அணியை வென்ற கத்துக்குட்டி அணிக்கு அந்த வெற்றி என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? அப்படி ஒரு நிகழ்வு 2015 உலகக் கோப்பையிலும் நடந்தது. லீக் சுற்றில் இங்கிலாந்து – வங்கதேசம் மோதிய போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது வங்கதேசம். இன்று அந்த அணிகள் மீண்டும் சந்திக்கும் முன் அந்த போட்டியில் எப்படி வங்கதேசம் வென்றது, அந்த வெற்றி இரு அணிகளிலும் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதை பார்ப்போம்!

வங்கதேச அணியின் அந்த சரித்திர வெற்றி!

மார்ச் 9 2015- இங்கிலாந்து vs வங்கதேசம். இரண்டு அணிகளில் எந்த அணி ஜெயிக்கிறதோ அந்த அணி காலிறுதிக்கு தகுதி பெறும் என்ற நிலை. ஆகவே இரண்டு அணிகளுக்கும் கட்டாய வெற்றி தேவையாக இருந்தாலும், இங்கிலாந்து அணிக்கு கெளரவப் பிரச்னையும் கூடுதலாக அதில் அடங்கியது. அதிலும் ஏற்கனவே 2011-ல் இங்கிலாந்தை வங்கதேசம் வீழ்த்தியிருந்ததால் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 275 ரன்கள் குவித்தது.

மஹமதுல்லா மிகச்சிறப்பாக ஆடி அந்த போட்டியில் சதம் விளாசினார். ஒரு வங்கதேச வீரர் உலகக் கோப்பையில் சதமடிப்பது அதுவே முதல்முறை. பின்பு 276 என்ற டார்கெட்டை சேஸ் செய்யத்தொடங்கியது இங்கிலாந்து அணி. எளிதான டார்கெட் இல்லையென்றாலும், அடையமுடியாத டார்கெட்டும் இல்லை. பேட்டிங்கில் மஹமதுல்லா வங்கதேசத்தின் தூணாக திகழ்ந்தது போல் பெளலிங்கில் ரூபெல் ஹுசைன் திகழ்ந்தார்.

#ENGvBAN
#ENGvBAN

12 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி என்ற நிலை. கைவசம் இரண்டு விக்கெட்டுகள் இங்கிலாந்திடம் இருந்தது. 49-வது ஓவரை ரூபல் ஹுசைன் வீச பிராட், ஆண்டர்சன் இருவரையும் போல்டாக்கி வங்கதேச அணிக்கு அந்த சரித்திர வெற்றியைத் தேடித்தந்தார். அது இங்கிலாந்து அணிக்கு வேண்டாத சரித்திரமாக அமைந்தது. ``வங்கதேசம் வெற்றி, இங்கிலாந்து தோல்வி” என எளிதாக கடந்து செல்ல முடியாது. காரணம் அந்த ஒரு மேட்ச் இரண்டு அணிகளின் கிரிக்கெட்டில் ஏற்படுத்திய மாற்றம்!

தோல்விக்கு பின் – இங்கிலாந்து

48.3 வது ஓவர் ரூபெல் ஹுசைன் பந்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் போல்டாகிறார். இங்கிலாந்து அணி உலகக் கோப்பையிலிருந்தே வெளியேறுகிறது. சமூக வலைத்தளங்களில் பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் என எல்லாத் தளத்திலும் உலகமே இங்கிலாந்து அணியை வசைப்பாடுகிறது. தன்னை நிரூபித்த ஒரு வீரர் ஒரு சில போட்டிகளில் சொதப்பினால் உடனே அந்த வீரருக்கு முடிவுரை எழுதும் பேனாக்கள், அன்று இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கே முடிவுரை எழுதத் தொடங்கியது.

#ENGvBAN
#ENGvBAN

மலேசியா அணி `உங்க கூட எப்போ விளையாடலாம்?’ என ட்விட்டரில் வம்புக்கு இழுத்தது. கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கிய நாட்டின் சரித்திர பக்கத்தில் கருப்புப்புள்ளியாக அந்த தோல்வி அமைந்தது. வீரர்கள், அணி நிர்வாகிகள் அனைவரின் மீதும் பலத்த விமர்சனம் வைக்கப்பட்டது. “எல்லா அணிகளும் ஒருநாள் போட்டிகளில் தங்கள் அணுகுமுறையை மெருகேற்றிக்கொண்டிருக்கும் போது இன்னும் 80-களில் கிரிக்கெட் விளையாடுவதைப்போல் இங்கிலாந்து அணுகிக்கொண்டிருக்கிறது” என பலர் கிண்டலடித்தனர். ஆனால், அந்த தோல்விக்குப் பிறகு…??.

அங்கே தொடங்கியது இங்கிலாந்து அணியின் மாற்றம். உலகக் கோப்பையில் குரூப் சுற்றிலேயே வெளியேறிய அணி அடுத்த உலகக் கோப்பையில் நம்பர் 1 ஒருநாள் அணியாக அடியெடுத்துவைத்தது. பழைய ஆட்டத்தை தூக்கி எறிந்து ஆக்ரோஷமான ஆட்டத்தை கையிலெடுத்தது. ஆண்டர்சன், பிராட், பெல் போன்ற முன்னணி வீரர்களை நிராகரித்து புதிய வீரர்களுக்கு வாய்ப்பளித்தது. இன்று உலகின் சிறந்த பேட்டிங் உள்ள அணி இங்கிலாந்து என சொன்னால் அதற்கான ஆரம்பப் புள்ளி அந்தப் போட்டிதான்.

இரு அணிகளின் எழுச்சிக்கு விதைபோட்ட அந்த ஒரு போட்டி... இங்கிலாந்து vs வங்கதேசம் #WORLDCUPMEMORIES

முதல் வரிசை வீரர்களின் ஸ்ட்ரைக் ரேட் 80-க்கும் குறையாமல் பார்த்துக்கொண்டார்கள். தங்களது அணுகுமுறையை முற்றிலுமாக மாற்றி புதிய அணியாக உருவெடுக்கத்தொடங்கினர். முக்கியமாக பேட்டிங்கில் அனைவரும் அதிரடியான ஆட்டத்தை கட்டமைக்க வழிவகுத்தனர். 2011-2015 காலகட்டத்தில் 10 முறை 300+ ஸ்கோர் அடித்த இங்கிலாந்து அணி, அந்த தோல்விக்குப் பிறகு 34 முறை 300+ ஸ்கோரைக் கடந்துள்ளது. 0.96 என்றிருந்த வெற்றி விகிதம் 2.30க்கு அதிகமானது. வங்கதேச அணியுடன் அந்த ஒரு தோல்விதான் இங்கிலாந்து கிரிக்கெட்டின் இத்தகைய எழுச்சிக்குக் காரணமாக அமைந்தது.

வெற்றிக்கு பின் கதை – வங்கதேசம்

48.3-வது ஓவர் ரூபெல் ஹுசைன் பந்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் போல்டாகிறார். வங்கதேச அணி உலகக் கோப்பையில் முதல் முறையாக காலிறுதிக்குள் நுழைகிறது. எல்லோருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம். வங்கதேச மக்கள் அந்த வெற்றியைக் கொண்டாடுகின்றனர். பின்னே கொண்டாடாமல் இருப்பார்களா? 2007-ல் இந்தியாவை, 2011-ல் இதே இங்கிலாந்தை தோற்கடித்திருந்தாலும் இந்த வெற்றிதான், அவர்கள் முன்னேறியிருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. ஏனென்றால் இந்த வெற்றியில்தான் அவர்கள் அடுத்தக்கட்டத்துக்கு முன்னேறினார்கள்.

#ENGvBAN
#ENGvBAN

தங்களை குறைத்து மதிப்பிடும் அணிகளை எல்லாம் பந்தாடியாது. அதன் பிறகு நடந்த பல ஒருநாள் தொடர்களில், பெரிய அணிகளை வங்கதேசம் அணி வென்றது. தோல்வியடைந்த போட்டிகளையும் எடுத்துக்கொண்டாலும் அதிலும் போராட்டம் குணம் நிறைந்திருக்கும். 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அரையிறுதி வரை முன்னேறியது அவர்களின் அடுத்த சாதனை. அந்த அணிக்கு அந்த வெற்றி தந்த உத்வேகம் மிகவும் அதிகம். இவை எல்லாம் இங்கிலாந்து அணியுடன் பெற்ற அந்த ஒரு வெற்றி ஏற்படுத்திய மாற்றம்.

மீண்டும் வங்கதேசம் - இங்கிலாந்து

கடந்த உலகக் கோப்பையில் இவ்விரு அணிகள் மோதிய அந்த ஒரு போட்டி வெற்றிப்பெற்ற அணி, தோல்வியடைந்த அணி என இரண்டையும் முன்னேற்றத்தை நோக்கியே பயணம் செய்ய வைத்திருக்கிறது. அந்த அணிகளில் பெரும் மாற்றத்தை விதைத்திருந்தது. மீண்டும் இன்று மோதுகிறார்கள். இந்த முறை வங்கதேசம் வென்றால் அது உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக ஹாட்ரிக் வெற்றியாக அமையும். ஆனால், அதை அப்செட்(UPSET) என்ற வழிமுறைக்குள் அடக்க முடியாது. ஏனெனில் வங்கதேசம் இன்று கத்துக்குட்டி அணி இல்லை!

அடுத்த கட்டுரைக்கு