`காயப்படாமல் கற்க முடியுமா… நாங்க ரெடி!’ – இங்கிலாந்து கேப்டன் மார்கன் #ENGvBAN

தோல்வியடைந்தபின் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி மீண்டு வர வேண்டும் என்பது குறித்து உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பே திட்டமிட்டிருந்தோம். இப்போது சகஜ நிலைக்குத் திரும்பி விட்டோம்.
போட்டி எண்: 12
இங்கிலாந்து – வங்தேசம்
இடம்: கார்டிஃப்
நேரம்: மாலை 3 மணி
உலகக் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்து, முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வென்று, டிரென்ட் பிரிட்ஜில் நடந்த இரண்டாவது போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. போட்டியை நடத்தும் இங்கிலாந்து சுதாரிக்க வேண்டிய நேரம் இது.

பாகிஸ்தானைப் போல வங்கதேசத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது. `தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நாங்கள் கத்துக்குட்டிகள் அல்ல’ என நிரூபித்து, நியூஸிலாந்திடம் தோற்றது. அந்தத் தோல்வியும் வங்கதேசத்துக்கு வெற்றிகரமான தோல்விதான். ஏனெனில், வங்கதேசம் வீழ்த்திய 8 விக்கெட்டுகளில் 6 சுழலுக்குப் பலியானவை. நியூஸிலாந்து டாப் ஆர்டர் சுழலில் ஆட்டம் கண்டதை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டது வங்கதேசம்.
``தோல்வியடைந்தபின் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி மீண்டு வர வேண்டும் என்பது குறித்து உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பே திட்டமிட்டிருந்தோம். இப்போது சகஜ நிலைக்குத் திரும்பி விட்டோம்.

எங்கள் பலம் எது, அதை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசித்திருக்கிறோம். பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தபின், இரண்டு நாள்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து விலகி குதிரைப் பந்தயங்கள் பார்த்தேன். குடும்பத்தினர், நண்பர்களுடன் பேசினேன். இப்போது மீண்டும் ரெடி’’ என்றார் இங்கிலாந்து கேப்டன் மோர்கன்.
ஜோ ரூட், ஜாஸ் பட்லர் இருவர் சதம் அடித்தும் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது இங்கிலாந்து. இருப்பினும், இங்கிலாந்து பேட்டிங் லைன் அப்பில் பெரிதாக பிரச்னையில்லை. மோசமான ஃபீல்டிங்தான் இங்கிலாந்தின் தோல்விக்கு காரணம் என்ற விமர்சனமும் எழுந்தது.

அத்துடன், இந்த உலகக் கோப்பையில் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோப்ரா ஆர்ச்சர் 10 ஓவர்களில் 79 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்கூட வீழ்த்தவில்லை. இதைப்பற்றி கேட்டபோது, ``எங்கள் ஃபீல்டிங் தரத்தை முதல் போட்டியிலேயே நிரூபித்துவிட்டோம். டிரென்ட்பிரிட்ஜில் அன்று எங்களுக்கு மோசமான நாளாக அமைந்துவிட்டது. கிரிக்கெட்டில் இது சகஜம். அதனால், அதில்கவனம்செலுத்தவேண்டியதில்லை. ஆர்ச்சரைப்பொறுத்தவரை, இளம்வயதில் அவருக்கு எல்லாமே கிடைத்து விட்டது. இதற்குமுன் அவர் தோல்வியடைந்ததில்லை; இவ்வளவு ரன்கள் விட்டுக்கொடுத்ததில்லை. ஆனால், கடந்தபோட்டியில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தும், முடிவில் ரிலாக்ஸாகவே இருந்தார். அதுசரி, காயம்படாமல் எப்படி கற்க முடியும்’’ என,பிரஸ்மீட்டைமோட்டிவேஷன் வகுப்பாக மாற்றிவிட்டார் மோர்கன்.
இரு அணிகளும் இதுவரை!
இரு அணிகளும் இதற்கு முன் மோதிய 20 சர்வதேசப் போட்டிகளில் இங்கிலாந்து 16, வங்தேசம் நான்கு போட்டிகளில் வென்றுள்ளது. ஆனால், உலகக் கோப்பையில் வங்தேசத்தின் கை ஓங்கியிருக்கிறது. மூன்றில் இரண்டு போட்டிகளில் வங்கதேசம், இங்கிலாந்தை தோற்கடித்திருக்கிறது. கடந்த உலகக் கோப்பையின்போது 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, இங்கிலாந்தை உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றியது வங்கதேசம். அதனால், வங்கதேசத்தை இங்கிலாந்து குறைத்து மதிப்பிடாது.

``இது சவலான போட்டியாக இருக்கும். மக்கள் வங்கதேசத்தை குறைத்து மதிப்பிடுகிறார்கள். ஆனால், வங்கதேசம் வலுவான அணி. எங்கள் சீனியர் வீரர்களை விட, அவர்களது சீனியர் வீரர்கள் அதிக போட்டிகளில் விளையாடிய அனுபவம் நிறைந்தவர்கள். அவர்கள் எங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள். நாங்கள் அதை எதிர்கொள்வோம்’’ என்றார் மோர்கன்.
பிட்ச் ரிப்போர்ட்!
கார்டிஃப் கிரீன் பிட்ச்சாக இருக்கும் என தெரிகிறது. பவுண்டரி எல்லையும் சிறியது. சுழற்பந்துவீச்சாளர்கள் டார்கெட் செய்யப்படாலம். அதனால், அடில் ரஷீதுக்குப் பதிலாக இன்னொரு வேகப்பந்துவீச்சாளருடன் களமிறங்க வாய்ப்புள்ளது. `ஓவர் ரேட் பிரச்னையும் இருக்கிறது.

தேவையில்லாமல் அதில் கவனம் செலுத்துவதையும், அபராதம் பெறுவதையும் விரும்பவில்லை. நாங்கள் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் இறங்குவோம்’ என மோர்கன் தெளிவுபடுத்திவிட்டார்.
பிளேயிங் லெவன்
இங்கிலாந்து (உத்தேசம்): ஜேசன் ராய், பேர்ஸ்டோ, ஜோ ரூட், மார்கன், பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், பிளங்கட், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், மார்க்வுட்.

முக்கிய வீரர்கள்: இங்கிலாந்து: ஜோ ரூட், பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர் வங்கதேசம்: செளமியா சர்க்கார், ஷகிப் அல் ஹசன்
வெற்றி வாய்ப்பு: வங்கதேசம் அச்சுறுத்தலாக இருக்கும். அதை இங்கிலாந்து எளிதில் சமாளிக்கும்.