இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா! #ENGvAUS Live Update

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்துகொண்டிருக்கும் இந்தத் தொடரின் மிகப்பெரிய போட்டியான #ENGvAUS ஆட்டத்தின் Live Update
அட்டகாச பெரண்டார்ஃப்... அமர்க்கள பெரண்டார்ஃப்..!
கூல்டர்நைலுக்குப் பதிலாகக் களமிறக்கப்பட்ட பெரண்டார்ஃப், இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே ஜேம்ஸ் வின்ஸ் விக்கெட்டை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு அடித்தளமிட்டவர், பேர்ஸ்டோ, வோக்ஸ், மொயீன் அலி, ஆர்ச்சர் போன்றவர்களையும் வீழ்த்தி தன் முதல் 5 wicket haul-ஐக் கைப்பற்றினார்.
பெரண்டார்ஃப் : 10 - 0 - 44 - 5

இந்த இங்கிலாந்துக்கு என்னதான் ஆச்சு?
மிகவும் பெருமையாகப் பேசப்பட்ட இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டர் கடந்த இரண்டு போட்டிகளாக சொதப்பிக்கொண்டிருக்கிறது. இலங்கைக்கு எதிராக 232 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் தோற்றவர்கள், இன்று முதல் 35 பந்துகளிலேயே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டனர். இந்தியாவைப்போல் டாப் ஆர்டரை மட்டும் நம்பியிருக்காமல் மிடில் ஆர்டரும் பலமாகக் கொண்ட அணி, மொத்தமாக சொதப்புவது இங்கிலாந்து ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டோக்ஸ் அவுட்டான புகைப்படங்கள்
ஸ்டோக்ஸ் சிறப்பாக ஆடியதன் காரணம் இதுதான். கிரீசை நன்றாகப் பயன்படுத்தினார். தடுப்பாட்டம் ஆடும்போது நன்றாகப் பின்னால் நகர்ந்து ஆடிய அவர், அடித்து ஆடவேண்டிய பந்துகளுக்கு நன்றாக முன்னே நகர்ந்தார். அதுவும் ஸ்டம்பிலிருந்து 3 மீட்டர் அளவுக்கு வெளியே வந்து ஆடியதால், பந்தின் மூவ்மென்ட்களை அவரால் சரியாக சமாளிக்க முடிந்தது.
ஸ்டோக்ஸ் அவுட்
ஆஸ்திரேலியாவுக்கு சவாலளித்துக்கொண்டிருந்த ஸ்டோக்ஸை தன் அட்டகாச யார்க்கரால் வெளியேற்றினார் மிட்செல் ஸ்டார்க்.
'பென்' மேன் ஆர்மி
இலங்கைக்கு எதிரான போட்டியைப்போல் இந்தப் போட்டியிலும் ஸ்டோக்ஸையே நம்பியிருக்கிறது இங்கிலாந்து அணி. அடுத்து வருபவர்களில் மொயீன் அலி மட்டுமே பேட்ஸ்மேன். ஆனால், அவருடைய சமீபத்திய ஃபார்முமே மோசமாக இருக்கிறது. எனவே, ஸ்டோக்ஸ் கடைசிவரை களத்தில் இருப்பது அவசியம்.
ஸ்டோக்ஸ் அரைசதம்
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் 75 பந்துகளில் தன் அரைசதத்தைக் கடந்தார். தொடக்கத்தில் மிகவும் நிதானமாக ஆடினாலும், அடுத்து அதிரடி காட்டத் தொடங்கினார். அதிலும் கிரீசிலிருந்து நன்றாக வெளியே வந்து வேகப்பந்துவீச்சாளர்களைத் தாக்கினார். மிகவும் சிறப்பான ஆட்டம்!

தட் லார்ட்ஸ் பால்கனி!

சரியான பாதையில் இங்கிலாந்து...
இந்த ஸ்டோக்ஸ் - பட்லர் கூட்டணி சரியான முறையில் ஆட்டத்தைக் கட்டமைத்துக்கொண்டிருக்கிறது. விக்கெட் வீழ்ச்சியைத் தடுப்பது ஒருபக்கம் முக்கியமாக இருப்பினும், ரன் எடுக்கவும் இவர்கள் தவறவில்லை. ஸ்டார்க் ஓவரில் 8 ரன்கள், லயான் ஓவரில் 7 ரன்கள், மீண்டும் ஸ்டார்க் ஓவரில் 7 ரன்கள் என சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கின்றனர். பவுண்டரிகளும் வருகிறது, அதே சமயம் நன்றாக ஓடியும் ரன் எடுக்கிறார்கள். இன்னும் ஒரு 20 ஓவருக்காவது இவர்கள் இப்படியே ஆடினால், இங்கிலாந்து மீண்டு வரலாம். ஆம், 20 ஓவர்கள்! அது இவர்களால் முடியுமா என்பதுதான் கேள்வி!

எல்லாம் பட்லர் கையில்!
இனி இங்கிலாந்தின் முழு நம்பிக்கையும் பட்லர்தான். ஸ்டோக்ஸோடு இணைந்து அவர் ஒரு மிகமுக்கியமான, மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கவேண்டும். இல்லையெனில் 2 புள்ளிகளும், அரையிறுதி வாய்ப்பும் சிக்கலுக்குள்ளாகும்.
பேர்ஸ்டோ அவுட்!
27 ரன்கள் அடித்திருந்த நிலையில், பெரண்டார்ஃப் பந்துவீச்சில் வெளியேறினார் ஜானி பேர்ஸ்டோ. இங்கிலாந்து - 53 / 4
மோர்கனை அவுட்டாக்கிய கம்மின்ஸின் அசத்தல் கேட்ச்

சிங்கிள் வேண்டும் ஸ்டோக்ஸ்
விக்கெட்டுகள் வேகமாக இழந்திருப்பது ஒருபக்கம் இருந்தாலும், குறைந்தபட்சம் ஸ்டிரைக் ரொடேட் செய்வதிலாவது ஸ்டோக்ஸ் கவனம் செலுத்தவேண்டும். 13 பந்துகளில் 4 ரன்கள்தான் எடுத்திருக்கிறார். முதல் 11 பந்துகளில் அவர் ஒரு ரன்கூட அடிக்கவில்லை. பேஸ்டோ ஓரளவு தன்னம்பிக்கையோடு ஆடிக்கொண்டிருக்கும்போது அவரை ஸ்டிரைக்கில் வைத்திருப்பது அவசியம்
😂😂😂
ரூட்டை எப்படி ஏமாற்றினார் ஸ்டார்க்?
ரூட்டுக்கு தொடர்ந்து ஃபுல் லென்த்திலேயே பந்துகளை பிட்ச் செய்தார் ஸ்டார்க். முதலிரண்டு பந்துகளையும் பெரிதாக ஸ்விங் செய்யாத அவர், அடுத்த பந்தை ஸ்டம்ப் லைனில் பிட்ச் செய்து ஸ்டம்புகள் நோக்கி ஸ்விங்காக வைத்தார். விளைவு, வெளியே செல்லும் என்று நினைத்து ஆடிய ரூட், ஸ்டம்புகளுக்கு முன்னால் pad-ல் வாங்கி வெளியேறினார்.
வேரை இழந்தது இங்கிலாந்து
இங்கிலாந்தின் மிகப்பெரிய நம்பிக்கையான ஜோ ரூட் எட்டே ரன்கள் அடித்திருந்த நிலையில் வெளியேறினார். தன்னுடைய டிரேட் மார்க் இன்ஸ்விங்கால் அவரை எல்.பி.டபிள்யூ ஆக்கினார் மிட்செல் ஸ்டார்க். இங்கிலாந்து - 15 /2

1987 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்த இரு அணிகளும்தான் மோதின. கிட்டத்தட்ட வெற்றியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இங்கிலாந்து அணி, ஒரு ஷாட்டுக்குப் பின் தோல்வியைத் தழுவியது. அது என்ன ஷாட்? அதை அடித்தது யார்? அதைப் பற்றித் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையைப் படிங்க..
பிளான் பெரண்டார்ஃபுக்கு இல்லை.. ஸ்டார்க்குக்கு..!
ஆஸ்திரேலியா பேட்டிங் முடிந்ததும் பேசிய சச்சின், "ஸ்டார்க் பெவிலியன் எண்டில் இருந்து பந்துவீசத் தொடங்கவேண்டும்" என்று கூறினார். அங்கிருந்து பந்துவீசும்போது, மைதானத்தின் சாய்வும், வீசும் காற்றின் திசையும் பந்து ஸ்விங்காவதற்குச் சாதகமாக இருக்கும் என்பதால் அப்படிச் சொன்னார். இங்கிலாந்து இன்னிங்ஸின்போது, முதல் ஓவர் நர்சரி எண்டில் இருந்து வீசப்பட்டது. அதனால்தான், முதல் ஓவரை ஸ்டார்குக்குக் கொடுக்காமல், பெரண்டார்ஃபுக்குக் கொடுத்தார் ஃபின்ச். கடைசியில் அதுவே அவர்களுக்குச் சாதகமாக அமைந்து முதல் விக்கெட்டை பரிசளித்துவிட்டது.
ஓப்பனிங் சரியில்லயே..!
ஆஸ்திரேலியாவுக்கு ஒவ்வொரு போட்டியிலும் தொடக்கம் சிறப்பாக அமைய, இங்கிலாந்துக்கு அது நேரெதிராக அமைந்துகொண்டிருக்கிறது. இலங்கைக்கு எதிரான போட்டியில் பேர்ஸ்டோ டக் அவுட் ஆகி வெளியேறினார். இன்று வின்ஸ்! ஜேசன் ராய் இல்லாத குறையை உணரத் தொடங்கியிருக்கிறது இங்கிலாந்து.
இங்கிலாந்து - 0/1
இரண்டாவது பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார் ஜேம்ஸ் வின்ஸ். பெரண்டார்ஃப் வீசிய அற்புதமான பந்தில் போல்டானார் வின்ஸ்.

25 ஓவர்கள் முடிந்த நிலையில், ஆஸ்திரேலியா 330 - 340 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அதன்பிறகு சிறப்பாகப் பந்துவீசியது இங்கிலாந்து அணி. இருந்தாலும், ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சுக்கு எதிராக இது கடினமான சேஸாகத்தான் இருக்கும். ஆனால், இப்படியான போட்டிகளில் வென்றால்தான் உலகக் கோப்பையை வெல்ல முடியும்மைக்கல் வான்
இன்னும் கொஞ்சம் கூடுதல் ரன்கள் அடித்திருக்கவேண்டும். இருந்தாலும் இந்த இலக்கை டிஃபண்ட் செய்யமுடியும் என்று நினைக்கிறேன். தொடக்கத்தில் சில விக்கெட்டுகள் எடுத்து, அவர்களின் மிடில் ஆர்டர் மீது நெருக்கடியை ஏற்படுத்தவேண்டும்ஆரோன் ஃபின்ச்
கேப்டன் மார்வெல்?!
ஸ்மித் அவுட்
வோக்ஸ் பந்துவீச்சில் ஆர்ச்சரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஸ்டீவ் ஸ்மித். ஆஸ்திரேலியா 250-6
மிடில் ஆர்டர் சொதப்பல்!
மிகச் சிறப்பாகப் போட்டியைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இப்போது கொஞ்சம் தடுமாறிக்கொண்டிருக்கிறது. நல்ல தொடக்கத்தை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாகப் பயன்படுத்தவேண்டும். ஆனால், அது தவறிவிடுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அதேதான் நடந்தது. இந்த முறையும் மிடில் ஆர்டர் பெரிதாக ரன் குவிக்க முடியாமல் தடுமாறுகிறது. மேக்ஸ்வெல் இதற்கு முக்கியக் காரணம் என்றே சொல்லலாம். அவர் ஒருமுறை கூட நிலைத்து நின்று ஆடவில்லை. அடுத்த வரும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆட நினைத்து விக்கெட்டை இழக்கின்றனர். அடுத்த போட்டிகளிலாவது ஆஸ்திரேலியாவின் அணுகுமுறை மாறவேண்டும்.
ரன் அவுட்!
இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்டு ஓடி ரன் அவுட் ஆனார் ஸ்டோய்னிஸ். 41.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்துள்ளது
மேக்ஸ்வெல்லை வெளியேற்றினார் வுட்
இங்கிலாந்தின் திட்டத்துக்கு பலன் கிடைத்துவிட்டது. மேக்ஸ்வெல் களமிறங்கியதுமே அதிவேகமாகப் பந்துவீசும் மார்க் வுட், ஆர்ச்சர் போன்றவர்களைப் பயன்படுத்தத் தொடங்கினார் மோர்கன். ஏனெனில், சுழலை மேக்ஸ்வெல் எளிதாகக் கையாண்டுவிடுவார். அதிவேகமாக வீசப்படும் பந்துகளுக்குத் திணறுவார். அதைத் தொடர்ந்து பயன்படுத்திய நிலையில், வுட் பந்துவீச்சில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் மேக்ஸ்வெல்.
சதமடித்த கையோடு வெளியேறினார் ஃபின்ச்
இந்த உலகக் கோப்பையில் தன்னுடைய இரண்டாவது சதத்தை நிறைவு செய்த ஆரோன் ஃபின்ச், அடுத்த பந்திலேயே வெளியேறினார். ஆர்ச்சர் வீசிய ஷார்ட் பாலில், ஃபைன் லெக் திசையில் நின்றிருந்த வோக்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் 100(116)
வெல்கம் ஸ்டீவ்!
ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கியதும் மிகவும் உரத்த குரலில் Boo செய்தனர் இங்கிலாந்து ரசிகர்கள். வார்னர் களமிறங்கியபோதுகூட அவ்வளவு சத்தம் கேட்கவில்லை. 'எந்த ஆஸ்திரேலிய வீரரிக்கும் இல்லாத எதிர்ப்பு இப்போது ஸ்மித்துக்கு எழுந்துள்ளது' என்று வர்ணனையாளர்களே தெரிவித்தனர்.

கவாஜாவுக்கு நிற்கவைத்திருக்கும் ஃபீல்டிங் எனக்குப் புரியவில்லை. விக்கெட் எடுப்பதற்கான அட்டாகிங் ஃபீல்டிங் இல்லை. பேட்ஸ்மேன் தவறுசெய்யவேண்டுமென்று இங்கிலாந்து காத்துக்கொண்டிருக்கிறதுமைக்கேல் கிளார்க்
என்ன ஆச்சு பட்லருக்கு?
ஜாஸ் பட்லரின் கீப்பிங் கொஞ்சம் கவலை கொள்ளும் விதமாக இருக்கிறது. கவாஜாவை ஸ்டம்பிங் செய்யும் வாய்ப்பைத் தவறவிட்ட பட்லர், அதற்கு முன் இன்னொரு மிகப்பெரிய தவறும் செய்தார். வோக்ஸ் ஓவரில் வார்னர் பேட்டில் பட்டு பந்து அவரது கிளவுசை அடைந்தது. பௌலர் வெறித்தனமாக அப்பீல் செய்தபோதும் கொஞ்சம் கூட அசரவில்லை பட்லர். கேப்டன் மோர்கன் ரிவ்யூவுக்குக் கேட்டபோதும் பேட்டில் படவில்லை என்று சொல்லிவிட்டார். ஆனால், அதன்பிறகு காட்டப்பட்ட ரீப்ளேக்களில் பந்து பேட்டில் பட்டது தெளிவாகத் தெரிந்தது. அப்போதே அந்த விக்கெட் போயிருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும்.

விக்கெட் எடுப்பதற்கான 'ரூட்'!
கவாஜாவை இப்போது இங்கிலாந்து அட்டாக் செய்யவேண்டும். அவரை டாட் பால்கள் ஆடச்செய்யவேண்டும். அப்போதுதான் அவர்மீது நெருக்கடி கூடும். அந்த நெருக்கடி ஃபின்ச் மீது மாறும். இப்படியான நிலையில், மொயீன் அலியோடு அடில் ரஷீத்தைப் பயன்படுத்தாமல் ரூட்டைப் பயன்படுத்துவது பலன் தரலாம். அலி - ரூட் என இரண்டு பக்கமும் ஆஃப் ஸ்பின்னர்கள் வருவது கவாஜாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.
கோலி - வார்னர் தேஜா வு
மொயீன் அலி பந்துவீச்சில் வெளியேறினார் வார்னர். கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கோலி அவுட்டானதைப் போலத்தான் இவரும் வெளியேறினார். கட் செய்ய நினைத்த, பந்தின் கூடுதல் பௌன்சால் ஏமாந்துவிட்டார். ஆஸ்திரேலியா - 123 / 1
அடுத்த அரைசதம்
ஃபின்சைத் தொடர்ந்து வார்னரும் அரைசதம் கடந்தார். வழக்கத்தைவிட கொஞ்சம் வேகமாகவே ஆடி 52 பந்துகளில் அரைசதம் அடித்தார் வார்னர்.
முதல் விக்கெட்டுக்கு 100!
வார்னர் - ஃபின்ச் தொடக்க ஜோடி சதமடித்து அசத்தியது. 113 பந்துகளில் 100 ரன்களை எடுத்துள்ளது இந்த பார்ட்னர்ஷிப்! இந்த உலகக் கோப்பையில் மூன்றாவது முறையாக முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்துள்ளது இந்த இணை.
ஆஸ்திரேலியா - 83-0!
நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கிய ஆஸ்திரேலிய ஓப்பனர்கள் சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர். 16 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்துள்ளது இங்கிலாந்து. ஃபின்ச் 47 ரன்களுடனும், வார்னர் 31 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.
செம உஷார் ஃபின்ச்!

மிகவும் திட்டமிடலோடு இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை எதிர்கொள்கிறார் ஃபின்ச். கிரீஸில் அவரது மூவ்மென்ட்களே அவர் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கிறார் என்பதைச் சொல்கிறது. பந்தை அதிகமாக ஸ்விங் செய்யும் வோக்ஸ் பந்துவீச்சை (இடதுபுறமுள்ள படம்), கிட்டத்தட்ட ஸ்டம்பிலிருந்து 3 மீட்டர் தள்ளிச் சென்று எதிர்கொள்கிறார். வேகமும், பௌன்சும் கலந்துவரும் ஆர்ச்சரின் பந்துவீச்சை (வலதுபுறமுள்ள படம்) கிரீசில் மிகவும் பின்னால் இருந்து ஆடுகிறார்.ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் ஒவ்வொரு முறையில் மிகவும் எச்சரிக்கையாக எதிர்கொண்டுகொண்டிருக்கிறார் ஆஸ்திரேலிய கேப்டன்.
கேட்ச் பிடித்தால்தான் கோப்பையைப் பிடிக்க முடியும்!
ஆர்ச்சர் பந்துவீச்சில், ஃபின்ச் கொடுத்த கேட்சைத் தவறவிட்டார் ஜேம்ஸ் வின்ஸ். அதனோடு சேர்த்து, இந்த உலகக் கோப்பையில் மட்டும் 13 கேட்ச்களை விட்டுள்ளது இங்கிலாந்து அணி. 14 கேட்சுகளைத் தவறவிட்டிருக்கும் பாகிஸ்தானோடு போட்டி போட்டுக்கொண்டிருந்தால் அரையிறுதிக்குத் தகுதி பெறுவது எப்படி, உலகக் கோப்பையை வெல்வது எப்படி? கேட்சஸ் வின் மேட்சஸ் பாய்ஸ்!
இன்று ஷார்ட் பால்கள் வேண்டாம்
முதல் 5 ஓவர்களில், இங்கிலாந்து பௌலர்கள் 28% பந்துகளை ஷார்ட் லென்த்தில்தான் பிட்ச் செய்தனர். ஆனால், இன்று ஷார்ட் பால்கள் பெரிதாக பயனுள்ளதாக இருக்காது என்றும், ஃபுல் லென்த்தில் பிட்ச் செய்யவேண்டு என்றும் வர்ணனையில் இருக்கும் நாசர் ஹுசைன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது இங்கிலாந்தின் 11 வீரர்களுக்கும் ஆஸ்திரேலியாவின் 11 வீரர்கள் என்பதற்கும் தாண்டி, ஸ்மித், வார்னர் என்ற இரண்டு வீரர்களுக்கும் இங்கிலாந்து கிரிக்கெட்டுக்குமான போட்டி. இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இரண்டு அணிகளுக்குமான கிரிக்கெட் ரைவல்ரி மிகப்பெரியது. உண்மையைச் சொல்லப்போனால் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ரைவல்ரியைவிட அதுதான் உக்கிரமானது. அப்படிப்போட்டியில், ஏற்கெனவே தங்களை கேலி செய்துகொண்டிருக்கும் இங்கிலாந்து ரசிகர்களுக்கு முன், கிரிக்கெட்டின் மெக்காவில், தங்களின் மிகப்பெரிய ரைவலை எதிர்த்து விளையாடுகிறார்கள் அந்த இரு வீரர்கள். அவர்களின் கிரிக்கெட் வாழ்வுக்கு, இரண்டு ஆண்டுகளாகச் சரிந்து கிடக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் பெயருக்கு மாற்றம் கொடுக்கக்கூடிய மிகமுக்கிய அத்தியாயம் இது!
வார்னே டச்
எதைப் பற்றியும் கவலை இல்லை!
கூட்டம் எப்படி ரியாக்ட் செய்யும் என்றெல்லாம் பெரிதாக யோசிக்கவில்லை. எந்தப் போட்டியையும் நாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை.ஃபிஞ்ச்
போட்டிக்கு முன்பே மிரட்டும் மோர்கன்!
போட்டியைப் பார்க்க வரும் கூட்டம் வார்னரையோ, ஸ்டீவ் ஸ்மித்தையோ ஏதேனும் விமர்சித்தாலோ, கேலி செய்தாலோ அதைக் கண்டுகொள்ள முடியாது. ரசிகர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இரண்டு வீரர்கள் தண்டனை பெற்று , மீண்டும் விளையாட வந்துவிட்டார்கள் என்பதாலேயே அவர்களைக் கிரிக்கெட் பார்ப்பவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. அதற்கு சில காலம் ஆகும்.மோர்கன்
அட்டாக்...அட்டாக்..!
வோக்ஸ் பந்துவீச்சில், தொடக்கத்திலேயே எட்ஜாகி கேட்சாகியிருப்பார் ஃபின்ச். ஒருவழியாக, பந்து ரூட்டுக்கு எட்டாத உயரத்தில் சென்றுவிட்டது. அந்தப் பந்தை அவுட் ஸ்விங்கராக வீசிய ஃபின்ச், அடுத்த பந்தை ஃபின்ச் தடுமாறும் இன்ஸ்விங்கராக வீசினார். பந்து பேட்டில் பட, எல்.பி.டபிள்யூ அப்பீலும் கோரப்பட்டது. அம்பயர் கொடுக்கவில்லை. ஃபின்சுக்கு இரண்டு ஸ்லிப்கள் வைத்திருந்தவர், வார்னருக்கு 3 ஸ்லிப்கள் வைத்துப் பந்துவீசினார். முதல் ஓவரிலேயே வேரியேஷன்களால் அட்டாக் செய்யத் தொடங்கிவிட்டது இங்கிலாந்து.
அணி விவரம்
இங்கிலாந்து : 1. ஜானி பேர்ஸ்டோ, 2.ஜேம்ஸ் வின்ஸ், 3.ஜோ ரூட், 4.மோர்கன் (கேப்டன்), 5.பென் ஸ்டோக்ஸ், 6.ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), 7.மொயீன் அலி, 8.கிறிஸ் வோக்ஸ், 9.அடில் ரஷித், 10.ஜோஃப்ரா ஆர்ச்சர், 11.மார்க் வுட்.

ஆஸ்திரேலியா: 1. ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), 2 டேவிட் வார்னர், 3 உஸ்மான் கவாஜா, 4 ஸ்டீவன் ஸ்மித், 5 கிளென் மேக்ஸ்வெல், 6 மார்கஸ் ஸ்டாய்னிஸ், 7 அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), 8 ஜேசன் பெஹண்ட்ராஃப், 9 பேட் கம்மின்ஸ், 10 மிட்செல் ஸ்டடார்க், நேதன் லயன்.
STATS : இங்கிலாந்து, இந்த உலகக் கோப்பைத் தொடரில் தோற்ற இரண்டு போட்டிகளும், முதல் இன்னிங்ஸில் பந்து வீசியபோது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து பந்துவீச்சு
போட்டி எண் : 32
இங்கிலாந்து சமீபத்திய பர்ஃபாமன்ஸ்
ஆஸ்திரேலியா சமீபத்திய பர்ஃபாமன்ஸ்
இடம் : லார்ட்ஸ்