Published:Updated:

லார்ட்ஸில் நியூசிலாந்தை எதிர்கொள்ளப் போவது யார்?! #AUSvENG

கார்த்திகா ராஜேந்திரன்

முதல் அரை இறுதிப் போட்டியின் முடிவில், இந்தியா அதிர்ச்சியளிக்க, நியூசிலாந்து லார்ட்ஸ் மைதானத்தை புக் செய்துவிட்டது.

AUSvENG
AUSvENG

இங்கிலாந்துக்கு இந்த உலகக் கோப்பை ஒருவகையில் மானப்பிரச்னை. 20 ஆண்டுகளுக்குப் பின் சொந்த மண்ணில் கோப்பையை வெல்ல அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இப்போது இங்கிலாந்தில் கிரிக்கெட்டுக்கு அவ்வளவு வரவேற்பு இல்லை. இளைய தலைமுறை கால்பந்தை நோக்கி நகர்ந்து விட்டது. உலகக் கோப்பை நடக்கும் நேரத்தில் கூட, இங்கிலாந்து மீடியாக்கள் பிரிமயர் லீக் ஆஃப் சீசன், டிரான்ஸ்ஃபர் விண்டோ பற்றிதான் பரபரப்பாகப் பேசிக்கொண்டிருக்கின்றன. எனவே, ஒட்டுமொத்த இங்கிலாந்தையும் தங்கள் பக்கம் திரும்பவைக்க, மோர்கன் தலைமையிலான அணி செய்ய வேண்டியது ஒரே ஒரு விஷயம். உலகக் கோப்பை வெல்வது. அதற்கு அவர்கள் இன்று ஆஸியை வீழ்த்த வேண்டும்...

2019 உலகக் கோப்பை யாருக்குச் சாதகமாக இருக்கிறதோ இல்லையோ, மழைக்கு முழு சாதகமாக உள்ளது. லீக் போட்டிகள்தான் தடைப்பட்டது என்றால், முக்கியமான அரை இறுதிப் போட்டியின் நடுவிலும் குறுக்கிட்டு, 'ரிசர்வ் டே' என்றால் என்ன என்பதை பற்றிப் பாடம் எடுத்துவிட்டது. இரண்டு நாள்கள் நடைபெற்ற முதல் அரை இறுதிப் போட்டியின் முடிவில், இந்தியா அதிர்ச்சியளிக்க, நியூசிலாந்து லார்ட்ஸ் மைதானத்தை புக் செய்துவிட்டது

1975 உலகக் கோப்பை அரை இறுதி..

முதல் உலகக் கோப்பை...60 ஓவர் உலகக் கோப்பை... லீட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் அரை இறுதியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதல். கிரிக்கெட்டை கண்டுபிடித்து, முதல் உலகக் கோப்பையை நடத்திக்கொண்டிருந்த இங்கிலாந்து அணி கோப்பைக் கனவுடன் அரை இறுதியில் களமிறங்கியது. ஆனால், 93 ரன்களுக்கு இங்கிலாந்தை ஆல்-அவுட்டாக்கிய ஆஸ்திரேலியா, வெறும் 28.4 ஓவரில் இலக்கை எட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 1975-ல் தொடங்கி, பாண்டிங் காலத்தில் உச்சத்தை தொட்ட ஆஸ்திரேலியாவின் ஆதிக்க கிராஃப் கீழே இறங்கவில்லை

1975 World cup
1975 World cup

40 ஆண்டுகளுக்குப் பிறகு அதே அணிகள் அரை இறுதியில் மோத உள்ளன. 1992 உலகக் கோப்பைக்குப் பிறகு இப்போதுதான் இங்கிலாந்துக்கு அரை இறுதி கதவு திறந்துள்ளது. முதல் உலகக் கோப்பையை வெல்ல இங்கிலாந்தும், நடப்பு உலகக் கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவும் பிர்மிங்ஹாமில் இன்று களமிறங்க உள்ளன.

இலங்கைக்கு எதிராகத் தொடங்கிய இங்கிலாந்தின் சறுக்கல், ஆஸ்திரேலியாவுடனான போட்டியிலும் தொடர்ந்தது. இரண்டு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்த இங்கிலாந்து கடைசி இரண்டு போட்டிகளில் சுதாரித்துக் கொண்டது. இந்தியா, நியூசிலாந்து என 'டாப்' அணிகளை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கிறது. கிவிகளுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் விளையாடிய அதே இங்கிலாந்து அணி இன்றைய போட்டியில் களமிறங்கலாம்.

உடல் நலம் சீராகி அணிக்குத் திரும்பிய ஜேசன் ராய் நல்ல தொடக்கத்தைக் கொடுக்க, பேர்ஸ்டோ, மார்கன் ரன் குவித்தனர். வழக்கமாக பேட்டிங்கில் கலக்கும் பட்லர், ஸ்டோக்ஸ் நியூசிலாந்துக்கு எதிராக சொதப்பினாலும், லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ப்ளங்கட், ரஷித் வரை ரன் சேர்த்தனர்.

England
England

305 ரன்கள் இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து, நியூசிலாந்தை 186 ரன்களுக்கு ஆல்-அவுட்டாக்கியது. வோக்ஸ், ஆர்ச்சர், ப்ளங்கட், ரஷித், ஸ்டோக்ஸ் என இங்கிலாந்தின் பெளலர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது தலா 1 விக்கெட் எடுக்க, மார்க் வுட் 3 விக்கெட்டுகள் எடுத்து மிரட்டினார். பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் அசத்தியே அதே அணி இன்றைய போட்டியிலும் அசத்தினால், ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி நிச்சயம்.

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் சேஸ் செய்த ஆஸ்திரேலியா தோல்வியைத் தழுவியது. அதனால், இன்றைய போட்டியில் டாஸ் ஜெயிப்பது இரு அணிகளுக்கும் மிக முக்கியமாக இருக்கும். லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரை ரன் குவிப்பில் ஈடுபட்டாலும், சேஸிங்கில் சொதப்பும் ஆஸ்திரேலிய அணி இன்றைய போட்டியில் விழித்துக் கொள்ள வேண்டும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் கடைசி வரை போராடிய ஆஸ்திரேலியாவுக்கு, அந்தப் போராட்ட குணமே ப்ளஸ். கோப்பையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆஸ்திரேலியாவின் பிடிப்பு இங்கிலாந்துக்கு இன்று நெருக்கடி தரும்.

Australia
Australia

ஆரன் ஃபின்ச், வார்னர், ஸ்மித், அலெக்ஸ் கேரி என ஆஸியிடம் பேட்டிங் பட்டாளம் இருக்கிறது. இதில் யாராவது ஒருவர் தேவைப்படும் நேரத்தில் பெரிய இன்னிங்ஸ் ஆடிவிடுவார்கள் என்பது உலக சாம்பியனின் ப்ளஸ். காயத்தால் உலகக் கோப்பையிலிருந்து கவாஜா வெளியேற, அவருக்கு பதிலாக ஹேண்ட்ஸ்கோம்ப் அணியில் இடம்பிடித்துள்ளார். பெளலிங்கைப் பொறுத்தவரை மிட்சல் ஸ்டார்க் மிரட்டக் காத்திருக்கிறார். அவருடன் கம்மின்ஸ், பெஹரண்டார்ஃப், நேதன் லயனின் பெளலிங் கைகொடுத்தால், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடிக்கலாம்.

நேருக்கு நேர்

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் சந்தித்துக் கொண்ட 148 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில், 82 முறை ஆஸ்திரேலியாவும், 61 முறை இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகள் டை ஆனது. 3 போட்டிகளில் முடிவு இல்லை. உலகக் கோப்பை போட்டிகளை பொறுத்தவரை ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியுள்ளது. 8 போட்டிகளில் 6 முறை ஆஸ்திரேலியாவும், 2 முறை இங்கிலாந்தும் வென்றுள்ளன.

ப்ளேயிங் லெவன்

ஆஸ்திரேலியா (உத்தேசம்):

ஆரன் ஃபின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், நேதன் லயன், ஜேசன் பெஹண்டராஃப்.

இங்கிலாந்து (உத்தேசம்)

இயன் மார்கன் (கேப்டன்), ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ், லியாம் ப்ளங்கட், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட்

இதுவரை

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

vs ஆப்கானிஸ்தான் - 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

vs வெஸ்ட் இண்டீஸ் - 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs இந்தியா - 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

vs பாகிஸ்தான் - 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs இலங்கை - 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs வங்கதேசம் - 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs இங்கிலாந்து - 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs நியூசிலாந்து - 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs தென்னாப்பிரிக்கா - 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

இங்கிலாந்து

vs தென்னாப்பிரிக்கா - 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs பாகிஸ்தான் - 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

vs வங்கதேசம் - 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs வெஸ்ட் இண்டீஸ் - 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

vs ஆப்கானிஸ்தான் - 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs இலங்கை - 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

vs ஆஸ்திரேலியா - 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

vs இந்தியா - 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs நியூசிலாந்து - 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி