Published:Updated:

ஏழு போட்டிகள்... ஏழு 300+ ஸ்கோர்... வங்கதேசத்தைப் பந்தாடிய இங்கிலாந்து! #ENGvBAN

Jason Roy
Jason Roy

29 நாள் இடைவெளியில் ஏழு 300+ ஸ்கோர்கள் அடித்து சாதனை படைத்திருக்கிறது இங்கிலாந்து.

மே 11, 2019 - சௌதாம்ப்டன் - 373/3
மே 14, 2019 - பிரிஸ்டல் - 359/4
மே 17, நாட்டிங்ஹம் - 341/7
மே 19, லீட்ஸ் - 351/9
மே 30, ஓவல் - 311/8
ஜூன் 3, நாட்டிங்ஹம் - 334/9
ஜூன் 8, கார்டிஃப் - 386/6

இங்கிலாந்து அணி, கடைசி 7 ஒருநாள் போட்டிகளில் அடித்த ஸ்கோர் இது! 29 நாள் இடைவெளியில் ஏழு 300+ ஸ்கோர்கள் அடித்து சாதனை படைத்திருக்கிறது அந்த அணி. எந்த மைதானமாக இருந்தாலும், எந்த எதிரணியாக இருந்தாலும், எப்போது பேட்டிங் செய்தாலும் ஓயாமல் ரன் அடித்துக்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணியிடம் நேற்று சிக்கியது வங்கதேசம்! பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா பந்துவீச்சையே பதம் பார்த்தவர்கள் பங்களாதேஷ் பந்துவீச்சை விட்டுவைப்பார்களா, நொறுக்கித் தள்ளிவிட்டனர். பேட்ஸ்மேன்கள் மட்டுமல்லாமல் கடைசியாகக் களமிறங்கிய வோக்ஸ், பிளங்கட் வரை எல்லோரும் ரன் அடிக்க, முதல் இன்னிங்ஸ் முடிவிலேயே தோல்வியை ஏற்றுக்கொண்டது வங்கதேசம்.

Jason Roy
Jason Roy

பாகிஸ்தானுக்கு எதிரான முந்தைய போட்டியில் ஜேசன் ராய் ஒரு மிகப்பெரிய தவறு செய்தார். முகமது ஹஃபீஸ் கொடுத்த கேட்சை அவர் தவறவிட, அரைசதம் அடித்து ஆட்டநாயகனும் ஆனார் ஹஃபீஸ். கிட்டத்தட்ட, இங்கிலாந்தின் அந்த 2 புள்ளிகளைக் காவு வங்கியது ராய் விட்ட அந்த கேட்ச்தான் என்றே சொல்லலாம். அந்த தவறுக்கான கைம்மாறை உடனடியாக செய்யவேண்டுமல்லவா! அடுத்த போட்டியிலேயே அதிரடி சதம் அடித்து அசத்தினார் ராய். அதுவும், கடந்த இரண்டு உலகக் கோப்பையிலும் தங்கள் அணியைத் தோற்கடித்த வங்கதேசத்துக்கு எதிராக!

தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளைப்போலவே, இங்கிலாந்து ஓப்பனர்களுக்கு எதிராக சுழலுடன் பந்துவீச்சைத் தொடங்கியது வங்கதேசம். ஷகிப் அல் ஹசன் ஓவரில் இருவரும் அடக்கி வாசிக்க, மொர்டாசா ஓவரில் அடித்து ஆடத் தொடங்கினார் ராய். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில், அற்புத ஸ்ட்ரெயிட் டிரைவால் அவர் அடித்த பௌண்டரி அனைத்தையும் தொடங்கிவைத்தது.

Jonny Bairstow
Jonny Bairstow

ஒருகட்டத்தில், 9 பந்துகள் இடைவெளியில் 4 பௌண்டரிகள் அடித்து மிரட்டியவர், தன் அதிரடியை நிறுத்தவேயில்லை. சைஃபுதீன் பந்துவீச்சை மிட் ஆஃப் திசையில் பறக்கவிட்டுக்கொண்டிருந்தவர், முஸ்தாஃபிசுரை கவரில் கலங்கவிட்டார். 38 பந்துகளில் அரைசதம். அதன்பின்னும் அவர் ஓயவில்லை.

மிஸ்ஃபீல்டில் ஒரு பௌண்டரி அடித்து, அதற்கு ஓடும்போது அம்பயர் ஜோயல் வில்சனைக் கீழே தள்ளி, ஒருநாள் போட்டிகளில் தன் 9-வது சதத்தைப் பூர்த்தி செய்தார் ராய். 2019-ல் ஆடிய 9 போட்டிகளில், 3 சதமும், 3 அரைசதமும் அடித்து அமர்க்களப்படுத்தியுள்ளார் அவர்! சதமடித்த பின் கொஞ்சம் ஓய்வார் என்று வங்கதேச வீரர்கள் எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால், அவர் இன்னும் வேகமெடுத்தார். ஷகிப்பின் முதல் ஸ்பெல்லில் அடக்கி வாசித்தவர், இரண்டாவது ஸ்பெல்லில் புரட்டி எடுத்தார். ரன்ரேட் ஆறரைக்குக் குறையாமல் சென்றுகொண்டிருக்க வங்கதேசன் கேப்டன் மொர்டாசா என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார்.

Jos Butler
Jos Butler

35-வது ஓவர்... மெஹதி ஹசன் மிராஜ். முதல் பந்தில் மிட் விக்கெட் திசையில் சிக்ஸர். அடுத்த பந்து, மிட் ஆனில் சிக்ஸர். மூன்றாவது பந்து மிட் விக்கெட்டுக்கும் ஸ்கொயர் லெக்குக்கும் நடுவே எல்லையைக் கடந்து பறந்தது. 150 ரன்களைக் கடந்தார் ராய். மொத்தமாக முடித்துக்கட்ட ஸ்கெட் போட்டார் போல. ஆனால், நான்காவது பந்தில் மெஹதி சுதாரித்துக்கொண்டார். அதுவரை மிடில் ஸ்டம்ப், லெக் ஸ்டம்ப் லைனில்பிட்ச் செய்துகொண்டிருந்தவர், 4-வது பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் செய்தார். மீண்டும் இறங்கி வந்து ராய் அதைத் தூக்கியடிக்க, எட்ஜாகி கவரில் நின்றுகொண்டிருந்த மொர்டாசாவிடம் சிக்கியது பந்து. 121 பந்துகளில் 153 ரன்கள்!

அதன்பிறகாவது இங்கிலாந்தின் ரன்ரேட் குறையும் என்று நினைத்தவர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. ராய் விட்டுச் சென்ற இடத்தை நிரப்பினார் பட்லர். போதாக்குறைக்கு நேற்று பிறந்தநாள் வேறு! தொடக்கத்தில் சிங்கிள், டபுள் என்றே ரன்களை எடுத்துக்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட, பௌண்டரிகளிலும் சிக்ஸர்களிலும் டீல் செய்யத் தொடங்கினார். 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அவர் வெளியேற, அடுத்து 11 ரன்கள் எடுப்பதற்குள் மோர்கன், ஸ்டோக்ஸ் இருவரும் நடையைக் கட்டினர்.

Chris Woakes
Chris Woakes

சரி, இப்போதாவது ரன்ரேட் குறையும் என்று பார்த்தால், வோக்ஸ் - பிளங்கட் ஜோடி பேட்ஸ்மேன்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டது. இருவரும் இணைந்து, கடைசி 17 பந்துகளில் (வோக்ஸ் - 18, பிளங்கட் - 27) 45 ரன்கள். 4 பௌண்டரி, 3 சிக்ஸர் வேறு! 50 ஓவர்கள் முடிவில் 386 என்ற இமாலய ஸ்கோரை அடித்திருந்தது இங்கிலாந்து. ஜேசன் ராய், பட்லர் தவிர்த்து ஜானி பேர்ஸ்டோவும் அரைசதம் அடித்தார்.

ஓவருக்கு கிட்டத்தட்ட 8 ரன்கள் வேண்டும் என்று களமிறங்கிய வங்கதேசத்தை, தன் வேகத்தால் மிரட்டினார் ஆர்ச்சர். ஒவ்வொரு பந்தும் மணிக்கு 145 - 150 கிலோமீட்டர் வேகத்திலேயே பயணித்தன. சிலமுறை தொடர்ந்து 150+ வேகத்திலும் வீசினார். அதனால், தொடக்கத்தில் வங்கதேசத்தின் ரன்ரேட் பிக் அப் ஆகவில்லை. 4-வது ஓவரில் சௌம்யா சர்காருக்கு ஒரு பந்து வீசினாரே! 143 km/hr வேகத்தில் ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே பிட்சான பந்து, ஸ்விங்காகி உள்ளே வந்து ஆஃப் ஸ்டம்பைப் பதம் பார்த்தது. அற்புதமான பந்து. அதைவிட பேரற்புதம் என்னவென்றால், ஸ்டம்பில் பட்ட பந்து, எங்கேயும் பிட்சாகாமல் நேரே சிக்ஸ் லைனில் விழுந்ததுதான். ஸ்டம்பில் பட்ட வேகத்தில், 54 மீட்டர் பயணம் செய்திருக்கிறது அந்த பந்து. கிரிக்கெட் வரலாற்றில் ஸ்டம்ப் சிக்ஸரடித்திருப்பது இதுவே முதல் முறையாக இருக்கும்!

Shakib Al Hasan
Shakib Al Hasan

அதன்பின் வந்த ஷகிப், வழக்கம்போல் நிலைத்து நின்று ஆட, மறுபக்கம் சீராக விக்கெட்டுகள் விழுந்துகொண்டிருந்தன. வழக்கம்போல், முஸ்ஃபிகுர் தவிர்த்து வேறு யாரும் ஷகிப்புக்கு சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. ஓரளவு அதிரடி காட்டிய ஷகிப், 95 பந்துகளில் சதமடித்து அசத்தினார். ஆனால், அதன்பின் அவரால் அதே வேகத்தில் ஆட முடியவில்லை. மிகவும் சோர்ந்து போனார். அந்த இடத்தில் மற்ற பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடியிருக்கவேண்டும். ஆனால், அதுவும் செய்யவில்லை.

குறிப்பாக மஹமதுல்லா..! சீனியர் பேட்ஸ்மேன். ஆனால், என்ன நினைப்பில் நேற்று அவர் களமிறங்கினார் தெரியவில்லை. பௌலர்களை அட்டாக் செய்யவுமில்லை, ஸ்டிரைக் ரொடேட் செய்யவுமில்லை. முக்கியமான மிடில் ஆர்டரில், வங்கதேசத்தின் வாய்ப்புகளை மொத்தமாக விழுங்கிக்கொண்டிருந்தார் அவர். உண்மையிலேயே, இந்த மனநிலையோடு ஒரு வீரர் ஆடிக்கொண்டிருந்தால், அந்த அணி எந்த முன்னேற்றத்தையும் காணாது!

இளம் வீரர்கள் மெஹதி ஹசனும், மொசாடக் ஹூசைனும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லையென்றாலும், ஓரளவு அதிரடியாவது காட்டினர். கடைசி கட்டத்தில், ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் இருவரும் மிரட்ட, 280 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது வங்கதேசம். 106 ரன்கள் வித்யாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்று, இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது இங்கிலாந்து.

அடுத்த கட்டுரைக்கு