Published:Updated:

மூன்றாவது ஓவரிலேயே முடிவுக்கு வந்த உலக சாம்பியனின் பயணம்! #CWC19 | #AUSvENG

Australia's captain Aaron Finch, middle, with teammates
Australia's captain Aaron Finch, middle, with teammates ( AP )

ஆர்ச்சர் வீசிய பந்து ஹெல்மட்டில் பட்டு, ஹெல்மட் கழன்று, கேரியின் தாடை கிழிந்து, ரத்தம் வழிந்து, பிசியோ களத்துக்குள் வந்தபோதே ஆஸியின் உலகக் கோப்பை கனவு கலைந்துவிட்டது.

`கிரிக்இன்ஃபோ’ நடத்திய சர்வேயில், `இங்கிலாந்தின் பலம் எது?’ என்ற கேள்விக்கு 90 சதவீதம் பேர் அவர்களது பேட்டிங்கை தேர்வுசெய்திருந்தார்கள். ஆனால், பத்து சதவீதம் பேர் கணித்திருந்த பெளலிங்கை வைத்துதான் இங்கிலாந்து, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருக்கிறது என்பது நகைமுரண்.

உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் எதிரணியைக் கதறவிட்டு, ஒன்சைட் மேட்ச்சாக்கி, சாம்பியனாவது ஆஸியின் பாலிஸி. உதாரணம்: 1999, 2003, 2007, 2015 உலகக் கோப்பை ஃபைனல். ஆனால், ஆஸியின் பாணியில் அவர்களை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது இங்கிலாந்து. ஒரு புதிய சரித்திரத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது சர்வதேச கிரிக்கெட். நியூஸிலாந்து – இங்கிலாந்து இரண்டில் யார் வென்றாலும், அது பெரிய விஷயமே. ஏனெனில், 1996–ல் இலங்கை உலகக் கோப்பை வென்றபின், இப்போதுதான் முதன்முறையாக புதிதாக ஒரு அணி உலக சாம்பியனாகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

``2015 உலகக் கோப்பை தொடரில் இருந்து நாங்கள் வெளியேறிய அடுத்தநாள் நீங்கள் என்னிடம், `இங்கிலாந்து அடுத்த உலகக் கோப்பை ஃபைனலில் விளைாயடும்’ என்று சொல்லியிருந்தால், நான் உங்களைப் பார்த்து சிரித்திருப்பேன்!
மோர்கன், இங்கிலாந்து கேப்டன்

மோர்கன் பேருக்கு அப்படிச் சொல்லியருக்கலாம். ஆனால், இந்த உலகக் கோப்பைக்காக அவர்கள் நான்கு ஆண்டுகளாக தவம் கிடந்தார்கள் என்பது உண்மை. 20 ஆண்டுகளுக்குப் பின் சொந்த மண்ணில் கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு கிடைத்தது மட்டுமல்ல காரணம். இங்கிலாந்தில் கிரிக்கெட் மெல்ல அழிந்துகொண்டிருக்கிறது. இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டிகள் Paywall பின்னாடி இருக்கிறது என்பதே அதற்கு சாட்சி. உலகக் கோப்பை நடக்கும் தருணத்தில் கூட, பிரிமியர் லீக் டிரான்ஸ்ஃபர் விண்டோவும், கால்பந்து வீரரின் நாய் பற்றிய செய்திகளும்தான், இங்கிலாந்து பத்திரிகையின் ஸ்போர்ட்ஸ் பக்கங்களை ஆக்கிரமித்திருந்தது என்பதிலேயே, அவர்கள் உலகக் கோப்பைக்கு கொடுத்த முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளலாம்.

`ஐ.சி.சி டோர்னமென்ட் ஆசிய நாடுகளில் நடப்பதற்கும் இங்கிலாந்தில் நடப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இங்கு உலகக் கோப்பை பற்றி பெரிய அளவில் ஆரவாரம் இல்லை. ஸ்டேடியத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கூட எந்தவித ஆர்ப்பரிப்பும் இல்லை’
இது, இங்கிலாந்தில் ஒரு மாதமாக குடியிருக்கும் இந்திய கிரிக்கெட் பத்திரிகையாளர்களின் ஸ்டேட்மென்ட்.

இங்கிலாந்து இன்று உலகக் கோப்பை ஃபைனலுக்கு முன்னேறியபிறகுதான், சேனல் –4’ ஃபைனலை இலவசமாக ஒளிரபரப்ப முன்வந்துள்ளது. மெல்லமெல்ல பத்திரிகைகள் கிரிக்கெட் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறது. சரி, இங்கிலாந்து ஃபைனலுக்கு முன்னேறிய கதைக்கு வருவோம்.

England's captain Eoin Morgan, left, shakes hands with Australia's captain Aaron Finch, right, after winning the Cricket World Cup semi-final.
England's captain Eoin Morgan, left, shakes hands with Australia's captain Aaron Finch, right, after winning the Cricket World Cup semi-final.
AP

வார்னர், ஸ்மித் தடைக்குப் பின் ஆஸ்திரேலிய அணி அல்லோகல்லோலப்பட்டது. சென்ற இடமெல்லாம் செம அடி. அணித் தேர்வில் பெரிய குழப்பம். பிளேயிங் லெவனைத் தேர்ந்தெடுப்பதற்குள், 100–க்கும் மேற்பட்ட வீரர்களை பரிசோதித்துப் பார்த்துவிட்டார்கள். விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியைத் தவிர வேறு யாரும், அந்த சோதனையில் தேறவில்லை. ஆனால், உலகக் கோப்பை தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்குள் எல்லாமே மாறிவிட்டது. இந்தியாவில் ஒருநாள் தொடரை வென்றார்கள். ஸ்மித், வார்னர் அணிக்குத் திரும்பினார்கள். இந்த உலகக் கோப்பையில் குரூப் சுற்றில், `நாங்கள் ஏன் உலக சாம்பியன்’ என்பதை நிரூபித்தார்கள். எல்லாம் அரையிறுதி வரை.

Australia's captain Aaron Finch during the Cricket World Cup semi-final match between Australia and England at Edgbaston.
Australia's captain Aaron Finch during the Cricket World Cup semi-final match between Australia and England at Edgbaston.
AP

யதார்த்தமா என்னவெனத் தெரியவில்லை. நியூஸிலாந்திடம் இந்தியா திணறியதைப் போலவே, ஆஸியும், இங்கிலாந்திடம் திணறியது. இந்தியா 5 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது. ஆஸி, 14 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது. நியூஸிலாந்துக்கு ஹென்றி, போல்ட் எனில், இங்கிலாந்துக்கு வோக்ஸ், ஆர்ச்சர். டாப் ஆர்டர்களை தூக்கி மிடில் ஆர்டருக்கு செக் வைத்தார்கள்.

Australia's Alex Carey talks to teammate Adam Zampa during a drinks break after he was hit off the bowling of England's Jofra Archer.
Australia's Alex Carey talks to teammate Adam Zampa during a drinks break after he was hit off the bowling of England's Jofra Archer.
AP

அரிதினும் அரிதாகவே, ஒருநாள் போட்டிகளின் முடிவு முதல் மூன்று ஓவர்களுக்குள் முடிவு செய்யப்படும். சந்தித்த முதல் பந்திலேயே, ஆர்ச்சரின் இன்ஸ்விங்கில் ஆரோன் ஃபின்ச் நிலைகுலைந்த போதே தெரிந்துவிட்டது... இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிவந்த டேவிட் வார்னர் அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப் பந்தைத் தொட்டு, ஸ்லிப்பில் இருந்த பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்தபோதே புரிந்துவிட்டது. ஆர்ச்சர் வீசிய பந்து ஹெல்மட்டில் பட்டு, ஹெல்மட் கழன்று, கேரியின் தாடை கிழிந்து, ரத்தம் வழிந்து, பிசியோ களத்துக்குள் வந்தபோதே ஆஸியின் உலகக் கோப்பை கனவு கலைந்துவிட்டது.

இதுபோன்ற தருணங்களில் அணியை மீட்பவன்தான், லெஜண்ட். ஸ்டீவ் ஸ்மித் நேற்று லெஜெண்டாக தெரிந்தததில் ஆச்சர்யமில்லை. இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக மூன்று அரைசதங்கள் அடித்தது மட்டுமே, இந்த உலகக் கோப்பையில் அவரது பெரிய இன்னிங்ஸ். மற்ற போட்டிகளில் அவருக்குப் பெரிதாக வேலையில்லை. தேவைப்பட்ட நேரத்தில் தன் பணியைக் கச்சிதமாகச் செய்துவிட்டார்.

Steve Smith
Steve Smith

2012, 2016 ஒலிம்பிக் போட்டிகளில் 5,000 மீ, 10,000 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற இங்கிலாந்து டிஸ்டன்ஸ் ரன்னர் மோ ஃபாரா, ஓடுவதைக் கவனித்திருக்கிறீர்களா? எடுத்த எடுப்பில் இருந்து முடிக்கும்வரை ஒரே மாதிரிதான் இருக்கும் அவரது வேகம். எந்த lap-லும் அது கூடாது, குறையாது. ரன் குவிப்பதைத் தாண்டி, முதல் பந்தில் இருந்து கடைசி பந்துவரை ஸ்டீவ் ஸ்மித், பந்தை எதிர்கொள்ளும் கன்ட்ரோல் அளவு 80–க்குக் குறையவே இல்லை. 34 பந்துகளில் 7 ரன் எடுத்திருந்தபோதும் சரி, அடுத்த 38 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தபோதும் சரி, கன்ட்ரோல் ரேட் கூடவும் இல்லை, குறையவும் இல்லை.

Australia's Steve Smith bats during the Cricket World Cup semi-final match between England and Australia at Edgbaston.
Australia's Steve Smith bats during the Cricket World Cup semi-final match between England and Australia at Edgbaston.
AP

இங்கிலாந்து பெளலர்களும் என்னவெல்லாமோ செய்து பார்த்தார்கள். பெளலர்களை மாற்றினார்கள். ஃபீல்டிங் பொசிஷனை மாற்றினார்கள். அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப் லைனில் தொடர்ந்து வீசி அவருக்கு நெருக்கடி கொடுத்தார்கள். அப்படி வீசப்படும் பந்துகளில் கோலி இன்னும் தடுமாறுகிறார். கேன் வில்லியம்சன் அதை தேர்ட் மேன் ஏரியாவுக்கு தட்டிவிட முயற்சிக்கிறார். ஆனால், ஸ்மித் கால்களை நகர்த்தி அந்தப் பந்தை லெக் சைடில் தட்டிவிடுகிறார். மோர்கன் ஆஃப் சைடில் பக்கவாக ஃபீல்ட் செய்திருக்க, பெருவாரியான ரன்களை லெக் சைடிலேயே எடுத்தார் ஸ்மித்.

இடையில் அவருக்கு அற்புதமாக கம்பெனி கொடுத்த அலெக்ஸ் கேரி அவுட்டானார், ஸ்டாய்னிஸ் வந்தவேகத்தில் சென்றார், மேக்ஸ்வெல் வழக்கம்போல காலை வாரினார். இருந்தாலும், ஸ்மித் தன் போக்கில் ஆடிக்கொண்டிருந்தார். இங்கிலாந்து வீரர்களும் சரி, ரசிகர்களும் சரி, அவரது விக்கெட்டுக்காக தேவுடு காத்தனர்.

Smith Wagon wheel
Smith Wagon wheel

அடில் ரஷித் பந்தில் பிட்ச்சாகி வந்த பந்தைப் பிடித்து பென் ஸ்டோக்ஸ் உணர்ச்சிவசப்பட்டபோது, `Settle down you, English’ என்றார் வர்ணனையில் இருந்த மைக்கேல் ஸ்லாட்டர். டெய்லெண்டர்களை மறுமுனையில் வைத்து, இந்த உலகக் கோப்பையின் அற்புதமான சதம் அடிக்கும் வாய்ப்பும், தன்னை நோக்கி boo செய்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் சந்தர்ப்பமும் ஸ்மித்துக்குக் கிடைத்தது. என்ன செய்ய, பட்லர் மட்டும் அந்த டைரக்ட் ஹிட்டில் ஸ்டம்பை தகர்க்காமல் இருந்திருந்தால்... தட் கப்டில் ஸ்கொயர் லெக்கில் இருந்து டைரக்ட் ஹிட் அடிக்காமல் இருந்திருந்தால் மொமன்ட்...!

இனி என்ன பேசி என்ன... இந்தியா, உலகக் கோப்பையில் இருந்து வெளியேறி விட்டது. ஆஸி உலக சாம்பியன் பட்டத்தைத் துறக்கும் நேரம் வந்துவிட்டது. 223 ரன்களை டிஃபண்ட் செய்யும்போது பவர்பிளேவில் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை எனில், அதற்கு என்ன விலை கொடுக்க வேண்டுமோ, திறமையான ஐந்தாவது பெளலர் இல்லை எனில் அதற்கு என்ன விலை கொடுக்க வேண்டுமோ, பேட்ஸ்மேன் என்ற பெயரில் இருக்கும் மேக்ஸ்வெல்லை அணியில் வைத்திருப்பதற்கு என்ன விலை கொடுக்க வேண்டுமோ, உலகக் கோப்பை அரையிறுதி என்ற பெரிய போட்டியில், அனுபவமே இல்லாத ஹேண்ட்ஸ்கோம்பை ஆடவிட்டதற்கு என்ன விலை கொடுக்க வேண்டுமோ, அதற்குரிய விலையைக் கொடுத்துவிட்டது ஆஸி.

ஜேசன் ராய் தன் பந்தில் அடுத்தடுத்து சிக்ஸர்கள் பறக்கவிடுவதை அன்னாந்து பார்த்து நொந்துகொள்வதற்காக, ஸ்மித் உலகக் கோப்பைக்கு வரவில்லை. பாயின்ட்டில் நின்று நான்கு பவுண்டரிகளைத் தடுப்பதற்காக மட்டும் மேக்ஸ்வெல், இந்த உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெறவில்லை. இந்தியாவைப் போலவே ஆஸியும் மிடில் ஆர்டர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய நேரமிது. கோலியின் விக்கெட்டை எடுத்ததைப் போலவே, அநாயாசமாக மணிக்கட்டை சுழற்றி, ஃபிளிக்கில் பின்னி எடுக்கும் ஜேசன் ராய் விக்கெட்டை எடுக்க, நியூஸிலாந்து திட்டமிட வேண்டிய நேரமிது.

England's batsman Jason Roy plays a shot during the Cricket World Cup semi-final match between Australia and England at Edgbaston.
England's batsman Jason Roy plays a shot during the Cricket World Cup semi-final match between Australia and England at Edgbaston.
AP

இங்கிலாந்து கால்பந்து அணியால் முடியாத, `It's coming home’ வாசகத்தை இங்கிலாந்து கிரிக்கெட் அணி நிறைவேற்ற வேண்டிய நேரமிது. புதிய உலக சாம்பியன் அவதரிக்கும் நேரமிது!

அடுத்த கட்டுரைக்கு