Election bannerElection banner
Published:Updated:

சோனமுத்தா... போச்சா?! - ஆப்கனைப் பந்தாடிய இங்கிலாந்து! #ENGvAFG

#ENGvAFG
#ENGvAFG

`பாயின்ட் டேபிள்ல கடைசில இருக்கீங்களா? ரெண்டு பாயின்ட் வேணுமா? நம்பி வாங்க.. வாங்கிட்டுப் போங்க' ரீதியில் அம்மாவைப் பார்த்த அமைச்சரைப் போல சரணாகதி அடைந்துவிடுகிறது ஆப்கானிஸ்தான் #ENGvAFG

வழக்கமாக ஒவ்வோர் உலகக் கோப்பையிலும் ஒரு ஷாக் காத்திருக்கும். ஏதாவது ஒரு கத்துக்குட்டி அணி, பழம் தின்று கொட்டை போட்ட படா அணியை வீழ்த்தி ஆச்சர்யமளிக்கும். இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அப்படி ஒன்றிரண்டு அதிர்ச்சிகளை பரிசளிக்கக் கூடும் என்றுதான் எல்லாரும் நினைத்தார்கள். ஆனால், நிலைமையோ வேறு மாதிரி இருக்கிறது. `பாயின்ட் டேபிள்ல கடைசில இருக்கீங்களா? ரெண்டு பாயின்ட் வேணுமா? நம்பி வாங்க.. வாங்கிட்டுப் போங்க' ரீதியில் அம்மாவைப் பார்த்த அமைச்சரைப் போல சரணாகதி அடைந்துவிடுகிறது. அதிலும் நேற்று அந்த டீமிற்கு நடந்ததெல்லாம் இலக்கிய பாணியில் `துன்பியல் நிகழ்வு'.

#ENGvAFG
#ENGvAFG

இந்தியாவுக்கு தவான் போல இங்கிலாந்திற்கு ஜேசன் ராய். காயம் காரணமாக அவருக்குப் பதில் அணியில் ஜேம்ஸ் வின்ஸ்! மோர்கனும் ஆடுவாரா மாட்டாரா என கிரவுண்டில் இருப்பவர்கள் பெட் கட்டிக்கொண்டிருந்த நிலையில் டாஸுக்கு ஆஜராகி நிம்மதியளித்தார் மோர்கன். ஆப்கனோ அணியில் ஓரளவு டீசன்ட்டாக ஆடிக்கொண்டிருந்த ஹஸ்ரத்துல்லாவை வெளியே உட்காரவைத்து ஷாக் கொடுத்தது. `அட நாங்க இந்த ஷாக்கை எதிர்பார்த்து வரலய்யா' என நொந்துகொண்டார்கள் ரசிகர்கள். டாஸ் ஜெயித்து பேட்டிங் தேர்வு செய்தார் மோர்கன்.

ஆப்கன் வெகுவாக நம்பியிருந்தது அணியின் ஸ்பின் மும்மூர்த்திகளான நபி, ரஷித், முஜிப்பைத்தான். இவர்கள் கைகோத்து இங்கிலாந்தை ஓர் உலுக்கு உலுக்குவார்கள் என எதிர்பார்ப்பு எகிறிக்கிடந்தது. போலவே ஓபனிங் ஸ்பெல்லை முஜிப் கொண்டு தொடங்கினார் கேப்டன் குல்பதீன் நைப்.

முதல் பத்து ஓவர்களில் டிபிக்கல் ஒன் டே மேட்ச் போலத்தான் நடந்தது. இரண்டு பேட்ஸ்மேன்களும் பொறுமையாக டைம் எடுத்து ஆடினார்கள். பத்தாவது ஓவரில் புல் ஷாட் அடிக்க ஆசைப்பட்டு விக்கெட்டைப் பறிகொடுத்தார் வின்ஸ். முதல் விக்கெட்டிற்கு 44 ரன்கள் பார்ட்னர்ஷிப். அதன்பின் களமிறங்கிய ஜோ ரூட்டும் அவசரமேபடாமல் பொறுமையாக ஆடினார். சிக்கும் பந்தை பவுண்டரிக்கு அடிப்பது, கணிக்க முடியாத பந்துகளை கட்டையைப் போட்டுத் தடுப்பது, லட்டாகச் சிக்கினால் சிக்ஸ் என டெக்ஸ்ட்புக் ரூல் படி ஆடினார்கள் இருவரும்.

#ENGvAFG
#ENGvAFG

25 ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 139! நடுவே ரஷித்தின் ஒரே ஒரு ஓவரில் மட்டும் 14 ரன்கள். மற்றபடி ரன்ரேட் ஆறுக்குச் சற்று குறைவாகவே இருந்தது. பேர்ஸ்டோ அரைசதம் தாண்டி முன்னேறிக்கொண்டிருந்தார். ஆப்கன் பவுலர்களை அதிகம் சந்தித்திருக்காததால் அடக்கியே வாசித்தார்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள். ஒருவழியாக பேர்ஸ்டோ விக்கெட்டைக் கழற்றினார் கேப்டன் நைப். 90 ரன்களில் அவுட்! 'Back into the game' என்றுதான் நினைத்தார்கள் ஆப்கன் வீரர்கள். ஆனால், சோதனை மோர்கன் ரூபத்தில் சைக்கிள் ஏறி வந்தது.

நைப் ஓவரில் இரண்டு சிக்ஸ் அடித்து சலங்கையைக் கட்டினார் மோர்கன். அதன்பின் ரஷித் ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி. நபி ஓவரில் ஒரு சிக்ஸ். கண்மூடித் திறப்பதற்குள் அரைசதம். `என்னா பங்காளி நான் இவ்ளோ நேரமா உருட்டி உருட்டி அடிச்ச ஸ்கோரை 30 பால்ல அடிச்சுப்புட்ட?' என நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்து கேட்டார் ரூட். `இதுக்கேவா? இன்னுமிருக்கே!' என முஜிப் ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி. அதற்கடுத்த நபி ஓவரில் இரண்டு சிக்ஸ். மொத்த கிரவுண்டும் மொட்டைமாடி மாதிரி ஆனது மோர்கனுக்கு! தொட்டாலே சிக்ஸ்தான்.

#ENGvAFG
#ENGvAFG

ரஜித் வீசிய 43 ஓவரில் மூன்று சிக்ஸ்கள்! சதம் தொட்டார் மோர்கன். வேர்ல்டு கப் வரலாற்றில் நான்காவது அதிவேக சதம். 57 பந்துகளில்! இதில் பத்து சிக்ஸ்கள் அடக்கம். மறுபக்கம் 60களில் அப்படியே ஃப்ரீஸாகி நின்றார் ரூட். ரஷித்தின் அடுத்த ஓவரிலும் மூன்று சிக்ஸ்கள். அதில் இரண்டு மோர்கனுக்கு! தவ்லத் வீசிய 466 ஓவரிலும் 17 ரன்கள். `நானூறு நிச்சயம்' பாடி லாங்குவேஜிலேயே ஆடினார்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள். நைப் வீசிய 47 ஓவரில் 3 சிக்ஸ்கள். மேட்ச் பார்க்கவந்த ஆடியன்ஸ் எல்லாம் பீல்டராகி கேட்ச் பிடித்துவிளையாடிக்கொண்டிருந்தார்கள்.

அதே ஓவரில் இரண்டு விக்கெட்கள் விழ உள்ளே வந்தார் மொயீன் அலி. அவரும் தன் பங்கிற்குப் போட்டுப் பொளக்க 50 ஓவர்கள் முடிவில் 397 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து. மொயீன் 9 பந்துகளில் 31 ரன்கள். வெறித்தனமாக ஆடிய மோர்கன் 71 பந்துகளில் 148 ரன்கள். அதில் 17 சிக்ஸ்கள். ஒரு இன்னிங்க்ஸில் அதிக சிக்ஸ்கள் அடித்த சாதனைக்குச் சொந்தக்காரரானார் மோர்கன். ஆப்கனும் தன் பங்கிற்கு சிலபல ரெக்கார்டுகளை உடைத்தது. 9 ஓவர்கள் வீசி 110 ரன்கள் வாரிக்கொடுத்திருந்தார் ரஷித் கான். உலகக் கோப்பை வரலாற்றின் காஸ்ட்லி ஸ்பெல் இது! மொத்த கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலியாவின் லூயிஸ் 113 ரன்கள் வாரிக்கொடுத்ததுதான் ரெக்கார்டு. ஆனால், அவர் கொடுத்தது பத்து ஓவர்களில். ரஷித் எஞ்சிய இன்னொரு ஓவரையும் வீசியிருந்தால் அந்த ரெக்கார்டும் உடைந்திருக்கக்கூடும்.

#ENGvAFG
#ENGvAFG

ரொம்ப நம்பிய ஸ்பின்னர்களை அடித்து நொறுக்கிவிட்டதால் ஆப்கனின் உளவியலே சிதைந்துபோயிருந்தது. போக எட்டாக்கனியான டார்கெட் வேறு. `எவ்வளவுதூரம் போகுதோ போகட்டும்!' என முடிவெடுத்துக் களமிறங்கினார்கள் ஆப்கன் பேட்ஸ்மேன்கள். 2வது ஓவரிலேயே ஓபனர் நூர் அலி அவுட். அவ்வளவுதான் அணி சட்டெனச் சுருண்டுவிடும் எனக் கணிப்புகள் ரெக்கை கட்டிப் பறந்தன. ஆனால் கேப்டன் குல்பதீனும் ரஹ்மத் ஷாவும் நிதானமாகவே ஆடினர். முதல் பவர்ப்ளே முடிவில் இங்கிலாந்தைக் காட்டிலும் அதிக ரன்கள் எடுத்தது ஆப்கன்.

அதன்பின் நைப் நடையைக் கட்ட ஷகிதி அவர் இடத்தில், அவரைப் போலவே நிதானமாக ஆடினார். 23 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்தது ஆப்கன். ஷார்ட் பால், பவுன்சர் என அதிவேகத்தில் பந்தை இறக்கினார்கள் பவுலர்கள். அதை ஆப்கன் எதிர்கொண்டவிதமே பாராட்டுக்குரியதாக இருந்தது. தோல்வி நிச்சயம். அதேசமயம் இங்கிலாந்து பவுலர்களை பிரஷர் இல்லாமல் எதிர்கொள்ளும் வாய்ப்பும் அடிக்கடி கிடைக்காது. எனவே, கிட்டத்தட்ட பயிற்சி ஆட்டம் போலவே அமைந்தது ஆப்கனுக்கு!

நான்காவது விக்கெட்டுக்கு சூப்பர் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள் ஷகிதியும் அஷ்கர் ஆப்கனும்! 25வது ஓவரில் சேர்ந்த இந்த ஜோடியை 41வது ஓவரில்தான் பிரிக்கமுடிந்தது. 94 ரன்கள் பார்ட்னர்ஷிப். ஆப்கனுக்கு இதுவே பெரிய பூஸ்டர்தான்! அதன்பின் சம்பிரதாய ஆட்டம் ஆடி 50 ஓவர்கள் முடிவில் 247 ரன்கள் எடுத்தது ஆப்கானிஸ்தான்.

#ENGvAFG
#ENGvAFG

மோசமான பவுலிங் தந்த கசப்பு, முன்னணி அணியின் பவுலிங் அட்டாக்கை நிதானமாகச் சந்தித்த பேட்ஸ்மேன்களின் திறமை என அந்த அணி எடுத்துப்போக கலவையான முடிவுகள் காத்திருந்தன. அதேசமயம், 'முன்னாடி மாதிரி இல்ல, இந்தத் தடவை நாங்க வேற' என மீண்டுமொரு முறை மற்ற அணிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது இங்கிலாந்து!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு