Published:Updated:

70% பேட்ஸ்மேன், 30% பௌலர்... பிரிடோரியஸ் - `குட்டி குளூஸ்னர்!' #PlayerBio

ட்வைன் பிரிடோரியஸ்
ட்வைன் பிரிடோரியஸ்

தென்னாப்பிரிக்காவின் டாப் ஆர்டர் சொதப்பும்போது அணியின் நிலைமையை உணர்ந்து ஆட்டத்தைக் கட்டமைக்கவும் செய்வார், இறுதி ஓவர்களில் தடாலென கியரை மாற்றி பந்தை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் தெறிக்க விட்டு ஸ்கோர் போர்டை எகிற வைக்கவும் செய்வார்.

பெயர் : ட்வைன் பிரிடோரியஸ்

பிறந்த தேதி : 29.03.1989

ஊர் : ரேன்டஃபான்டைன், தென்னாப்பிரிக்கா

ரோல் : ஆல்ரவுண்டர்

பேட்டிங் ஸ்டைல் : வலதுகை பேட்ஸ்மேன்

பெளலிங் ஸ்டைல் : வலதுகை வேகப்பந்துவீச்சு

சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம் : 25.9.2016

70% பேட்ஸ்மேன், 30% பௌலர்... பிரிடோரியஸ் - `குட்டி குளூஸ்னர்!' #PlayerBio

ப்ளேயிங் ஸ்டைல்

ஏற்கெனவே தென்னாப்பிரிக்காவின் பெளலிங் அட்டாக் வெறித்தனமாக இருக்கும்பட்சத்தில் அந்த அணிக்கு 70% பேட்டிங் 30% பெளலிங் செய்யக்கூடிய பேட்டிங் ஆல்ரவுண்டர்தான் தேவையாக இருக்கிறது. தென்னாப்பிரிக்க அணியின் அந்தத் தேவைக்கு ஏற்றபடி கச்சிதமாகப் பொருந்திப்போகும் ஆட்டக்காரர் ட்வைன் பிரிடோரியஸ். தென்னாப்பிரிக்காவின் டாப் ஆர்டர் சொதப்பும்போது அணியின் நிலைமையை உணர்ந்து ஆட்டத்தைக் கட்டமைக்கவும் செய்வார்.

ட்வைன் பிரிடோரியஸ்
ட்வைன் பிரிடோரியஸ்

இறுதி ஓவர்களில் தடாலென கியரை மாற்றி பந்தை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் தெறிக்கவிட்டு ஸ்கோர் போர்டை எகிறவைக்கவும் செய்வார். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் திறன்தான் அவரின் மிகப்பெரிய பலமே! அவரின் பெளலிங்கில் பெரிதாக வேகம் இல்லையென்றாலும், தன்னுடைய அவுட் ஸ்விங்கர் மூலம் மிடில் ஓவர்களில் பேட்ஸ்மேன்களைக் கலங்கடித்துவிடுவார். மொத்தத்தில் பிரிடோரியஸ் ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ்

கிரிக்கெட் பயணம்

பிரிடோரியஸின் கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவு எளிதாக இல்லை. அவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தபோதெல்லாம், காயம் அதைத் தட்டிப்பறித்தது. 2007 `காயா மொஜோலா' கிரிக்கெட் தொடரின் மூலம் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. அதில் அவரின் சிறப்பான செயல்பாட்டைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணியின் அண்டர் 19 அணிக்குத் தேர்வுசெய்யப்பட்டார். முதல் போட்டியிலேயே காலில் காயம் பட, அவர் அண்டர் 19 உலகக் கோப்பையை மிஸ்செய்ய நேரிட்டது. பிறகு, படிப்பில் கவனம் செலுத்த தொடங்கிய இவருக்கு மீண்டும் கிரிக்கெட் ஆசை வந்தது. 2011-ல் நார்த்-வெஸ்ட் அணிக்காக ஆடிய இவர், பேட்டிங் மற்றும் பெளலிங் இரண்டிலும் அசத்தினார். அதைத் தொடர்ந்து லயன்ஸ் அணிக்காக சாம்பியன்ஸ் லீக்கில் தேர்வுசெய்யபட்டபோது மீண்டும் காயம்பட்டு அவரை அதிலிருந்தும் நீக்கியது.

ட்வைன் பிரிடோரியஸ்
ட்வைன் பிரிடோரியஸ்

சோர்ந்துவிடாமல் தொடர்ந்து முயன்று 2014-ல் லயன்ஸ் அணிக்காக மீண்டும் விளையாட தேர்வானார். அந்த சீஸன் மிகவும் சிறப்பாகச் செயல்பட, தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் சங்கம் சார்பாக `மிகவும் மதிப்புமிக்க வீரர்’ விருது வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டே அவர் புரோட்டியாஸாக (PROTEAS) உருவெடுத்தார். ஆம், தென்னாப்பிரிக்கா அணிக்குத் தேர்வுசெய்யப்பட்டார். அப்போது பேக்கப் ப்ளேயராகத் தேர்வுசெய்யப்பட்ட இவர், தனது சிறப்பான செயல்பாட்டால் ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்திலும் இடம்பிடித்தார். லிமிட்டெட் ஓவர்களில் மோரிஸிக்கு மாற்றாக இருந்தவர் இன்று பயிற்சியாளர், கேப்டன் என அனைவரது நம்பிக்கையும் பெற்றுள்ளார்.

சிறந்த பர்ஃபாமன்ஸ்

  • இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இவர் ஆடிய ஆட்டம்தான் இவருக்கு உலகக்கோப்பை வாய்ப்பைப் பெற்றுத்தந்தது. அவரின் பேட்டிங் திறமையை சோதனைசெய்ய தென்னாப்பிரிக்கா அணி அவரை ஒன் டவனுக்கு புரமோட் செய்தது. ``இப்படி ஒரு வாய்ப்புக்காகத்தான் நானும் காத்துக்கொண்டு இருந்தேன்” என இவர் அடித்த அடி ஒவ்வொன்றும் சரவெடி! 42 பந்துகளில் 77 ரன்கள் விளாசி இங்கிலாந்துக்குச் செல்ல டிக்கெட் போட்டுவிட்டார்.

  • 2017-ல் நியூசிலாந்துக்கு எதிராக இவர் வீசிய ஸ்பெல் வேற லெவல். 5 ஓவர்கள் வீசி வெறும் ஐந்தே ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். எக்கனாமி 0.93. காயம் காரணமாக வேகத்தைக் குறைத்து மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்த பிரிடோரியஸ், சர்வதேச அளவில் எடுபடமாட்டார் என ஆருடம் கூறினார்கள். ஆனால், அந்த அசத்தல் பர்ஃபார்மன்ஸ் மூலம் தனது பெளலிங்காலும் ஆட்டத்தில் தாக்கம் ஏற்படுத்த முடியும் என நிரூபித்தார்.

``காயங்களால் இழந்ததைவிட கற்றுக்கொண்டதே அதிகம். பெரிதாக வருத்தம் எதுவுமில்லை”
ட்வைன் பிரிடோரியஸ்

பிரிடோரியஸ் ஸ்பெஷல்

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் வழங்கும் மிகவும் மதிப்புமிக்க வீரர் விருதை 2014-ல் வென்றார்.

பி.காம் அக்கவுன்டன்சி படித்துள்ளார்

ரோல்மாடல் - ஜாக் காலிஸ்

அடுத்த கட்டுரைக்கு