Published:Updated:

உலகக்கோப்பை தொடரில் இருந்து தவான் விலகல்... மாற்று வீரர் யார்?

தவான்
தவான்

உலகக் கோப்பை தொடரிலிருந்து தவான் விலகியதாகவும் அவருக்கு பதிலாக மாற்று வீரரை களமிறக்க ஐசிசியிடம் பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிகிறது.

உலகக் கோப்பை தொடரில் முன்னணி வீரர்கள் சிலர் காயத்தால் வெளியேறுவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்திய அணியிலும் தொடக்க ஆட்டக்காரர் தவான் காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது தவானுக்கு விரலில் காயம் ஏற்பட்டது. காயத்துடனே விளையாடிய தவான் சதம் அடித்து அசத்தினார். காயம் காரணமாக அவர் மூன்று வாரங்களுக்கு விளையாடமாட்டார் எனத் தகவல் வெளியானது. ஆனால், அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

தவான்
தவான்

பின்னர், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டும் தவான் விளையாடமாட்டார் என பிசிசிஐ கூறியது. அந்தப் போட்டியில் ரோஹித் ஷர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல் களமிறங்கினார். நான்காவது வீரராக தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையில் ரிஷப் பண்ட் இங்கிலாந்து பயணமானார்.

இந்த நிலையில்தான் தவான், இந்த உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. அதில் ``ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது தவானுக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது. தவான் ஜூலை மாதம் வரை ஓய்வெடுக்கவுள்ளதால் உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகுகிறார்” எனக் கூறப்பட்டுள்ளது. தவான் தொடரிலிருந்து விலகுவது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்புதான். ஐசிசி நடத்தும் தொடர்களில் தவான் இதுவரை 6 சதங்களை விளாசியுள்ளார். உலகக் கோப்பை தொடரில் மூன்று சதம், சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் மூன்று சதம் அடித்துள்ளார்.

கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல்

தவான், ரோஹித் ஷர்மா, கோலி இந்திய அணியின் பேட்டிங் லைன் அப்பை வலுப்படுத்தும் டாப் வீரர்கள். உலகக் கோப்பை தொடரில் இந்தியா தரப்பில் தற்போது வரை 3 சதங்கள் பதிவாகியுள்ளன. இதில் ரோஹித் ஷர்மா 2, தவான் 1 என்று அட்டகாசமாக இந்திய பேட்ஸ்மேன்கள் இந்தத் தொடரை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தவான் தொடரிலிருந்து வெளியேறுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குப் பதிலாக மாற்று வீரரை களமிறக்க ஐசிசியிடம் பிசிசிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. ஏற்கெனவே இங்கிலாந்துக்குப் பயணமான ரிஷப் பண்ட் மாற்று வீரராகச் சேர்த்துக்கொள்ளப்படுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்!

அடுத்த கட்டுரைக்கு