மிஸ் யூ பைப்மேன்... 46 ஆண்டுகள் லார்ட்ஸின் அங்கமாக இருந்த ரசிகன்!

அன்று முதல் தொடர்ந்து 46 வருடங்களாக லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியைக் கூட அவர் மிஸ் செய்ததில்லை.
2014, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து – இலங்கை அணிக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. எப்போதும் போட்டியின் இரண்டு நாள்களுக்கு முன்பு, வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் போதே மைதானத்தில் இருக்கும் அவர் அன்று காணவில்லை. போட்டியின் முதல் மூன்று நாள்களும் கடந்துவிட்டது. அப்போதும் காணவில்லை.
"லார்ட்ஸ் மைதானத்தில் எப்போது டெஸ்ட் போட்டி நடந்தாலும் தவறாமல் பெவிலியன் இடத்தில் ஒரு கோட் சூட், கையில் ஒரு ஸ்டிக், தோள்பட்டையில் ஒரு ஹேண்ட் பேக், முக்கியமாக வாயின் ஓர் ஓரத்தில் புகைப்பிடிக்கும் பைப் வைத்திருக்கும் உருவம் ஆஜராகிவிடுமே… இன்று இல்லையே!” என எல்லோரும் அந்த ஜீவனைத் தேடினர்.
லார்ட்ஸ் மைதானம் முழுக்க அவரைத் தேடிக்கொண்டிருக்க, அவர் அன்று மருத்துவமனையில் புற்றுநோயை எதிர்த்து போராடிக்கொண்டிருந்தார். அந்தப் போராட்டத்தில் வெற்றியும் கண்டார்.பைப்மேன் எனும் ரசிகன்
“குறைந்தது ஒரு வாரமாவது ஓய்வில் இருக்க வேண்டும்” என டாக்டர்கள் கறாராகக் கூறிவிட்டார்கள். ஆனால், இவருக்கு ஏதோ மனம் வரவில்லை. கிரிக்கெட்டா, உடலா? என முடிவெடுக்கும் தருணத்தில், தனது உடல் முழுக்கப் பரவிக்கிடக்கும் கிரிக்கெட்டைப் பார்க்க முடிவு செய்துவிட்டார். நான்காவது நாள் ஆஜரானார். அந்த அளவுக்கு கிரிக்கெட்டை அவர் நேசித்தார். மற்றவர்களுக்கு அவர் கெய்த் வான் ஆண்டர்சன். கிரிக்கெட் ரசிகர்களுக்கு ‘பைப்மேன்’.
ஆமாம், யார் இந்த பைப் மேன்?
பைப்மேன் கிரிக்கெட்டை உயிராக நேசிக்கும் சாதாரண ரசிகர். அக்டோபர் 30, 1964, 13 வயது சிறுவனான கெய்த், வறுமை காரணமாக வெஸ்ட் இண்டீஸில் இருக்கும் கயானா நகரிலிருந்து இங்கிலாந்துக்குக் குடிபுகுந்தார். சிறுவயதிலிருந்தே கிரிக்கெட்டின் மீது தீராக்காதல் கொண்டவர். கயானாவில் வெஸ்ட் இண்டீஸ் ஆடும் போட்டிகளை, மைதானத்தின் அருகில் இருக்கும் தென்னை மரத்தில் ஏறி பார்த்து ரசிப்பாராம். அப்படி ஒரு வெறித்தனமான கிரிக்கெட் ரசிகர், கிரிக்கெட்டின் சொந்த நாட்டுக்கே வந்தால்...

வருடம் 1973. லார்ட்ஸ் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி... அதுதான் பைப்மேன் லார்ட்ஸ் மைதானத்தில் பார்க்கும் முதல் டெஸ்ட் போட்டி. நேரில் அந்தப் போட்டியைப் பார்த்த அனுபவம் அவருக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. அன்று முதல் தொடர்ந்து 46 வருடங்களாக லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியைக் கூட அவர் மிஸ் செய்ததில்லை. அதுமட்டுமல்லாமல் கரீபியன் அணி எங்கு ஆடினாலும், கூடவே அவரும் சென்று வீரர்களை உற்சாகப்படுத்துவார்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிளவ் லாயிட் லார்ட்ஸ் மைதானத்தில் இவருக்குப் பிடித்த இடமான பெவிலியனில் டிக்கெட் வாங்கித்தருவார்.பைப்மேன் எனும் ரசிகன்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிதீவிர ரசிகர் அவர். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அனைவருக்கும் இவர் நெருக்கம். “வெஸ்ட் இண்டீஸ் அணியின் நன்றியுள்ள நாய் இவர்” என மைக்கேல் ஹோல்டிங் இவரைப் பற்றி குறிப்பிடுகிறார். அதுதான் அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு. ஆம், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆகச்சிறந்த ரசிகர்.
எவ்வளவு மோசமாக ஆடினாலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதை நிறுத்தவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தீவிர ரசிகரான இவர் பின்பு கிரிக்கெட்டின் ரசிகரானார்.பைப்மேன் எனும் ரசிகன்
பைப்மேன் லார்ட்ஸ் மைதானத்தில் இருந்தால், கேமரா அவரைக் கவர் செய்யாமல் இருக்காது. பொதுவாக, லார்ட்ஸில் உள்ள மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப்பில் (Marylebone Cricket Club) கணவான்களுக்கு மட்டுமே உறுப்பினர் கெளரவம் வழங்கப்படும். ஆனால், கிரிக்கெட்டை இந்தளவுக்கு நேசித்த பைப்மேனுக்கு, MCC உறுப்பினர் பதவி கொடுத்து கெளரவப்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டி நடந்துகொண்டிருந்தது. எப்போதும் போல் அன்றும் கேமராவின் கண்கள் அவரின் ஆஸ்தான இடமான பெவிலியன் பக்கம் திரும்பியது. கோட் சூட், கூலர்ஸ், கையில் ஒரு குச்சி முக்கியமாக வாயின் ஒரு ஓரமாக பைப் வைத்திருக்கும் அவரை கேமராவின் கண்கள் தேடின. எங்கு தேடியும் அந்த உருவம் தென்படவில்லை. இனிமேல் அவர் தென்படவும் மாட்டார். ஆம்! கடந்த மே மாதம் 18–ம் தேதியே அவர் இறந்துவிட்டார்.
‘மெக்கா ஆஃப் கிரிக்கெட்’ எனப் புகழப்படும் லார்ட்ஸ் மைதானம் பல அடையாளங்களுக்கு பிரசித்திபெற்றது. பைப்மேன் அதில் ஓர் அங்கம்.

எந்த ஒரு விளையாட்டையும் வளர வைப்பது அதன் மேல் அதீத பற்றுள்ள ரசிகர்கள்தான். பைப்மேன் அதில் ஒருவர். கிரிக்கெட் ஓர் ஆகச்சிறந்த ரசிகரை இழந்துவிட்டது.