Published:Updated:

`நியூசிலாந்து கோப்பையை வெல்லும்னு நினைச்சேன்!'- இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸின் தந்தை

நியூசிலாந்தில் பிறந்த பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

பென் ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து அணி இன்றைக்கு உலகக் கோப்பையை கையில் ஏந்தியிருக்கிறது என்றால் அதற்கு காரணம் பென் ஸ்டோக்ஸ். நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 23.1 ஓவர்களில் 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்துக்கொண்டிருந்தது. இக்கட்டான கட்டத்தில் இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸை கட்டமைத்தவர் பென் ஸ்டோக்ஸ். 98 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தார். சூப்பர் ஓவரிலும் பென் ஸ்டோக்ஸ் அசத்த, இங்கிலாந்து அணி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் மேன் ஆஃப் தி மேட்ச் விருது பென் ஸ்டோக்ஸுக்கு வழங்கப்பட்டது.

விருது பெற்ற பென் ஸ்டோக்ஸ்
விருது பெற்ற பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ் கதையில் சுவாரஸ்யம் என்னவென்றால், இவர் பிறந்து வளர்ந்தது நியூசிலாந்தில்தான். கிறிஸ்ட்சர்ச் நகரில் 1991- ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி பிறந்த பென் ஸ்டோக்ஸ், 12 வயது வரை நியூசிலாந்து நாட்டில்தான் பெற்றோருடன் வசித்தார். பென் ஸ்டோக்ஸ் தந்தை ஜெரார்ட் ரக்பி பயிற்சியாளர். இங்கிலாந்தில் உள்ள கம்ப்ரியா நகரில் ரக்பி பயிற்சியாளராக வேலை கிடைத்தது. தொடர்ந்து, பென் ஸ்டோக்ஸ் குடும்பம் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தது.

படிப்படியாக வளர்ந்த பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து நட்சத்திர வீரர் ஆகிவிட்டார். எனினும், பென் ஸ்டோக்ஸின் பெற்றோர் மகனுடன் இங்கிலாந்தில் வசிக்கவில்லை. அவர்கள் தாய்நாட்டுக்குத் திரும்பி கிறிஸ்ட்சர்ச் நகரில் வசிக்கின்றனர்.

பென் ஸ்டோக்ஸின் ஆட்டம் எனக்கு சந்தோஷத்தை அளித்தாலும், நியூசிலாந்துதான் கோப்பையை வெல்ல வேண்டுமென்று நினைத்தேன்
பென் ஸ்டோக்ஸ் தந்தை ஜெரார்ட்

நேற்றைய ஆட்டத்தை தொலைக்காட்சியில் பார்த்த பென் ஸ்டோக்ஸின் தந்தை ஜெரார்ட் கூறுகையில், ``நியூசிலாந்து அணி வீரர்களுக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். என் மகன் பென் ஸ்டோக்ஸின் ஆட்டம் எனக்கு சந்தோஷத்தை அளித்தாலும், நியூசிலாந்துதான் கோப்பையை வெல்ல வேண்டுமென்று நான் நினைத்தேன்'' என்றார்.

ஜெரார்ட் நியூசிலாந்து ரக்பி அணியில் விளையாடியவர். தற்போது கால்பந்து உலகக் கோப்பை (1966), ரக்பி உலகக் கோப்பை (2003) கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற ஒரே நாடு என்ற பெருமை இங்கிலாந்துக்கு கிடைத்துள்ளது.