Published:Updated:

`வலி நிறைந்தது உண்மைதான்; ஆனால் கண்ணீரில்லை!'- வீரர்களை ஆறுதல்படுத்திய ரவிசாஸ்திரி

கலிலுல்லா.ச
மலையரசு

``ஆம்! நாம் எல்லோரும் காயப்பட்டிருக்கிறோம், அதிருப்தியடைந்திருக்கின்றோம். ஆனால், இறுதியில் நீங்கள் கடந்த 2 ஆண்டுகளில் என்ன செய்திருக்கிறீர்கள் என்பதை நினைத்து பெருமைப்படுங்கள்.''

ரவிசாஸ்திரி
ரவிசாஸ்திரி

உலகக் கோப்பை லீக் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி, பாயின்ட் டேபிளில் டாப்பாக இருந்து, அரையிறுதிக்கும் நுழைந்தது இந்திய அணி. அரையிறுதியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவியது. யாரும் எதிர்பார்க்காத இந்தத் தோல்வியால் ரசிகர்களுடன் வீரர்களும் சோகத்தில் மூழ்கியிருக்கின்றனர். ரன் அவுட்டாகி தோனி பெவிலியனுக்குத் திரும்பும் காட்சிகளில் அவர் முகத்தில் காணப்பட்ட வருத்தம், ரோஹித் பெவிலியனிலிருந்து சோகமாக முகத்தை திருப்பும் காட்சிகள், வீரர்களின் சோகத்தை நமக்கு வெளிப்படுத்தின.

ரவிசாஸ்திரி
ரவிசாஸ்திரி

இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வீரர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர், ``தலைநிமிர்ந்தே நடந்துசெல்லுங்கள்; பெருமைப்படுங்கள். கடந்த 2 ஆண்டுகளில் தலைசிறந்த அணியாக இருக்கும் உங்கள் சாதனையை அந்த 30 நிமிடம் ஒன்றும் பாதித்துவிடப் போவதில்லை. உங்களுக்கும் அது தெரியும். ஒரு தொடர், அதேபோல அந்த 30 நிமிட ஆட்டம் உங்கள் தரத்தை நிர்ணயிக்க முடியாது. நீங்கள் மரியாதையை சம்பாதித்திருக்கிறீர்கள்.

Vikatan

ஆம்! நாம் எல்லோரும் காயப்பட்டிருக்கிறோம், அதிருப்தியடைந்திருக்கிறோம். ஆனால், இறுதியில் நீங்கள் கடந்த 2 ஆண்டுகளில் என்ன செய்திருக்கிறீர்கள் என்பதை நினைத்துப் பெருமைப்படுங்கள். வலி நிறைந்தது உண்மைதான். ஆம் அதிருப்தியும்தான். ஆனால், கண்ணீரில்லை. இது வலிமையான அணி. ஓர் அற்புதமான அணி. நம்முடைய பந்துவீச்சையும். பேட்டிங்கையும் பாருங்கள். இளையவர்கள் பலர் மிடில் ஆர்டரில் உறுதியளித்திருக்கிறார்கள்.

ரவி சாஸ்திரி
ரவி சாஸ்திரி
AP

இந்த அணியானது சரியான பாதையில் செல்கிறது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். நீங்கள் கடந்த 30 மாதங்களாக நல்ல மற்றும் கடுமையான ஆட்டத்தை ஆடியிருப்பதால்தான், உலகக் கோப்பை அரையிறுதி தோல்வி உங்களுக்குள் காயத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஜீரணிப்பதற்கு கடினமாகத்தான் இருக்கும். ஆனால், இது ஒரு விளையாட்டுதான். அதனால்தானே விளையாடுகிறோம்” என்றவர், ``ஒரு வலுவான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இல்லாததே தோல்விக்கு முக்கிய காரணம் எனலாம்.

இந்த உண்மையை ஒப்புக்கொள்கிறேன். நல்ல மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஒருவர் அணிக்குத் தேவை. இந்த இடம் எப்போதும் ஒரு பிரச்னையை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. முதலில் இந்த இடத்துக்கு கே.எல்.ராகுல்தான் எடுக்கப்பட்டார். ஆனால், ஷிகர் தவானின் காயத்தால் அவர் ஓப்பனிங் இறங்க வேண்டியதாயிற்று. அடுத்து விஜய் சங்கர் வந்தார். அவரும் காயத்தால் வெளியேறும் சூழ்நிலை. எங்களால் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதுதான் மயங் அகர்வால் வந்துவிட்டாரே அவரை ஓப்பனிங்கில் இறக்கிவிட்டு ராகுலை மீண்டும் நான்காம் இடத்துக்கு களமிறக்கலாமே எனக் கேட்கிறார்கள்.

இந்திய அணி
இந்திய அணி
AP

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் மயங் அணியில் இணைந்த நேரத்துக்கு அதைச் செய்ய முடியாது. ஏனென்றால் அவர் அணியில் இணைந்தபோது ஒரே ஒரு போட்டியே இருந்தது. அது செமி ஃபைனல். ஒருவேளை ஒரு போட்டிக்கு முன்னதாக அவர் இணைந்திருந்தால் அதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்திருக்கும். அதுவும் இல்லாமல் கே.எல்.ராகுல் சதம், அரை சதம் என ஓப்பனிங் பேட்டிங்கில் நல்ல பார்மில் இருந்தார். அதனால் அவரை மாற்றுவது கடினம்தான்" என்று பேசியுள்ளார். அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான சீரிஸில் இந்திய அணி கேப்டன் கோலிக்கும், பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.