Published:Updated:

`க்ளவுஸில் இருக்கும் முத்திரையுடன் களமிறங்குவாரா தோனி?!' - பிசிசிஐ சொல்வதென்ன?

ராம் பிரசாத்

அரசியல், மத அல்லது இனவாதம் குறித்த குறியீடுகளைதான் வெளிப்படுத்தக்கூடாது. ராணுவக் குறீயிடு எல்லாம் உங்க லிஸ்டல இல்லையே என ட்விட்டரில் கலகம் செய்யத்தொடங்கினர்.

தோனி
தோனி

உலகக்கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின் போது தோனி அணிந்திருந்த கீப்பிங் க்ளவுஸில் இந்திய ராணுவத்தின் பாரா கமாண்டோ முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. இது ஐசிசிக்கு நெருடலை ஏற்படுத்த அதனை நீக்குமாறு பிசிசிஐக்கு கடிதம் எழுதியது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோனி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோனி

ஐசிசி விதிகளின்படி, சர்வதேசப் போட்டிகளில் அரசியல், மத அல்லது இனவாதம் குறித்த குறியீடுகளை வெளிப்படுத்தக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. இந்த விதி அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனைக் கேள்விப்பட்ட தோனி ரசிகர்கள் போர்க்கொடி தூக்க ஆரம்பித்து விட்டனர். அரசியல், மத அல்லது இனவாதம் குறித்த குறியீடுகளைதான் வெளிப்படுத்தக்கூடாது. ராணுவக் குறீயிடு எல்லாம் உங்க லிஸ்டல இல்லயே என ட்விட்டரில் கலகம் செய்யத்தொடங்கினர்.

இந்நிலையில் மும்பையில் இன்று நடைபெற்ற பிசிசிஐ நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனைக்குப் பின்னர் பேசிய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பிசிசிஐ நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய், “ஐசிசியின் விதிமுறைகளுக்கு எதிராக நாங்கள் செயல்பட மாட்டோம்.

தோனி
தோனி

தோனி தனது க்ளவுஸில் அந்த முத்திரையை பயன்படுத்த ஐசிசியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். தோனியின் க்ளவுஸில் இருக்கும் முத்திரை அரசியல், மதம் அல்லது ராணுவத்தின் முத்திரையும் கிடையாது. க்ளவுஸில் உள்ள முத்திரையுடனே விளையாடுவார். இதற்காக ஐசிசியிடம் அனுமதி கோரியிருக்கிறோம்” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய விளையாட்டு துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு, "விளையாட்டு துறையின் விவகாரங்களில் அரசாங்கம் தலையிடாது. ஆனால் நாட்டின் உணர்வுகள் போன்ற பிரச்னையின்போது நாட்டின் நலன்களை மனதில் வைக்க வேண்டும். இந்த விவகாரத்தை ஐசிசியிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டு செல்லும் என நம்புகிறேன்" என்றார்.