Published:Updated:

மஹமதுல்லா – இவர் வங்கதேசத்துக்கு முக்கியம்...ஏன்?!

மஹமதுல்லா
மஹமதுல்லா

ஐசிசி தொடர், ஆசியக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில்லாம் சிறப்பாகச் செயல்படுகிறார். ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்த மூன்று சதங்களும் ஐசிசி தொடர்களில் வந்தவை.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மஹமதுல்லா பங்கேற்காதது வங்கதேச அணிக்கு பின்னடைவு.

பெயர் : மஹமதுல்லா
பிறந்த தேதி : 4-2-1986
ஊர் :மைமன்சிங்
ரோல் : ஆல் ரவுண்டர்
பேட்டிங் ஸ்டைல் : வலது கை பேட்ஸ்மேன்
பெளலிங் ஸ்டைல் : வலது கை ஆஃப் ஸ்பின்னர்
சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம் : 1-9-2007

சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம்

மஹமதுல்லா தாகா டிவிஷன் அணியின் 15 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம்பெற்று 2004-ல் நடந்த ‘அண்டர்-19’ உலகக் கோப்பைக்கான வங்கதேச அணியில் இடம்பெற்றார். முதல்தர போட்டியில் வங்கதேச A அணிக்காக ஆடத் தொடங்கினார். ஜிம்பாப்வே A அணிக்கு எதிரான போட்டி 55, 42 என நல்ல தொடக்கமாக அமைந்தது. தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட அவர், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டார்.

முதல் போட்டியிலேயே இரண்டு விக்கெட் எடுத்து, 36 ரன்கள் அடித்தது, சர்வதேச கிரிக்கெட்டில் அவருக்கு நல்ல தொடக்கமாக அமைந்தது. ஆனால், அதன் பிறகு சில ஆட்டங்கள் சொதப்பியதால் அணியிலிருந்து நீக்கப்பட்டார். 2009-ல் முதல் தர போட்டிகளில் 710 ரன்கள் அடித்து (சராசரி 54.61), அந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் எனப் பெயர் பெற்றார். அந்த சீசன் அவரை மீண்டும் வங்கதேச அணியில் இடம்பெறச்செய்தது.

மஹமதுல்லா
மஹமதுல்லா

மஹமதுல்லா தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். சிக்கலான சூழ்நிலையிலும் பதற்றம் அடையாமல் அணியைப் பலமுறை கரை சேர்த்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக வங்கதேச அணியில் ரெகுலர் ப்ளேயராக இடம்பிடித்து வருகிறார்.

ஐசிசி தொடர், ஆசியக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் சிறப்பாகச் செயல்படுகிறார். ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்த மூன்று சதங்களும், ஐசிசி தொடர்களில் வந்தவை. இந்தப் புள்ளிவிவரங்கள் அவரது பெருமையை உணர்த்தும்.

ப்ளேயிங் ஸ்டைல்

மஹமதுல்லா வங்கதேச அணியின் அண்டர் டாக். பெரும்பாலும் மிடில் ஆர்டர் அல்லது கீழ் வரிசையில் ஆடுபவர். சூழ்நிலைக்கு ஏற்றபடி ஆட்டத்தைக் கட்டமைப்பதில் வல்லவர். வங்கதேச அணியின் ஃபினிஷிங் ரோலுக்கான இடம் இவருடையதுதான். அதே சமயம் பெரிய இன்னிங்ஸ் ஆடக்கூடிய ஆற்றல் உடையவர். க்ரீஸ் உள்ளே வந்தவுடன் செட்டிலாக பத்து முதல் பதினைந்து பந்துகள் எடுத்துக்கொள்வார். பின் தன் இயல்பான ஆட்டத்தை ஆடத் தொடங்குவார். அவரின் பவர் ஹிட்டிங் திறமை அணிக்கு கடைசி நேரத்தில் பெரிய ஸ்கோரை எட்ட உதவும். தவிர, பார்ட் டைம் ஆஃப் ஸ்பின்னர் என்பது கூடுதல் பலம்.

விக்கெட்டை இழப்பது குறித்து பயமில்லாமல் ஆடுவதுதான் எனக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. அதுதான் என்னை இயல்பான ஆட்டத்தை ஆடவைக்கிறது!
மஹமதுல்லா

சிறந்த பர்ஃபாமன்ஸ்

2015 உலகக் கோப்பையின்போது இங்கிலாந்து அணியை வீழ்த்த முக்கிய பங்காற்றினார். 99/4 எனத் தடுமாறிக்கொண்டிருந்தது வங்கதேசம். பௌலர்களுக்குச் சாதகமான ஆடுகளத்தில் ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சன் வேகத்தில் மிரட்டிக்கொண்டிருக்க, ஆட்டத்தை நிதனாமாகக் கட்டமைத்தார் மஹமதுல்லா. சூழ்நிலையைப் புரிந்து ஆடி, சதம் அடித்து, உலகக் கோப்பையில் சதமடித்த முதல் வங்கதேச வீரர் எனப் பெயர் பெற்றார். எளிதாக வென்று விடலாம் என நினைத்துக்கொண்டிருந்த இங்கிலாந்தை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

மஹமதுல்லா
மஹமதுல்லா

2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மீண்டும் சதமடித்து, நியூசிலாந்துக்கு அதிர்ச்சியளித்தார். நியூஸிலாந்து சாதாரண பெளலிங் அட்டாக் கொண்ட அணி அல்ல. பெளலிங்குக்குச் சாதகமான இங்கிலாந்து ஆடுகளம் ஒருபுறம் அச்சுறுத்த, போல்ட் , செளதி இருவரும் பேஸ் அட்டாக்கில் ஸ்விங், பௌன்ஸ் என மிரட்டினர். மறுபக்கம் சுழலில் வெட்டோரி வேரியேஷனில் திணறடித்தார். ஆனால், இவை எல்லாவற்றையும் சமாளித்து 123 பந்துகளில் 128 ரன்கள் எடுத்து, வங்கதேசம் வெற்றிபெற பெரும்பங்கு வகித்தார்.

மஹமதுல்லா ஸ்பெஷல்

உலகக் கோப்பை தொடரில் சதமடித்த முதல் வங்கதேச வீரர்.
ரோல் மாடல் - தோனி
அடுத்த கட்டுரைக்கு