Published:Updated:

சிங்கம்...புலி...மழை... பிரிஸ்டலில் வெல்லப்போவது யார்? #BANvSL

Malinga
Malinga

ஏற்கெனவே ஐந்தாறு ஆண்டுகள் வெஸ்ட் இண்டீஸ் ஒரு கத்துக்குட்டியாய் இருந்தது போதும். இன்னொரு முன்னணி அணி கத்துக்குட்டியாக மாறினால், கிரிக்கெட் மீண்டும் 8 அணிகளின் விளையாட்டாகவே மாறிப்போகும்.

அனுபவ வீரர்களும் இளம் வீரர்களும் எப்படி ஒத்துப்போகிறார்களோ அதைப் பொறுத்துத்தான் இலங்கை அணியின் உலகக் கோப்பை வாய்ப்புகள் அமையும்"
டேவ் வாட்மோர்

டேவ் வாட்மோர் - இந்த இரு அணிகளின் கிரிக்கெட் வரலாற்றிலும் மாபெரும் அங்கம் வகிப்பவர்! முதல் நான்கைந்து உலகக் கோப்பைகளில் பெயருக்குப் பங்கெடுத்துக்கொண்டிருந்த இலங்கை அணி, 1996-ல் கோப்பை வென்றது. இலங்கையின் அந்த மாபெரும் மாற்றத்தின்போது அந்த அணியின் பயிற்சியாளராய் இருந்தவர் அவர்தான். 10 ஆண்டுகள் கழித்து பெரிய அணிகளுக்கெல்லாம் சவால் விடுக்கத் தொடங்கியது வங்கதேசம். மாபெரும் முன்னேற்றம் இல்லையென்றாலும், கொஞ்சம் கொஞ்சம் மெருகேறிக்கொண்டிருந்தது அந்த அணி. 2007 உலகக் கோப்பையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா என முன்னணி அணிகளை வீழ்த்தி தங்களின் திறமையை வெளிக்காட்டியது. அன்று முதல் பல பெரிய அணிகளையும் வீழ்த்தத் தொடங்கியது. அந்த வங்கதேசத்தின் மாற்றின்போது பயிற்சியாளராக இருந்ததும் இவரேதான்!

அடுத்த 10 ஆண்டுகளில், அந்த இரு அணிகளும் மாற்றம் கண்டுள்ளன. ஆனால், இரண்டும் வெவ்வேறு திசையில் பயணிப்பட்டிருக்கின்றன. வங்கப் புலிகள் முன்னோக்கி நடக்க, சிங்கத்தின் கால்கள் பின்னால் நடக்கத் தொடங்கிவிட்டன. ஐ.சி.சி ரேங்கிங்கில் நீண்ட நெடுங்காலம் வங்கதேசம் வசமிருந்த ஒன்பதாவது இடத்தை இப்போது தன்வயப்படுத்தியிருக்கிறது இலங்கை. வங்கதேசம் ஏழாம் இடம்வரை முன்னேறிவிட்டது. இந்த உலகக் கோப்பையின் முடிவில் ஆறாம் இடத்துக்கும் முன்னேறலாம்! சொல்லப்போனால், இன்று தென்னாப்பிரிக்கா வங்கதேசத்திடம் தோற்றதல்ல அதிச்சித் தோல்வி, இலங்கையிடம் தோற்றால்தான் அதிர்ச்சித் தோல்வி.

பங்களாதேஷ் அணி
பங்களாதேஷ் அணி

உண்மையில், இரு அணிகளின் இந்த மாற்றங்களுக்கு, வாட்மோர் சொன்ன வார்த்தையில் பதில் இருக்கிறது. சீனியர் வீரர்களும், ஜூனியர் வீரர்களும் ஒத்துப்போவது..! இலங்கை அதில் தவறியதும், வங்கதேசம் அதை சரியாய்ச் செய்ததும்தான் இந்த மாற்றத்துக்கான காரணம். தமீம், சௌம்யா சர்கார் இடையிலான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப், மிடில் ஓவரில் சுழலால் மிரட்டும் ஷகிப், மெஹது கூட்டணி, சைஃபுதீன், மொர்டாசா பௌலிங் இணை என ஒவ்வொரு கூட்டணியிலும், ஒவ்வொரு சீனியரும் தங்களின் அனுபவத்தை மற்ற வீரரோடு பகிர்ந்துகொள்கிறார்கள். சரியாக 'compliment' செய்கிறார்கள்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியைப் பார்த்தால் தெரியும். தமீமை விட சௌம்யாதான் அதிரடி காட்டினார். அந்நேரம் தமீம் மிகவும் நேர்த்தியாக நிதானம் காட்டினார். வங்கதேசம் சரியான கவலையில் ஒரு அணியைக் கொண்டு, அதை சரியாகச் செயல்படுத்த இது மிகமுக்கியக் காரணம். இலங்கை..? இந்தியாவுக்கு நிகரான கிரிக்கெட் அரசியல் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, அணிக்குள் சீனியர் வீரர்களுக்குள்ளேயே ஒற்றுமை இருக்கிறதா தெரியவில்லை. ஒட்டுமொத்த அணியுமே ஃபார்ம் இல்லாததுபோல்தான் விளையாடிக்கொண்டிருக்கிறது.

#BANvSL
#BANvSL

ஏற்கெனவே ஐந்தாறு ஆண்டுகள் வெஸ்ட் இண்டீஸ் ஒரு கத்துக்குட்டியாய் இருந்தது போதும். இன்னொரு முன்னணி அணி கத்துக்குட்டியாக மாறினால், கிரிக்கெட் மீண்டும் 8 அணிகளின் விளையாட்டாகவே மாறிப்போகும். வங்கதேசத்தின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைவது ஒருபக்கம் இருந்தாலும், இலங்கையின் வெற்றியும் இங்கு தேவைப்படுகிறது. அதற்கு வாட்மோர் சொன்ன விஷயங்களை இலங்கை பின்பற்றியே ஆகவேண்டும்.

இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே, மாத்யூஸ், மலிங்கா போன்றவர்களின் ஆலோசனைகளைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். பேட்டிங் கொஞ்சம் பலவீனமாக இருக்கிறது. மாத்யூஸ் ஒரு மிகப்பெரிய ஸ்கோரை அடிப்பதற்கு பொறுப்பெடுத்துக்கொள்ளவேண்டும். அவரைச் சுற்றி இளம் வீரர்கள் விளையாட, நல்ல ஸ்கோர் எடுத்தால் மட்டுமே இலங்கையில் எதிரணிக்கு சவால் அளிக்க முடியும்
டேவ் வார்மோர்
Karunararatne
Karunararatne

இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் இலங்கை இதைச் செய்யவில்லை. சொல்லப்போனால், மாத்யூஸ் இரண்டு போட்டிகளிலுமே டக் அவுட் ஆகியிருக்கிறார். அவர் மீண்டும் ஃபார்முக்கு வந்த ஒரு நல்ல இன்னிங்ஸ் ஆடினால் மட்டுமே, ஃபார்மில் இருக்கும் வங்கதேச பேட்ஸ்மேன்களுக்கு சவாலளிக்க முடியும்.

இதுவரை

வங்கதேசம்

vs தென்னாப்பிரிக்கா - 21 ரன் வித்யாசத்தில் வெற்றி

vs நியூசிலாந்து - 2 விக்கெட் வித்யாசத்தில் தோல்வி

vs இங்கிலாந்து - 106 ரன் வித்யாசத்தில் தோல்வி

#BANvSL
#BANvSL
இலங்கை

vs நியூசிலாந்து - 10 விக்கெட் வித்யாசத்தில் தோல்வி

vs ஆப்கானிஸ்தான் - 34 ரன் வித்யாசத்தில் வெற்றி (DLS)

vs பாகிஸ்தான் - மழையால் போட்டி ரத்து

நேருக்கு நேர்

இந்த இரு அணிகளும், இதுவரை 45 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இலங்கை, 36 போட்டிகளில் வென்றிருக்கிறது. வங்கதேசம் 7 வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறது. இரண்டு போட்டிகளுக்கு முடிவு கிடைக்கவில்லை. உலகக் கோப்பையில் மோதிய 3 போட்டிகளிலுமே இலங்கை தோற்றிருக்கிறது.

#BANvSL
#BANvSL

மழை...மழை..!

போட்டி நடக்கும் பிரிஸ்டல் மைதானத்தில்தான், இலங்கை - பாகிஸ்தான் போட்டி மழையால் தடைபட்டது. இப்போது மீண்டும் அதே மைதானத்தில்தான் இலங்கை மோதவிருக்கிறது. இன்றும் மழை வருவதற்கு 50 சதவிகித வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. ஏற்கெனவே இரண்டு போட்டிகள் மழையால் கைவிடப்பட்டுள்ள நிலையில், இன்றைய போட்டியும் கைவிடப்படலாம்!

பிளேயிங் லெவன்

கடந்த போட்டியின்போது காலில் காயமடைந்ததால், வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை. அதனால் அவர் இன்று விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது. அவர் விளையாடாத பட்சத்தில், மூன்றாவது இடத்தில் லிட்டன் தாஸ் களமிறக்கப்படலாம். ஷகிப்பை சேர்க்காமலேயே 7 பௌலிங் ஆப்ஷன்கள் இருப்பதால் பெரிய சிக்கல் இருக்காது.

Nuwan Pradeep
Nuwan Pradeep

இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் நுவான் பிரதீப், காயம் காரணமாக இன்று விளையாடமாட்டார். அவருக்குப் பதிலாக சுழற்பந்துவீச்சாளர்கள் யாராவது சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. டாப் ஆர்டரில் அதிக இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பது, வங்கதேச ஆஃப் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக அமையலாம். அதனால், திரிமன்னேவுக்குப் பதில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆடுவது நல்லது.

வங்கதேசம் (உத்தேச அணி) : தமீம் இக்பால், சௌம்யா சர்க்கார், ஷகிப் அல் ஹசன் / லிட்டன் தாஸ், முஸ்ஃபிகுர் ரஹீம், முகம்து மிதுன், மஹமதுல்லா, மொசாடக் ஹொசைன், மெஹதி ஹசன் மிராஜ், முகமது சைஃபுதின், மஷ்ரஃபீ மொர்டாசா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.

இலங்கை (உத்தேச அணி) : குசல் பெரேரா, டிமுத் கருணரத்னே, லஹிரு திரிமன்னே / அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், ஆஞ்சலோ மாத்யூஸ், தனஞ்செயா டி சில்வா, திசாரா பெரேரா, லசித் மலிங்கா, சுரங்கா லக்மல், இசுரு உடானா, ஜீவன் மெண்டிஸ் /ஜெஃப்ரி வாண்டர்சே

அடுத்த கட்டுரைக்கு