Published:Updated:

வங்கதேசத்தைச் சமாளிக்குமா நியூசிலாந்து?!

மு.பிரதீப் கிருஷ்ணா

போட்டி நடக்கும் ஓவல் மைதானத்தில், இதுவரை நடந்த இரண்டு போட்டிகளிலுமே 300+ ஸ்கோர் அடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்றைய போட்டியில் வேறு பிட்ச் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.

BANvNZ
BANvNZ
போட்டி எண் : 9
போட்டி தொடங்கும் நேரம் : மாலை ஆறு மணி
இடம் : ஓவல்
#BANvNZ
#BANvNZ

இரண்டு அணிகளும் இந்த உலகக் கோப்பையை வெற்றியோடு தொடங்கியிருப்பதால், நம்பிக்கையோடு இந்தப் போட்டியில் களமிறங்குவார்கள். அதிலும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியிருப்பதால், வங்கதேசம் கூடுதல் நம்பிக்கையோடு விளையாடும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற ஷகிப் அல் ஹசன், தன்னுடைய 200-வது ஒருநாள் போட்டியில் விளையாடவிருக்கிறார். நியூசிலாந்துக்கு எதிராகவும் அவரது அனுபவ ஆட்டம் கைகொடுத்தால் சிறப்பான ஆட்டமாக இது அமையும்.

ஷகிப்பை சமாளிக்கு நியூசிலாந்து சுழல் ஆயுதத்தைப் பயன்படுத்தவேண்டும். ஏனெனில், வேகப்பந்துவீச்சாளர்களைச் சிறப்பாகக் கையாளும் ஷகிப், சுழலுக்கு எதிராக சுமாராகவே ஆடுகிறார். வங்கதேசம் பெரிய ஸ்கோர் எடுப்பதற்கு ஷகிப் முக்கியக் காரணமாக இருப்பார். அவரை வீழ்த்த சேன்ட்னரைப் பயன்படுத்துவது அவர்களுக்குச் சாதகமான முடிவைக் கொடுக்கலாம். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில், ரபாடா - எங்கிடி ஸ்பெல்லை அநாயசமாக எதிர்கொண்டது சௌம்யா சர்கார் - தமீம் இக்பால் கூட்டணி. ஷார்ட் பிட்ச் பந்துகளை சமாளித்து ஆடியதோடு மட்டுமல்லாமல், அதில் பௌண்டரிகளும் அடித்து ரன்ரேட்டைக் கூட்டினர். அதனால், அவர்களை பிளேக் கேப்ஸ் எச்சரிக்கையோடு எதிகொள்ளவேண்டும். வெறும் ஷார்ட் பால்களை மட்டுமே நம்பியிருக்காமல், போல்டின் ஸ்விங், ஹென்றியின் வேகம் இரண்டையும் சரியாகப் பயன்படுத்துவது அவசியம்.

#BANvNZ
#BANvNZ

போட்டி நடக்கும் ஓவல் மைதானத்தில், இதுவரை நடந்த இரண்டு போட்டிகளிலுமே 300+ ஸ்கோர் அடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்றைய போட்டியில் வேறு பிட்ச் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், போட்டியின்போது மழை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. அதனால், டாஸ் வெல்லும் அணி ஃபீல்டிங் தேர்வு செய்யவே வாய்ப்பு அதிகம்.

நேருக்கு நேர்

இதுவரை இந்த இரண்டு அணிகளும் 34 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மோதியிருக்கின்றன. அதில் நியூசிலாந்து 24 போட்டிகளில் வென்றுள்ளது. வங்கதேசம் - 10. அதிலும், கடைசி 10 போட்டிகளில், நியூசிலாந்து 8 ஆட்டங்களில் வென்றுள்ளது. உலகக் கோப்பையில் மோதிய 4 ஆட்டங்களிலுமே வங்கதேசம் தோல்வியடைந்துள்ளது. 2015-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில், 287 ரன்கள் அடித்தும், குப்தில் அடித்த சதத்தால் தோல்வியடைந்தது. அந்தப் போட்டியில் வங்கதேச வீரர் மஹமதுல்லா சதமடித்தார். சௌம்யா சர்கார் அரைசதம் அடித்திருந்தார். பேட்டிங்கில் பெரிதாக சோபிக்காத ஷகிப் அல் ஹசன், பந்துவீச்சில் கலக்கி 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். இவர்கள் இன்றும் சிறப்பாகச் செயல்படும்பட்சத்தில், உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியைப் பதிவு செய்யலாம்.

#BANvNZ
#BANvNZ

பிளேயிங் லெவன்

இரண்டு அணிகளுமே வெற்றியோடு தொடங்கியிருப்பதாலும், எந்த வீரர்களும் பெரிதாக சொதப்பவில்லை என்பதாலும், அதே பிளேயிங் லெவனோடு விளையாடவே வாய்ப்பு அதிகம். அதுமட்டுமல்லாமல், டிம் சௌத்தி, ஹென்றி நிகோல்ஸ் இருவரும் இன்னும் முழு ஃபிட்னஸ் பெறவில்லை என்பதால், மாற்றங்கள் ஏதும் இருக்காது.

வங்கதேசம் : தமீம் இக்பால், சௌம்யா சர்கார், ஷகிப் அல் ஹசன், முஸ்ஃபிகுர் ரஹீம், மஹமதுல்லா, முகமது மிதுன், மொசாடக் ஹொசைன், மெஹதி ஹசன் மிராஜ், முகமது சைஃபுதின், மஷ்ரஃபீ மொர்டாசா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.

நியூசிலாந்து : காலின் முன்றோ, மார்டின் குப்தில், கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், டாம் லாதம், காலின் டி கிராந்தோம், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சேன்ட்னர், டிரென்ட் போல்ட், மாட் ஹென்றி, லாகி ஃபெர்குசன்.

கீ பிளேயர்கள்

வங்கதேசம் : ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம்

நியூசிலாந்து : மார்டின் குப்தில், மிட்செல் சேன்ட்னர்

மு.பிரதீப் கிருஷ்ணா