Published:Updated:

`அன்பிரிடிக்டபிள்’ பாகிஸ்தான் பராக்… பிளாக் கேப்ஸுக்கு முதல் அடி! #CWC19 #NZvPAK

Babar Azam ( AP )

வேகப்பந்துவீச்சாளர்களின் பெளன்ஸருக்கோ, வேகத்துக்கோ, ஷார்ட் பால்களுக்கோ, ஸ்விங்குக்கோ பாபர் ஆசம் அசரவில்லை. நல்ல பந்துகளுக்கு மதிப்பளித்தார். ஈகோ எட்டிப்பார்க்க அனுமதிக்கவில்லை.

`அன்பிரிடிக்டபிள்’ பாகிஸ்தான் பராக்… பிளாக் கேப்ஸுக்கு முதல் அடி! #CWC19 #NZvPAK

வேகப்பந்துவீச்சாளர்களின் பெளன்ஸருக்கோ, வேகத்துக்கோ, ஷார்ட் பால்களுக்கோ, ஸ்விங்குக்கோ பாபர் ஆசம் அசரவில்லை. நல்ல பந்துகளுக்கு மதிப்பளித்தார். ஈகோ எட்டிப்பார்க்க அனுமதிக்கவில்லை.

Published:Updated:
Babar Azam ( AP )

2019 உலகக் கோப்பையில் முதன்முறையாக நியூஸிலாந்து தோல்வியைச் சந்தித்திருக்கிறது. முதன்முறையாக நியூஸிலாந்து பிட்ச்சை சரியாக கணிக்கத் தவறியிருக்கிறது. முதன்முறையாக பிளேயிங் லெவனை மாற்றியிருக்கலாமோ என அவர்களை யோசிக்க வைத்திருக்கிறது. நீண்ட நாள்களுக்குப் பின் முதன்முறையாக பாகிஸ்தானுக்கு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஏற்றுக்கொள்ளும் கிளாசிக் பேட்ஸ்மேன் கிடைத்திருக்கிறது. வாட்ஸ் அப் ஃபார்வேர்டுகளில் வரும் `1992 – 2019 ஒற்றுமைகள்’ நிஜமாகிவிடும் போல தெரிகிறது. அப்படியொரு டிராமாவைக் கொடுத்திருக்கிறது #CWC19 #NZvPAK மோதல்.

Shaheen Afridi bowls a short ball.
Shaheen Afridi bowls a short ball.
AP

ஒரு வாரத்துக்கு முன் பாகிஸ்தான் ஒரேயொரு வெற்றியுடன் ஒன்பதாவது இடத்தில் இருந்தது. அரையிறுதியை நெருங்குவதே குதிரைக்கொம்பாக இருந்தது. இன்று இங்கிலாந்து அரையிறுதிக்குச் செல்வதே கேள்விக்குறியாகிவிட்டது. அன்று இந்தியாவுக்கு எதிராக தோற்றவுடன் விமர்சித்தவர்கள், இன்று ராஸ் டெய்லர் கொடுத்த கேட்ச்சை ஃபர்ஸ்ட் ஸ்லிப் வரை சென்று பாய்ந்து பிடித்ததற்காக சர்ஃபராஸைப் பாராட்டுகிறார்கள். அவரது கேப்டன்சியை மெச்சுகிறார்கள். அடுத்த வாரத்தில் இன்னும் என்னென்ன ஆச்சர்யங்களோ!

எட்ஜ்பேஸ்டனில் டாஸ் ஜெயித்ததும் ஏழாவது முறையாக அணியை மாற்றாமல் களமிறங்கியது நியூஸிலாந்து. ஆறாவது முறையாக சொதப்பியது நியூஸிலாந்து ஓப்பனிங் ஜோடி. அமீரின் ஸ்விங்கை சமாளிக்க முடியாமல் இன்சைட் எட்ஜில் போல்டாகி வெளியேறினார் கப்டில். ஷகீன் அஃப்ரிடி குட் லென்த்தில் அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்பில் வீசிய பந்தை ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார் காலின் மன்றோ. ராஸ் டெய்லரின் பேட்டில் எட்ஜாகி வந்த பந்தை ஃபுல் லென்த் டைவ் அடித்து கேட்ச் பிடித்தார் சர்ஃபராஸ். ஷகீன் அஃப்ரிடியின் பந்தில் அவுட் சைட் எட்ஜாகி பெவிலியன் திரும்பினார் டாம் லாதம். நியூஸிலாந்தின் ஸ்கோர் 46/4.

Neesham Plays a shot.
Neesham Plays a shot.
AP

இதுபோன்ற தருணங்களில் அணியில் இருக்கும் ஒரே மீட்பர் கேன் வில்லியம்சன்தான். அவரை மலையாக நம்பினர் நியூஸிலாந்து ரசிகர்கள். ஆனால், அந்த நேரத்தில் ஸ்கோர் செய்தது எதிரணி கேப்டன் சர்ஃபராஸ். முதல் ஓவரை முகமது ஹஃபீஸ் வீசவைத்த சர்ஃபராஸ், ஐந்தாவது ஓவர் வருவதற்குள் மூன்றாவது பெளலரை மாற்றிவிட்டார். ஷகீன் அஃப்ரிடியை கொண்டுவந்ததற்கு பலன் கிடைத்தது. ஆனால், அந்தநேரத்தில் வர்ணனையில் இருந்த வாசிம் அக்ரம், ``நான் இப்போது பாகிஸ்தான் கேப்டனாக இருந்தால், அடுத்த ஓவரை (10) சதாப் கானுக்கு கொடுப்பேன்’ என்றார். அவர் சொன்ன அந்த ஓவரை வீசியது ஒரு ஸ்பின்னர். இமாத் வசிம்.

ஸ்லோ பிட்ச் என்பதால் ஹஃபீஸை மீண்டும் கொண்டு வந்தார். அடுத்து வஹாப் ரியாஸ் – சதாப் கானை வைத்து வில்லியம்சன் – நீஷம் ஜோடிக்கு செக் வைத்தார். கடைசியில், சதாப் கான் வலையில் சிக்கினார் வில்லியம்சன். அணியின் நம்பிக்கை நட்சத்திரம் 41 ரன்களில் அவுட்டானதும், நியூஸிலாந்தின் நம்பிக்கை போய்விட்டது. 1992 உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம், 166 ரன்களில் சுருண்டது போலவே இன்றும் நியூஸிலாந்து சுருண்டுவிடுமோ என்ற சந்தேகமும் எழுந்தது.

Shaheen Afridi celebrates after dismissing New Zealand's batsman Colin Munro.
Shaheen Afridi celebrates after dismissing New Zealand's batsman Colin Munro.
AP

கிரிக்கெட் வேண்டாம் என ஒதுங்கி, இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கிரிக்கெட் வேண்டும் என மீண்டும் அணியில் இணைந்து, உள்ளே, வெளியே கேம் ஆடிய ஜிம்மி நீஷம்தான், நியூஸிலாந்தை கரை சேர்த்தார். வேகமும், சுழலும் கலந்துகட்டி மிரட்டிய பாகிஸ்தான் பெளலிங் அட்டாக்கை பொறுப்பாக எதிர்கொண்டார். ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் அடித்தார். இதுவரை அவர் 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.

இந்தமுறைதான், அதிக நேரம் (158 நிமிடம், 112 பந்து) களத்தில் பேட் பிடித்திருக்கிறார். கிரந்தோம் உடன் 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து பொறுமையாக ஆடிய நிஷம், முதல் 58 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் வேகமெடுத்து 64 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்தார். ஆரம்பத்தில் கட்டுக்கோப்பாக வீசிய பாகிஸ்தான் கடைசி பத்து ஓவர்களில் 71 ரன்களைக் கொடுத்துவிட்டது. எப்படியோ, நியூஸிலாந்து 237 ரன்கள் எடுத்துவிட்டது.

நியூஸிலாந்து ஓப்பனர்களைப் போலவே, பாகிஸ்தான் ஓப்பனர்களும். குல வழக்கப்படி டிரென்ட் போல்ட் முதல் ஸ்பெல்லில் ஃபகர் ஜமான் விக்கெட்டை தூக்கினார். இமாம் உல் ஹக் 19 ரன்களில் திருப்தியடைந்தார். நியூஸிலாந்துக்கு வில்லியம்சன் – நீஷம், நீஷம் – கிரந்தோம் ஜோடி கைகொடுத்தது போல, பாகிஸ்தானுக்கு ஹஃபீஸ் – பாபர் ஆசம், பாபர் ஆசம் – ஹரிஸ் சோஹைல் ஜோடி கைகொடுத்தது. ஏற்கெனவே இரண்டு முறை 300 + ரன்களை பாகிஸ்தான் சேஸ் செய்ய முடியாமல் தோற்றது. இந்தமுறையும் சேஸிங்கில் தோற்றுவிடுமோ என்ற கவலை எழவில்லை. ஏனெனில், களத்தில் நங்கூரம் போட்டுக்கொண்டிருந்தார் பாபர் ஆசம்.

Babar Azam raises his fist to celebrate scoring a century.
Babar Azam raises his fist to celebrate scoring a century.

பாகிஸ்தானைப் போலவே நியூஸிலாந்தின் பெளலிங் அட்டாக்கும் வலுவானது. டிரென்ட் போல்ட் ஸ்விங்குளில் மிரட்டுகிறார் எனில், இந்த உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 145 கி.மீ வேகத்துக்கு மேல் வீசி அச்சுறுத்துகிறார் பெர்குசன்.

மற்ற பேட்ஸ்மேன்களைப் போல, வேகப்பந்துவீச்சாளர்களின் பெளன்ஸருக்கோ, வேகத்துக்கோ, ஷார்ட் பால்களுக்கோ, ஸ்விங்குக்கோ பாபர் ஆசம் அசரவில்லை. நல்ல பந்துகளுக்கு மதிப்பளித்தார். ஈகோ எட்டிப்பார்க்க அனுமதிக்கவில்லை. அதேநேரத்தில் கட் ஷாட் கைகூடியது, புல் ஷாட் நேர்த்தியாக இருந்தது, அழகாக ஃப்ளிக் செய்தார், அட்டகாசமாக கவர் டிரைவ் அடித்தார், சதம் கடந்தார்; ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 3,000 ரன்கள் கடந்தவர் வரிசையில் இணைந்தார்.

தென்னாப்பிரிக்காவின் மார்க்ரம், ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபின்ச், நியூஸிலாந்தின் வில்லியம்சன் மூவருக்கும் பேட்டிங் தவிர்த்து ஒரு விஷயத்தில் ஒற்றுமை இருக்கிறது. எஸ், இந்த மூன்று பார்ட் டைம் பெளலர்களிடம்தான் முகமது ஹஃபீஸ் விக்கெட்டை பறிகொடுத்திருக்கிறார். பார்ட்னர்ஷிப்பை பிரிக்க வேறு வழியில்லாமல், வில்லியம்சனே களத்தில் இறங்கினார். ஐந்தாவது பந்தில் ஹஃபீஸை பெவிலியன் அனுப்பிய வில்லியம்சன், எட்டு ஓவர்கள் வீசி 39 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஐந்தாவது ஓவர் வரை கட்டுக்கோப்பாகவே வீசினார். பாபர் ஆசம் – ஹாரிஸ் ஜோடி அடக்கி வாசித்தது. நியூஸிலாந்தின் ஃபீல்டிங்கும் அட்டகாசமாக இருந்தது. பாயின்ட்டில் கப்டில், கவர் திசையில் சான்ட்னர் நின்று அட்டகாசமாக ரன்களைத் தடுத்தனர். ஆனால், வில்லியம்சன் வீசிய 6-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் உள்பட 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். வில்லியம்சன் அப்போதே சுதாரித்திருக்க வேண்டும்.

இந்தப் போட்டியில் நியூஸிலாந்து எட்டு பெளலர்களைப் பயன்படுத்தியது. அதற்குப் பதிலாக, லெக் ஸ்பின்னர் ஈஷ் சோதியை இறக்கியிருந்தால் ஒரு கை பார்த்திருக்கலாம். புது பந்தில் பெர்குசனுக்கு கூடுதல் ஓவர் கொடுத்திருக்கலாம். அதுசரி, `அன்பிரிடிக்டபிள்’ பாகிஸ்தான், ஆரம்பத்தில் இருந்தே வெற்றி வேட்கையுடன் ஆடும்போது யார்தான் என்ன செய்ய முடியும்.

முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் சேஞ்ச் ரூம் திரும்பும் வழியில், நீஷம் ஆட்டத்தைப் பாராட்டி பாகிஸ்தான் வீரர்கள் அவருக்குக் கைகொடுத்தனர். பதிலுக்கு நீஷம், ஷகீன் அஃப்ரிடியின் ஸ்பெல்லை குறிப்பிட்டு பாராட்டினார். 500 ரன்கள் அடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட மைதானங்களில், 250 வருவதே திண்டாட்டமாக இருக்கிறது. லோ ஸ்கோரிங் மேட்ச்கள் விறுவிறுப்பாக இருக்கிறது. அதுவே அரையிறுதி வாய்ப்பை சுவாரஸ்யமாக்கியிருக்கிறது. இந்த உலகக் கோப்பையையும்!