Published:Updated:

இப்படியொரு போட்டியை இந்த உலகக் கோப்பை எதிர்பார்த்திருக்காது! #AUSvSA

இப்படியொரு சூழலில் இந்த இரு அணிகளும் மோதும் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால், கிரிக்கெட் வரலாற்றின் சில மிகச்சிறந்த போட்டிகளைப் பரிசளித்த இந்த மோதல், இன்றும் அப்படியொரு போட்டியைக் கொடுக்கவேண்டும்.

Steve Smith
Steve Smith

முன்பெல்லாம் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன என்றாலே வேற லெவல் சுவாரஸ்யமாக இருக்கும். 1999 உலகக் கோப்பை அரையிறுதிக்குப் பிறகு அந்த அணிகளின் ஒவ்வொரு போட்டியுமே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியது. அந்த உலகக் கோப்பைக்குப் பின் 2007-ம் ஆண்டு இரண்டு முறை மோதின அந்த அணிகள். அந்த 400+ போட்டிக்குப் பிறகு மோதிய அந்த இரண்டு போட்டிகளும் பெரிதாக எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை. ஆனால், அந்த அணிகளின் ஒருநாள், டெஸ்ட் தொடர்கள் பழைய உக்கிரத்தோடுதான் விளையாடப்பட்டன. 2011, 2015 உலகக் கோப்பைகளில் இந்த மோதலுக்கு வாய்ப்பில்லாமல் போக, இப்போது மீண்டும் ஒரு போட்டி.

ஆனால், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், சுவாரஸ்யத்துக்கான தேவையுமில்லாமல்..! இப்படியொரு போட்டியை இந்த உலகக் கோப்பை எதிர்பார்த்திருக்காது! ஆனால், கிரிக்கெட் வரலாற்றின் சில மிகச்சிறந்த போட்டிகளைப் பரிசளித்த இந்த மோதல், இன்றும் அப்படியொரு போட்டியைக் கொடுக்கவேண்டும்.

ஆஸ்திரேலியா வழக்கம்போல் லீக் போட்டிகளில் பட்டையைக் கிளப்ப, எப்போதும் நாக் அவுட் சுற்றில் சொதப்பும் தென்னாப்பிரிக்கா, இந்த முறை முதல் சுற்றிலேயே காலை வாறிக்கொண்டது. வங்கதேசத்திடம் வாங்கிய அடி அவர்களின் உலகக் கோப்பையை மொத்தமாகப் புரட்டி எடுத்துவிட்டது. இப்போது, இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட ஒரு 'டெட் ரப்பர்' போட்டியை ஆடப்போகின்றன. கிரிக்கெட் ரொம்பவும் மாறிவிட்டது. இந்த உலகக் கோப்பை அதை மாற்றிவிட்டது.

Imran Tahir
Imran Tahir
AP

இம்ரான் தாஹிர், ஜே.பி.டுமினி இருவருக்கும் இதுவே கடைசி ஒருநாள் போட்டி என்பதால், நல்ல முறையில் ஓய்வு பெற விரும்புவார்கள். அவர்களிடம் கடைசியாக ஒரு நல்ல பர்ஃபாமன்ஸை எதிர்பார்க்கலாம்.

பிளேயிங் லெவன்

ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல் இருவரும் வலைப்பயிற்சியில் காயமடைந்திருப்பதால், இந்தப் போட்டியில் சில மாற்றங்கள் இருக்க வாய்ப்புண்டு. ஷான் மார்ஷ் இந்தத் தொடரிலிருந்தே விலகிவிட்ட நிலையில், மேக்ஸ்வெல் காயம் ஆட்டத்துக்கு முன்பு பரிசீலிக்கப்படும் என்று நிர்வாகம் கூறியிருக்கிறது. அப்படி அவர் ஃபிட் இல்லை என்றால், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் நேரடியாக அணியில் நுழைவார். ஒருவகையில் அவரது வருகை ஆஸ்திரேலிய அணிக்கு நல்லதுதான். இத்தனை நாள் நான்கு அல்லது ஐந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்தான் மிடில் ஆர்டர்வரை ஆக்கிரமித்திருந்தனர். இப்போது, ஸ்பின்னை சிறப்பாக ஆடத் தெரிந்த ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனே வந்திருப்பது அணிக்கு பலம்தான்.

Maxwell
Maxwell

தென்னாப்பிரிக்க அணியில் இன்று மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. உலகக் கோப்பையை வெற்றியோடு கௌரவமாக முடிக்க விரும்புவார்கள் என்பதால் முழு பலத்தோடுதான் களமிறங்கும்.

ஆஸ்திரேலியா (உத்தேச அணி) : ஆரோன் ஃபின்ச், டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல் / பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயான், ஜேசன் பெரண்டார்ஃப்

Mitchell Starc
Mitchell Starc

தென்னாப்பிரிக்கா (உத்தேச அணி) : குவின்டன் டி காக், ஹஷிம் அம்லா, எய்டன் மார்க்ரம், ஃபாஃப் டுப்ளெஸ்ஸி, ராஸி வேன் டெர் டூசன், ஜே.பி.டுமினி, ஆண்டைல் ஃபெலுக்வாயோ, கிறிஸ் மோரிஸ், டுவைன் பிரிடோரியஸ், ககிசோ ரபாடா, இம்ரான் தாஹிர்.

இதுவரை

ஆஸ்திரேலியா

vs ஆப்கானிஸ்தான் - 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

vs வெஸ்ட் இண்டீஸ் - 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs இந்தியா - 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

vs பாகிஸ்தான் - 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs இலங்கை - 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs வங்கதேசம் - 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs இங்கிலாந்து - 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs நியூசிலாந்து - 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

தென்னாப்பிரிக்கா

vs இங்கிலாந்து - 104 ரன்கள் வித்யாசத்தில் தோல்வி

vs வங்கதேசம் - 21 ரன்கள் வித்யாசத்தில் தோல்வி

vs இந்தியா - 6 விக்கெட் வித்யாசத்தில் தோல்வி

vs வெஸ்ட் இண்டீஸ் - மழையால் போட்டி ரத்து

vs ஆப்கானிஸ்தான் - 9 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி (DLS)

vs நியூசிலாந்து - 4 விக்கெட் வித்யாசத்தில் தோல்வி

vs பாகிஸ்தான் - 49 ரன்கள் வித்யாசத்தில் தோல்வி

vs இலங்கை - 9 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி