Published:Updated:

வார்னே மேஜிக் ஸ்பெல்.. வஹாப் மிரட்டல் ஸ்பெல்... ஆஸி - பாக் கிளாசிக் போட்டிகள்! #WorldCupMemories

தொடர்ந்து 34 போட்டிகள் தோல்வியே இல்லாமல் வீரநடை போட்டு, உலகக் கோப்பையில் ஒரு தனி சாம்ராஜ்யமே நடத்தி வந்தது ஆஸ்திரேலியா. அதற்கு முற்றுப்புள்ளி வைத்த அணி பாகிஸ்தான்!

ஆஸி - பாக்.
ஆஸி - பாக்.

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான். இவ்விரு அணிகள் இதுவரை ஒன்பது முறை உலகக் கோப்பையில் சந்தித்துள்ளது. அதில் ஆஸ்திரேலியா 5 முறையும் பாகிஸ்தான் 4 முறையும் வெற்றிப்பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் மோதும் போட்டியெல்லாமே முக்கியமான போட்டிகளாகவே இருக்கும். ஒன்று வரலாறு படைக்கப்படும், இல்லையென்றால் வரலாறு உடைக்கப்படும். இரண்டும் இல்லையென்றால் மறக்க முடியாத சம்பவம் நிகழும். அப்படி உலகக் கோப்பையில் இவ்விரு அணிகள் மோதிய போட்டிகளில் நடந்த சில சுவாரஸ்யங்கள்….

1999- ஷேன் வார்னே மேஜிக்

1999 உலகக் கோப்பை ஃபைனலில் இரு அணிகளும் மோதியது. ஏற்கனவே லீக் சுற்றில் இவ்விரு அணிகள் மோதிய போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தது. அதன் பிறகு தொடர்ந்து ஆறு போட்டிகளில் வென்று ஃபைனலுக்குள் நுழைந்தது ஆஸி. மிகவும் எதிர்பார்புடன் தொடங்கிய ஃபைனலில் முதலில் பாகிஸ்தான் பேட் செய்தது. அந்த போட்டிக்கு மூன்று நாள்களுக்கு முன்பு தான் அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மாயாஜாலம் நிகழ்த்தியிருந்தார் ஷேன் வார்னே. மீண்டும் அதே வார்னேவின் மாயச் சுழலில், இம்முறை பாகிஸ்தான் வீரர்கள் சிக்கினர்.

250 ரன்களுக்கு மேல் எடுக்கக்கூடிய பிட்சில் வெறும் 132 ஆல் அவுட் ஆனது பாகிஸ்தான். அதுதான் உலகக் கோப்பை ஃபைனலில் எடுக்கப்பட்ட குறைவான ஸ்கோர். ஆறாவது ஸ்டம்பில் பிட்ச் ஆகி மிடில் ஸ்டம்பை நோக்கி வரும் வார்னேவின் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் சரணடைந்தனர் பாகிஸ்தான் வீரர்கள். அரையிறுதியைப் போலவே அந்த போட்டியிலும் நான்கு விக்கெட்டுகள் சாய்த்தார். 133 என்ற எளிய டார்கெட்டை சேஸ் செய்யத் தொடங்கிய ஆஸி. கில்கிறிஸ்டின் அதிரடியால் 20 ஓவர்களிலேயே சேஸ் செய்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது.

2011- ஒரு சகாப்தத்திற்கு முடிவுரை எழுதப்பட்டது.

1999 உலகக் கோப்பையில் லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துகிறது பாகிஸ்தான். அந்த தோல்வியால் தொடர்ந்து 7 போட்டிகளில் வென்றால் தான் ஆஸ்திரேலியா அணி கோப்பையை வெல்ல முடியும் என்ற நிபந்தனை. அந்தக் கடினமான செயலையும் செய்துக்காட்டி உலகக் கோப்பையை வென்று சாதித்தது ஸ்டீவ் வாஹ் அண்ட் கோ. அதோடு நின்றுவிடவில்லை அந்த ‘ஸ்ட்ரீக்’. ஸ்டீவ் வாஹ் ஆரம்பித்த அந்த ஸ்ட்ரீக்கை ரிக்கி பான்டிங்கும் தொடர்ந்தார். ஸ்டீவ் வாஹ் 7-ல் விட்டுச்சென்றதை 34 வரை எடுத்துச்சென்றார் பன்டர்.

#AUSvPAK
#AUSvPAK

2003 மற்றும் 2007 உலகக் கோப்பையை தோல்வியே இல்லாமல் கோப்பையை தட்டிச் சென்றது ஆஸ்திரேலியா அணி. தொடர்ந்து 34 போட்டிகள் தோல்வியே இல்லாமல் வீர நடை போட்டு, உலகக் கோப்பையில் ஒரு தனி சாம்ராஜ்யமே நடத்தி வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது பாகிஸ்தான் . 34 போட்டிகளுக்கு முன் எந்த அணி ஆஸ்திரேலியாவை உலகக் கோப்பையில் வீழ்த்தியிருந்ததோ அதே அணிதான் ஆஸ்திரேலியாவின் அந்த மாபெரும் ‘ஸ்ட்ரீக்கை’யும் உடைத்தது.

எப்போதும் போலவே பாகிஸ்தான் அணி அந்த தொடரிலும் அன்ப்ரெடிக்டபிலாகவே இருந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்தது ஆஸ்திரேலியா. வழக்கம்போல் அன்றும் பாகிஸ்தான் அணிக்கு பெளலிங் தான் கைகொடுத்தது. பான்டிங், க்ளார்க், ஹஸ்ஸி என பலமான பேட்டிங் ஆர்டர் கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியை 176 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது பாகிஸ்தான். அதிலும் முகமது ஹஃபீஸ் பந்துவீசிய விதம் மிக அற்புதம். ஆஸ்திரேலிய வீரர்களை ஸ்ட்ரைக் ரொடேட் செய்ய விடாமல் திணறச் செய்தார். மறுபக்கம் தன்னுடைய ஸ்விங்கால் அவர்களை கதிகலங்க வைத்தார் உமர் குல்.

#AUSvPAK
#AUSvPAK

பின்னர் 177 என்ற எளிய இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு வழக்கம்போல் பேட்டிங் சொதப்பியது, ப்ரெட் லீ வீசிய நியூ பால் ஸ்பெல்லில் அவுட்டாகி ஓப்பனர்கள் பெவிலியனுக்குத் திரும்பினர். பிறகு மிடில் ஓவர்களில் அதே ப்ரெட் லீயின் இரண்டாவது ஸ்பெல்லில் அனுபவம் வாய்ந்த யூனஸ் கானும், மிஸ்பாவும் பலியாகினர். 98-4 என திணறியது பாகிஸ்தான். பின்பு உமர் அக்மல் பொறுப்புடன் ஆடி பாகிஸ்தான் அணியை கரைசேர்த்தார். கரை சேர்த்தது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா அணியின் 12 வருட ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளியும் வைத்தார். மே 27, 1999 அன்று தொடங்கிய சகாப்தம் 12 வருடங்கள்... 34 போட்டிகள் கழித்து மார்ச் 19, 2011 அன்று முடிவுக்கு வந்தது.

2015 உலகக் கோப்பையின் மிகச்சிறந்த ஸ்பெல்

நீ பேட்டைக் கையில்தான் வைத்திருக்கிறாயா?
ஷேன் வாட்சன்

காலிறுதி போட்டியில் ஷேன் வாட்சன், பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸிடம் உதிர்த்த வார்த்தைகள் இவை. உலகக் கோப்பையின் ஒரு மகத்தான பெளலிங் ஸ்பெல்லின் ஆரம்பப் புள்ளி இந்த வார்த்தைகள் தான். ஸ்டார்க்கின் 150 கி.மீ வேகத்தில் வரும் பெளன்சர்களுக்கும் யார்க்கர்களுக்கும் தட்டு தடுமாறிக்கொண்டிருந்த வஹாப் ரியாஸிடம் ஆஸ்திரேலியருக்கே உரிய தனித்துவமான ‘ஸ்லெட்ஜிங்’கில் ஈடுபட்டார் வாட்சன். அந்த வார்த்தைகள் வஹாபின் காதுகளில் நீங்காமல் ஒலித்துக்கொண்டிருந்தது. அந்த வார்த்தையின் தாக்கத்தினால் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு வெறிகொண்ட மிருகம் போல் பந்து வீசினார்.

அந்த வெள்ளை ஆயுதம் வஹாப் கையில் வரும் போதெல்லாம் எல்லோரும் குஷியானார்கள், ஒருவரைத் தவிர. ஆம்! ஷேன் வாட்சன். அவர் உதிர்த்த வார்த்தைகளுக்கு பல மடங்கு சேர்த்து திருப்பித் தந்தார் வஹாப். பெளன்சர்களால் அவரின் தலையை குறிவைத்தார். ஷேன் வாட்சன் அப்படியே நிலைகுலைந்து போனார். வாட்சன் தடுமாறுவதைப் பார்த்து அவர் கிட்டே சென்று கைத்தட்டிய விதம் எல்லாம் நிச்சயமாக THUG LIFE தான்! அன்று தன் வாழ்நாளின் மிகச்சிறந்த ஸ்பெல்லை வீசினார் வஹாப். மிகச்சிறந்த ஸ்பெல் என்பது நம்பரை வைத்து இல்லை. தன்னை கேலியாக பேசியவரிடம், சற்றும் அசராமல் அவர் மிரட்டிய விதம் தான் அந்த ஸ்பெல்லைக் கொண்டாட காரணம்.

அந்த ஸ்பெல்லில் விக்கெட் விழவில்லை, பெளன்டரிகள் அடிக்கப்பட வில்லை…இருந்தும் அந்த மூன்று ஓவர்களில் வஹாப் காட்டிய ஆட்டிட்யூட் உலகக் கிரிக்கெட் ரசிகர்களை எல்லாம் திருப்திப்படுத்திவிட்டது. கிரிக்கெட் போட்டியில் ஹைலைட்ஸ் ஒளிப்பரப்பும் போது பேட்ஸ்மேன் அடிக்கும் சிக்ஸர்களும், பெளலர் எடுக்கும் விக்கெட்டுகளும் தான் ஒளிபரப்பப்படும். ஆனால் இந்த மேட்சின் ஹைலைட்சில் வாஹாபின் அதிரடியான ஸ்பெல்லும் இடம்பெற்றது. விதிகளை மீறி வாட்சனிடம் நடந்துக்கொண்டதால் தொடரின் ஊதியத்தில் 50 சதவீதம் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. “அவரின் அபராதத்தை நான் கொடுக்கிறேன்” என லாரா அதற்கு சொன்னார். இதுபோதாதா அந்த ஸ்பெல்லின் சிறப்பைக் கூற?!

இதுபோல் இன்றும் பல சுவாரஸ்யங்கள் அரங்கேறலாம்.