Published:Updated:

வார்னர் இஸ் பேக்… ஆஸி இஸ் பேக்… பாகிஸ்தான் இஸ் பேக், எப்படி?! #AUSvPAK

David warner ( AP )

பாகிஸ்தானுக்கு காலகாலமாக இருக்கும் பிரச்னை ஃபீல்டிங். வாசிம் அக்ரம், வகார் யூனிஸ் காலத்தில் இருந்தே இது தொடர்கிறது. அவர்கள் உயிரைக் கொடுத்து பந்து வீசுவார்கள். ஃபீல்டர்கள் தெமே என கேட்ச்சை கோட்டை விடுவார்கள். இந்த உலகக் கோப்பையிலும் அது தொடர்கிறது.

வார்னர் இஸ் பேக்… ஆஸி இஸ் பேக்… பாகிஸ்தான் இஸ் பேக், எப்படி?! #AUSvPAK

பாகிஸ்தானுக்கு காலகாலமாக இருக்கும் பிரச்னை ஃபீல்டிங். வாசிம் அக்ரம், வகார் யூனிஸ் காலத்தில் இருந்தே இது தொடர்கிறது. அவர்கள் உயிரைக் கொடுத்து பந்து வீசுவார்கள். ஃபீல்டர்கள் தெமே என கேட்ச்சை கோட்டை விடுவார்கள். இந்த உலகக் கோப்பையிலும் அது தொடர்கிறது.

Published:Updated:
David warner ( AP )

பாகிஸ்தான் ஒரு கட்டத்தில் நன்றாக விளையாடியது. நான் சாட்சி. முகமது அமீர் பர்ஃபாமன்ஸ் 10-2-30-5. பாகிஸ்தான் ஒரு கட்டத்தில் மோசமாக விளையாடியது. அதற்கும் நானே சாட்சி. எட்டு கேட்ச் மிஸ், ஏகப்பட்ட மிஸ்ஃபீல்டிங். 22.1 ஓவர் வரை விக்கெட் எடுக்கவில்லை. இவ்வளவு மோசமாக ஆடினால், என்ன விலை கொடுக்க வேண்டுமோ, அதற்கான விலையைக் கொடுத்தது பாகிஸ்தான். ஆஸ்திரேலியா அலட்டாமல் 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

டான்டன் நகரில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகம் என்பதால் இரு அணிகளும் லெக் ஸ்பின்னர்களை பெஞ்சில் உட்கார வைத்தது. ஆஸ்திரேலிய அணியில் ஆடம் ஜம்பா இல்லை. பாகிஸ்தானில் சதாப் கான் பிளேயிங் லெவனில் இல்லை.

`சதாம் கானை எடுக்காதது தவறான முடிவு’ என முதல் பந்துவீசுவதற்கு முன்பே எச்சரித்தார் வாசிம் அக்ரம். அவர் சொன்னது பலித்தது.

இந்தியாவுக்கு எதிராக 48 டாட் பால்கள் வைத்திருந்த டேவிட் வார்னர்; இந்த உலகக் கோப்பையின் ஸ்லோ ஸ்டார்டிங் ஓப்பனர் என பெயரெடுத்த டேவிட் வார்னர்; எல்லாவிதத்திலும் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். `பால் டேம்பரிங்’ தடைக்குப் பின் சர்வதேச ஒருநாள் போட்டியில் தன் முதல் சதத்தை அடித்தார். வார்னர் இஸ் பேக் என நிரூபித்தார். அவருக்குப் பக்க பலமாக இருந்தார் ஆஸி கேப்டன் ஆரோன் பின்ச். வார்னர் மீது நெருக்கடி ஏற்படுத்தாத வகையில் ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆட ஆரம்பித்தார். பாகிஸ்தானின் பந்துவீச்சும் அதற்கு ஒத்துழைத்தது. விளைவு, இந்த உலகக் கோப்பையில் முதன்முறையாக ஆஸ்திரேலியா 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்தது. (Vs இந்தியா: 48/0, Vs வெஸ்ட் இண்டீஸ்: 48/4, Vs ஆஃப்கானிஸ்தான் – 55/0)

முகமது அமீர் தவிர்த்து வேறு எந்த பெளலருக்கும் லென்த் பிடிபடவில்லை. முதல் 15 ஓவர்களில் அமீர் மட்டுமே, 19 பந்துகளை குட் லென்த்தில் வீசினார். லைனும் பக்கா. ஆனால், ஹசன் அலி, வஹாப் ரியாஸ், ஷஹீன் அஃப்ரிடி மூவரும் சேர்ந்து 22 பந்துகளை ஒன்று ஷார்ட் பிட்ச், அல்லது குட் லென்த்தில் வீசினர். அதில் அலட்டாமல் ஆஸ்திரேலியா 34 ரன்கள் எடுத்தது. இதற்கு முன் அமீர் தன் முதல் நான்கு ஓவர்களில் வார்னர் அல்லது ஃபின்ச் விக்கெட்டை எடுத்திருக்கிறார். ஹசன் அலி, அஃப்ரிடி இருவரும்கூட இதே நான்கு ஓவர்களில் ஆஸி ஓப்பனர்களை பெவிலியன் அனுப்பி இருக்கின்றனர். ஆனால், நேற்று அப்படி ஒரு கட்டுக்கோப்பான பெளலிங் இல்லை.

Mohammad Amir celebrates after taking the wicket of Australia's Mitchell Starc.
Mohammad Amir celebrates after taking the wicket of Australia's Mitchell Starc.
Ap

அமீர் கட்டுப்படுத்தியதை மற்றவர்கள் விட்டுக்கொடுத்தனர். முதல் 25 ஓவர்கள் அவர்களுக்கு லைன் அண்ட் லென்த் பிடிபடவே இல்லை. 22 ஓவர்கள் வரை ஆஸி ஓப்பனர்களைப் பிரிக்கவே முடியவில்லை. இப்படியே போனால், ஆஸி 350- 400 ரன்களைத் தொடும் என எதிர்பார்க்கப்பட்டது.

பாகிஸ்தானுக்கு காலகாலமாக இருக்கும் பிரச்னை ஃபீல்டிங். வாசிம் அக்ரம், வகார் யூனிஸ் காலத்தில் இருந்தே இது தொடர்கிறது. அவர்கள் உயிரைக் கொடுத்து பந்து வீசுவார்கள். ஃபீல்டர்கள் தேமே என கேட்ச்சைக் கோட்டை விடுவார்கள். இந்த உலகக் கோப்பையிலும் அது தொடர்கிறது.

Pakistan's Wahab Riaz reacts after Asif Ali miss the catch.
Pakistan's Wahab Riaz reacts after Asif Ali miss the catch.
AP

வஹாப் ரியாஸ் வீசிய 13–வது ஓவரில் அட்டகாசமான கேட்ச்சை கோட்டை விட்டார் ஆசிஃப் அலி. குட் லென்த்தில் வந்த பந்தை ஆரோன் ஃபின்ச், பாயின்ட் திசையில் அடிக்க முயன்றபோது, பந்து எட்ஜாகி ஃபர்ஸ்ட் ஸ்லிப்பில் இருந்த ஆசிஃப் அலியிடம் சென்றது. அவரும் ரிவர்ஸ் கப் போட்டு தயாராக நின்றார். ஆனால், பந்து அவரது வலது கையில் பட்டு கீழே விழுந்து, பவுண்டரிக்குச் சென்றது. பிடித்திருந்தால் பாகிஸ்தானுக்கு ப்ரேக்த்ரோ கிடைத்திருக்கும். ஏனெனில், ஃபின்ச் அப்போது 26 ரன்களே எடுத்திருந்தார். அவர் அவுட்டானது 82 ரன்களில்…

கொஞ்ச நேரம் கழித்து, அதே ஸ்லிப்பில், பாரபட்சம் பார்க்காமல் டேவிட் வார்னர் கேட்ச்சையும் கோட்டை விட்டார். அது கொஞ்சம் கஷ்டமான வாய்ப்புதான். அதுசரி, தேர்ட்மேனில் இருந்தபோது, வார்னர் கொடுத்த ஈஸி கேட்ச்சை கைகளில் வாங்கி நழுவவிட்டவர்தானே ஆசிஃப்! அவரது இந்த அபார ஃபீல்டிங் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு 25 ரன்கள் வரை கிடைத்தது என்கிறது கிரிக்இன்போவின் லக் இண்டெக்ஸ்.

ஃபின்ச் கேட்ச்சை விட்டதுமே, `இவரை ஏன் ஸ்லிப்பில் நிறுத்தினார்’ என சர்ஃப்ராஸ் அகமதுவை கடிந்து கொண்டார் ரமீஸ் ராஜா. அவர் என்ன செய்வார் பாவம். பாகிஸ்தான் அணியில் இருக்கும் உருப்படியான ஃபீல்டரான சதாப் கானை களமிறக்காததால், அவர் நிற்கும் பாயின்ட் திசையில் ஃபீல்டிங் செய்தார், வழக்கமாக ஸ்லிப்பில் நிற்கும் பாபர் ஆசம்.

ஆசிஃப் அலி மட்டுமல்ல, சோயிப் மாலிக் கைகளில் இருந்தும் பந்து நழுவியது. மொத்தம் 8 கேட்சுகள் மிஸ். போதாக்குறைக்கு ஏகப்பட்ட மிஸ்ஃபீல்ட், ஓவர் த்ரோ என எப்படியெல்லாம் ரன்கள் கொடுக்க முடியுமோ அப்படியெல்லாம் வாரி கொடுத்தார்கள். மற்ற அணிகள் ஃபீல்டிங்கில் போட்டிபோட்டுக்கொண்டிருக்க பாகிஸ்தான் மட்டும் ரிவர்ஸில் செல்கிறது.

`கட்டுக்கோப்பான பந்துவீச்சும், துடிப்பான ஃபீல்டிங்கும் இருந்திருந்தால் பாகிஸ்தானின் ரிசல்ட் வேறு மாதிரி இருந்திருக்கும்’ என்றார் ஆஸி முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸி. பாகிஸ்தான் உடனடியாக சரி செய்ய வேண்டிய பிரச்னை இது.

ஆனால், இந்தியாவுக்கு எதிரான தோல்விக்குப் பின் மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் இருந்தது ஆஸ்திரேலியா. குறிப்பாக, வார்னர். இரு தரப்பும் சரியான நேரத்தில் கம்பேக் கொடுத்திருக்கிறது. இந்தமுறை ஸ்லோ ஸ்டார்டிங் இல்லாமல், டாப் கியரில் வேகமெடுத்தார் வார்னர். சதம் அடித்து தனக்கே உரிய பாணியில் அந்தரத்தில் துள்ளிக் குதித்தார்.

`இனி சர்வதேச அரங்கில் சதம் அடிக்க முடியாது’ என எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?’ என போட்டி முடிந்தபின் கேட்டார் நிருபர் ஒருவர். `ஆமாம். அப்படி நினைத்திருக்கிறேன். அந்த உந்துதல்தான் என்னை தொடர்ந்து ஃபிட்டாக இருக்க வைத்தது, டி-20 போட்டிகளில் ரன் குவிப்பதைப் போல இங்கும் ரன் குவிக்க உதவியாக இருந்தது’ என உணர்ச்சிவசப்பட்டார்.

வார்னர் சுதாரித்து விட்டார், ஃபின்ச் மிரட்டுகிறார். ஸ்மித்தைப் பற்றி பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், `மேக்ஸ்வெல் இன்னுமொரு அஃப்ரிடியாக மாறிக்கொண்டிருக்கிறார்’ என சோசியல் மீடியாவில் சொல்வதை மறுப்பதற்கில்லை. மூன்றாவது இடத்தில் இறங்க வேண்டிய உஸ்மான் கவாஜாவை ஏன் ஆறாவது இடத்துக்கு தள்ளிவிட்டார்கள் எனத் தெரியவில்லை. `லெஃப்ட் – ரைட் காம்பினேஷனுக்காக அப்படி இறக்கினோம்’ என்று ஆஸ்திரேலியா தரப்பில் இருந்து பதில் வரலாம். பாகிஸ்தான் தவறுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவின் இந்தத் தவறுகள் பெரிதாகத் தெரியவில்லை.

முன்பே சொன்னதுபோல, சில தருணங்களில் பாகிஸ்தான் நன்றாகவே விளையாடியது. முதல் 25 ஓவர்களில் 165/2 என்றிருந்த ஆஸ்திரேலியா அடுத்த 25 ஓவர்களில் எடுத்த ரன்கள் 142. இழந்த விக்கெட்டுகள் 8. தேங்க்ஸ் டு முகமது அமீர்.

அதேபோல, பேட்டிங்கின்போதும் கடைசி நேரத்தில் சுதாரித்தது. முகமது ஹஃபீஸ் அவுட்டானதும் பாகிஸ்தான் தோல்வியை நோக்கிசென்றபோது, சர்ஃபராஸ் – வஹாப் ரியாஸ் கூட்டணி அணியை மீட்டது. எட்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 64 ரன்கள் சேர்த்தது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் வெளுத்துக் கட்டினார் ரியாஸ். 3 சிக்ஸர்களுடன் 39 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.

கூடுதல் பேட்ஸ்மேன் என்ற காரணத்துக்காக, அணியில் எடுக்கப்பட்ட சோயிப் மாலிக், டக் அவுட்டில் வெளியேறினார். இங்கிலாந்தில் அவரது சராசரி 14. அதேபோல, ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிக்கு எதிராக, இமாலய ஸ்கோரை சேஸ் செய்யும்போது ஓப்பனிங் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி இருக்கவில்லை பாகிஸ்தானின் ஆரம்பம். முதல் பத்து ஓவர்களில் அடக்கிவாசித்துவிட்டு, பின்னர் வெளுப்பதுதான் இப்போதைய டிரெண்ட். அவர்கள் இந்தியாவிடம் இருந்து பாடம் கற்றிருக்கலாம்; ஆஸ்திரேலியாவிடம் இருந்தும் பாடம் கற்றிருக்கலாம்.

Fakhar Zaman walks from the pitch after being given out.
Fakhar Zaman walks from the pitch after being given out.
AP

தவறான ஷாட் செலக்ஷன் காரணமாக ஃபகர் ஜமான் அவுட். இன்னமும் ஷார்ட் பிட்ச் பந்துகளில் அவர் திணறுகிறார். ஃபீல்டிங் மோசமாக இருக்கிறது. இப்படி வழக்கமான பிரச்னைகள்தான் பாகிஸ்தானை இம்சிக்கிறது. குறைந்த தவறுகளைச் செய்யும் அணி வெல்லும் என்பதால், ஆஸ்திரேலியா வென்றதில் ஆச்சர்யமில்லை. ஒரு தோல்விக்குப் பின் எப்படி மீண்டு வர வேண்டும் என அவர்களுக்குக் கற்றுத்தர வேண்டியதில்லை. ஏனெனில், அவர்கள் உலக சாம்பியன்!