Published:Updated:

20 ஆண்டுகளில் முதல்முறையாக சேஸிங்கில் ஆஸி தோல்வி... கலக்கிய கோலி டீம்! #INDvAUS

கார்த்தி
David warner, Steve Smith
David warner, Steve Smith

ஆஸ்திரேலியா உலகக் கோப்பை சேஸிங்கில் தோற்றது கடைசியாக 1999ல்.

தொடர் சாதனைகளுக்கு என்றும் சொந்தக்காரர்கள் ஆஸ்திரேலியர்கள். கிரிக்கெட் என்னும் விளையாட்டில் வெஸ்ட் இண்டீஸின் ஆதிக்கம் வீழ்ச்சி அடைந்ததற்குப் பின்னர், அதில் ராஜாங்கம் நடத்திய அணி என்றால் அது ஆஸ்திரேலியா தான். தொடர்ச்சியாக உலகக் கோப்பை வெல்வது, டெஸ்ட்டில் தனி ராஜாங்கம் என எல்லாமே ஆஸ்திரேலியா தான். Domination என்னும் வார்த்தையின் சொந்தக்காரர்கள் அவர்கள்.

#INDvAUS
#INDvAUS
AP

1999 உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் சேஸிங்கில் தோற்றது ஆஸ்திரேலியா. அதற்குப் பின்னர் 19 போட்டிகளில் ஆஸ்திரேலியா பிற அணிகளை வென்றிருக்கிறது. அதற்கு இந்திய பவுலர்கள் மூலம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது இந்தியா

உலகக் கோப்பைத் தொடரில் 8-3 என்கிற முறையில் ஆஸ்திரேலியா இந்தியாவை வென்று இருக்கிறது. சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரிலும். ஆஸ்திரேலியா இந்தியாவை வென்றது. அதன் பின் தொடர்ச்சியாக பத்து போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றிருக்கிறது. உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை வெல்வதென்பது அவ்வளவு லேசுபட்ட காரியமில்லை. அதைச் சிறப்பாக செய்திருக்கிறார் கோலியின் இந்திய அணி. அணியில் எந்த மாற்றமும் இல்லாமல், டாஸ் வென்றதும் பேட்டிங் என முடிவு எடுத்தார் கோலி.

INDIA XI : ரோஹித், தவான், கோலி, ராகுல், தோனி, ஜாதவ், பாண்டியா, புவி, குல்தீப், பும்ரா, சஹல்.
AUS XI : வார்னர், ஃபிஞ்ச், உஸ்மான் கவாஜா, ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, கூல்டர் நைல், பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஜாம்பா
"ஆட்டம் போகப்போக பிட்ச் ஸ்லோவாகிவிடும். அதனால், முதலில் பேட்டிங் செய்வது சாதகமாக அமையும். உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரில் ஸ்கோர் போர்டு பிரஷர் இருக்கும். அதை பெளலர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் பயன்படுத்திக்கொள்வார்கள். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பிட்ச் என்பதால், பேட்டிங்குக்குச் சாதகமாக இருக்கும்.
கோலி

கோலியின் சரியான கணிப்பு, இந்தியாவுக்கு வெற்றியைத் தேடி தந்திருக்கிறது.

தவறு செய்துவிட்டதா ஆஸ்திரேலியா?

இந்தப் போட்டிக்கு முன்பு, ஆஸ்திரேலிய அணியில் ஜேசன் பெரண்டார்ஃப் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், இந்திய பேட்ஸ்மேன்கள் இடது கை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராகத் தடுமாறுகிறார்கள். உதாரணமாக, 2015 உலகக் கோப்பைக்குப் பிறகு, இடது கை வேகப்பந்துவீச்சாளர்களிடம் தவான் 12 முறை (சராசரி : 34.4) ஆட்டமிழந்துள்ளார். தோனி 9 முறை (சராசரி : 24.77). இவர்கள் மட்டுமல்லாமல் ரோஹித், கோலி உள்ளிட்டவர்களும் தடுமாறுகிறார்கள். அதனால் கூல்டர்நைலுக்குப் பதில் பெரண்டார்ஃப் இறங்குவார் என்றார்கள். ஆனால், ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

"உலகக் கோப்பையில் கோலியின் கேப்டன்ஷிப் நன்றாக இருக்கிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஃபீல்டிங், பெளலிங் மாற்றங்கள் சிறப்பாக இருந்தது. சுழற்பந்து வீச்சாளர்களை நன்றாகப் பயன்படுத்தினார். இன்றும் பிட்சை நன்றாகப் புரிந்துகொண்டு, டாஸில் சரியான முடிவை எடுத்திருக்கிறார்".
கங்குலி

இங்கிலாந்தின் ஓவல் மைதானம் ஸ்விங்குக்கு பெரிதாக ஒத்துழைக்கவில்லை. முந்தைய போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய ஸ்டார்க்கால் இதில் ஒன்றும் செய்ய முடியவில்லை.

முதல் ஏழு ஓவர்களில் அப்படி இப்படி என உழன்று கொண்டிருந்த இந்திய அணி, கூல்டர் நைலின் ஓவரில் டாப் கியருக்குப் போனது. ஆட்டத்தின் எட்டாவது ஓவரில் ஹாட்ரிக் பௌண்டரி அடித்து அமர்க்களப்படுத்தினார் தவான். தவானுக்கு விரலில் காயம் ஏற்பட்டதால், ஓவர்களுக்கு நடுவே டீம் ஃபிசியோ தவானுக்கு உதவி செய்தார். அடிபட்ட பிறகு எல்லாப் பந்துகளையும் பேக் ஃபூட்டிலேயே எதிர்கொண்டிருக்கிறார் தவான்.

Rohit Sharma
Rohit Sharma
AP

ஆட்டத்தின் 13வது ஓவரில் தான் , தன் முதல் பௌண்டரியை அடித்தார் ரோஹித். ரோஹித் இப்போதெல்லாம் முதல் 20 பந்துகளில் பெரிதாக ரிஸ்க் எதுவும் எடுப்பதில்லை. (ஸ்டார்க் வீசிய ஆட்டத்தின் மூன்றாவது பந்தை அடிக்க முயன்றார் ரோஹித். ஸ்குயர் லெக்கில் இருந்து அதை கேட்ச் பிடிக்க முயன்றார் கூல்டர் நைல். அட்டகாசமான முயற்சி!. ஆனால் கேட்ச் டிராப். ) .

நேற்றைய நாள் தவானுக்கானது. ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன்களை துளியும் அச்சுறுத்தவில்லை. மைதானமும் போதாக்குறைக்கு பௌலர்களைச் சோதித்தது. ஓப்பனர்களின் நிலையான ஆட்டம், அதன் பின்னர் வந்த பேட்ஸ்மேன்களின் அதிரடி என பத்து பொருத்தமும், பக்காவாய் பொருந்தியது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100+ பார்ட்னர்ஷிப் உலகக் கோப்பையில்

160 : ஸ்மித் - டி வில்லியர்ஸ் 2007

127 : தவான் - ரோஹித் 2019

107 : கூச் - இயான் போத்தம் 1992

95 பந்துகளில் சதமடித்து அசத்தினார் ஷிகர் தவான். ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் 17-வது சதம் இது! ஐ.சி.சி தொடர்களில் அவர் அடித்திருக்கும் ஆறாவது சதம் இது.ஆட்டத்தின் தொடக்க கட்டத்தில், ஆஸ்திரேலியாவின் ஷார்ட் பால் தாக்குதலில் கையில் காயம் அடைந்தாலும், அதன் பிறகு மிகவும் அட்டகாசமாக விளையாடினார். ஒருபக்கம் ரோஹித், கோலி இருவரும் நிதானம் காட்ட, இவரது அதிரடி ஆட்டம், இந்தியாவின் ரன்ரேட்டைச் சீராக வைத்திருக்கவும் உதவியிருக்கிறது

Dhawan
Dhawan
AP

கோலி ஒருநாள் போட்டிகளில் தன் ஐம்பதாவது அரை சதத்தைப் பதிவு செய்தார்.117 ரன்களோடு பெவிலியன் திரும்பினார் ஷிகர் தவான். ஃபுல் லென்த் பந்தை தூக்கியடிக்க, அது பெளண்டரி எல்லையில் இருந்த லயானின் கையில் கேட்சானது. 109 பந்துகளில் 16 பெளண்டரிகளுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார்.

50 ஓவர்களில் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்தது. தவான் 117, கோலி 82, ரோஹித் 57 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் தோனி, கோலி இருவரையும் வீழ்த்தினார் ஸ்டாய்னிஸ்.

வழக்கத்துக்கு மாறாக நிதானமாக ஆடினார் வார்னர். 76 பந்துகளில் அரைசதம் கடந்தார். 84 பந்துகளுக்கு 56 ரன்கள் எடுத்த நிலையில், சஹால் பந்துவீச்சில் அவுட்டானார் டேவிட் வார்னர். மிட் விக்கெட் திசையில் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டுத் தூக்கியடிக்க புவனேஷ்வர் குமாரிடம் கேட்சானார். ஆஸ்திரேலியா 133/2. 350 ரன்களை சேஸ் செய்கிறோம் என்பதை மறந்துவிட்டாரோ வார்னர் என்று தோன்றியது.

பெய்ல்ஸ் சர்ச்சை!

அதற்கும் ஆட்டத்தின் இரண்டாது ஓவரிலேயே அவுட் ஆக வேண்டியவர் வார்னர். பும்ரா வீசிய முதல் பந்து ஸ்டம்ப்ஸை பதம் பார்த்தது. ஆனால், அதைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல், பெய்ல்ஸ் ஜாலியாக ஸ்டம்ப்லியே அமர்ந்து இருந்தது. இந்த உலகக் கோப்பையில் இப்படி நிகழ்வது ஐந்தாவது முறை .

இந்த புதிய LED பெயில்ஸ் அதிக எடையுடன் இருப்பதால், விழ மறுக்கிறதோ என்பதை ஆராய வேண்டும்.
ஆரோன் பின்ச்

மிடில் ஓவர்களில் ஆஸ்திரேலியா பெளண்டரி அடிக்க முடியாமல் தடுமாறுகிறது. 23-வது ஓவரின் கடைசிப் பந்துக்குப் பிறகு பெளண்டரியே இல்லை. சஹால், ஹர்திக் இருவரும் மிகநேர்த்தியாகப் பந்துவீசினர்.42 பந்துகளாக பவுண்டரிகள் எதுவும் இல்லை. தேவைப்படும் ரன்ரேட் தேர்தல் முடிந்த பெட்ரோல் விலை போல் ஏறிக்கொண்டே சென்றது. 33 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.

#INDvAUS
#INDvAUS

60 பந்துகளைச் சந்தித்த ஸ்டீவ் ஸ்மித், அரைசதம் கடந்தார். இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயம், அவர் அடித்தது இரண்டு பெளண்டரியும், ஒரு சிக்ஸரும் மட்டும்தான். கடைசி 8 உலகக் கோப்பை போட்டிகளில் இது அவருடைய 7-வது 50+ ஸ்கோர்

ஸ்டீவ் ஸ்மித்தை எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேற்றினார் புவனேஷ்வர் குமார்.ஸ்டீவ் ஸ்மித்தைத் தொடர்ந்து ஸ்டாய்னிஸ் (டக்) விக்கெட்டையும் வீழ்த்தினார் புவி. 40 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியாவின் ஒரே நம்பிக்கையான மேக்ஸ்வெல்லை (28 ரன்கள்) வெளியேற்றினார் சஹால்.

30 பந்துகளில் 69 ரன்கள்

ஆஸ்திரேலியா சறுக்கியது எங்கே?

ஆஸ்திரேலிய அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது இந்திய அணி! 352 என்ற இலக்கைத் துரத்திய ஆஸி அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் மட்டுமே எடுத்தது. உலகக் கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய பெறும் நான்காவது வெற்றி இது.

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே ஒருசில தவறுகளைச் செய்தது. பெரண்டார்ஃபை எடுக்காதது, மேக்ஸ்வெல்லுக்கு சீக்கிரமே பெளலிங் கொடுத்தது, ஐந்தாவது பெளலிங் ஆப்ஷனை சரியாகப் பயன்படுத்தாதது, கவாஜாவை மிடில் ஆர்டரில் இறக்கியது என எக்கச்சக்க தவறுகள். இதை அடுத்தடுத்த போட்டிகளில் அவர்கள் சரிசெய்துகொள்வது அவசியம்.

#INDvAUS தவான், கோலி, புவி அசத்தல்..! ஆஸியை வீழ்த்தியது மென் இன் புளூ Live Update, ICC Cricket World Cup 2019
இந்தியாவுக்கு இது அசத்தலான வெற்றி.பேட்ஸ்மேன்கள் சிறப்பானதொரு முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை செட் செய்கிறார்கள். பவுலர்களின் பங்களிப்பும் அட்டகாசமாக இருக்கிறது. 2015ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியாவின் பர்பாமென்ஸை நினைவுறுத்துகிறது இப்போட்டி
ஹர்ஷா போக்ளே

இந்தியா vs ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக 16 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற போது, அதை முடிவுக்கு கொண்டுவந்தது இந்தியா தான் (2001) .

மீண்டும் ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக வெல்ல ஆரம்பித்தது. அதை 2008ம் ஆண்டு முடித்து வைத்தது இந்தியா,

தற்போது, உலகக் கோப்பை சேஸிங்கில் தொடர்ச்சியாக (19 முறை) வெற்றி பெற்று வந்த ஆஸ்திரேலியாவின் சாதனையையும் முடித்து வைத்திருக்கிறது இந்தியா.

இந்தியாவில் நடந்த ஒருநாள் தொடரைத் தோற்ற பிறகு, எங்களை நிரூபிக்கவேண்டிய அவசியம் இருந்தது. இந்த வெற்றி மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லோருமே எதிர்பார்த்தபடி விளையாடினர். ரோஹித் அவுட்டானாலும், தவான் அற்புதமாக விளையாடி சதம் அடித்தார். நானும் ரன் அடித்துவிட்டேன். ஹர்திக், தோனி ஆகியோரின் பங்களிப்பும் அணிக்கு உதவியது. நான் ஒரு பக்கம் நிதானமாக ஆடுவதென்றும், ஹர்திக் அடித்து ஆடுவதென்றும் முடிவெடுத்தோம். அதுவும் சரியாக நடந்தது. திட்டமிட்டபடி எல்லாமே நடகும்போது மகிழ்ச்சியாக இருக்கும். அது பேட்டிங்கின் முடிவில் கிடைத்தது. 320 என்பதைவிட, 350 என்ற ஸ்கோர் கூடுதல் நம்பிக்கை கொடுக்கும். பெளலர்களுக்கு அது உதவியது. இந்த வெற்றியைத் தொடரவேண்டும்.
கோலி
அடுத்த கட்டுரைக்கு