Published:Updated:

கார்டிஃப் யாருக்குச் சாதகம்... முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா இலங்கை! #WorldCup2019

கார்த்திகா ராஜேந்திரன்

இலங்கை அணி இன்னொரு போட்டியில் தோல்வி கண்டால், `கத்துக்குட்டி' அணி என்ற பெயரெடுக்கும். இந்நிலையைத் தவிர்த்து உலகக் கோப்பையில் தொடர்ந்து பயணிக்க, இலங்கைக்கு இந்த வெற்றி மிக அவசியம். #WorldCup2019

ரஷித் கான்
ரஷித் கான்
  • போட்டி எண் : 7 ஆப்கானிஸ்தான் - இலங்கை

  • நேரம்: மாலை 3 மணி

  • இடம்: சோஃபியா கார்டன்ஸ், கார்டிஃப்

பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங் என மூன்றிலும் சொதப்பிய இலங்கை அணி, நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் படுமோசமாகத் தோல்வியடைந்தது. இந்த மோசமான தொடக்கத்துக்கு பதில் சொல்ல, இலங்கை அணிக்கு மற்றொரு வாய்ப்பு. அதே கார்டிஃப் மைதானத்தில் நடக்கும் இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது, இலங்கை. #WorldCup2019

ரஷித் கான்
ரஷித் கான்

இந்த உலகக் கோப்பையைப் பொறுத்தவரை இரு அணிகளும் இன்னும் வெற்றிக்கணக்கைத் தொடங்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், ஒட்டுமொத்தமாக ஆப்கானிஸ்தான் அணி எழுச்சி கண்டது. ரஹமத் ஷா, நஜிபுல்லா, குலாப்தின் என ஆப்கானிஸ்தானின் மிடில் ஆர்டர் வலுவாக உள்ளதால், 250+ ஸ்கோர் எடுக்க வாய்ப்புள்ளது. ரஷித் கான், முகமது நபி போன்ற நம்பிக்கை வீரர்கள் இன்னும் பெளலிங்கில் செட்டாகவில்லை. இந்தப் போட்டியில் ஆப்கன் ஸ்பின்னர்களின் மிரட்டல் பலித்தால், இலங்கைக்கு நெருக்கடிதான்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும், கிவிக்கு எதிரான லீக் போட்டியிலும் முழுமையாக 50 ஓவர்களை எதிர்கொள்ளாத இலங்கை அணியின் சுமாரான பேட்டிங் சுதாரித்துக்கொள்ளவேண்டியது அவசியம். ஓப்பனிங்கில் களமிறங்கி 52* ரன்கள் அடித்த கேப்டன் திமித் கருணரத்னேவின் மட்டும் பேட்டிங்கில் நம்பிக்கை தருகிறார். 1996 சாம்பியன்ஸ், உலகக் கோப்பை அனுபவம் வாய்ந்த இலங்கை அணி இன்னொரு போட்டியில் தோல்வி கண்டால், `கத்துக்குட்டி' அணி என்ற பெயரெடுக்கும். இந்நிலையைத் தவிர்த்து உலகக் கோப்பையில் தொடர்ந்து பயணிக்க, இலங்கைக்கு இந்த வெற்றி மிக அவசியம்.

திமித் கருணரத்னே
திமித் கருணரத்னே

தோல்வி அனுபவத்துடன் கார்டிஃப் மைதானத்தில் இரண்டாவது போட்டிக்காகக் களமிறங்கும் இலங்கை அணி, வெற்றி வாய்ப்பை நோக்கி அடியெடுத்து வைக்கும். இந்தப் போட்டியை அடுத்து ஆப்கானிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் கார்டிஃப்பில் மோதுகின்றன. தொடர் தோல்விகளைச் சந்தித்துவரும் தென்னாப்பிரிக்கா சுதாரித்துக்கொள்ளும் என்பதால், கார்டிஃபில் நடக்கும் இந்தப் போட்டியிலேயே சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்த ஆப்கானிஸ்தான் காத்திருக்கிறது.

நேருக்கு நேர்:

உலகக் கோப்பையைப் பொறுத்தவரை இரு அணிகளும் பெரிதாக மோதியதில்லை. 2015-ம் ஆண்டு உலகக் கோப்பையில் நடந்த ஒரே போட்டியில் 232 ரன் இலக்கை சேஸ் செய்த இலங்கை அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணி 2 முறையும், ஆப்கானிஸ்தான் 1 முறையும் வென்றுள்ளன. இலங்கையின் சுமாரான ஃபார்ம், ஆப்கானிஸ்தானின் பொறுப்பான ஆட்டத்தை வைத்துப் பார்க்கும்போது இந்தப் போட்டியும் இலங்கை அணிக்கு சுலபமாக இருக்காது எனத் தெரிகிறது. ப்ளேயிங் லெவன்:

#WorldCup2019
#WorldCup2019

ப்ளேயிங் லெவன்:

ஆப்கானிஸ்தான் (உத்தேசம்): குலாப்தின் நபி(கேப்டன்), முகமது சேஸாத், நஜிபுல்லா, ரஹ்மத் ஷா, ஹஸ்ரத்துல்லா, ஹமித் ஹாசன், ரஷித் கான், முகமது நபி, தவ்லத் சத்ரான், ஹஷ்மத்துல்லா, முஜீப் உர் ரகுமான்.

இலங்கை (உத்தேசம்): திமுத் கருணரத்னே(கேப்டன்), குசல் மென்டிஸ், திசாரா பெராரா, ஜீவன் மென்டிஸ், லசித் மலிங்கா, தனஞ்செய் டி சில்வா, ஏஞ்சலோ மேத்யூஸ், சுரங்கா லக்மல், உடானே, குசல் பெராரா, லஹிரு திருமன்னே.

முக்கிய வீரர்கள்:

ஆப்கானிஸ்தான்: ஹமித் ஹாசன், குலாப்தின் இலங்கை: திமுத் கருணரத்னே, லசித் மலிங்கா