Election bannerElection banner
Published:Updated:

எப்படிச் சமாளிக்கப் போகிறது ஆப்கன்... இங்கிலாந்துக்கு இன்னொரு வெற்றி?! #ENGvAFG

England team
England team

ஆப்கானிஸ்தானின் கேம் பிளான் சிம்பிள். ரஷித் கான், முகமது, முஜிபுர் ரஹ்மான் சுழலை சார்ந்திருப்பார்கள். ஆனால், பிரிஸ்டல், கார்டிஃப், டான்டன் மைதானங்கள் சுழலுக்கு சாதகமாக இருக்கவில்லை.

இங்கிலாந்து கடந்த இரண்டு போட்டிகளில் 106 ரன்கள், 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. ஆப்கானிஸ்தான் இந்த உலகக் கோப்பையில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இங்கிலாந்து முதலிடத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் பத்தாவது இடத்தில் இருக்கிறது.

England vs Afghanistan Match Preview
England vs Afghanistan Match Preview

புள்ளிவிவரம், வரலாறு எல்லாமே இங்கிலாந்துக்குச் சாதகமாக இருக்கிறது. ஆனாலும், உலகக் கோப்பையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், ஆப்கானிஸ்தான் நம்பிக்கையுடன் இருக்கிறது.

இரண்டு சதங்கள் அடித்து மிரட்டல் ஃபார்மில் இருக்கும் இங்கிலாந்து ஓப்பனர் ஜேசன் ராய், தசைப்பிடிப்பு காரணமாக ஆப்கன், இலங்கைக்கு எதிரான போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவித்துவிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு. அவருக்குப் பதிலாக ஜேம்ஸ் வின்சி ஓப்பனிங் இறங்குவார். கேப்டன் மோர்கன் முதுகுப்பிடிப்பால் அவதிப்படுகிறார். எதிரணி ஆப்கன் என்பதால் அவர் களமிறங்குவதும் சந்தேகமே. இரு முக்கிய வீரர்கள் இல்லையென்றாலும், இங்கிலாந்துக்கு அது ஒரு பிரச்னையே இல்லை.

Afghanistan captain Gulbadin Naib speaks during a press conference at Old Trafford.
Afghanistan captain Gulbadin Naib speaks during a press conference at Old Trafford.
AP

இலங்கை மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தியது; இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தது; உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்தது என, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் அடைந்த வெற்றி பெரிது. ஆனால், இந்த உலகக் கோப்பையில் இதுவரை அவர்கள் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. `கத்துக்குட்டிகள்’ மேஜிக் நிகழ்த்தும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு போட்டியிலும் தொடர்கிறது.

ஆப்கானிஸ்தானின் கேம் பிளான் எல்லோருக்கும் தெரிந்தது. ரஷித் கான், முகமது, முஜிபுர் ரஹ்மான் ஆகியோரின் சுழலை பெரிதும் சார்ந்திருப்பார்கள். பிரிஸ்டல், கார்டிஃப், டான்டன் மைதானங்கள் அவர்களது சுழலுக்குச் சாதகமாக இருக்கவில்லை. மாறாக, இந்த முறை வேகப்பந்துவீச்சாளர்கள்தான் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றனர். முழுக்க முழுக்க பெளலிங்கை நம்பி களமிறங்கும் ஆப்கானிஸ்தான் அணியில், இங்கிலாந்து ஆடுகளங்களில் எதிரணி பேட்ஸ்மேன்களை நிலை குலைய வைக்கும் வேகப்பந்துவீச்சாளர்களும் இல்லை. அவர்களது பேட்டிங்கைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. நான்கு போட்டிகளிலும் அவர்களால் 50 ஓவர்கள் முழுமையாகப் பேட் செய்ய முடியவில்லை. இப்படி இங்கிலாந்தை வீழ்த்த அவர்களிடம் ஒரு துருப்புச்சீட்டுகூட இல்லை.

இரு அணிகளும் இதுவரை!
இரு அணிகளும் இதுவரை!

உலகக் கோப்பைக்கு முன்னதாக கேப்டனை மாற்றிய ஆப்கானிஸ்தான், ஒவ்வொரு போட்டியிலும் ஒரு சிக்கலைச் சந்தித்தது. முகமது ஷஸாத் காயம் மேலும் இம்சித்தது. முன்னாள் கேப்டன் ஆஷ்கர் ஆஃப்கனைத் திருப்தி செய்வதற்காக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நல்ல ஃபார்மில் இருந்த நஜிபுல்லாவை நீக்கினார்கள். அதற்கு அவர்கள் பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. (அவர் இருந்திருந்தாலும் வென்றிருப்பார்களா என்பது வேறு விஷயம்). ஆனால், நஜிபுல்லாவுக்குப் பதிலாகக் களமிறங்கிய ஆஷ்கர், ஐந்து பந்துகளைத் தாண்டவில்லை. இம்ரான் தாஹிரின் கூக்ளியில் ஸ்டம்பைப் பறிகொடுத்தார். மிடில் ஆர்டர் சுத்தம். 8 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது.

இரு அணிகளும் இதற்கு முன் 2015 உலகக் கோப்பையில் மோதியுள்ளன. அதில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய அதே பிட்ச்சில்தான், இங்கிலாந்து – ஆப்கன் மோதவுள்ளன. அந்த பிட்ச் சுழலுக்குச் சாதகமாக இருக்கும் எனத் தெரிகிறது. இது ஆப்கனுக்கு சாதகமாக இருக்கும். அதேநேரத்தில் அடில் ரஷித், மொயீன் அலி என இங்கிலாந்து இரண்டு ஸ்பின்னர்களுடன் களமிறங்கினாலும் ஆச்சர்யமில்லை. மான்செஸ்டரில் மதியத்துக்குப் பின் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ் வெல்லும் அணி முதலில் ஃபீல்ட் செய்யவே நினைக்கும்.

பிளேயிங் லெவன்!

இங்கிலாந்து (உத்தேசம்): பேர்ஸ்டோ, ஜேம்ஸ் வின்சி, ஜோ ரூட், இயான் மோர்கன், பட்லர், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், ஆர்ச்சர், மார்க்வுட், பிளங்கட்/மொயீன் அலி.

ஆப்கானிஸ்தான் (உத்தேசம்): ஹஸ்ரதுல்லா ஜசாய், நூர் அலி ஜத்ரன், ரஹ்மத் ஷா, ஹஸ்மதுல்லா ஷகிதி, குல்பதில் நைப், நஜிபுல்லா ஜத்ரன், முகமது நபி, இக்ரம் அலிகில், ரஷித் கான், முஜிபுர் ரஹ்மான், ஹமித் ஹசன்.

இதுவரை!

ஆப்கானிஸ்தான்

vs ஆஸ்திரேலியா – 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.

vs இலங்கை – 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி (DLS).

vs நியூசிலாந்து - 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

vs தென்னாப்பிரிக்கா – 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.

இங்கிலாந்து

vs தென்னாப்பிரிக்கா – 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

vs பாகிஸ்தான் – 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.

vs வங்கதேசம் – 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

vs வெஸ்ட் இண்டீஸ் – 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு