Published:Updated:

600 பவுண்டு செலவில் ஏர்கிராஃப்ட் பேனர்... உலகக்கோப்பையில் விண்ணைப் பிளக்கும் அரசியல் கோஷம்!

எம்.குமரேசன்

லீட்ஸ் மைதானத்துக்கு மேலே குட்டி விமானங்கள் பறக்கத் தடை இல்லை. இது, விமானம் பறக்கவிட்டவர்களுக்கு சாதகமாகிவிட்டது.

லீட்ஸ் மைதானத்தில் விமானத்தில் பறந்த பேனர்
லீட்ஸ் மைதானத்தில் விமானத்தில் பறந்த பேனர்

எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குள் அரசியலும் புகுந்துள்ளது. லீட்ஸ் நகரில் நடந்த கடைசி லீக் சுற்று ஆட்டத்தில், இந்திய அணி இலங்கை அணியுடன் மோதியது. அப்போது, திடீரென்று குட்டி விமானம் ஒன்று மைதானத்தின் மேலே பறந்தது. விமானத்தின் வாலில் 'Help end mob lynching in India' என்ற வாசகத்துடன் பேனர் ஒன்று கட்டப்பட்டிருந்தது.

குட்டி விமானத்தில் பேனர்
குட்டி விமானத்தில் பேனர்

இந்தியாவில் மதத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் கொலைகளைக் கண்டிக்கும் வகையில் இந்த பேனர் இருந்தது. பொதுவாக விளையாட்டு மைதானங்களில் அரசியலைக் கலப்பது ஆரோக்கியமான விஷயமல்ல. எனினும், இந்த கிரிக்கெட் உலகக் கோப்பையில் அரசியல் கோஷங்கள் சற்று தூக்கலாகவே ஒலித்தன.

லீட்ஸ் போட்டிக்கு முன்னதாக ஜூன் 29-ம் தேதி நடந்த பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தின்போது , `பலுசிஸ்தானுக்கு நீதி வேண்டும்' என்ற கோஷம் அடிக்கடி எழுப்பப்பட்டது. அதேபோல் `காஷ்மீருக்கு நீதி வேண்டும் ' என்ற கோஷத்தையும் கேட்க முடிந்தது. இதற்கெல்லாம் உச்சகட்டமாக விமானத்திலேயே பேனரை எடுத்து வந்து மைதானத்துக்கு மேலே வானத்தை வட்டமடித்தது அதிர்ச்சிக்குரிய விஷயம்.

விமானத்தில் பறந்த பேனர்
விமானத்தில் பறந்த பேனர்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மைதானங்களில் இந்தியாவுக்கு எதிராக அடிக்கடி எழுப்பப்படும் அரசியல் கோஷம் பி.சி.சி.ஐ-க்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் விளையாட்டு மைதானங்களுக்கு மேலே இதுபோன்று குட்டி விமானங்கள் பறந்தால் பெரிய பிரச்னையாகிவிடும். சென்னை நகரில் ட்ரோன்கள் பறக்க பல இடங்களில் தடையுள்ளது. ஆனால், லீட்ஸ் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் விளையாட்டு மைதானங்களின் மேலே குட்டி விமானங்கள் வட்டமடிக்க அனுமதியுள்ளது. இதற்கு, 600 பவுண்டுதான் செலவாகும்.

இலங்கை போட்டியின்போது `Help end mob lynching in India” என்ற பேனர் சுமந்து செல்லப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பி.சி.சி.ஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், ``இது தொடர்பாக ஐ.சி.சி-யிடம் கவலையைத் தெரிவித்துள்ளோம். விளையாட்டு மைதானத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது கவலைக்குரியது.

லீட்ஸ் மைதானம்
லீட்ஸ் மைதானம்

அரையிறுதி ஆட்டத்திலும் இதுபோன்று நடந்தால் துரதிர்ஷ்டவசமானது. எங்கள் வீரர்களின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்' என்று தெரிவித்துள்ளார்.

ஐ.சி.சி. விடுத்துள்ள செய்திக்குறிப்பில் விமானம் வழியாக அரசியல் சார்ந்த பேனர்களை பறக்க விடும் சம்பவம் எதிர்பாராதது. போலீஸ் உறுதியளித்ததை மீறி லீட்ஸில் மீண்டும் இந்தச் சம்பவம் நடந்திருப்பது அதிருப்தியை அளித்துள்ளது' என்று கூறியுள்ளது.

லீட்ஸ் நகரைப் பொறுத்தவரை, பறக்கத் தடை விதிக்கப்பட்ட இடங்களைத் தவிர, வேறு எந்த இடத்துக்கும் தனியார் விமானங்களை வாடகைக்கு எடுத்து பேனர்களைப் பறக்கவிடலாம். இதற்கென்றே லீட்ஸ் நகரில் தனியார் குட்டி விமான நிறுவனங்கள் உள்ளன. ``விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்படாத இடங்களில் யாரும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தலாம் என்ற சுதந்திரம், லீட்ஸ் நகரில் இருக்கிறது''- என்று அந்நகர காவல்துறைத் தலைவர் ஸ்டீவ் கார்ட்டர் சொல்கிறார்.

மக்களுக்கு தங்கள் கருத்துகளை எடுத்துரைக்க உரிமை உள்ளது. குட்டி விமானங்கள் வழியாக பேனர்களைப் பறக்கவிடும்போது அதைத் தடுக்க முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம்.
ஸ்டீவ் கார்ட்டர், லீட்ஸ் காவல்துறை

``பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் மதிக்கப்படுகின்றன. இங்கே, விமானம் வழியாக பேனர்களைப் பறக்கவிடுவது சட்டப்படி குற்றம் அல்ல. அப்படியிருக்கையில், இனி வரும் போட்டிகளில் விமானம் வழியாக பேனர்களைப் பறக்கவிடுவதைத் தடுக்க முடியும் என்று எங்களால் ஐ.சி.சி- க்கு உறுதியளிக்க முடியாது. சட்டத்துக்குட்பட்டு இயங்குகிறவர்களைத் தடுக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. மக்களுக்கு தங்கள் கருத்துகளை எடுத்துரைக்க உரிமை உள்ளது. குட்டி விமானங்கள் வழியாக பேனர்களைப் பறக்க விடும்போது அதைத் தடுக்க முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம் '' என்றும் ஜிம்மி கார்ட்டர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான பேனர்களை ஆசாத் என்பவர் தன் நண்பர் உதவியுடன் பறக்கவிட்டுள்ளதாகத் தெரிகிறது. ''லீட்ஸ் மைதானத்தின் மேலே விமானங்கள் பறக்கத் தடையில்லை என்று நண்பர் ஒருவர் சொன்னார். ஏற்கெனவே அவர் இதுபோன்று குட்டி விமானங்களை இங்கே பறக்கவிட்டதாக என்னிடம் கூறினார். அதே பாணியை நாங்களும் பின்பற்றினோம். லார்ட்ஸ் உள்ளிட்ட இங்கிலாந்தின் மற்ற கிரிக்கெட் மைதானங்கள் மேல் குட்டி விமானங்கள் பறக்கத் தடையுள்ளது. அங்கே சாகசம் செய்வது எல்லாம் நடக்காத காரியம்'' என்றார் ஆசாத்.

இந்த நிலையில், மான்செஸ்டர் நகரில் இந்தியா- நியூஸிலாந்து அணிகள் மோதும் போட்டியின்போது ஓல்டு ட்ராஃபோர்டு மைதானத்துக்கு மேலே விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டது.

லீட்ஸ் நகரம்
லீட்ஸ் நகரம்

அரசியல் பேனர்கள் மட்டுமல்லாமல் `தமைரா என்னை திருமணம் செய்துகொள்கிறாயா? `லவ் கிரிக்கெட்', `லவ் மும்தாஜ்' போன்ற பேனர்களையும் சுமந்துகொண்டு குட்டி விமானங்கள் கிரிக்கெட் மைதானங்களை வட்டமடித்த கதையும் இந்த உலகக் கோப்பைத் தொடரில் நடந்துள்ளது.