Published:Updated:

ஸ்டோக்ஸ் கேட்ச், கெய்ல் நோ பால் சர்ச்சை... ஹிட்டர் கூல்டர் நைல்... உலகக் கோப்பை சுவாரஸ்யங்கள்!

#WorldCup2019
#WorldCup2019

பெரிய அணி, கத்துக்குட்டி அணி, முக்கியமான போட்டி, முக்கியமற்ற போட்டி என்றில்லாமல், பத்து அணிகளும், எல்லா போட்டிகளிலும் ஆச்சர்யத்தை அளித்துள்ளன. #WorldCup2019

உலகக் கோப்பை தொடங்கி 10 நாள்கள் கடந்துவிட்ட நிலையில் தொடரின் முக்கிய ஹைலைட்ஸ் இதோ...

முதல் ஆட்டமே படு அசத்தலாகத் தொடங்கியது. ஜோஃப்ரா ஆர்ச்சரின் பௌலிங், ஜேஸன் ராய், ரூட், மார்கன், ஸ்டோக்ஸின் அரைசதம் எனப் பல இருந்தாலும், உலகக் கோப்பை உள்ளவரை பென் ஸ்டோக்ஸின் கேட்ச் பேசப்படும். பார்ப்பதற்கு, `நல்லா சர்க்கஸ் பண்ற மேன் நீ’ என்பது போல் இருந்தாலும், பெலுக்வாயோ அடித்த பந்தை பிடிக்க அவர் எடுத்துக் கொண்டது வெறும் 2.55 விநாடிகள்தான். 6 அடி உயரம் இருக்கும் ஸ்டோக்ஸ் கிட்டத்தட்ட 2.5 அடி குதித்து, 8 அடி 8 அங்குலம் உயரத்தில் பாய்ந்து பிடித்த கேட்ச்சை ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் பிரம்மிப்பு குறைவதில்லை.

ஒருநாள் போட்டியின் அதிகபட்ச ஸ்கோரை உருவாக்கிய மைதானம்; 6.98 என சராசரி ரன்ரேட் கொண்ட மைதானம் என பேட்டிங்கிற்கான அத்தனை அம்சங்களையும் கொண்ட டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில், பெளலிங் மூலம் அதகளம் செய்தது வெஸ்ட் இண்டீஸ். வெறும் 130 பந்துகள் மட்டுமே வீசிய வெஸ்ட் இண்டீஸ் அணி 85% ஷாட் பால்களைப் போட்டு பாகிஸ்தானை 105 ரன்களில் சுருட்டியது. இந்தப் போட்டியின் மற்றொரு ஹைலைட் கெயிலின் பெர்ஃபாமன்ஸ். ஒரு அரைசதம், உலகக் கோப்பை போட்டிகளில் அதிக சிக்சர்கள் (40) என அதிரடியாக இந்த சீசனைத் தொடங்கினார் யுனிவர்சல் பாஸ்.

கிறிஸ் கெயில்
கிறிஸ் கெயில்

இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கம்பேக் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. முதல் போட்டியில் ஆப்கான் அணியுடன் மோதியது. பெரிய அணி இல்லை என்பதால் 'ஜஸ்ட் லைக் தட்' என மிரட்டல் கம் பேக் கொடுத்தது ஆஸி. வார்னரின் அரைசதம், கம்மின்ஸ், ஜம்பாவின் ஸ்பெல் என 2015 உலகக் கோப்பை வென்ற போது எப்படிச் சென்றதோ, அதே வேகத்துடன் திரும்பியிருக்கிறது ஆஸ்திரேலியா.

வங்கதேசம் - தென்னாப்பிரிக்காவை பந்தாடியதுதான், இதுவரையிலான உலகக் கோப்பையின் பெரும் சுவாரஸ்யம். ப்ரோட்டீயஸை வென்று `நாங்கள் கத்துக் குட்டிகள் இல்லை’ என்பதை நிரூபித்தன புலிக்குட்டிகள்.

வங்கதேச அணி
வங்கதேச அணி

உலக சாம்பியனுக்கான பந்தயத்தில் முதலிடத்தில் இருப்பது இங்கிலாந்து. பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங் என மூன்றிலும் பலமாக இருக்கும் அணியை ஒரு சராசரி அணி வீழ்த்தினால்..? அந்த ஆச்சர்யத்தைத் தந்தது பாகிஸ்தான். ஜோ ரூட், பட்லர் என இரண்டு வீரர்கள் சதம் அடித்த போதிலும் பாகிஸ்தான் நிர்ணயித்த 348 ரன்களை இங்கிலாந்தால் சேஸ் செய்ய முடியவில்லை. `ஏன்னா பாகிஸ்தான் பெளலர்களின் உருட்டு அப்படி!’

11 தோல்விகளுக்குப் பின் ஒரு இமாலய வெற்றியைப் பதிவுசெய்து, இனி தனக்கு இல்லை 'மெளக்கா மெளக்கா' என நிரூபித்திருக்கிறது பாகிஸ்தான்.

பாகிஸ்தான் அணி
பாகிஸ்தான் அணி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ரோகித் சதமடித்ததுதான் அந்தப் போட்டியின் ஹைலைட். பொதுவாக, 100 பந்துகளைச் சந்திப்பதற்குள் சதமடித்துவிடும் ரோகித், அந்தப் போட்டியில் சதம் அடிக்க 128 பந்துகள் எடுத்துக் கொண்டார். "இது என் இயல்புக்கு மாறான ஆட்டம்" என்றார் ரோகித். "ரோகித்தின் 200 ரன்கள் இன்னிங்ஸைவிட, இந்த இன்னிங்ஸ்தான் எனக்கு மிகவும் பிடித்தது" என்றார் கேப்டன் கோலி.

இந்திய அணி
இந்திய அணி

முதல்முறையாக உலகக் கோப்பையில் ஹாட்ரிக் தோல்வியடைந்தது தென்னாப்பிரிக்கா. மறுபுறம், வங்கதேசம் இந்தத் தொடரில் ஆச்சர்யத்தையும் தாண்டி அதிர்ச்சி அளித்திருக்கிறது‌. இந்தியா, தென்னாப்பிரிக்கா போட்டியிலேயே அனைவரும் ஒரு பக்கம் உட்காந்திருக்க, மற்றொரு போட்டியில் தன் சுழல் ஜாலத்தால், நியூசிலாந்தை ஒரு கை பார்த்தது வங்கதேசம். ஸ்பின்னர்கள் மூலம் நியூசிலாந்தின் மிடில் ஆர்டரை ஆட்டம் காண வைத்து, கத்துக் குட்டி இல்லை என்பதை மீண்டும் நிரூபித்தது. இருப்பினும் இறுதியில் வென்றது நியூசிலாந்து.

டேலர் - கேன் வில்லியம்சன்
டேலர் - கேன் வில்லியம்சன்

லோ ஸ்கோரிங் கேம். முதலில் ஆடும் அணி குறைந்த ரன்களை குவித்தால் சேஸிங் செய்யும் அணிக்குக் குஷி, அந்த குறைந்த ரன்னையும் எளிதில் டிஃபண்ட் செய்தால் டபுள் குஷி. அதைத்தான் தன் பவுலிங்கின் மூலம் சாத்தியப்படுத்தியது இலங்கை. 41 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டியில் 37 ஓவர்களுக்கு 201 ரன்களுடன் ஆல் அவுட்டானது இலங்கை. மீண்டும் மழை குறுக்கிட ஆப்கானின் இலக்கு 187 ஆகக் குறைக்கப்பட்ட போதும் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆப்கன். இந்த உலகக் கோப்பையின் இரண்டு இன்னிங்ஸிலும் லோ ஸ்கோரிங், அதிக சுவாரஸ்யமற்ற போட்டி இதுவாகத்தான் இருக்கும்.

இலங்கை அணி
இலங்கை அணி

இலங்கை – பாகிஸ்தான் மேட்ச் மழையால் கைவிடப்பட்டது, பாகிஸ்தானுக்கு ராசியாகிப் போனது. இதேபோல, 1992 உலகக் கோப்பையிலும் முதல் போட்டியில் தோற்று, இரண்டாவது போட்டியில் வென்றது. மூன்றாவது போட்டி கைவிடப்பட்டது. இறுதியில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. இந்தமுறையும் வரலாறு திரும்பும் என பாகிஸ்தான் ரசிகர்கள் தீர்க்கமாக நம்புகிறார்கள்.

வெஸ்ட் இண்டீஸின் மிரட்டல் ஸ்பெல் இந்த முறை ஆஸ்திரேலியாவிடம் அரங்கேறியது. ஸ்கோர் 38-4 என்றிருந்தபோது அரண்டு போனது ஆஸி. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் வெற்றியைச் சாத்தியப்படுத்தினார் கூல்டர் நைல். 147-6 என்ற சூழலில் களமிறங்கி 284-9 என்ற அற்புதத்தை நிகழ்த்திவிட்டுப் போனார் கூல்டர் நைல்.

WIvAUS
WIvAUS

வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கின்போது இன்னொரு சர்ச்சை வெடித்தது. அம்பயரால் மூன்று முறை அவுட் கொடுக்கப்பட்டார் கெயில். ரிவ்யூமூலம் இரண்டு முறை அவர் நாட் அவுட் எனத் தெரியவந்தது. மூன்றாவது முறை அவர் எல்.பி.டபுள்யூ முறையில் அவுட்டானார். ரிவ்யூ பெளலருக்கு சாதகமாக இருந்ததால், நடையைக் கட்டினார். ஆனால், அதற்கு முந்தைய பந்தில் ஸ்டார்க்கின் கால் க்ரீஸில் இருந்து சில இன்ச் வெளியே இருந்தது தெரியவந்தது. ஆனால், அம்பயர் அதற்கு நோ பால் கொடுக்கவில்லை. ஒருவேளை அம்பயர் அதைக் கவனித்திருந்தால், ஃப்ரீ ஹிட் கிடைத்திருக்கும். அந்தப் பந்தில் கெய்ல் அவுட்டாகியிருக்க வாய்ப்பில்லை. அம்பயர்களின் இந்த கவனக்குறைவை பல முன்னணி வீரர்கள் விமர்சித்தனர்.

ஒரு போட்டியில் 300 ரன்களைக் கடக்கவே தாவு தீர்ந்துவிடும். ஆனால், தொடர்ந்து ஏழு போட்டிகளில் 300 ரன்கள் அடித்துள்ளது இங்கிலாந்து. கடைசி போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக 386 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 29 நாட்கள் இடைவெளியில் அதிக முறை 300 ரன்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து.

இங்கிலாந்து அணி
இங்கிலாந்து அணி

மொத்தத்தில், பெரிய அணி, கத்துக்குட்டி அணி, முக்கியமான போட்டி, முக்கியமற்ற போட்டி என்றில்லாமல், பத்து அணிகளும் எல்லா போட்டிகளிலும் ஆச்சர்யம் அளித்துள்ளன. உலகக் கோப்பை இன்னும் ஒரு மாதம் நீடிக்கும். இன்னும் என்னென்ன ஆச்சர்யங்கள் காத்திருக்கிறதோ!

அடுத்த கட்டுரைக்கு