Published:Updated:

`களத்தில் மயங்கி விழுந்தால் மட்டுமே என்னைத் தூக்கிச் செல்லுங்கள்!’ – 2011 உலகக் கோப்பை நினைவுகள்

இந்த உலகக் கோப்பை ஒரு யுகத்தின் முடிவாகவும், மற்றொரு யுகத்தின் தொடக்கமாகவும் பார்க்கப்பட்டது. சச்சின், பாண்டிங், முரளிதரன் என நம் இளமைப் பருவத்தின் கிரிக்கெட்டை அழகாக்கியவர்கள் ஆடிய கடைசி உலகக் கோப்பை இதுதான்.

உலகக் கோப்பை நினைவுகள்

2011 உலகக்கோப்பை. ஸ்டீர்ட் கிரிக்கெட் ஆடுபவர்களில் தொடங்கி ஸ்டிக் கிரிக்கெட் ஆடியவர்கள் வரை ஆடும் 90'ஸ் கிட்ஸிடம் ``உங்களுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் போட்டி ஒன்றைச் சொல்லுங்கள்?" என்று கேட்டால் பெரும்பாலானோரின் ஒருமித்த பதில், 2011 இறுதிப் போட்டியாகத்தான் இருக்கும். ஆம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா அந்த வெற்றிக்கனியைப் பறித்தத் தருணம் யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

2011 உலகக்கோப்பையின்போது நம்மில் பெரும்பாலானோர் பள்ளியிலோ, கல்லூரியிலோதான் படித்துக்கொண்டிருப்போம். ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும், அதைப் பற்றி சிலாகித்த, வாதாடிய, கருத்துச் சொல்லிய எண்ணற்ற நினைவுகளைக்கொண்டிருப்போம்.

இந்தத் தொடர்தான் ஒரு யுகத்தின் முடிவாகவும், மற்றொரு யுகத்தின் தொடக்கமாகவும் பார்க்கப்பட்டது. பேட்டிங் பிதாமகன் சச்சின், வெற்றிகரமான கேப்டன் பாண்டிங், சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் என நம் இளமைப் பருவத்தின் கிரிக்கெட்டை அழகாக்கியவர்கள் ஆடிய கடைசி உலகக்கோப்பை. மேலும், தற்போது ஜொலித்துக்கொண்டிருக்கும் ரன் மெஷின்கள் கோலி, டூ பெளஸ்ஸி என ட்ரெண்டில் இருக்கும் பல வீரர்களுக்கு இதுதான் முதல் தொடர்.

2
Ireland batsman

இங்கிலாந்தை துவம்சம் செய்த அயர்லாந்து:

உலகக்கோப்பையைப் பொறுத்தவரை இருபெரும் தலைகள் ஆடும் போட்டிக்குத்தான் சுவாரஸ்யமும் எதிர்பார்ப்புகளும் இருக்கும். பெரிய அணிகள் கத்துக்குட்டிகளான அசோசியேட் அணிகளை எதிர்த்து ஆடும் போட்டிகளுக்கு அத்தகைய எதிர்பார்ப்பு இருக்காது. ஆனால், சில போட்டிகள் இந்த விதியை மாற்றி எழுதின. இந்தத் தொடரில், அயர்லாந்து இங்கிலாந்துக்கு எதிராக மாற்றி எழுதியது.

அயர்லாந்தின் இந்தச் சரித்திரப் பக்கங்களை எழுதியவர் கெவின் ஓ பிரையன். 327 ரன்கள் இலக்கைத் துரத்திய அயர்லாந்தால் இங்கிலாந்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. ஆறாவது விக்கெட்டுக்கு இறங்கினார் கெவின். 25 ஓவர்களில் 215 ரன்கள் தேவை என்ற நிலையில் அயர்லாந்து இருந்தது. எதிர்கொண்ட முதல் பந்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார் கெவின். ஸ்வான், பிராட், ஆண்டர்சன் என இங்கிலாந்தின் நட்சத்திர பௌலர்களின் பந்துகளையெல்லாம் டீப் மிட் விக்கெட் திசையில் சிக்ஸர்களாகவும் பவுண்டரிகளாகவும் மாற்றி அணியை ஜெயிக்கவைத்தார். 50 பந்துகளில் சதமடித்து உலகக்கோப்பை போட்டிகளின் அதிவேக சதத்துக்குச் சொந்தக்காரர் ஆனார்.

பலமிக்க எதிரியின் பலத்தை வீழ்த்தி அரியணையில் உட்காருவது போன்ற வெற்றியைத்தான் உண்மையான வீரர்கள் கொண்டாடுவார்கள். அத்தகைய வெற்றி 2011 உலகக்கோப்பையில் அயர்லாந்துக்குச் சாத்தியப்பட்டது.

3
Yuvraj singh

யுவராஜின் எழுச்சி!

மோசமான ஒரு ஷாட், என்னை களத்திலிருந்து மட்டுமல்ல இந்தியாவை உலகக்கோப்பையில் இருந்தும் வெளியேற்றிவிடும் என்பதை, தீர்க்கமாக உணர்ந்திருந்தேன். தப்பித்தவறிகூட ஒரு ஃபால்ஸ் ஷாட் (false shot) ஆடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்
யுவி

இந்தத் தொடரில் மற்றுமொரு முக்கியமான தருணம், கேன்சருக்கு எதிராக யுவராஜின் போராட்டம். இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பு வரை யுவராஜ் சிங் ஃபார்மிலேயே இல்லை. யுவராஜுக்கு பதில் சுரேஷ் ரெய்னாவையோ, யூசுப் பதானையோ ஆடவைக்கலாம் என்பதுதான் பலரின் கருத்து. உலகக்கோப்பை தொடங்கியதும் யுவராஜின் ஆட்டம் உச்சத்தைத் தொட்டது. ஒரு சதம், நான்கு அரைசதம், ஐந்து விக்கெட், மேலும் ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தது இரண்டு முக்கிய விக்கெட்டுகள் என இந்தியாவின் கேம் சேஞ்சராக மாறினார் யுவராஜ்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் ஆடுகளத்தில் இருக்கும்போதே ரத்த வாந்தி, மூச்சிரைப்பு என உடல்நிலை அவரைத் தொந்தரவு செய்தது. ``களத்தில் மயங்கி விழுந்தால் மட்டுமே என்னைத் தூக்கிச் செல்லுங்கள். அதுவரை ஆடிக்கொண்டுதான் இருப்பேன்" – ஆட்டத்தின் நடுவே அவரை ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தியபோது யுவராஜ் உதிர்த்த வார்த்தைகள் இவை. எனினும் அந்தப் போட்டியில் 113 ரன்கள், 2 விக்கெட்டுகள் என அசத்தினார் யுவராஜ்.

முக்கியமாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டம்தான் அவரின் சிறந்த இன்னிங்ஸ். ஐந்து விக்கெட்டுகள் விழுந்த நிலையில் ஆட வருகிறார் யுவராஜ். சிக்ஸர்கள், பவுண்டரிகள் என அவரின் வழக்கமான அதிரடி ஆட்டத்திலிருந்து விலகி ஆடினார். எடுத்தது வெறும் 57 ரன்கள்தான். ஆனால், அதுதான் இந்தியாவை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றது.

``மோசமான ஒரு ஷாட், என்னை களத்திலிருந்து மட்டுமல்ல இந்தியாவை உலகக்கோப்பையில் இருந்தும் வெளியேற்றிவிடும் என்பதை, தீர்க்கமாக உணர்ந்திருந்தேன். தப்பித்தவறிகூட ஒரு ஃபால்ஸ் ஷாட் (false shot) ஆடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்'' என, போட்டி முடிந்த பிறகு சொன்னார் யுவி. இதேபோல் பல முக்கியத் தருணங்களில் யுவராஜின் பங்கு என்பது இந்தியாவின் வெற்றிக்கு ஒரு கீ ஃபேக்டராக அமைந்தது.

உலகக்கோப்பைத் தொடரில் 362 ரன்கள், 15 விக்கெட்டுகளோடு தொடர் நாயகன் விருது பெற்ற யுவராஜ் சிங்குக்கு நுரையீரலில் கேன்சர் கட்டி வளர்ந்திருப்பது, உலகக்கோப்பைக்குப் பிறகான மருத்துவப் பரிசோதனையில்தான் தெரிந்தது. யுவராஜ் சிங் போராடி ஜெயித்தது எதிரணிகளை மட்டுமல்ல, கேன்சரையும்தான். இந்த உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் காட்டியது ஒரு ரியல் ஸ்போர்ட்ஸ் மேன்ஷிப்.

4
ரிவ்யூ கேட்கும் தோனி

இங்கிலாந்துக்கு எதிரான DRS சர்ச்சை!

உலகக்கோப்பை என்பது, எல்லா உணர்ச்சிகளின் மொத்த கலவை. அப்படி இருக்கும்போது சர்ச்சை மட்டும் இல்லாமலிருந்தால் எப்படி? இந்தியா-இங்கிலாந்து ஆடிய லீக் ஆட்டத்தில் நடந்த ஒரு சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவின் 338 ரன்களை சேஸ் செய்தது இங்கிலாந்து அணி. 25-வது ஓவரில் யுவராஜ் வீசிய பந்தை பெல் ஸ்வீப் செய்ய நினைத்தபோது பந்து அது அவரின் பேடில் பட்டுத் திரும்பியது. எல்.பி.டபுள்யூ-வுக்கு அம்பயரிடம் அப்பீல் செய்த யுவராஜ் சிங்குக்கு அவர் அவுட் தர மறுத்தார். தோனி ரிவ்யூ கேட்க, DRS-க்குச் சென்றது இந்த முடிவு.

ரிவ்யூவிலும் pitched in line, impact in line, பந்து ஸ்டம்ப்பில் படுவது உறுதி என பெளலருக்குச் சாதகமான விஷயங்கள் டிவியில் தெரிந்தாலும் decision umpire's call என்றே வந்தது. இதனால், பெல் அவுட்டாகாமல் களத்திலேயே இருந்தார். பந்து பெல்லின் பேடில் படும்போது ஸ்டெம்பில் இருந்து 2.5 மீட்டர்கள் விலகி வந்துள்ளார்.

விதிமுறையின்படி பந்து படும்போது ஸ்டம்புக்கும் பந்துக்குமான இடைவெளி 2.5 மீட்டருக்கு மேல் இருந்தால், பந்தை சரியாகக் கணிக்க முடியாது. அந்தக் காரணத்தால் ஃபீல்டு அம்பயர் கொடுப்பதுதான் இறுதி முடிவு என விளக்கம் கூறியது ஐசிசி. இதனால் அதிருப்தியடைந்த தோனி, போட்டிக்குப் பிறகான பிரஸ் மீட்டில் அதைத் தெரிவிக்க, அடுத்த போட்டியிலேயே விதிமுறையை மாற்றிக்கொண்டது ஐசிசி.

ஐசிசி எடுத்திருக்கும் இந்த முடிவு, நிச்சயம் தவறானது. ஒரு தொடர் நடந்துகொண்டிருக்கும்போதே விதிமுறைகளை மாற்றுவது கண்டிக்கத்தக்கது
சங்ககரா

இதை எதிர்த்த சங்கக்காரா உள்ளிட்ட பல வீரர்கள் ``ஐசிசி எடுத்திருக்கும் இந்த முடிவு, நிச்சயம் தவறானது. ஒரு தொடர் நடந்துகொண்டிருக்கும்போதே விதிமுறைகளை மாற்றுவது கண்டிக்கத்தக்கது" என தங்களின் எதிர்ப்புக்குரலை வெளியிட்டனர். இது உலகக்கோப்பை தொடரில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

5
ஆஸ்திரேலியாவை வீழ்த்திய மகிழ்ச்சியில் யுவி – ரெய்னா!

அரையிறுதிகளில் ஆஸ்திரேலியா இல்லாத உலகக்கோப்பை!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, உலகக்கோப்பைக்கென்றே அளவெடுத்துச் செய்யப்பட்டதுபோல் இருக்கும். மற்ற போட்டிகளைவிட உலகக்கோப்பையில் அவர்களின் ஆட்டமும் அணுகுமுறையும் மொத்தமாக வேறு. 1999, 2003, 2007 என ஹாட்ரிக் சாம்பியனான ஆஸ்திரேலியா மறக்க நினைக்கும் உலகக்கோப்பையானால் அது நிச்சயம் 2011 உலகக்கோப்பையாகத்தான் இருக்கும்.

பாண்டிங், பிரட்லீ, போன்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான்களின் கடைசி உலகக்கோப்பையாக இருந்ததால் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதி சுற்றில் நெருக்கடி பல மீட்டர்களுக்கு எகிறியது. ஆஸ்திரேலியாவின் 260 ரன்களை யுவராஜ் பலத்தில் அசால்ட்டாக சேஸ் செய்து ஆஸி.க்கு டாட்டா காட்டியது இந்தியா.

ஐசிசி டோர்னமென்ட்கள் என்றாலே அதைக் குத்தகைக்கு எடுத்ததுபோல் ஆடிய ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் இந்தத் தொடரில் முடிவுக்கு வந்தது. 1992 ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியா அரையிறுதிக்குக்கூட நுழைய முடியாத தொடராகவும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா இல்லாத தொடராகவும் இது அமைந்தது. இந்தப் போட்டியில் மட்டும் வென்றிருந்தால், நிச்சயம் ஆஸ்திரேலியா பாண்டிங்கின் தலைமையின் கீழ் ஹாட்ரிக் கோப்பையை வென்றிருக்கும். ஆனால், அந்தக் கங்காருவின் ஆட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டன நம் இந்தியப் புலிகள்.

6
உலக சாம்பியன் இந்தியா

இந்தியாவின் வெற்றி!

இந்திய ரசிகர்களுக்கு, மூன்று மாதத்துக்கு முன்பிருந்தே கொண்டாட்டம் தொடங்கியது. ஆனாலும், இந்தியாவுக்கான வெற்றிப் பாதை என்பது சற்றே கரடுமுரடானது. எல்லாவற்றையும் கடந்து அனைவரும் எதிர்பார்த்தது அந்த இறுதிப்போட்டியைத்தான். இலங்கையின் 275 ரன்களை சேஸ் செய்தபோது சச்சினின் விக்கெட்டுக்குப் பிறகு டிவியை ஆஃப் செய்யவிடாமல் விடாப்பிடியாக ஆட்டத்தைக் கடைசி வரை எடுத்துச் சென்றது கௌதம் கம்பீர்தான். ஆனால், தோனியின் மாயையில் கம்பீரின் மேட்ச் வின்னிங் நாக் மறைக்கப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

இருப்பினும், குலசேகரா வீசிய அந்தப் பந்தை சிக்ஸருக்கு விரட்டிய தோனியின் மட்டை... அவரின் மேல் இருந்த விமர்சனங்களுக்கு, இந்தியா மீதிருந்த அவநம்பிக்கைகளுக்கு, கடந்தகாலக் கசப்புகளுக்கு தக்க பதில் சொன்னது. ஆம்! மொத்த இந்திய அணியும் சச்சினை தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடியதுபோல், இந்திய அணியை இந்தியர்கள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிய இரவு அது!

7
ஃபைனல் டாஸ் மொமன்ட்

முதன்முதலாக..!

  • சொந்த மண்ணில் உலகக்கோப்பை வென்ற முதல் அணி இந்தியாதான்.

  • வங்கதேசத்தில் நடந்த முதல் ஐசிசி தொடர் இந்த உலகக்கோப்பைதான்.

  • ஓர் உலகக்கோப்பையில் ஒரு ஆல் ரவுண்டர் 15 விக்கெட்டுகளும், 350 ரன்களுக்குமேல் எடுத்ததும் இதுதான் முதல்முறை.

  • யுவராஜ் சிங் அந்தச் சாதனையைச் செய்தார். இறுதிப்போட்டிக்கான டாஸ் போடும் தருணத்தில் ரசிகர்கள் போட்ட சத்தத்தால் டாஸுக்கான கால் சரியாகக் கேட்காததால் மீண்டும் ஒருமுறை டாஸ் போடப்பட்டது, இந்த உலகக் கோப்பையில்தான்.

அடுத்த கட்டுரைக்கு