Published:Updated:

இந்தியா மறக்க நினைக்கும் மோசமான உலகக் கோப்பை... 2007 வேர்ல்டு கப் நினைவுகள்!

மு.பிரதீப் கிருஷ்ணா

ஹார்லிக்ஸ் பாட்டிலில் அனைவரின் பெயரையும் எழுதிப் போட்டு, சீட்டுக் குலுக்கி, முதலில் கிடைக்கும் இருவரை ஓப்பனிங் இறக்கிவிட்டது இந்திய அணி. முதலில் கங்குலி - சேவாக். அடுத்து கங்குலி - உத்தப்பா. சேவாக், சச்சின் எல்லாம் மிடில் ஆர்டரில்!

சோகத்தில் இந்திய அணியினர்.
சோகத்தில் இந்திய அணியினர்.

2007 உலகக் கோப்பை, ஒவ்வொரு நாளும் அதிர்ச்சியையும் ஆச்சர்யங்களையும் சந்தித்துக்கொண்டிருந்தது. முன்னணி அணிகளின் வெளியேற்றம், புதிய அணிகளின் பாய்ச்சல், ஸ்குவாஷ் பால் சர்ச்சை, பாப் உல்மர் மரணம் எனத் தலைப்புச் செய்திகள் நிறையவே இருந்தன. உலகக் கோப்பை தொடரில், தொடர்ந்து 29 வெற்றிகளுடன் ஹாட்ரிக் கோப்பை வென்றது ஆஸ்திரேலியா. ஓர் அணியின் அதிகபட்ச உலகக் கோப்பை ஸ்கோரை (413) பதிவு செய்தது இந்தியா. இதுபோன்ற சாதனைகளையெல்லாம் தாண்டி இன்னும் நிறைய சுவாரஸ்யங்கள் இந்தக் கரீபிய உலகக் கோப்பையில் அரங்கேறின.

கத்துக்குட்டிகள் எதற்கு?

இந்த உலகக் கோப்பைத் தொடரில்தான் அதிகபட்சமாக 16 அணிகள் பங்கேற்றன. 8 முன்னணி அணிகள் தவிர்த்து 8 கத்துக்குட்டிகள் கோதாவில் இறங்கின. பெர்முடா, அயர்லாந்து அணிகள் முதல் முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்றன. இந்தத் தொடர் தொடங்கும் முன்பு, பலரும் இதன் ஃபார்மட்டை விமர்சனம் செய்தனர்.

``எதற்காக இத்தனை கத்துக்குட்டி அணிகள். இவர்களெல்லாம் பெரிய அணிகளுக்கு எதிராகப் படுதோல்வி அடைவார்கள். போட்டிகளின் சுவாரஸ்யம் குறையும்" என்று பலரும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் உட்பட!

அயர்லாந்து வெற்றி
அயர்லாந்து வெற்றி

கத்துக்குட்டி அணிகளால் என்ன செய்ய முடியும் என்பதை ஒரே வாரத்தில் நிரூபித்தன வங்கதேசமும் அயர்லாந்தும். வங்கதேசம் இந்தியாவை வீழ்த்த, அயர்லாந்து பாகிஸ்தானை வீழ்த்த, பங்காளிகளை அடுத்தடுத்து ஊருக்கு அனுப்பிவைத்தன அந்தக் கத்துக்குட்டிகள். போதாதற்கு, சூப்பர் 8 சுற்றில், தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்தி மிரட்டியது வங்கதேசம்! இந்த உலகக் கோப்பை முடியும்போது, பலரும் சிறிய அணிகளின் தேவையை உணர்ந்தனர். `அவர்களால்தான் இந்தத் தொடரில் எதிர்பாராத முடிவுகள் ஏற்படுகின்றன' என்று அந்த அணிகளை உச்சிமுகந்தனர்.

இந்தியாவின் மோசமான உலகக் கோப்பை

இந்த உலகக் கோப்பைத் தொடரையும் எந்த இந்தியராலும் மறந்துவிட முடியாது! ஏனெனில், 1979 தொடருக்குப் பிறகு, இதுதான் இந்தியாவின் மோசமான உலகக் கோப்பைத் தொடர். ஒரேயொரு வெற்றியோடு தொடரிலிருந்து வெளியேறியது. அதுவும் வங்கதேசத்திடம் தோல்வி கண்டு! கிரெக் சேப்பலின் அபார வழிநடத்துதலில் வேறு லெவல் ஆட்டம் ஆடியது மென் இன் புளூ. ஹார்லிக்ஸ் பாட்டிலில் அனைவரின் பெயரையும் எழுதிப் போட்டு, சீட்டுக் குலுக்கி, முதலில் கிடைக்கும் இருவரை ஓப்பனிங் இறக்கிவிட்டது இந்திய அணி. முதலில் கங்குலி - சேவாக். அடுத்து கங்குலி - உத்தப்பா. சேவாக், சச்சின் எல்லாம் மிடில் ஆர்டரில்! பிறகு எப்படி ரன் எடுப்பது? எப்படி ஜெயிப்பது?

சோகத்தில் இந்திய அணியினர்.
சோகத்தில் இந்திய அணியினர்.

ஏதோ புள்ளைப் பூச்சிகள் பெர்முடா கிடைக்கவும், அவர்களைப் புரட்டிப்போட்டு 400 ரன்களுக்கு மேல் எடுத்தார்கள். இலங்கையிடமும் தோற்க, வங்கதேசம் - பெர்முடா போட்டி முடிவுக்கெல்லாம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. வங்கதேசத்தின் வெற்றி நம்மவர்களை வெளியேற்ற, வெறியேறிய ரசிகர்கள் தோனி உள்ளிட்டவர்களின் வீடுகளைப் பதம்பார்க்க, `ஸ்டீல்த் மோட்' போட்டு இந்தியா வந்திறங்கினார்கள் நம் வீரர்கள். அயர்லாந்து, வங்கதேசம் அணிகள் சூப்பர் 8 சுற்றில் ஆடும்போது, யாருக்கு சப்போர்ட் செய்வது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தார்கள் இந்திய ரசிகர்கள்.

வாட்டே கேட்ச்!

இந்தத் தொடரின் பெஸ்ட் மொமென்ட் என்றால், அது லீவராக் பிடித்த அந்த கேட்ச்தான்! அந்த உலகக் கோப்பை தொடங்கியபோது அனைவரும் அந்த பெர்முடா வீரரின் உருவத்தைப் பார்த்து சந்தேகம் எழுப்பினர். சிலர் கேலி செய்தனர். ஆனால், ஒரேயொரு கேட்சில் உலகளவில் ஃபேமஸ் ஆனார் லீவராக். உத்தப்பா அடித்த பந்தை, ஸ்லிப்பில் நின்ற அவர் பாய்ந்து பிடிக்க, மெர்சல் ஆனார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். அவரையும், அவர் அடித்த அந்த டைவையும், பந்தைப் பிடித்துவிட்டு அவர் ஓடிய அந்த ஓட்டத்தையும் யாராலும் மறக்க முடியாது!

ஜென்டில் கேப்டன்கள்!

ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதிய இறுதிப் போட்டி. மழையால் இந்த ஆட்டம் அடிக்கடி தடைபட்டது. அதனால் 38 ஓவர்களாகக் குறைக்கப்பட, அதில் 281 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா. சங்கக்காரா, ஜெயசூர்யா போன்றவர்கள் கொஞ்சம் போராடினாலும், சீராக விக்கெட்டுகளை இழந்துகொண்டிருந்தது இலங்கை. மீண்டும் மழை பெய்ய, 36 ஓவர்களில் 269 என்ற டார்கெட் நிர்ணயிக்கப்பட்டது. 33 ஓவர்கள் முடிவடைந்த நிலையில், போதிய வெளிச்சம் இல்லை என ஆட்டத்தை நிறுத்திவைத்தார்கள் நடுவர்கள். போட்டி தடைப்பட்டு, தடைப்பட்டு நடக்க, கடும் இருட்டாகிவிட்டது. அப்போது இலங்கை அணி 206 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால், போட்டியை நடுவர்கள் முடித்துக்கொண்டதாக நினைத்து, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஆஸ்திரேலியா 37 ரன்களில் வென்றுவிட்டது என்று மைதானத்திலிருந்து ஸ்க்ரீனில் அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய வீரர்கள் கொண்டாடத்தொடங்க, பரிசளிப்பு விழா போர்டுகள் களத்துக்குள் வரத்தொடங்கின.

உலக சாம்பியன் ஆஸ்திரேலியா!
உலக சாம்பியன் ஆஸ்திரேலியா!

அப்போதுதான் களத்திலிருந்த நடுவர்கள் ஸ்டீவ் பக்னர், அலீம் தார் இருவரும் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். ஏனெனில், போட்டி முடியவில்லை. கிரிக்கெட் விதிப்படி, முக்கியமான போட்டிகளின்போது மழை வந்தால் மட்டுமே டக்வொர்த் லூயிஸ் விதியைப் பயன்படுத்தி போட்டியை முடித்துக்கொள்ளலாம். இல்லையேல் `ரிசர்வ்' நாளில் ஆட்டத்தைத் தொடரவேண்டும். 1979 உலகக் கோப்பையில் பல போட்டிகள் அப்படித்தான் நடந்தன. அதனால், கடைசி 3 ஓவர்களையும் அடுத்த நாள் ஆடலாம் என்று சொல்லிவிட்டனர் நடுவர்கள்.

இலங்கை அணி வெற்றி பெற, 18 பந்துகளில் 63 ரன்கள் தேவை. கையில் களத்தில் இருந்ததோ பௌலர்களான மலிங்காவும் வாஸும். இது எப்படியும் சாத்தியமில்லை என்று உணர்ந்த இலங்கை கேப்டன் ஜெயவர்தனே, தங்கள் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ஆடுவார்கள் என்று சொல்லிச் சென்றார். ஜெயவர்தனேவின் இந்த முடிவுக்கு மதிப்பளித்த பான்டிங், அந்த 3 ஓவர்களில் ஸ்பின்னர்களை மட்டுமே பயன்படுத்தினார். இருட்டில் போட்டி நடத்தப்படுவதற்கு, ரசிகர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தாலும், இரு கேப்டன்களின் அந்த 'ஜென்டில்மேன்' முடிவுகளைப் பாராட்டினர்.