Published:Updated:

ஒன்றா, இரண்டா... டிராமாக்களை அள்ளிக் கொடுத்த 2003 உலகக் கோப்பை! #WorldCupMemories

மு.பிரதீப் கிருஷ்ணா

தென்னாப்பிரிக்க உலகக் கோப்பையிலிருந்து வெளியேறுவதற்கான காரணங்களை வேற்று கிரக வாசிகளாலேயே கண்டுபிடிக்க முடியாது.

ஒன்றா, இரண்டா... டிராமாக்களை அள்ளிக் கொடுத்த 2003 உலகக் கோப்பை! #WorldCupMemories
ஒன்றா, இரண்டா... டிராமாக்களை அள்ளிக் கொடுத்த 2003 உலகக் கோப்பை! #WorldCupMemories

இறுதிப் போட்டிவரை சென்று கோப்பையை இழந்து வந்தது இந்திய அணி. பான்டிங் ஸ்பிரிங் பேட் வைத்து ஆடினார் என்று அப்போது பரவிய புரளிகள் இன்று வரை நம் காதுகளில் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. அந்த உலகக் கோப்பையை நம்மால் மறக்கவே முடியாது. இந்தியாவின் பர்ஃபாமன்ஸ் தாண்டி இன்னும் சில சுவாரஸ்யமான விஷயங்கள் அந்த உலகக் கோப்பையில் அரங்கேறின.

உலகக் கோப்பை நினைவுகள்
உலகக் கோப்பை நினைவுகள்

கில்லி - தி ஜென்டில்மேன்!

இந்த உலகக் கோப்பையின் அரையிறுதியில் கில்கிறிஸ்ட் செய்த ஒரு விஷயம், அனைவரையும் ஆச்சர்யப்படவைத்தது. அரவிந்த் டி சில்வா பந்துவீச்சில், கில்கிறிஸ்ட் ஸ்வீப் ஆட முயன்று ஏமாற, கீப்பர் சங்கக்காரா கேட்ச் பிடித்து அப்பீல் செய்தார். ஆனால், நடுவர் ரூடி கோர்ட்ஸன் அவுட் கொடுக்கவில்லை. பந்து pad-ல் பட்டதாகச் சொல்லி மறுத்துவிட்டார். அப்பீல் செய்துகொண்டிருந்த டி சில்வா, திரும்பிப் பார்த்தபோது, பெவிலியன் நோக்கி நடந்துகொண்டிருந்தார் கில்லி.

ஏனெனில், பந்து அவர் பேட்டில் பட்டிருந்தது. நடுவரே மறுத்தபோதும், மனம் கேட்காமல் வெளியேறினார் அவர். ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமுமே அந்தச் செயலுக்காக அவரைப் பாராட்டியது. ஆனால், அந்தச் செயலை தன் டீம் மேட்கள் கடுமையாக விமர்சித்ததாகத் தன் சுயசரிதையில் சொல்லியிருந்தார் கில்கிறிஸ்ட்!

மாஸ் காட்டிய கத்துக்குட்டிகள்!

டாப் - 8 அணிகளில், 2 மட்டும் முதல் சுற்றோடு நடையைக் கட்டும், மற்ற அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தபோது, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் என 4 அணிகள் குரூப் சுற்றோடு வெளியேறின. ஜிம்பாப்வே சூப்பர் சிக்ஸ் வரை செல்ல, அரையிறுதிக்கே சென்று ஆச்சர்யப்படவைத்தது கென்யா. ஆனால், இவையெல்லாம் ஜஸ்ட் லைக் தட் நடந்துவிடவில்லை.

டிராமா 1 - புறக்கணிப்புகள்

இந்த அணிகளுக்குச் சாதகமாக அமைந்த முதல் விஷயம், ஆப்பிரிக்காவில் அப்போது நிலவிய அரசியல் சூழ்நிலை. ஜிம்பாப்வேவில், ராபர்ட் முகாபேவின் கொடூர ஆட்சியில் பல பிரச்னைகள் வெடித்துக்கொண்டிருந்தன. நிலங்களைக் கையகப்படுத்தியதற்காகவும், தேர்தலில் முறைகேடுகள் செய்ததற்காகவும், 2002-ம் ஆண்டு, அந்நாட்டை காமன்வெல்த் குழுவிலிருந்து விலக்கியது இங்கிலாந்து. அதனால், இங்கிலாந்துக்கு எதிராக ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்களை ஒருங்கிணைத்து, ஐரோப்பா - ஆப்பிரிக்கா உச்சிமாநாட்டைப் புறக்கணிக்க ஏற்பாடுகள் செய்தார் முகாபே. அதனால், ஜிம்பாப்வே - இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே அரசியில் உரசல்கள் அதிகமாகின.

கென்ய வீரர்கள்
கென்ய வீரர்கள்

ஆனால், ஐ.சி.சி-யின் விளையாட்டு இங்கிலாந்துக்குப் பாதகமாக அமைந்தது. ஜிம்பாப்வேவின் அனைத்து குரூப் பிரிவு போட்டிகளும், அந்த நாட்டில்தான் நடந்தன. போதாக்காலம், இரண்டு நாடுகளும் ஒரே பிரிவில். ஐ.சி.சி-யில் முறையிட்டும் பயனில்லை. இங்கிலாந்து வீரர்கள் ஜிம்பாப்வே போகக் கூடாது என்று இங்கிலாந்தில் அரசியல் தலைவர்கள் கொதிக்க, வாக் ஓவர் கொடுத்தது இங்கிலாந்து அணி. ஜிம்பாப்வேவுக்கு 4 புள்ளிகள் எளிதாகக் கிடைத்தது. கொடுமை என்னவென்றால், இங்கிலாந்து 2 புள்ளிகள் வித்தியாசத்தில்தான், சூப்பர் சிக்ஸ் வாய்ப்பை இழந்தது. அந்தப் போட்டியில் விளையாடி, வென்றிருந்தால், இங்கிலாந்துதான் அடுத்து சுற்றுக்குப் போயிருக்கும். ஜிம்பாப்வே வெளியேறியிருக்கும்.

அதேபோல் நியூசிலாந்து! கென்யாவில் பாதுகாப்பு பிரச்னைகள் இருப்பதாகச் சொல்லி, அந்த நாட்டுக்கு எதிரான போட்டியில் (கென்யாவின் போட்டிகள், அந்த நாட்டில்தான் நடந்தன) விளையாட மறுத்தது நியூசிலாந்து. கென்யாவுக்கு ஓசியாக 4 புள்ளிகள். அந்த 4 புள்ளிகள் இல்லாமல் இருந்திருந்தால், அந்த அணி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கே நுழைந்திருக்காது. நியூசிலாந்தைப் பொறுத்தவரை, அவர்களின் முடிவு, லீக் சுற்றைத் தாண்டுவதில் பிரச்னை ஏற்படுத்தவில்லை. ஆனால், அரையிறுதி கனவைக் கலைத்தது.

இந்த உலகக் கோப்பையின் விதிப்படி, சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு நுழையும்போதே அந்த அணிகள் புள்ளிகள் பெற்றிருக்கும். குரூப் பிரிவில் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் Points Carried Forward (PCF) எனப்படும் புள்ளிகள் அந்த அணிகளுக்குக் கொடுக்கப்படும். சூப்பர் சிக்ஸுக்கு முன்னேறிய அணியை, குரூப் பிரிவில் வென்றிருந்தால் 4 புள்ளிகள், மற்ற அணிகளை வென்றிருந்தால் 1 புள்ளி என்பது போன்ற விதி அது. அதன் அடிப்படையில், கென்யா 10 புள்ளிகளுடனும், நியூசிலாந்து 4 புள்ளிகளுடனும், சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குள் நுழைந்தன.

சூப்பர் 6 முடியும்போது, இரு அணிகளும் முறையே 14, 8 புள்ளிகள் பெற்றிருந்தன. அதனால், கென்யா அரையிறுதிக்கு முன்னேறியது. பிளாக் கேப்ஸ் வெளியேறியது. நியூசிலாந்து அந்தப் போட்டியைப் புறக்கணிக்காமல் இருந்திருந்தால், 12 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும், கென்யா வெளியேறியிருக்கும். பாவம் நியூசி!

டிராமா 2 - மழை

ஜிம்பாப்வே, சூப்பர் 6 சுற்றுக்குள் நுழைய மழையும் ஒரு காரணம். ஏ பிரிவின் கடைசி லீக் போட்டிக்கு முன்பு, பாகிஸ்தான் 8 புள்ளிகளும், இங்கிலாந்து, ஜிம்பாப்வே அணிகள் தலா 12 புள்ளிகளும் பெற்றிருந்தன. ரன்ரேட் அடிப்படையில் இங்கிலாந்து மூன்றாவது இடத்தில் இருந்தது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் வென்றால், இங்கிலாந்து அல்லது பாகிஸ்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கும். ரன்ரேட் அடிப்படையில் ஜிம்பாப்வே வெளியேறியிருக்கும். ஆனால், ஜிம்பாப்வேவை மழை காப்பாற்றியது.

ஆட்டத்தில் 14 ஓவர்களே முடிந்திருந்த நிலையில், கன மழையால் போட்டி கைவிடப்பட்டு, இரண்டு அணிகளுக்கும் 2 புள்ளிகள் வழங்கப்பட்டன. மீண்டும் அதிர்ஷ்டம் கைகொடுக்க, அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது ஜிம்பாப்வே!

டிராமா 3 - இது சோக்கர்ஸ் ஸ்பெஷல்!

தென்னாப்பிரிக்க உலகக் கோப்பையிலிருந்து வெளியேறுவதற்கான காரணங்களை வேற்று கிரக வாசிகளாலேயே கண்டுபிடிக்க முடியாது. குரூப் சுற்றின் முதல் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கின்போது மிகவும் மெதுவாகப் பந்துவீசியது தென்னாப்பிரிக்கா. அதனால், பேட்டிங்கில் அவர்களுக்கு ஒரு ஓவர் குறைக்கப்பட்டது.

வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 279 என்ற டார்கெட்டை 49 ஓவர்களில் எடுக்கவேண்டும். கடைசி வரை போராடிய அந்த அணி, 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்து, 3 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. களத்தில் நிக்கி போயே 25 ரன்களுடன் நல்ல ஃபார்மிலும் இருந்தார். அந்த 6 பந்துகள் குறைக்கப்படாமல் இருந்திருந்தால்..?!

சரி, தென்னாப்பிரிக்காவுக்கு இதோடு விடிவு பிறந்ததா? இல்லை. இலங்கை அணியுடனான கடைசி லீக் போட்டி. வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 6 சுற்றுக்குள் நுழைய முடியும். முதலில் பேட்டிங் செய்த இலங்கை 268 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க இன்னிங்ஸின்போது அடிக்கடி மழை வந்தது. அதனால், டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இந்த ஓவரில் இவ்வளவு அடிக்கவேண்டும் என்று வர்ணனையாளர்கள் சொல்லிக்கொண்டே இருந்தனர். போதாக்குறைக்கு, முரளிதரன், அரவிந்த் டி சில்வா, அர்னால்டு ஆகியோருடன் தானும் சேர்ந்து ஸ்பின், ஸ்பின், ஸ்பின் எனத் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களைத் தவிக்கவைத்தார் ஜெயசூர்யா. 34-வது ஓவரிலிருந்து 45-வது ஓவர்வரை ஸ்பின்னர்களே!

45-வது ஓவரின்போது மழை அதிகமாக, அந்த ஓவரோடு போட்டி முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 45 ஓவர் முடிவில் 230 ரன்கள் எடுத்தால் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறும். 44.5 ஓவர்கள் முடிவில் 229 ரன்கள் எடுத்திருந்தது அந்த அணி. கடைசி பந்தில் ஒரு ரன் அடித்தால் போதும் என்று வர்ணனையாளர்கள் சொல்லிக்கொண்டிருக்க, அதையெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் ஸ்ட்ரோக் வைத்தார் மார்க் பௌச்சர். ரன் ஓடவும் முற்படவில்லை. கடைசியில் ஆட்டம் டை ஆனது. 14 புள்ளிகளோடு தொடரை முடித்துக்கொண்டது அந்த அணி. அந்தப் போட்டியை வென்றிருந்தால், 16 புள்ளிகளுடன் பி பிரிவில் முதலிடமே பிடித்திருக்கலாம். ஏனெனில், அந்தத் தொடரிலேயே ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து நல்ல ரன்ரேட் வைத்திருந்தது அந்த அணிதான். ஆனால், என்ன செய்வது இவர்களுக்கு இப்படியெல்லாம்தானே எமன் வருவான்!

மு.பிரதீப் கிருஷ்ணா