Published:Updated:

செமி ஃபைனல் போட்டியில் பெர்த்தைப் பிடிக்குமா இங்கிலாந்து? #ENGvNZ

கார்த்தி
Jofra Archer, Jos Buttler
Jofra Archer, Jos Buttler ( Aijaz Rahi, AP )

இங்கிலாந்து இந்தப் போட்டியில் வெல்ல வேண்டும் அல்லது கிரிக்கெட்டின் மெக்காவான லார்ட்ஸில் பாகிஸ்தான் வங்கதேசத்திடம் தோற்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் இங்கிலாந்து வேண்ட வேண்டும்.

போட்டி எண் : 41
இங்கிலாந்து சமீபத்திய பர்பாமன்ஸ் : WLLWW
நியூசிலாந்து சமீபத்திய பர்பாமன்ஸ் : LLWWW
இடம் : டர்ஹாம்

அதிக ரன் எடுத்த வீரர்கள்

Joe Root
Joe Root
ஜோ ரூட் 8 போட்டிகள் 476 ரன்கள் சராசரி 68 ஸ்டிரைட் ரேட் 91.53
கேன் வில்லியம்சன் : 7 போட்டிகள் (6 இன்னிங்ஸ்) 454 ரன்கள் சராசரி 113.50 ஸ்டிரைக் ரேட் 77.87
பென் ஸ்டோக்ஸ் : 8 போட்டிகள் 370 ரன்கள் சராசரி 66 ஸ்டிரைட் ரேட் 98.93

அதிக விக்கெட் எடுத்தவர்கள்

Jofra Archer celebrates bowling out Bangladesh's Soumya Sarkar.
Jofra Archer celebrates bowling out Bangladesh's Soumya Sarkar.
பெர்குஸன் 7- 17 - 4.96
ஆர்ச்சர் 8 - 16 - 5.01
டிரென்ட் பௌல்ட் 7-13-4.55

நியூசிலாந்து

கேன் வில்லியம்சன்

கேப்டன் கேன் வில்லியம்சன் என்னும் ஒற்றைப் படகில் சவாரி செய்கிறது நியூசிலாந்து என்பதுதான் அதன் தற்போதைய பிரச்னை. ஏனெனில், அவர் அடிக்கும் பெரும்பாலான போட்டிகளில் நியூசிலாந்துக்கு யாதொரு பிரச்னையும் இல்லை.

(பேட் செய்ய வரவில்லை) vs இலங்கை ~ வெற்றி
40 vs வங்கதேசம் ~ வெற்றி
79* vs ஆஃப்கானிஸ்தான் ~ வெற்றி
106* vs தென் ஆப்பிரிக்கா ~ வெற்றி
148 vs மேற்கிந்திய தீவுகள் ~ வெற்றி
41 vs பாகிஸ்தான் ~ தோல்வி
40 vs ஆஸ்திரேலியா ~ தோல்வி
*இந்தியாவுடனான போட்டி மழையால் ரத்து.
Kane Williamson
Kane Williamson
AP

கேன் வில்லியம்சனைத் தவிர எந்தவொரு நியூசிலாந்து பேட்ஸ்மேனும் டாப் டென் பட்டியலில் இல்லை. 233 ரன்களுடன் ராஸ் டெய்லர் 24-வது இடத்திலும், 182 ரன்களுடன் ஜேம்ஸ் நீசம் 42-வது இடத்திலும் இருக்கிறார்கள்.

சோதிக்கும் ஓப்பனர்கள்

நியூசிலாந்து ஓப்பனர்களின் நிலைமை ` அந்தோ பரிதாபம்' என இருக்கிறது. காலின் மன்ரோ, கப்டில், நிக்கோலஸ் என அவர்களும் எப்படி எப்படியோ காம்பினேசனை மாற்றிப் பார்த்துவிட்டார்கள். ஆனாலும் முதல் பத்து ஓவர்களுக்குள் ஓப்பனர்கள் பெவிலியன் திரும்பிவிடுகிறார்கள். நியூசிலாந்து ஓப்பனர்களின் சராசரி 24.25 (மூன்று வீரர்கள்)

Guptill
Guptill
AP
ஆஸ்திரேலியா (2 வீரர்கள் ) 68.00
இந்தியா ( 3 வீரர்கள் ) 67.76
இங்கிலாந்து ( 4 வீரர்கள்) 51.80
கடந்த உலகக்கோப்பையில் டாப் ஸ்கோரர் கப்டில். இந்தத் தொடரில் அவரது நம்பிக்கை சற்று குறைந்துவிட்டது. அவருக்குத் தேவை எல்லாம் சிறிது லக் மட்டுமே. இன்றைய போட்டியில் அவர் ஃபார்முக்குத் திரும்புவார் என நம்புகிறேன். அது நீசம், கிராந்தோம் போன்ற பிளேயர்களின் பணிச்சுமையைக் குறைக்கும்
ராஸ் டெய்லர்

நியூசிலாந்தின் பேட்டிங் சராசரி, அந்த அணியை ஒன்பதாவது இடத்தில் நிறுத்தியிருக்கிறது. அரையிறுதிக்குச் செல்லவிருக்கும் பிற அணிகளுடன் ஒப்பிடும்போது, இது எவ்வளவு ஆபத்தானது என்பது நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. `நல்லதொரு தொடக்கம் பல்கலைக்கழகம்' என்பதுபோல் நியூசிலாந்தின் தற்போதைய முதல் தேவை, ஒரு பாசிட்டிவ் தொடக்கம். அதை அரையிறுதிக்குச் செல்லும் முன்னர் நடக்கும் இப்போட்டியில் நிகழ்த்திக்காட்டுவது அவசியம்.

டர்ஹாம் ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கான ஆடுகளம் என்பதால், இங்கு இரு அணிகளும் ஸ்பின்னர்களுக்கு ஓய்வு அளித்துவிட்டு, சீமர்களை களத்தில் இறக்க வாய்ப்புகள் அதிகம். டர்ஹாமில் இஷ் சோதியைவிட ஹென்றி, சௌத்தி களமிறக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

நியூசிலாந்து இந்தப் போட்டியில் தோற்பதால், அதற்கு யாதொரு குறையும் வந்துவிடப்போவதில்லைதான். ஆனால், செமி ஃபைனலில் இருக்கும் பிற அணிகளுடன் தோற்ற அணியாகவே நியூசி பார்க்கப்படும். (இந்தியாவுடனான போட்டியில் முடிவில்லை) மேலும், தொடர் ஆரம்பித்தது முதல் தோற்காத ஓர் அணி, கடைசி இரண்டு போட்டிகளில் தொடர்ந்து தோற்றுள்ளது.

157 ரன்னுக்கு டாட் பால்கள் 172… கப் கனவுதானா நியூஸிலாந்து?! #NZvAUS

இன்றும் இங்கிலாந்துடன் தோற்றால், ஹாட்ரிக் தோல்வி என்னும் அடைமொழியுடன் அரையிறுதிக்கு நுழையும். அது நிச்சயம் நியூசிலாந்துக்கும் பாசிட்டிவ் ஃபேக்டர் கிடையாது. நியூசிலாந்து தன்னை மீட்டெடுக்க சிறிது காலம் எடுக்கலாம். ஆனால், அதுவரையில் உலகக் கோப்பை தொடருமா என்பது சந்தேகமே.

இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு எப்போதும் சில பிரச்னைகள் இருக்கிறது. அரசியல் ரீதியாகவும் சரி, விளையாட்டு ரீதியாகவும் சரி. கிரிக்கெட்டை உலகறியச் செய்த அணி , இன்னும் ஒரு உலகக் கோப்பைக்கூட வாங்கவில்லை என்பதுதான் வரலாற்றுச் சோகம். (insert பாஸ் என்கிற பாஸ்கரன் ' பால்காரன் ' ரியாக்ஷன் டூ மாட்டு டாக்டர் ). இந்த முறை பல விஷயங்கள் கைகூட வந்தது. இங்கிலாந்தின் மீது மண்ணை வாரித் தூத்திக்கொண்டிருந்த கெவின் பீட்டர்சன்கூட இந்த முறை சற்று அதீதமாகவே இங்கிலாந்தைப் புகழ்ந்தார்.

எவ்வளவு கூலான, போல்டான வீரராக இருந்தாலும், அணி நிர்வாகத்தை எதிர்த்து பல விஷயங்கள் பேசினாலும், ஓய்வுக்குப் பின்னர் கமென்ட்ரி முதல் இன்னபிற இத்யாதிகள் வரை லாபம் பார்க்க, அணி நிர்வாகத்துக்கு சாமரம் வீச வேண்டியதாகிவிடுகிறது. பிசிசியாகட்டும், இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு ஆகட்டும், பிளேயர்களின் நிலைமை ஒன்றுதான்!

``ராய் இல்லையெனில், பேர்ஸ்டோ! இருவரும் இல்லை என்றால் ரூட்! அவரும் மிஸ் என்றால் பென் ஸ்டோக்ஸ். பந்துவீச ஆர்ச்சரும் இருக்கிறார். உலகக் கோப்பையை ரெடி பண்ணி வைங்கடா" என்றார் கெவின். ஆனால், இங்கிலாந்தின் பெர்பாமன்ஸ் நிலையானதாக இல்லை. மௌக்கா மௌக்கா என அழுதுகொண்டிருந்த பாகிஸ்தானிடம், தொடர்ச்சியாக பத்து போட்டிகள் தோற்ற பாகிஸ்தானிடம் மண்ணைக் கவ்வியது.

இங்கிலாந்தின் ஆகப்பெறும் பிரச்னை. அவர்களின் பிரச்னை எதுவென தெரியாததுதான். அதிக ரன்கள் அடித்த பட்டியலில் முதல் பத்தில் மூன்று வீரர்கள் இங்கிலாந்துதான். பௌலிங்கிலும் ஆர்ச்சர், மார்க் வுட் என இருவர் டாப் டென்னில் இருக்கிறார்கள். இந்தமுறை எப்படியேனும் கோப்பை வெல்லும், 500 ரன்கள் அடிக்கும் என்றெல்லாம் பில்ட் அப் செய்யப்பட்ட அணி, தன் கடைசிப் போட்டியில்கூட போராட வேண்டியதிருக்கிறது.

கடந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோதிக்கொண்ட போட்டியை இங்கிலாந்து அவ்வளவு எளிதில் மறக்காது.

#ENGvNZ
#ENGvNZ

முதல் இன்னிங்ஸில் 33.2 ஓவர்கள் பிடித்து 123 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து. 123 ரன்கள் டார்கெட் என்பது உலகக் கோப்பையில் கேவலம் என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால், நியூசிலாந்து அந்தப் புண்ணைக் கீறிவிட்டு சுகம் கண்டது. நியூசிலாந்து கேப்டன் மெக்கலம் அதை 12 ஓவர்களில் சேஸ் செய்ய வைத்து, எப்படி பேட் செய்ய வேண்டும் என கிளாஸ் எடுத்தார். ஜோ ரூட் 46 (70) , மார்கன் 17 (41 ) , பெல் 8 (17) எப்படிச் செய்வதறியாது இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்ஸில் திகைத்தனர்.

இரண்டாம் இன்னிங்ஸில் வேறொரு ஆட்டத்தை ஆடினார் மெக்கலம். பிராட் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் மூன்று பௌண்டரி ஒரு சிக்ஸ். பிராடை நிறுத்திவிட்டு ஃபின்னை நான்காவது ஓவர் வீசச் செய்தார் மார்கன். இரண்டு சிக்ஸ், இரண்டு பௌண்டரி என பதில் சொன்னார் மெக்கலம். ஆறாவது ஓவர் மீண்டும் ஃபின். அதற்குப் பின்னர் ஃபின்னை பந்துவீச மார்கன் அழைக்கவே இல்லை. அந்த ஓவரை ஸ்கோர் கார்டு இவ்வாறாக பதிவு செய்தது. 4,1,6,6,6,6 . தேவைப்படும் ரன்ரேட் 0.63. ஆறு ஓவர் முடிவில் நியூசிலாந்தின் ரன் ரேட் 16.

இப்போது நியூசிலாந்திடம் மெக்கல்லம் இல்லை. இப்போதைய நியூசிலாந்திடம் அந்த அக்ரெஷன்கூட இல்லை. அதனிடமிருந்து இருப்பது ஒரு சாதுவான, தவறுகள் அறவே செய்யாத கன்ட்ரோலான பேட்ஸ்மேன், கேப்டன் கேன் வில்லியம்சன். இங்கிலாந்தின் கேப்டன் ஆறுதல் படவேண்டிய விஷயம் இதுமட்டும்தான். ஆனால், மீண்டும் இங்கிலாந்து அணி அதன் பேட்டிங்கில் சொதப்பினால், அதே அளவு சம்மட்டி அடி அடிக்க நியூசிலாந்தில் இப்போதும் ஆள் இருக்கிறார்கள். இந்தத் தொடரில் இலங்கையில் 136 ஆல் அவுட் என்னும் ஸ்கோரை, விக்கெட் இழப்பின்றி அடித்து அதகளப்படுத்தியது நியூசிலாந்து.

#ENGvNZ
#ENGvNZ

இன்றைய போட்டியில் இங்கிலாந்து தோற்றால், இதுவே இந்தத் தொடரில் இங்கிலாந்தின் கடைசிப் போட்டியாக இருந்துவிடும் வாய்ப்புகள்கூட இருக்கிறது. அடுத்த போட்டியில் பாகிஸ்தான், வங்கதேசத்தை வென்றால், பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். அப்படியே இந்தியா, இலங்கையை வென்றால், இந்தியா முதலிடத்துக்குச் சென்றுவிடும். இந்தியாவும் பாகிஸ்தானும் அரையிறுதியில் மோதலாம்.

ஆனால், இன்று இங்கிலாந்து வெல்ல வேண்டும். பாகிஸ்தான் , இலங்கை, ஆஸ்திரேலியா என மூன்று முறை தோற்றுவிட்டது இங்கிலாந்து. டாப் பிளேயர்கள் இருக்கும் ஓர் அணி அரையிறுதிக்கு வருவதென்பது எப்போதும் சுவாரஸ்யம் தருமொன்று. ஆனால், கிரிக்கெட்டில் எதுவும் நடக்கக்கூடும்.

#ENGvNZ
#ENGvNZ

உத்தேச அணி (இங்கிலாந்து )

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, இயான் மார்கன், ஜோர் ரூட், பென் ஸ்டோக்ஸ், பட்லர், கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளங்கட், அதில் ரஷீத், ஆர்ச்சர், மார்க் வுட்

உத்தேச அணி ( நியூசிலாந்து)

மார்டின் கப்டில், ஹென்ரி நிக்கோலஸ், கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், லாத்தம், ஜேம்ஸ் நீசம், கிராந்தோம், மிட்செல் சான்ட்னர், சௌத்தி/ ஹென்றி, ஃபெர்கஸன், டிரென்ட் பௌல்ட்

அடுத்த கட்டுரைக்கு