Published:Updated:

சம்பளம் முதல் செல்வாக்கு வரை! விளையாட்டுகளில் பெண்களுக்கு ஏன் இல்லை சமத்துவம்?

விளையாட்டுத் துறை
News
விளையாட்டுத் துறை ( pixabay )

பெண்கள், பால் திரிபு நிலையாளர்கள், தன்பால் ஈர்ப்பாளர்கள் தொடங்கி இந்தியாவில் சாதி, சர்வதேச அளவில் நிறம் வரை பல்லாயிரக்கணக்கானோர் விளையாட்டுத் துறையில் ஒடுக்கப்படுகிறார்கள்.

Published:Updated:

சம்பளம் முதல் செல்வாக்கு வரை! விளையாட்டுகளில் பெண்களுக்கு ஏன் இல்லை சமத்துவம்?

பெண்கள், பால் திரிபு நிலையாளர்கள், தன்பால் ஈர்ப்பாளர்கள் தொடங்கி இந்தியாவில் சாதி, சர்வதேச அளவில் நிறம் வரை பல்லாயிரக்கணக்கானோர் விளையாட்டுத் துறையில் ஒடுக்கப்படுகிறார்கள்.

விளையாட்டுத் துறை
News
விளையாட்டுத் துறை ( pixabay )
இது ஆண்களுக்கான உலகம் மட்டுமல்ல என தினம் தினம் ஆயிரக்கணக்கான பெண்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். பொதுசமூகத்தின் பல்வேறு கட்டமைப்புகளை தகர்த்து தினம் ஒரு பெண் சாதனை நிகழ்த்துகிறார். எந்த துறையில் பெண்கள் இல்லை என கேட்குமளவு அரசியல் முதல் ஆர்மி வரை எவ்விடமும் நிறைந்திருக்கிறார்கள் பெண்கள். ஆனால்... பார்வையில், பழகுவதில், வாய்ப்புகளில், வரவேற்பில் பெண்களுக்கு எல்லா இடங்களிலும் சமத்துவம் இருக்கிறதா என்பது கேள்விக்குறியே!

அதிலும் குறிப்பாக விளையாட்டுத் துறையில் இந்தப் பாலின பாகுபாடு உச்சத்தில் இருக்கிறது. சரி, விளையாட்டுத் துறையில் பெண்களுக்கு மட்டுமா பிரச்னைகள் இருக்கின்றன என்பது அடுத்த கேள்வி. பெண்கள், பால் திரிபு நிலையாளர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் என இந்தியாவில் சாதி, சர்வதேச அளவில் நிறம் வரை பல்லாயிரக்கணக்கானோர் விளையாட்டுத் துறையில் ஒடுக்கப்படுகிறார்கள். அவர்கள் திறமைக்கு விடப்படும் சவால்களை விட, அவர்களின் அடையாளத்திற்கு விடப்படும் சவால்கள் இங்கு அதிகம்.

சர்வதேச விளையாட்டு
சர்வதேச விளையாட்டு
pixabay

நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ ஒரு கோகோ கோலா பாட்டிலை ஒதுக்கி வைத்துவிட்டு தண்ணீரை கையில் எடுத்ததால் முப்பதாயிரம் கோடி கோலா கம்பெனிக்கு இழப்பு. சர்வதேச அளவில் விளையாட்டுத் துறையின் பவர் அப்படிப்பட்டது. அதனால்தான் விளையாட்டுத் துறையில் இருக்கும் மற்ற பிரச்னைகள் சரிசெய்யப்படுவது என்பது சமூக மாறுதலுக்கான முக்கிய சாவி என்கிறேன். விளையாட்டு வீரர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆராயப்படுவதும் அதற்காகத்தான். சமீபத்தில் பல்வேறு தனித்தனி நிகழ்வுகள் இதற்கு சான்றாகியிருக்கின்றன.

நிகழ்வு 1

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஓலி ராபின்சன். இங்கிலாந்து அணிக்காக விளையாடும் மாபெரும் வாய்ப்பு கிடைத்த சில நாள்களிலேயே அது பறிபோனது. இனவெறி கருத்துகளை கொண்ட அவருடைய பழைய ட்வீட் ஒன்று அவர் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. சமீபத்தில் நடந்த இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஒலி ராபின்சன், முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் மட்டுமின்றி 42 ரன்களும் சேர்த்து ஆல்-ரவுண்டர் அந்தஸ்துடன் வெகுவாகப் போற்றப்பட்டார். எல்லாம் சில மணி நேரங்களுக்குத்தான். ஆட்டத்தின் தொடக்கத்தில் வீரர்கள் எல்லாம் இனவெறி, மதவெறி, பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிராக சில நிமிடங்கள் கைகோத்து, அதன் அடையாளமாக ஒரு டி-ஷர்ட் அணிந்திருந்தனர். சகிப்புத்தன்மை இன்மைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட் அணிந்து விளையாடிய ஒரு வீரர் உண்மையில் யார் என பாருங்கள் என ட்விட்டரில் ஒலி ராபின்சனின் பழைய ட்வீட்கள் பகிரப்பட்டன.

ஓலி ராபின்சன்
ஓலி ராபின்சன்
AP

எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக முஸ்லிம்களையும், ஆசிய மக்களையும் கிண்டலடித்து அவர் பதிவிட்ட கருத்துகள் அவை. ராபின்சனுக்கு எதிராகக் குரல்கள் எழ, தன் கருத்துக்களுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் ஓலி. ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதை ஏற்கவில்லை. ஓலி ராபின்சனுக்குத் தடை விதித்தது. அதுமட்டுமின்றி அனைத்து வீரர்களின் சமூக வலைதளக் கருத்துகளும் ஆராயப்படும் எனச் சொல்லியிருக்கிறது.

நிகழ்வு 2

டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகளின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக இருந்தவர் ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் யோஷிரோ மோரி. வயது 83. கடந்த பிப்ரவரி மாதம், "பெண்கள் அதிகம் பேசுபவர்கள், அதனால் குழுவில் இருக்கும் பெண் உறுப்பினர்களோடு கலந்தாலோசிக்கும்போது நிறைய நேரம் எடுக்கிறது" என அவர் ஒரு நக்கல் கமென்ட் அடிக்க அவருக்கு எதிராக பல குரல்கள் எழுந்தன. ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் முக்கிய ஸ்பான்சரான டொயோட்டா நிறுவனத்தின் உரிமையாளர் இந்த கமென்ட் தன்னை மிகவும் ஏமாற்றம் அடைய செய்ததாக கூறினார். டோக்யோவின் கவர்னர் யுரிகோ ஒலிம்பிக்ஸ் தொடர்பான கூட்டத்தை, எதிர்ப்பின் அடையாளமாக புறக்கணிப்பதாக அறிவித்தார்.

யோஷிரோ மோரி
யோஷிரோ மோரி
shethepeople.tv

மேலும் சில பெண் அரசியல்வாதிகளும், அவர்களுக்கு ஆதரவாக சில ஆண் அரசியல்வாதிகளும் வெள்ளை உடை அணிந்து (நம் நாட்டில் கறுப்பு உடை போல) எதிர்ப்பு தெரிவித்தனர். இதுமட்டுமின்றி ஒலிம்பிக் போட்டிகளின் போது உதவுவதாக விண்ணப்பித்திருந்த சுமார் 400 தன்னார்வலர்கள் தங்கள் விண்ணப்பங்களை திரும்ப பெற்றனர். விளைவு, தன்னுடைய பெண்களுக்கு எதிரான (sexist) கருத்துக்களுக்கு மன்னிப்பு மட்டும் கேட்ட யோஷிரோ மோரி பின்னர் வேறு வழியின்றி தலைவர் பதவியிலிருந்தே ராஜினாமா செய்தார்.

நிகழ்வு 3

கால்பந்தாட்ட விளையாட்டில் முக்கியமான போட்டியான FA கப் போட்டிகளின் இறுதி நாளில் ட்விட்டரில் சில பெண்களால் #HerGameToo என்ற அடையாள பிரசாரம் துவங்கப்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இது விளையாட்டு வீரர்கள் பற்றியானது மட்டுமல்ல, விளையாட்டு ரசிகைகள் பற்றியதும் கூட. தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில், குறிப்பாக கால்பந்தாட்டத்தில் பெண்களுக்கு எதிரான ஒரு சூழல் கட்டமைக்கப்படுவதை எதிர்த்து இந்த இயக்கம் குரல் கொடுத்தது. அதிலும் பெண் ரசிகைகள் தங்கள் கருத்துகளை பதிவிட, 'பெண்கள் அடுப்படிக்குத் திரும்பச் செல்லுங்கள், கால்பந்தாட்டத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?' என்பன போன்ற பல அடக்குமுறை குரல்களுக்கு எதிராக இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.

#HerGameToo
#HerGameToo
skysports.com

அடுத்தடுத்து பல பெண் விளையாட்டு வீரர்களும் இதை ஆமோதிக்க ஒரே வாரத்தில் இது வைரலானது. விளையாட்டு மைதானத்தில் பெண் வீராங்கனைகள் மட்டுமல்ல, ரசிகைகள், பெண் பத்திரிகையாளர்கள், பெண் பணியாளர்கள் என அனைவருக்குமான இயக்கமாக இது பார்க்கப்பட்டது.

நிகழ்வு 4

அமெரிக்காவில் பிரபலமான கூடைப்பந்து சம்மேளனம் NCAA (National Collegiate Athletic Association) கல்லூரி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. மார்ச் மாட்னஸ் (March Madness) எனத் திருவிழா போல இந்தப் போட்டியை கொண்டாடுகிறது அமெரிக்கா. அந்நாட்டின் மிகச்சிறந்த கல்லூரிப் போட்டியாளர்கள் களமிறங்கும் இந்த நிகழ்வு ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி போட்டிகளாக நடைபெறுகிறது. இதில் ஆண்களுக்குக் கொடுக்கப்படும் இருப்பிட வசதிகள், ஜிம் வசதிகள், உணவு, கொரோனா டெஸ்ட் எல்லாமே பெண்களுக்குக் கொடுக்கப்படுவதை விட கூடுதல் தரமாகவும், சிறப்பாகவும் தயார் செய்யப்பட்டிருந்தது. ஆண்களுக்கு பெரிய ஜிம் என்றால், பெண்களுக்கு சில பளு தூக்கும் கருவிகளும், யோகா செய்யும் விரிப்புகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆண்களுக்கு பல விதவிதமான உணவுகள் வழங்கப்பட பெண்களுக்கு பேக் செய்யப்பட்ட சிறு உணவு பாக்கெட் மட்டுமே! இப்படியான வித்தியாசங்களை புகைப்படங்களோடு சிலர் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றனர்.

NCAA அமைப்பு, இதை சரிசெய்வதாக உறுதி அளித்தது. ஆனால் பல ஆண் ரசிகர்களின் கருத்துதான் இங்கு கவனிக்கப்படவேண்டியது. ஆண்கள் விளையாட்டு லாபகரமானதாக இருக்கிறது, அதனால் அவர்களுக்குக் கூடுதல் வசதிகள் சரிதான் என அவர்கள் வாதிடுகிறார்கள். அதிக முதலீடுகள் அதிக லாபத்தை பெற்றுத்தரும் என்ற அடிப்படையை மற்றொரு சாரர் அங்கு விளக்க முயல்கிறார்கள். வசதிகள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், இந்தப் போட்டிகளின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தினால்தானே மக்கள் பார்ப்பார்கள். ஆண்களின் ஆரம்ப போட்டிகளுக்கு பல ஆயிரம் டாலர்கள் செலவு செய்து புகைப்பட கலைஞர்களை பணியில் அமர்த்திய NCAA, பெண்களின் தொடக்க நிலை போட்டிகளுக்கு புகைப்படக்காரர்களே வேண்டாம் என்று சொல்லி செலவைக் குறைத்தது. பார்வையாளர்களிடம் இருந்து ஒரு விளையாட்டை மறைத்துவிட்டு, அந்த ஆட்டத்திற்கு ரசிகர்கள் குறைவு என்றால் எப்படி?

அமெரிக்காவின் கூடைப்பந்தில் மட்டும் இந்தச் சிக்கல் இல்லை, உலகளவில் கிரிக்கெட் தொடங்கி பல்வேறு பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கு இந்த நிலைதான். இவை வெறும் எடுத்துக்காட்டுகள் மட்டுமே. ஆனால் விளையாட்டு உலகம் இன்னும் ஆண்களுக்கானதாக elite எனப்படும் சமூக படிநிலைகளில் உயர்மட்டத்தில் இருப்பவர்களுக்காகத்தான் பெரும்பான்மையாக இயங்குகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

Sports
Sports
www.india.com

இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர்கள் ஆட்டத்திற்கு முன், சமத்துவம் வேண்டி அடையாளமாக மண்டியிட்டால் அதை கேலிசெய்யும் ரசிகர்கள் இருக்கிறார்கள். எதிர்க்கும் ரசிகர்களை கண்டிக்கக்கூட தயங்குகிறார் அந்நாட்டு பிரதமர். ஒரு வலதுசாரி அரசியல்வாதி இனி கால்பந்தாட்டத்தை பார்க்கப்போவதில்லை என்கிறார். அமெரிக்காவில் விளையாட்டு வீராங்கனைகளை, ஆண் வீரர்களுக்கு சமமாக ஏற்றுக்கொள்ள முடியாது என தீர்க்கமாகச் சொல்கிறார்கள் சில ரசிகர்கள். இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களின் காலண்டர் ஆண்டு முழுக்க நிரம்பியிருக்க, பெரும் போராட்டங்களுக்குப் பிறகு ஒன்றிரண்டு போட்டிகளுக்கு மட்டுமே அனுப்பப்படுகிறார்கள் பெண் கிரிக்கெட் வீரர்கள். ஈரானில் பெண்கள் மைதானத்திற்கு வந்து விளையாட்டை பார்க்கவே தடை உண்டு. அதை மீறி ஆண் வேடமிட்டு வந்த பெண் ஸஹர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, தண்டனை அச்சத்தில் அவர் தீக்குளித்து உயிர் நீத்த சம்பவம் கடந்த ஆண்டு நடந்தது.

இப்படி ஒவ்வொரு நாடும் பொதுபுத்தியிலோ, சட்டத்திலோ, வாய்ப்புகளிலோ, சில கிரீமி லேயர் ஆண்களைத் தாண்டி மற்றவர்களை வஞ்சித்து கொண்டிருக்கிறது. குறிப்பாக சம்பள விஷயத்தில் பெண்கள் அதிகமாகவே வஞ்சிக்கப்படுகிறார்கள். எல்லா துறையிலும்தான் பாகுபாடு இருக்கிறது, விளையாட்டுத் துறையில் மட்டுமா என இதை புறந்தள்ளவும் முடியாது. ஏனெனில், நேரடியாக போர்க்களத்தில் சந்திக்க முடியாத காலங்களில் இருபெரும் நாடுகள் பனிப்போர் சூழலில் விளையாட்டு களங்களில் மோதிக்கொண்டது நம் உலகின் வரலாறு. விளையாட்டின் பின் அவ்வளவு பெரிய நுண்ணரசியல் உண்டு. அந்தப் புரிதலின் பின்னணியில்தான் விளையாட்டுகளில் பெண்களுக்கும் பிற ஒடுக்கப்படும் சமூகங்களுக்குமான சமத்துவம் வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.