Published:Updated:

“கத்தாரில் இந்தியக் கொடி மட்டும் மிஸ்ஸிங்!”

வினய் மேனன்
பிரீமியம் ஸ்டோரி
News
வினய் மேனன்

பெல்ஜியம் அணி நடப்பு உலகக்கோப்பையின் முதல் சுற்றிலேயே வெளியேறியிருக்கிறது. ஆனாலும், பெல்ஜியத்தின் கோல்டன் ஜெனரேஷன் டீ ப்ரூனே, லூகாகூ போன்றவர்களுக்கு உலக அரங்கில் மதிப்பு துளியும் குறையவில்லை.

உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் நடைபெறும் கத்தாரில் எங்கு நோக்கினும் இந்திய முகங்களாகவே இருக்கின்றன. ஆனால், எல்லாருமே பார்வையாளர்கள்தான். இந்திய அணியே உலகக்கோப்பையில் இல்லாதபோது இதைத்தானே எதிர்பார்க்க முடியும். ஆயினும், மனத்திற்குள் நச்சரிப்பு விடவே இல்லை. உலக அரங்கில் 32 அணிகள் மோதும் களத்தில் இந்தியர் ஒருவர் கூடவா பங்களிப்பாளராக இருக்கமாட்டார் எனத் தேடினோம். விடையாகக் கிடைத்தார் வினய் மேனன். கேரளாவைச் சேர்ந்த வினய் மேனன் உலகத் தரவரிசையில் டாப்பில் இருக்கும் பெல்ஜியம் அணியின் மனநலப் பயிற்சியாளராகச் செயல்பட்டுவருகிறார். அதுமட்டுமல்லாமல் பிரீமியர் லீகின் பிரபல அணியான செல்சீயுடனும் நீண்ட காலமாகப் பயணித்துவருகிறார்.

கத்தாரில் பரபரப்பாக இருந்த வினய் மேனன் சில நிமிடங்களை நமக்காக ஒதுக்கி வீடியோ காலில் இணைந்தார். ‘‘இது ஃபுட்பாலோட உச்சக்கட்ட மேடை. ஒரு ரசிகனா பல உலகக் கோப்பைத் தொடர்களை ஆராதிச்சிருக்கேன். இந்த முறை ரசிகனா இல்லாம ஒரு பங்கேற்பாளனா உள்ள வந்திருக்கேன். உலகமே கொண்டாடுற ஒரு திருவிழா. இங்கே களத்துல நின்னு அதை அனுபவிக்கறப்ப அது கொடுக்கற உணர்வை வார்த்தைகளால விவரிக்கவே முடியல.’' வினய் மேனனின் ஒவ்வொரு வார்த்தையும் உலகக்கோப்பைமீதான வியப்பை அதிகரிக்கிறது.

“கத்தாரில் இந்தியக் கொடி மட்டும் மிஸ்ஸிங்!”

கேரளாவின் வெறித்தனமான கால்பந்து ரசிகர்களையும் அந்த மண்ணின் கால்பந்துக் கலாசாரத்தையும் பற்றிப் பேச்சு நீண்டது. ‘‘வெளிநாட்டு ப்ளேயர்ஸ்கிட்ட பேசும்போது கேரளாவும் பிரேசிலும் ஒன்னுன்னு சொல்லுவேன். புவியியல்ரீதியாவே ரெண்டு இடத்துக்கும் நிறைய தொடர்பு இருக்கு. கேரளாவும் கடலோர நிலப்பரப்பைக் கொண்டது. பிரேசிலும் கடலோர நிலப்பரப்பைக் கொண்டது. ரெண்டு மக்களுமே ரொம்ப எமோஷனலானவங்க. ரெண்டு மக்களுக்குமே ஃபுட்பால்னா உசுரு. மெஸ்ஸி, ரொனால்டோனு எங்கயோ இருக்குற ப்ளேயர்ஸுக்கு கேரள மக்கள் வச்ச கட் அவுட்கள நீங்களே பார்த்திருப்பீங்களே’' எனப் பெருமிதம் பொங்க பேசுகிறார் வினய் மேனன்.

வினய் மேனன் தமிழ்நாட்டு மாப்பிள்ளை. மனைவி நாகர்கோவிலைச் சேர்ந்தவர். டாக்டர். பணி நிமித்தமாக இணைந்து பயணித்த இருவரும், வாழ்க்கையிலும் இணைந்துவிட்டனர்.

பிரீமியர் லீக் தொடரில் செல்சீ அணியுடன் வினய் மேனன் 10 ஆண்டுகளுக்கும் மேல் பயணித்துவருகிறார். செல்சீயுடனான இவரின் இணைவே கொஞ்சம் சுவாரஸ்யமானது. செல்சீயின் உரிமையாளர் என அறியாமலேயே தனது வழக்கமான பயிற்சிகளை ரோமன் அப்ரமோவிச்சுக்கு இவர் அளிக்க, அவர் இம்ப்ரஸ் ஆகவே செல்சீயுடன் வினய் இணைந்துவிட்டார். அந்த அணி முதலில் சாம்பியன் பட்டத்தை வென்றபோதும் சரி, கொரோனாவிற்குப் பிறகு அழுத்தமான சூழலில் 2021-ல் சாம்பியன் பட்டத்தை வென்றபோதும் சரி, வினய் மேனனின் பங்களிப்பு ரொம்பவே முக்கியமானதாக இருந்திருக்கிறது. செல்சீயின் முன்னாள் பயிற்சியாளர் தாமஸ் டூஹெல் கூட அவர்களின் வெற்றியில் வினய்யின் பங்கு குறித்து வெகுவாகப் பாராட்டியுள்ளார். இந்த அனுபவங்கள் குறித்தும் அவரிடம் கேட்டோம். ‘‘ஃபுட்பால்ங்றது களத்துல ஆடுற 11 பேர் சார்ந்தது மட்டும் கிடையாது. களத்துல அவங்க சிறப்பாக ஆடுறதுக்காகப் பின்னால பல பேர் உழைக்கிறாங்க. சாப்பாட்டுல உப்பு இருக்குறது யார் கண்ணுக்குமே தெரியாது. ஆனால், சாப்பாட்டோட சுவைய நிர்ணயிக்கிறதுல உப்புக்குப் பெரிய பங்கு இருக்கு. அப்படித்தான் செல்சீ அணிக்கு என் பங்களிப்பு. எங்கயுமே ஒரு தலைவன் சரியா இருந்தா எல்லாமே சரியா நடக்கும். அதுதான் என் பயிற்சிகள்ல அடிப்படை. ஃபுட்பால் சினிமா மாதிரி கிடையாது. இங்க ரீடேக் எல்லாம் வாங்க முடியாது. 90 நிமிஷத்துல ஒரு நொடி தவறினாலும் போச்சு. முழுக்க முழுக்க கவனம் ஆட்டத்துல மட்டும்தான் இருக்கணும். ஒரு வீரரை அத்தனை சூழலையும் எதிர்கொள்ளுற வகையில, உடனுக்குடன் ஏற்ற முடிவுகளை எடுக்குற வகையில ஒரு தலைவனா மாத்தணும். அதைச் செய்றதுதான் என் வேலை.

‘‘வீரர்கள், மேனேஜர்கள்னு யாரையும் எப்போதும் குழுவாகப் பயிற்றுவிக்கவே மாட்டேன். அது தேவையற்ற ஒப்பீடுகளை உருவாக்கும். அது முன்னேற்றத்தில் தடைகளையே உண்டாக்கும். ஒவ்வொருவரையும் தனித்தனியாகவே ஹேண்டில் செய்கிறேன். அவர்களுக்கான நேரத்தைக் கொடுப்பேன். பிரச்னைகளைக் காது கொடுத்துக் கேட்பேன். உடல்ரீதியான பிரச்னைகளுக்கு டாக்டர தேடிப் போறத போலவே இப்ப மனரீதியான குழப்பங்களுக்கும் வீரர்கள் எங்கள தயக்கமில்லாமத் தேடி வர்றாங்க. ஆனாலும் இந்தியா உட்பட ஆசிய நாடுகள்ல மனரீதியான பிரச்னைகள் சார்ந்து பிற்போக்குத்தனமாக பல எண்ணங்களும் இருக்கத்தான் செய்யுது. அதெல்லாம் மாறணும்’' என்கிறார்.

“கத்தாரில் இந்தியக் கொடி மட்டும் மிஸ்ஸிங்!”

பெல்ஜியம் அணி நடப்பு உலகக்கோப்பையின் முதல் சுற்றிலேயே வெளியேறியிருக்கிறது. ஆனாலும், பெல்ஜியத்தின் கோல்டன் ஜெனரேஷன் டீ ப்ரூனே, லூகாகூ போன்றவர்களுக்கு உலக அரங்கில் மதிப்பு துளியும் குறையவில்லை. ‘‘பெல்ஜியம் மாதிரி நம்மாலும் கோல்டன் ஜெனரேஷன உருவாக்க முடியும். இந்தியாவுக்குன்னு இல்ல, நம் ஒவ்வொரு மாநிலத்துக்குமே ஒவ்வொரு கோல்டன் ஜெனரேஷன உருவாக்க முடியும். ஆனா, அதுக்கு நாம இப்போ போய்க்கிட்டு இருக்கற வேகம் பத்தாது. கத்தார்ல பல நாடுகளின் தேசியக் கொடிகளையும் பார்க்க முடியுது. இந்தியக் கொடி மட்டும் மிஸ்ஸிங். இந்திய ரசிகர்கள் கூட வேற நாடுகளின் கொடியோட சுத்திக்கிட்டு இருக்காங்க. இந்த நிலை மாறணும். இந்தியாவும் உலக அரங்குல சாதிக்கணும்.

ISL மாதிரியான லீக்ஸ் மூலமாக நிறைய ப்ளேயர்ஸ் வர ஆரம்பிச்சிருக்காங்க. அது நம்பிக்கையைக் கொடுக்குது. இன்னும் கொஞ்ச காலத்துல இந்தியாவிற்கே திரும்ப வரப்போறேன். இங்க ஃபுட்பால வளர்க்கிறதுக்கு என்னால என்ன பண்ண முடியுமோ அதை முழு மனதோடு நிறைவா செய்யப்போறேன்’' என்று தன் கனவைச் சொல்கிறார் வினய் மேனன். உலகக்கோப்பை வினய் மேனனின் கனவு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் கனவும்கூட!