அரசியல்
கட்டுரைகள்
Published:Updated:

தோல்விகள் நிரந்தரமில்லை... சாதித்துக் காட்டிய மீரா பாய்!

மீரா பாய்
பிரீமியம் ஸ்டோரி
News
மீரா பாய்

நெஞ்சம் மறப்பதில்லை-12

நடப்பு ஐ.பி.எல் தொடரில் சுவாரஸ்யமான பல சம்பவங்களும் அரங்கேறிவருகின்றன. அதில் முக்கியமானது, சில வீரர்களின் நம்ப முடியாத மீள் வருகை.

இந்திய அணியிலிருந்து முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டுஐ.பி.எல்-லில் பெரிய மதிப்பில்லாமல் இருந்த அஜிங்கியா ரஹானே திடீரென அதிரடி சூறாவளியாகக் கலக்கி அத்தனை பேரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். இந்திய அணிக்கு மீண்டும் தேர்வும் ஆகியிருக்கிறார்.

மோகித் சர்மா, குஜராத் அணிக்காக ஆடிவருகிறார். ஒரு காலத்தில் ஐ.பி.எல்-லில் கொடிகட்டிப் பறந்தவர். இந்திய அணிக்காக உலகக்கோப்பையிலெல்லாம் ஆடியிருக்கிறார். அப்படிப்பட்டவர் திடீரென கிரிக்கெட் ரேடாரிலிருந்தே காணாமல்போனார். 34 வயதில் இப்போது ஐ.பி.எல்-இல் கம்பேக் கொடுத்து விக்கெட் வேட்டையாடி முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதையும் வென்றிருக்கிறார்.

மீரா பாய்
மீரா பாய்

விளையாட்டுகள் எப்போதுமே மீண்டெழுதலுக்கான உத்வேகத்தைக் கொடுப்பவை. இங்கே மட்டும்தான் தோல்வியைக் கண்டு யாருமே பெரிதாகத் துவண்டுவிட மட்டார்கள். எத்தனை பெரிய தோல்வி ஏற்பட்டாலும் அதிலிருந்து மீண்டெழுந்து முன்னேறுவதற்கான முனைப்பை அது கட்டாயம் கொடுக்கும். அதுதான் அதனுடைய தனி இயல்பும்கூட.

இந்த மீள்வருகைக்கான உதாரணங்கள்தான் மேற்குறிப்பிட்டவை. ஆனால், இவர்களைவிட அதிக தாக்கத்தைக் கொடுக்கக்கூடிய ஒருவரின் கதையைத்தான் இங்கே பார்க்கப்போகிறோம். இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் வடகிழக்கு மாநிலங்கள் அரசியல்ரீதியாகவும் சமூகரீதியாகவும் பெரிய அளவில் கவனத்தைப் பெறாதவை. இதில், அவர்களை வைத்துக் கேலி, கிண்டல் வேறு செய்வார்கள். அப்படியொரு பிராந்தியத்திலிருந்து பிறந்து வளர்ந்து ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான பெருமையாக மாறியவர்தான் மீராபாய் சானு.

மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் ஒரு எளிய குடும்பத்தில் கடைக்குட்டியாகப் பிறந்தவர்தான் மீராபாய் சானு. பளுதூக்குதல் வீராங்கனையான மீராவுக்கு குஞ்சரணி தேவிதான் இன்ஸ்பிரேஷன். குஞ்சரணி தேவியும் பளுதூக்குதல் வீராங்கனைதான். அவரும் மணிப்பூரைச் சேர்ந்தவர். மீரா பாய்க்கு முந்தைய தலைமுறை. வடகிழக்கு மாநிலத்தின் பேரடையாளமாகத் திகழ்ந்தவர் குஞ்சரணி. பளுதூக்குதலில் எக்கச்சக்க சாதனைகளைச் செய்திருக்கிறார். உலக சாம்பியன்கள், ஆசியப் போட்டிகள் எனப் பெரிய பெரிய தொடர்களிலெல்லாம் பதக்கங்களைக் குவித்தவர்தான் இந்தக் குஞ்சரணி. ஆனால், அவராலயே எட்ட முடியாத ஒரு கனவு இருந்தது. அதுதான் ஒலிம்பிக்ஸ். அந்த உச்சபட்ச சாதனையை மீரா பாய் சானு சாதித்துக் காட்டினார்.

தோல்விகள் நிரந்தரமில்லை...
சாதித்துக் காட்டிய மீரா பாய்!

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் 49 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றவர், ஸ்நாட்ச் பிரிவில் 87 கிலோ எடை, க்ளீன் - ஜெர்க் பிரிவில் 115 கிலோ எடையை என மொத்தமாக 202 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியாவிற்குக் கிடைத்த முதல் பதக்கமே இதுதான். பெரிதும் கவனம்பெறாத அந்த வடகிழக்கு மாநிலத்திலிருந்து கிளம்பி வந்தவர்தான் டோக்கியோவில் இந்தியாவிற்கான முதல் மரியாதையைப் பெற்றுக்கொடுத்தார்.

இவையெல்லாம் பெருமைதான். ஆனால், நாம் கவனிக்க வேண்டியதும் பேச வேண்டியதும் இந்தப் பெருமையை மட்டுமல்ல, இதற்குப் பின்னால் இருக்கும் மீராபாய் சானுவின் வலியையும் வேதனையையும்தான். குறிப்பாக, நாம் அதிகம் கவனம்குவிக்கும் அந்த மீண்டெழும் திறன் பற்றியதுதான். மீராபாய் சானுவிற்கு டோக்கியோ ஒலிம்பிக்ஸ் முதல் ஒலிம்பிக்ஸ் அல்ல. அதற்கு முன்பே ரியோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்றிருந்தார். வழக்கம்போல, ஒலிம்பியன்கள்மீது விழும் ஊடக வெளிச்சமும் அவர்கள் மீதான மக்களின் எதிர்பார்ப்பும் மீராபாயின் மீதும் இருந்தது. மீராபாய் பதக்கம் வெல்வார் எனப் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், மீராபாயினால் ரியோ ஒலிம்பிக்ஸில் அந்தப் பளுவைத் தூக்கவே முடியவில்லை. முயன்று பார்த்து இயலாமல் திணறிப்போய்த் தோற்றார். புள்ளிகள் எடுத்துத் தோற்பது வேறு. ஆட்டத்தைத் தொடங்காமலேயே அவுட் ஆகிச் செல்வது வேறு. என்ன அழுத்தமோ என்ன சிரமமோ...மீராபாய் சானு அப்படித்தான் அந்தப் போட்டியிலிருந்து வெளியேறினார்.

வெற்றியாளர்களுக்குக் கிடைக்கும் மரியாதையில் ஒரு சிறு துண்டுகூட தோற்பவர்களுக்குக் கிடைக்காது. இருட்டடிப்பு செய்யப்படுவார்கள். மீராபாய்க்கும் அதுதான் நடந்தது. அவரைச் சுற்றியிருந்த வெளிச்சக் கதிர்கள் அனைத்தும் பின்வாங்கிக்கொண்டன. ஆனால், மீராபாய் பின்வாங்கவில்லை. அவர் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. ரியோவில் செய்ய முடியாததை டோக்கியோவில் செய்துகாட்ட முடிவெடுத்தார். முடிவெடுத்த தினத்திலிருந்தே கடுமையாக உழைக்க ஆரம்பித்தார்.

தோல்விகள் நிரந்தரமில்லை...
சாதித்துக் காட்டிய மீரா பாய்!

தோனி எப்போதுமே ஒரு விஷயத்தை அழுத்தமாகச் சொல்வார். ‘Result is by-product of Process' என்பார். ‘முடிவுகளில் கவனம் செலுத்தாமல் உங்களின் செயல்பாடுகளிலும் வழிமுறைகளிலும் கவனம் செலுத்துங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் முடிவு தானாகக் கிடைக்கும்' என்பதுதான் தோனியின் கூற்று. மீராபாயும் இதையேதான் மனதில் நிறுத்திக் கொண்டார். பிடுங்கப்பட்ட வெளிச்சத்தையும் புறக்கணிப்புகளையும் எண்ணிக் கவலைப்படாமல் அடுத்த நான்காண்டுகள் கண்ணை மூடிக்கொண்டு மூர்க்கமாக உழைப்பின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து ஓடினார். ஒலிம்பிக்ஸிற்கு முந்தைய பல தொடர்களிலும் தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து, டோக்கியோ ஒலிம்பிக்ஸிற்காக முழுவீச்சில் தயாரானார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் நெருங்கிய போதுதான் மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், கொரோனா காரணமாக 2020இல் நடைபெற வேண்டிய ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஒரு வருடம் தள்ளிப்போடப்பட்டது. மீண்டும் காத்திருக்க வேண்டிய சூழல். மீராபாய் சளைக்காமல் காத்திருந்தார். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தன்னை நிரூபித்துக் காட்டுவதற்கான நேரம் வந்தது. களமிறங்கினார். கடந்த முறை அந்தப் பளுவைக் கொஞ்சம்கூடத் தூக்கமுடியாமல் பின்வாங்கியவர், இந்த முறை 2 பிரிவிலும் சேர்த்து 202 கிலோ எடையை எளிதாகத் தூக்கி வெள்ளிப்பதக்கத்தைத் தட்டினார்.

இளம்வயதில் வறுமையால் விறகுக் கட்டைகளைச் சுமந்த மீராவின் கைகள், அந்தப் பளுவைத் தூக்கி வெள்ளியை வென்றபோது இந்தியாவே பெருமிதம் கொண்டது. தோல்விகள் நிரந்தரமல்ல. குறிப்பாக, விளையாட்டில் தோல்விகளெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. முயன்றால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு மீராபாயும் மிகச்சிறந்த உதாரணம்.